search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விலை நிர்ணய கோரிக்கை"

    • விசைப்படகு மீனவர் சங்க அவசர கூட்டம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
    • சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலையிழப்பு அபாயம்.

    ராமேசுவரம்:

    ராமநாதாபுரம் மாவட்டம், ராமேசுவரம் துறைமுகத்தில் சுமார் 560-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறது.

    இதில், பெரும்பாலும் இறால், நண்டு, கணவாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மீன்கள் மற்றும் கோழி தீவனத்திற்கு பயன்படும் சங்காயம் எனப்படும் சிறிய வகை மீன்கள் ஆகியவற்றை பிடித்து வருகின்றனர்.

    சமீபத்திய மீன்பிடி தடை காலத்திற்கு முன்பு இறால் ரூ.650, கணவாய் ரூ.400, நண்டு ரூ.350, காரல் ரூ.70, சங்காயம் ரூ.25 என்ற அடிப்படையில் விலை இருந்து வந்தது.

    இந்தநிலையில், மீன்பிடி தடைகாலம் நிறைவடைந்து மீன்பிடிக்கச் சென்ற பின்னர் இறால் ரூ.350-400, நன்டு ரூ.250, கணவாய் ரூ.180, காரல் ரூ.15, சங்காயம் ரூ.10 என 50 சதவீதம் வரை கொள்முதல் செய்யும் வியாபாரிகள் ஒன்றிணைந்து சிண்டிகேட் அமைத்துக்கொண்டு விலையை வெகுவாக குறைத்துள்ளனர்.

    இதனால் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவு செய்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு பல ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது.

    இந்தநிலையில், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு மீனவர் சங்க அவசர கூட்டம் மாவட்டத்தலைவர் வி.பி.ஜேசுராஜா தலைமையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மீனவ சங்கத்தலைவர் சகாயம், எமரிட், எடிசன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    இந்த கூட்டத்தில் ராமேசு வரம் மீன்பிடி துறைமுகத்தில் இறால் மீன் கொள்முதல் செய்து வரும் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு விலையை 50 சதவீதம் வரை குறைத்து எடுப்பதை கண்டித்தும், மீனவர்கள் பிடித்தும் வரும் இறால் மீனுக்கு உரிய விலை நிர்ணயம் செய்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் மேற்கொள்ளுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட் டது.

    அதன்படி மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதனால் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் 560-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    இந்த போராட்டம் காரணமாக மீன்பிடி மற்றும் அதனை சார்ந்த தொழிலாளர்கள் என சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது.

    ராமேசுவரம் மீனவர்கள் அடுத்தடுத்த சிறைபிடிப்பை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் தற்போது மீன்களுக்கு உரிய விலை நிர்யணம் செய்வது தொடர்பாக மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது அரசுக்கு பெரும் வருவாய் இழப்பையும் ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×