search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காஞ்சிபுரம் மேயர்"

    • மேயருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.
    • நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சியில் தி.மு.க.வை சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ் மேயராக உள்ளார்.

    மாநகராட்சியில் மொத்தம் தி.மு.க.வில் 33 பேர், காங்கிரஸ்-1, அ.தி.மு.க.-8, த.மா.கா-1, பா.ம.க.-2, பா.ஜனதா-1, விடுதலை சிறுத்தைகள்-1, சுயேட்சைகள்-4 உறுப்பினர்கள் உள்ளனர். துணை மேயராக காங்கிரசை சேர்ந்த குமரகுருநாதன் உள்ளார்.

    மேயர் மகாலட்சுமி யுவராஜிக்கு சொந்த கட்சியான தி.மு.க. கவுன்சிலர்களே எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுடன் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் சேர்ந்து மேயருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். மேயருக்கு எதிராக மொத்தம் 33 கவுன்சிலர்கள் இருந்தனர்.

    அவர்கள், மகாலட்சுமி யுவராஜ் மேயர் பதவியில் இருந்து விலககோரி மாவட்ட கலெக்டர், மாநகராட்சி கமிஷனரிடம் புகார் மனு அளித்தனர். தி.மு.க. எதிர்ப்பு கவுன்சிலர்களை கட்சி மேலிடம் அழைத்து சமாதானம் செய்தும் அவர்கள் தங்களது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை.

    இதைத்தொடர்ந்து மேயருக்கு எதிராக இன்று (29-ந்தேதி) நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் அது தொடர்பான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் செந்தில் முருகன் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

    இதற்கிடையே நேற்று முன்தினம் மொத்தம் உள்ள 51 கவுன்சிலர்களில் 30-க்கும் மேற்பட்டோர் சொகுசு பஸ்சில் காஞ்சிபுரத்தில் இருந்து சுற்றுலா சென்றனர்.

    அவர்கள் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட்டுகளில் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்பார்களா? என்ற கேள்வி எழுந்து இருந்தது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. மாநகராட்சி கமிஷனர் செந்தில் முருகன் சரியாக காலை 10 மணிக்கு தனது இருக்கையில் வந்து அமர்ந்தார். அவரது இருக்கை அருகில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு வாக்களிக்க பூட்டு போடப்பட்ட பெட்டியும் தயாராக இருந்தது.

    ஆனால் மாநகராட்சி கூட்டத்திற்கு கவுன்சிலர்கள் யாரும் வரவில்லை. அதிகாரிகள் மட்டும் வந்திருந்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் யாரும் பங்கேற்காததால் வெறிச்சோடி கிடந்தது.

    சிறிது நேரத்திற்கு பின்னர் அதிருப்தி தி.மு.க. கவுன்சிலரான 34-வது வார்டு உறுப்பினர் பிரவீன் குமார் மாநகராட்சி கூட்டத்திற்கு வந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர் இருக்கையில் அமராமல் நேராக கமிஷனர் செந்தில் முருகனிடம் சென்று கடிதம் ஒன்றை கொடுக்க முயன்றார். ஆனால் அதனை கமிஷனர் வாங்க மறுத்தார். மேலும் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்ட பின்னர் கடிதத்தை வழங்கும் படி தெரிவித்தார்.

    ஆனால் கவுன்சிலர் பிரவீன்குமார் வருகை பதிவேட்டில் கையெழுத்து போட வில்லை. மேலும் அவர் தான் கொண்டு வந்த கடிதத்தை கமிஷனர் செந்தில் முருகன் இருந்த மேஜை மீது வைத்து விட்டு சென்றார். அதனை கமிஷனர் கண்டுகொள்ள வில்லை. அதனை எடுத்து பார்க்கவும் இல்லை.

    மேயர் மகாலட்சுமி யுவராஜிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து போர்க்கொடி தூக்கிய கவுன்சிலர்கள் மற்றும் மேயருக்கு ஆதரவான கவுன்சிலர்கள் யாரும் கூட்டத்தில் பங்கேற்காததால் தொடர்ந்து பரபரப்பான நிலை நிலவியது. மேயரும் கூட்டத்திற்கு வரவில்லை.

    மேயரை பதவி நீக்கம் செய்ய 5-ல் 4 பங்கு கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். ஆனால் உறுப்பினர்கள் யாரும் கூட்டத்தில் பங்கேற்காததால் நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் அது தொடர்பான விவாதம், வாக்கெடுப்புக்கு ஏற்கப்பட வில்லை. இதனால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. இதனால் மகாலட்சுமி யுவராஜின் மேயர் பதவி தப்பியது.

    கட்சியின் தலைைமக்கு கட்டுப்பட்டு மேயர் மகாலட்சுமி யுவராஜிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்த தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று தெரிகிறது.

    இதனால் காஞ்சிபுரம் மாநகராட்சி முன்பு டி.எஸ்.பி.முரளி தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    • மாநகராட்சி மேயருக்கு எதிராக தி.மு.க. கவுன்சிலர்கள் போர்க் கொடி தூக்கியுள்ளனர்.
    • மாநகராட்சி கமிஷனர் செந்தில் முருகன், மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனு அளித்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக தி.மு.க. பெண் மேயர் மகாலட்சுமி இருந்து வருகிறார். மாநகராட்சியில் மொத்தம் உள்ள 51 வார்டுகளில் தி.மு.க.வுக்கு 33 கவுன்சிலர்கள் உள்ளனர்.

    அ.தி.மு.க.வுக்கு 8 கவுன்சிலர்களும், காங்கிரஸ், பா.ம.க., த.மா.கா., விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாஜக ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு கவுன்சிலர்களும், 6 சுயேட்சை கவுன்சிலர்களும் உள்ளனர்.

    மாநகராட்சி மேயர் மகாலட்சுமிக்கு எதிராக தி.மு.க. கவுன்சிலர்கள் போர்க் கொடி தூக்கியுள்ளனர். தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 33 கவுன்சிலர்கள் மேயர் மகாலட்சுமிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இதன்படி 19 தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் துணை மேயர் குமரகுரு நாதன் (காங்கிரஸ்) மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் மேயருக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக மாநகராட்சி கமிஷனர் செந்தில் முருகன், மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனு அளித்தனர்.

    மாநகராட்சி உறுப்பினர்களின் இந்த கோரிக்கையை ஏற்று கமிஷனர் செந்தில் முருகன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மீது அளிக்கப் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடத்துவதற்காக நாளை (29-ந் தேதி) காலை 10 மணிக்கு மாநகராட்சி கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்திருந்தார்.

    கடந்த 3 வாரங்களுக்கு முன்பு இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக மாநகராட்சி உறுப்பினர்களுக்கு கடிதமும் அனுப்பப்பட்டது.


    இந்த நிலையில் தி.மு.க. கவுன்சிலர்கள் 19 பேர் நேற்று மாலையில் காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்டு ஊட்டிக்கு இன்ப சுற்றுலா சென்றனர். மேயர் மகாலட்சுமிக்கு எதிராக நாளை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ள நிலையில் இவர்கள் சுற்றுலா புறப்பட்டு சென்றிருப்பதால் நாளை நம்பிக்கை தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடைபெறுமா? மேயர் மகாலட்சுமியின் பதவி தப்புமா? என்கிற கேள்விகள் எழுந்து பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மொத்தம் உள்ள தி.மு.க. கவுன்சிலர்கள் 33 பேரில் மேயரை தவிர்த்து 32 பேர் மாநகராட்சி கவுன்சிலர்களாக செயல்பட்டு வரும் நிலையில், இவர்களில் 13 பேர் மேயருக்கு ஆதரவாகவே உள்ளனர்.

    மீதமுள்ள 19 பேரும் மேயருக்கு எதிரான மன நிலையில் உள்ளனர். இவர்கள் அனைவரும் சேர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர மனு அளித்துவிட்டு தற்போது ஊட்டிக்கு இன்ப சுற்றுலா சென்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சுற்றுலா சென்றுள்ள தி.மு.க. கவுன்சிலர்கள் சிலரை தொடர்பு கொண்டு கேட்ட போது, நாளைய கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக இதுவரை எதையும் தெரிவிக்க முடியாது என்றனர்.

    சில கவுன்சிலர்களோ, நாளைய கூட்டத்தில் பங்கேற்போம் என்றும் கூறியுள்ளனர். இதனால் குழப்பமான சூழலே நிலவி வருகிறது.

    மேயர் மகாலட்சுமி மீதான நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற வேண்டுமானால் மாநகராட்சி விதிகளின்படி 5-ல் 4 பங்கு கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்று ஓட்டு போட வேண்டும். இதன்படி மொத்தம் உள்ள 51 கவுன்சிலர்களில் 41 பேர் கூட்டத்துக்கு வந்து தீர்மானத்தின் மீது ஓட்டு போட வேண்டும்.

    அதே நேரத்தில் நம்பிக்கை தீர்மானத்தை தோற்கடிப்பதற்கு 5-ல் ஒரு பங்குக்கு மேற்பட்டோர் ஓட்டு போட வேண்டும். இதன்படி பார்த்தால் 10-க்கும் மேற்பட்டவர்கள் வாக்களித்தால் மேயர் பதவி தப்பும். தற்போது மேயருக்கு ஆதரவாக தி.மு.க. கவுன்சிலர்கள் 13 பேர் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேயருக்கு எதிராக அணி திரண்டுள்ள தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்களோடு எதிர்க்கட்சி கவுன்சிலர்களும் அணி திரண்டுள்ள நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டம் நாளை நடைபெறுமா? என்கிற கேள்வியும் பலமாக எழுந்துள்ளது.

    • மாநகராட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
    • மாநகராட்சி உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. இந்த நிலையில் மாநகராட்சி மேயர், துணை மேயர், 49 மாநகராட்சி உறுப்பினர்கள் பதவியில் உள்ளனர். திமுகவை சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ் மாநகராட்சி மேயராகவும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குமரகுருபரன் துணை மேயராகவும் உள்ளனர்.

    மாநகராட்சி மேயர் தங்களை உரிய முறையில் மதிக்கவில்லை. தங்கள் வார்டுகளுக்கு தேவையான மக்கள் நல பணிகளை செய்து தரவில்லை என அதிமுக, பாமக, பாஜனதா, தமிழ் மாநில காங்கிரஸ், சுயேச்சை, உறுப்பினர்கள் கூறி வந்த நிலையில் தற்போது ஆளும் கட்சியான திமுகவை சேர்ந்த மாநகராட்சி உறுப்பினர்களும், சேர்ந்து கொண்டு மேயர் மகாலட்சுமி யுவராஜுடன் மோதல் போக்கை மேற்கொண்டு வந்தனர்.

    இந்த நிலையில் திமுக மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என 33 பேர் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனரி டம் மனு வழங்கி இருந்தனர். இது குறித்து தகவல் அறிந்து நகராட்சி துறை அமைச்சர் கே.என். நேரு மாநகராட்சி உறுப்பினர்கள் மற்றும் மேயரை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தார்.

    இருப்பினும் மாநகராட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் மாநகராட்சி கமிஷனர் செந்தில் முருகன், மாநகராட்சி உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சட்டம் 1998 (திருத்தப்பட்ட சட்டம் 32, ஆண்டு 2022) பிரிவு 51 (2) (3) படி காஞ்சிபுரம் மாநகராட்சி உறுப்பினர்களால் மாநகராட்சி மேயர் மீது அளிக்கப்பட்டுள்ள, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்துவதற்கான கூட்டம் இந்த மாதம் 29-ம்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு மாநகராட்சி கூட்டம் நடைபெற உள்ளது என்றும், மேற்படி கூட்டத்தில் மாநகராட்சி உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டு அதற்கான கடிதங்களை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

    மாநகராட்சி கவுன்சிலர்கள் விவரம்

    மொத்தம்:- 51

    திமுக - 33

    காங்கிரஸ் -1

    அதிமுக -8

    தமாகா -1

    பாமக -2

    பாஜனதா -1

    விடுதலை சிறுத்தைகள் கட்சி-1

    சுயேச்சை -4

    ×