என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாமக"

    • 7 மாதங்களில் மட்டும் மின்வாரியத்திற்கு ரூ.23,8653 கோடி கூடுதல் வருவாய் கிடைத்தது.
    • முந்தைய ஆண்டை விட அதிகமாக ரூ.9192.25 இழப்பைத் தான் தமிழ்நாடு மின்சார வாரியம் எதிர்கொண்டது.

    51 சதவீதம் கட்டண உயர்வு, 96 சதவீத வருவாய் உயர்வு, ஆனாலும் மின்வாரியம் ரூ.6,920 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    51% கட்டண உயர்வு, 96% வருவாய் உயர்வு,

    ஆனாலும் மின்வாரியம் ரூ.6920 கோடி இழப்பு:

    இதுதான் திராவிட மாடல் அரசின் சாதனையா?

    தமிழ்நாட்டில் 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டதால் மின்வாரியத்தின் வருவாய் 96% அதிகரித்திருக்கும் போதிலும் இழப்பு தொடர்வதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    51% அளவுக்கு கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகும் கூட மின்வாரியத்தை லாபத்தில் இயக்க முடியவில்லை என்பது தான் அரசும் மின்வாரியமும் எந்த அளவுக்கு ஊழலில் திளைக்கின்றன என்பதற்கு சான்றாகும்.

    தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் தமிழ்நாடு மின்சார வாரியம் தாக்கல் செய்துள்ள 2023-24ம் ஆண்டிற்கான வரவு & செலவு கணக்குகளில் இருந்து பல புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.

    திமுக ஆட்சியில் முதன் முதலாக 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன் மூலம் 7 மாதங்களில் மட்டும் மின்வாரியத்திற்கு ரூ.23,8653 கோடி கூடுதல் வருவாய் கிடைத்தது.

    இதில் சுமார் 20% மின் வணிகம் அதிகரித்ததன் காரணமாக கிடைத்தது என்று வைத்துக் கொண்டாலும், மீதமுள்ள சுமார் ரூ. 18,400 கோடி கூடுதல் வருவாய் கட்டண உயர்வின் மூலம் கிடைத்தது. 2021&22ஆம் ஆண்டில் மின்வாரியத்தின் இழப்பு ரூ.9130 கோடி தான் என்பதால், கிடைத்த கூடுதல் வருவாயைக் கொண்டு மின்வாரியம் குறைந்தது ரூ.10,000 கோடி லாபம் ஈட்டியிருக்க வேண்டும். ஆனால், முந்தைய ஆண்டை விட அதிகமாக ரூ.9192.25 இழப்பைத் தான் தமிழ்நாடு மின்சார வாரியம் எதிர்கொண்டது.

    2023- 24ஆம் ஆண்டில் வணிக நிறுவனங்களுக்கு 2.18% மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. வீடுகளுக்கும் அதே அளவு கட்டணம் உயர்த்தப்பட்டது. அது நேரடியாக மக்கள் மீது திணிக்கப்படவில்லை என்றாலும், மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு அரசால் நேரடியாக செலுத்தப்பட்டதால் மின்வாரியத்தின் வருவாய் குறையவில்லை.

    அதனால், 2023- 24ஆம் ஆண்டிலாவது மின்சாரவாரியம் லாபம் ஈட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த ஆண்டிலும் மின்சாரவாரியம் தொடர்ந்து இழப்பைத் தான் சந்தித்திருக்கிறது.

    2023- 24ஆம் ஆண்டில் மின்வாரியத்தின் மொத்த வருவாய் ரூ.97,757 கோடி ஆகும். இது 2021-22ஆம் ஆண்டின் வருவாயான ரூ.49,872 கோடியை விட 96%, அதாவது ரூ.47,885 கோடி அதிகமாகும்.

    இடைப்பட்ட காலத்தில் மின் வணிகம் 1137.8 கோடி அதிகரித்துள்ளது. 2022&ஆம் ஆண்டில் ஒரு யூனிட்டின் சராசரி கட்டணம் ரூ.5.60 என்பதால், அதன் மூலம் கிடைத்த ரூ.6371 கோடியை கழித்தாலும் கூட, கட்டண உயர்வின் மூலம் மட்டும் இரு ஆண்டுகளில் மின்சார வாரியத்திற்கு ரூ.41,514 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.

    அதன் காரணமாக மின்சார வாரியம் குறைந்தது ரூ.32 ஆயிரம் கோடி லாபம் ஈட்டி இருக்க வேண்டும். ஆனால், ரூ.6920 கோடி இழப்பைச் சந்தித்துள்ளது. இரு ஆண்டுகளில் வருவாய் ரூ.41,514 கோடி அதிகரித்திருந்தாலும் கூட, இழப்பு ரூ.2210 கோடி மட்டும் தான் குறைந்திருக்கிறது என்றால், கட்டண உயர்வால் கூடுதலாக கிடைத்த மீதமுள்ள ரூ.39,304 கோடி எங்கே சென்று மாயமானது?

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இழப்பு தொடர்வதற்குக் காரணம் அங்கு நடைபெறும் ஊழல்கள் தான். தமிழ்நாடு மின்வாரியம் நிலுவையில் உள்ள மின்திட்டங்களை செயல்படுத்தி, மின்னுற்பத்தியில் தன்னிறைவு பெற்றால் ஆண்டுக்கு ரூ.40,000 கோடிக்கும் மேலாக லாபம் ஈட்ட முடியும்.

    ஆனால், அவ்வாறு நடந்தால் ஆட்சியாளர்களால் கமிஷன் வாங்கி கோடிகளை குவிக்க முடியாது என்பதற்காகவே மின்திட்டங்களை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளனர்.

    மின்சாரத்தை வாங்குவதில் எந்த அளவுக்கு கொள்ளை நடந்திருக்கிறது என்பதை மின்வாரியம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களே தெளிவாக நிரூபிக்கின்றன.

    2021- 22ஆம் ஆண்டில் மின்வாரியத்தின் மொத்த மின் வணிகம் 8200.20 கோடி யூனிட் ஆகும். இதில் தனியாரிடமிருந்து வாங்கப்பட்டது 7262.90 கோடி யூனிட். அதாவது மின்வாரியத்தின் மொத்த வணிகத்தில் 12.91% மட்டும் தான் மின்வாரியத்தால் சொந்தமாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

    மீதமுள்ள 87.09% மின்சாரம் தனியாரிடமிருந்தும், மத்தியத் தொகுப்பிலிருந்தும் தான் வாங்கப்படுகிறது. 2023- 24ஆம் ஆண்டில் மொத்த வணிகமான 9338 கோடி யூனிட்டுகளில் 8290.60 கோடி யூனிட்டுகள், அதாவது 88.79% வெளியாரிடமிருந்து வாங்கப்பட்டிருக்கிறது.

    ஒரு மாநிலத்தின் மின்வாரியம் அதன் மொத்த வணிகத்தில் சுமார் 90% மின்சாரத்தை வெளியிலிருந்து அதிக விலைக்கு வாங்கினால் எவ்வாறு லாபம் ஈட்ட முடியும்?

    வெளியிலிருந்து வாங்கப்படும் மின்சாரத்தின் அளவு இரு ஆண்டுகளில் 14% மட்டுமே அதிகரித்துள்ள நிலையில், செலவு 70% அதிகரித்திருக்கிறது. 2021&22ஆம் ஆண்டில் ஒரு யூனிட் மின்சாரம் சராசரியாக ரூ.4.50க்கு வாங்கப்பட்ட நிலையில், 2023&24ஆம் ஆண்டில் இது ரூ.6.72 ஆக அதிகரித்திருக்கிறது. இது 49.33% உயர்வு ஆகும். மின்சாரத்தின் விலை இந்த அளவுக்கு உயருவதற்கு வாய்ப்பே இல்லை.

    ஆட்சியாளர்களுக்கு தங்களுக்குத் தேவையானவற்றை பெறுவதற்காகவே இந்த அளவுக்கு அதிகவிலை கொடுத்து மின்சாரத்தை வாங்கியிருப்பதாக மின்வாரிய அதிகாரிகள் சிலரே கூறுகின்றனர்.

    ஒரு மின்வாரியம் ஆண்டுக்கு ரூ.55,754 கோடிக்கு வெளியில் மின்சாரம் வாங்கினால், அதில் எந்த அளவுக்கு ஊழல் செய்திருக்கக் கூடும் என்பதை பொதுமக்கள் மற்றும் நடுநிலையாளர்களின் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.

    அதேபோல், தமிழ்நாடு மின்வாரியத்தின் மூலம் சொந்தமாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு இந்தக் காலத்தில் வெறும் 21% மட்டுமே அதிகரித்துள்ள நிலையில், அதற்கான ஆன செலவு மட்டும் 77% உயர்ந்திருக்கிறது.

    இதுவும் எங்கேயும் நடக்காத அதிசயம். 2021&22ஆம் ஆண்டில் 2552 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய ரூ.14,061 கோடி, அதாவது ஒரு யூனிட்டுக்கு ரூ.5.50 செலவாகியுள்ளது.

    ஆனால், 2023&24ஆம் ஆண்டில் 3110.60 கோடி யூனிட் உற்பத்தி செய்ய ரூ.24,920 கோடி செலவாகியுள்ளது. ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய ரூ.8.01 செலவாகியுள்ளது.

    இது 46% உயர்வு ஆகும். சந்தனக் கட்டைகளை எரித்து மின்சாரம் உற்பத்தி செய்தால் கூட இந்த அளவு செலவாகாது எனும் நிலையில், நிலக்கரி அதிக விலை கொடுத்து வாங்கியதால் தான் இவ்வளவு அதிக செலவாகியிருக்கும் என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

    மின்வாரியத்தின் வருவாய் 96% அதிகரித்த பிறகும் ரூ.6920 கோடி இழப்பில் இயங்குவது தான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனையா? என்பதை ஆட்சியாளர்கள் விளக்க வேண்டும்.

    வெளியாரிடம் வாங்கும் மின்சாரத்தின் விலை 49.33% அளவுக்கும், மின்வாரியத்தின் உற்பத்திச் செலவு 46% அளவுக்கு உயர்ந்ததன் காரணம் என்ன? என்பது குறித்து உயர்நிலை விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • வரும் நிதியாண்டிற்குள் மேலும் 40 ஆயிரம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    • தமிழத்தில் இதுவரை வழங்கப்பட்ட அரசு வேலைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் கடந்த நான்காண்டுகளில் எவ்வளவு பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டிருக்கிறது என்பது தொடர்பாக நிதிநிலை அறிக்கையில் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள விவரங்களுக்கும். சில மாதங்களுக்கு முன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட புள்ளிவிவரங்களுக்கும் இடையே மிகப்பெரிய முரண்பாடு நிலவுகிறது. வேலைவாய்ப்பு குறித்த புள்ளிவிவரங்களை வெளியிடுவதில் திமுக அரசு எந்த அளவுக்கு மோசடி செய்கிறது என்பதற்கு இது தான் எடுத்துக்காட்டு ஆகும்.

    நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள், "அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஆகியவற்றின் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு அரசுத் துறைகளில் இதுவரை 57,016 அரசுப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இது தவிர, பல்வேறு அரசுத்துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் வாயிலாக 21,866 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்" என்று கூறியிருந்தார்.

    அமைச்சர் வெளியிட்ட புள்ளி விவரங்களில் தேர்வாணையத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை நிரந்தரப் பணியாளர்கள் ஆவர். உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக தேர்வு செய்யப்பட்டவர்கள் தற்காலிக, ஒப்பந்தப் பணியாளர்கள் ஆவர். இவர்களின் பணி நிலை குறித்த துல்லியமான விவரத்தை வெளியிடும்படி பா.ம.க. பலமுறை வலியுறுத்தியும் தமிழக அரசிடமிருந்து பதில் கிடைக்கவில்லை.

    திமுக அரசு பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்திருந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "கடந்த 3 ஆண்டுகளில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகிய தேர்வு முகமைகள் வாயிலாக 32 ஆயிரத்து 774 பேருக்கு பல்வேறு அரசுத் துறைகளில் நேரடிப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டன. அதேபோல், உள்ளாட்சி அமைப்புகள், அரசுத் துறை நிறுவனங்கள் போன்ற பல்வேறு அரசு அமைப்புகளில் 32 ஆயிரத்து 709 இளைஞர்கள் பணிநியமனம் பெற்றனர். மொத்தம் 65 ஆயிரத்து 483 இளைஞர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் அரசுப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது '' என்று கூறியிருந்தார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்ததற்கு பிந்தைய 8 மாதங்களில் அரசுத் துறைகளில் வேலை பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 65 ஆயிரத்திலிருந்து 78 ஆயிரமாக உயர்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அதை மறுக்கவில்லை. ஆனால், கடந்த 8 மாதங்களில் மொத்தப் பணியாளர்கள் எண்ணிக்கை 13 ஆயிரம் மட்டுமே உயர்ந்துள்ள நிலையில், அரசுத் தேர்வு முகமைகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை எவ்வாறு 25 ஆயிரம் உயர முடியும்?

    அதேபோல், மொத்தப் பணியாளர் எண்ணிக்கை உயரும் போது உள்ளாட்சிகள் உள்ளிட்ட அமைப்புகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர வேண்டும் அல்லது அதே எண்ணிக்கையில் இருக்க வேண்டும். ஆனால், அவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 709-லிருந்து 21,866 ஆக 11 ஆயிரம் பேர் குறைந்தது எப்படி?

    அதேபோல், வரும் நிதியாண்டிற்குள் மேலும் 40 ஆயிரம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடப்பாண்டில் 7 பணிகளுக்கு மட்டும் தான் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் பார்த்தால் அந்த 7 பணிகளுக்கும் சேர்த்து மொத்தம் 10 ஆயிரம் பேர் கூட தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்கள். அவ்வாறு இருக்கும் போது 40 ஆயிரம் பேரை எவ்வாறு தேர்வு செய்ய முடியும்?

    ஐந்தரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, அதில் 10 விழுக்காட்டினருக்கு கூட வேலை வழங்காததை மறைப்பதற்காக பொய்யான புள்ளி விவரங்களை வெளியிட்டு மக்களை ஏமாற்றப்பார்க்கிறது. அரசு வேலை பெற்றவர்களின் எண்ணிக்கை குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களும், அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களும் தெரிவித்த புள்ளிவிவரங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருக்கும் நிலையில், இருவரில் யார் சொன்னது சரி? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும். தமிழத்தில் இதுவரை வழங்கப்பட்ட அரசு வேலைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார். 



    • 2025-26-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
    • கல்வி, மருத்துவம், வேளாண்மை போன்ற முதன்மைத் துறைகளுக்கு போதிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

    தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று 2025-26-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அப்போது பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.

    இந்நிலையில், இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    எல்லோருக்கும் எல்லாம் என்ற முழக்கத்துடன் தொடங்கப்பட்ட தமிழக அரசின் நிதிநிலை அறிக்கைக் குறித்த பரப்புரை, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு யாருக்கும் எதுவும் இல்லை என்ற எதார்த்தத்துடன் நிறைவடைந்திருக்கிறது.

    கல்வி, மருத்துவம், வேளாண்மை போன்ற முதன்மைத் துறைகளுக்கு போதிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

    மாணவர்களுக்கு இலவச கணினி போன்ற சில கவர்ச்சியான அறிவிப்புகள் வெளியிடப்பட்டாலும் கூட, அவை மக்களை ஏமாற்றும் அறிவிப்புகளாக உள்ளன.

    2025-26ம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார்.

    திமுக அரசின் கடைசி முழு நிதிநிலை அறிக்கை என்பதால் மக்களுக்கு பயனளிக்கும் வகையிலான புதிய திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் ஏமாற்றமே பரிசாகக் கிடைத்திருக்கிறது.

    கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு நிதியமைச்சர் நீண்ட நேரம், அதாவது 2.40 மணி நேரம் உரையாற்றினார்; நிதிநிலை அறிக்கை ஆவணம் மொத்தம் 182 பக்கங்களைக் கொண்டிருந்தது என்றாலும் அதில் திட்டங்களைத் தான் காணவில்லை.

    1. ஐ.நா. அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட 193 நாடுகளின் அலுவல் மொழிகளிலும் திருக்குறளை மொழி பெயர்க்க இன்னும் 45 மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட வேண்டியுள்ளதாகவும், அதற்கான ரூ.1.33 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், தமிழை கட்டாயப் பயிற்றுமொழியாகவும், கட்டாயப் பாடமாகவும் செயல்படுத்த எந்த அறிவிப்பையும் திமுக அரசு வெளியிடாதது ஏன்?

    2. தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலைநாட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்; அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கம் போலவே மத்திய அரசை கைகாட்டி விட்டு தமிழக அரசு ஒதுங்கிக் கொண்டது. இது சமூகநீதிக்கு திமுக அரசு இழைத்திருக்கும் பெரும் துரோகம் ஆகும்.

    3. பள்ளிக்கல்வித்துறை தான் மிகவும் முக்கியமானது ஆகும். அத்துறைக்கு மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 6%, அதாவது ரூ. 2.14 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால், அதில் ஐந்தில் ஒரு பங்கு, அதாவது ரூ.46,767 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்தகாலங்களில் பள்ளிக்கல்வித்துறைக்கான ஒதுக்கீடு சராசரியாக ரூ.4000 & ரூ.5000 கோடி என்ற அளவில் உயர்த்தப்பட்டு வந்த நிலையில் நடப்பாண்டில் ரூ.2725 கோடி தான் உயர்த்தப்பட்டுள்ளது.

    4. பள்ளிக்கல்வித்துறையில் 20 ஆயிரத்திற்கும் கூடுதலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், 2562 ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போதிய நிதியும், ஆசிரியர்களும் இல்லாமல் அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமானக் கல்வியை எவ்வாறு வழங்க முடியும்?

    5. உயர்கல்வித்துறைக்கான நிதி ரூ.1543 கோடி மட்டும் தான் உயர்த்தப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் அரசு கல்லூரிகளில் 15 ஆயிரம் மாணவர் சேர்க்கை இடங்கள் அதிகரிக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அரசு கல்லூரிகளில் 8 ஆயிரத்திற்கும் கூடுதலான உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவது குறித்து எந்த அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடவில்லை.

    6. மருத்துவத் துறைக்கான நிதி ஒதுக்கீடு வெறும் ரூ.1708 கோடி மட்டும் தான் உயர்த்தப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், இன்று வரை ஒரே ஓர் அரசு மருத்துவக்கல்லூரி கூட தொடங்கப்படவில்லை. வரும் ஆண்டிலும் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்கப்படுவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படாதது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.

    7. மாதம் ரூ.1000 மகளிர் உதவி வழங்கும் திட்டத்தில் பல லட்சம் புதிய பயனாளிகள் சேர்க்கப்படுவர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல மாதங்களாகக் கூறி வருகிறார். ஆனால், இந்த நிதிநிலை அறிக்கையில் அத்திட்டத்திற்கான நிதி ரூ.87 கோடி மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. இதில் பெரும் பகுதி நிர்வாகச் செலவினங்களுக்கே சென்று விடும் நிலையில், புதிய பயனாளிகள் எங்கிருந்து சேர்க்கப்படுவார்கள்? என்பதற்கு தமிழக அரசு தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

    8. ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கை 150 ஆக அதிகரிக்கப்படும் என்று தமிழக அரசு கூறியிருந்தது. ஆனால், நடப்பாண்டில் அத்திட்டத்திற்கு எவ்வளவு கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதே நிதிநிலை அறிக்கையில் கூறப்படவில்லை.

    9. நீர்வளத்துறையின் சார்பில் சென்னைக்கு குடிநீர் வழங்குவதற்கான 1.6 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட 6&ஆம் நீர்த்தேக்கம் திருப்போரூர் அருகில் 4375 ஏக்கரில் அமைக்கப்படவிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், புதிய நீர்ப்பாசனத் திட்டங்கள் ஒன்று கூட அறிவிக்கப்படாதது ஏன்?

    10. பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகும் என அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எதிர்பார்த்திருந்த நிலையில், 15 நாட்கள் ஈட்டிய விடுப்பை ஒப்படைக்கும் திட்டம் மட்டும் தான் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது போதுமானதல்ல. இதன் மூலம் தொடர்ந்து ஐந்தாவது முறையாக அரசு ஊழியர்களை திமுக அரசு ஏமாற்றியுள்ளது.

    12. 2025-26ஆம் ஆண்டின் இறுதிக்குள் 40 ஆயிரம் பேருக்கு புதிய அரசு வேலைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் ஆண்டுத் திட்டம் இன்னும் வெளியிடப்படவில்லை; தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதன் ஆண்டுத் திட்டத்தை அறிவித்து விட்டாலும் கூட, எந்தப் பணிக்கு எவ்வளவு பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது அறிவிக்கப்படவில்லை. இத்தகைய சூழலில் 40 ஆயிரம் பேருக்கு அரசு வேலை என்பது ஏமாற்று வேலை தான்.

    12. 20 லட்சம் மாணவர்களுக்கு மடி கணினி அல்லது கையடக்கக் கணினி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது அடுத்த இரு ஆண்டுகளில் தான் வழங்கப்படுமாம். திமுக அரசின் பதவிக்காலம் இன்னும் 10 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் 20 லட்சம் பேருக்கு மடிகணினி வழங்குவது சாத்தியமில்லை; அந்த வகையில் இதுவும் சாத்தியமற்றதாகும்.

    13. சென்னை, கோவை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களை விரைவுபடுத்த அறிவிப்புகள் இல்லை. அவற்றுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு விட்டது என்பதையே தமிழக அரசு மீண்டும், மீண்டும் கூறி வருகிறது. இதுவும் மக்களை ஏமாற்றும் செயல் தான்.

    இன்னொருபுறம் தமிழக அரசின் நிதிநிலை மிகவும் மோசமடைந்து கொண்டிருக்கிறது. நடப்பாண்டில் வருவாய்ப் பற்றாக்குறை இருக்காது என்றும், ரூ.1000 கோடிக்கும் மேல் வருவாய் உபரி கிடைக்கும் என்றும் தமிழக அரசு கூறி வந்த நிலையில், ரூ.41,634.93 கோடி வருவாய்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    நிதிப்பற்றாக்குறை ஒரு லட்சம் கோடியைத் தாண்டி விட்ட நிலையில் நிலைமையை சமாளிக்க நடப்பாண்டில் ரூ.1.62 லட்சம் கோடியை தமிழக அரசு கடனாக வாங்க இருக்கிறது. இதனால் 2025-26ஆம் ஆண்டின் முடிவில் தமிழக அரசின் கடன் ரூ. 9 லட்சத்து 29,959 கோடியாக அதிகரிக்கும். அதற்கான வட்டியாக மட்டும் ரூ.70,753 கோடி செலுத்த வேண்டியிருக்கும்.

    நடப்பாண்டின் முடிவில் தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவர் பெயரிலும் ரூ.1.25 லட்சம் கடன் வாங்கப்பட்டிருக்கும். மொத்தத்தில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மக்களுக்கு பயனளிக்காத, கடன்சுமையை மட்டுமே அதிகரிக்கக்கூடிய நிநிநிலை அறிக்கை ஆகும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • எவரும் அரசை எதிர்த்து வினா எழுப்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற பரபரப்பில் பழைய வரலாறுகளை தி.மு.க. மறந்து விடுகிறது.
    • இது போன்ற நாடகங்களை நடத்துவதற்கு பதிலாக தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தொடர்பான முன்னோட்டத்தில் ரூபாய் என்பதன் அடையாளமான ₹ என்ற குறியீட்டை நீக்கி விட்டு, அதற்கு பதிலாக ரூ என்ற குறியீட்டை வைத்து, அதை ஏதோ புரட்சி போன்று தி.மு.க. அரசு விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது. தி.மு.க. அரசின் செயலற்ற தன்மையால் ஏற்படும் வேதனைகளைத் தாங்க முடியாமல் மக்கள் குமுறிக் கொண்டிருக்கும் நிலையில் அதை திசை திருப்பும் நோக்குடன் இத்தகைய நாடகங்களை தி.மு.க. அரசு அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.

    எதையாவது செய்து மக்களை பதற்றத்திலேயே வைத்திருக்க வேண்டும்; எவரும் அரசை எதிர்த்து வினா எழுப்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற பரபரப்பில் பழைய வரலாறுகளை தி.மு.க. மறந்து விடுகிறது. ₹ அடையாளம் நேற்றோ, அதற்கு முன்நாளோ வெளியிடப்பட்டது அல்ல. 15 ஆண்டுகளுக்கு முன் 2010-ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் தேதி தி.மு.க. அங்கம் வகித்த மன்மோகன்சிங் அவர்கள் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தான் வெளியிடப்பட்டது. அப்போது அதை தி.மு.க. ஆதரித்தது.

    ₹ அடையாளத்தை வடிவமைத்தவர் ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தர்மலிங்கத்தின் மகன் உதயகுமார். அந்த அடையாளத்தை வடிவமைத்ததற்காக 2010ஆம் ஆண்டு ஜூலை 24-ஆம் தேதி உதயகுமாரையும் அவரது குடும்பத்தினரையும் அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவரது கோபாலபுரம் இல்லத்துக்கு வரவழைத்துப் பாராட்டினார். அப்போதெல்லாம் பெருமைக்குரியதாக போற்றிய அடையாளத்தை தான் தி.மு.க. இப்போது நீக்கியிருக்கிறது.

    அவ்வளவு ஏன்? கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி கலைஞரின் பிறந்தநாள் நூற்றாண்டையொட்டி ₹.100 நினைவு நாணயம் மத்திய அரசால் வெளியிடப்பட்டது. மத்திய அரசால் மிகவும் எளிமையாக நடத்தப்படவிருந்த அந்த விழாவை தி.மு.க. அரசு மக்களின் வரிப்பணத்தில் மிகவும் பிரமாண்டமாக நடத்தியது. அப்போது வெளியிடப்பட்ட நாணயத்தில் ₹ அடையாளம் தான் இடம் பெற்றிருந்தது. அதற்கான அந்த நாணயத்தை தி.மு.க. வெறுக்கவில்லை. மாறாக, ரூ.4470 விலை கொண்ட நாணயத்தை தி.மு.க.வினரிடமே ரூ.10 ஆயிரத்துக்கு விற்று லாபம் பார்த்தது தி.மு.க..

    தமிழக அரசின் ஆவணத்தில் இப்போது ₹ அடையாளத்தை நீக்கியிருக்கும் தி.மு.க., அதே அடையாளத்தைக் கொண்டிருக்கும் கலைஞர் நினைவு நாணயங்களையெல்லாம் வீசி எறிந்து விடுமா? என்பதற்கு பதிலளிக்க வேண்டும். இது போன்ற நாடகங்களை நடத்துவதற்கு பதிலாக தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சட்டமன்ற உறுப்பினரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.
    • திமுகவினரின் பாசிசத்துக்கு மக்கள் முடிவு கட்டும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

    சேலம் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி பாலக்குட்டப்பட்டியில் புதிய பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் இன்று தொடங்கப்படுவதைப் பார்வையிடுவதற்காகச் சென்ற பா.ம.க. சட்டமன்ற உறுப்பினரை தாக்கிய சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    சேலம் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி பாலக்குட்டப்பட்டியில் ரூ.4.5 கோடியில் புதிய பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் இன்று தொடங்கப்படுவதைப் பார்வையிடுவதற்காகச் சென்ற பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் அருளை திமுகவினர் தடுத்து நிறுத்தி தள்ளி விட்டுள்ளனர். சட்டமன்ற உறுப்பினரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.

    பாலக்குட்டப்பட்டியில் பள்ளிக்கூடம் கட்டும் திட்டம் பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் அருளின் மூன்றாண்டு கால தொடர் முயற்சியால் கொண்டு வரப்பட்டது ஆகும். ஒரு சட்டமன்ற உறுப்பினரை அவரது தொகுதிக்குட்பட்ட பகுதியில் அவரது முயற்சியால் கொண்டுவரப்பட்ட திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்து கொள்ளக்கூட விடாமல் தடுப்பது தான் பாசிசம் ஆகும்.

    திமுகவினரின் பாசிசத்துக்கு மக்கள் முடிவு கட்டும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர் அருளை தாக்கியவர்கள் மீது தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி கூறியுள்ளார்.

    • திசை திருப்பும் முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது.
    • திசை திருப்பும் முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் மது வணிகத்துக்கு பொறுப்பு வகிக்கும் டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் பல்வேறு மது ஆலைகளில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனைகளில் குறைந்தது ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடத்தப்பட்டிருப்பது தெரிய வந்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன.

    டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெறும் ஊழல்கள் குறித்து புதிது புதிதாக குற்றச்சாட்டுகள் வெளியாகிவரும் நிலையில் அவற்றை முழுமையாக மறைத்து விட்டு, திசை திருப்பும் முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது. அமலாக்கத்துறை சோதனையில் தெரிய வந்துள்ள ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழலால் பயனடைந்தவர்கள் யார், யார்? என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டியதும், அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டியதும் அவசியம் ஆகும்.

    தமிழகக் காவல்துறை அதை செய்யும் என்ற நம்பிக்கை தமிழ்நாட்டு மக்களுக்கு இல்லை. எனவே, டாஸ்மாக் ஊழல்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழ்நாடு அரசு ஆணையிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அறிவியல் வளர்ச்சியும், தொழில்நுட்பமும் உழவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும்.
    • கடுகு உள்ளிட்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட எந்த பயிரும் உழவர்களுக்கு நன்மை செய்யாது; தீமை தான் ஏற்படுத்தும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு பயிரை வணிக நோக்கில் பயிரிட அனுமதிப்பதற்கு முன்னோட்டமாக, அதன் விதைகளை உற்பத்தி செய்ய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு அனுமதி அளித்திருக்கிறது. சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்த முடிவுக்கு ஒப்புதல் அளித்தால், இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு பயிரின் வணிக நோக்கிலான சாகுபடி அடுத்த இரு ஆண்டுகளில் தொடங்கி விடும். இது ஆபத்தானது.

    மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதை உற்பத்தியும், விதை உற்பத்தியின் போது நடத்தப்படும் கள ஆய்வுகளும் திட்டமிட்டபடி நடைபெற்றால், அடுத்த 2 ஆண்டுகளில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு வணிக அடிப்படையில் சாகுபடி செய்யப்பட்டு, சந்தைக்கு வந்து விடும். அது நிகழ்ந்தால் இந்தியாவில் உணவுப்பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்படக்கூடும்.

    அறிவியல் வளர்ச்சியும், தொழில்நுட்பமும் உழவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும். கடுகு உள்ளிட்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட எந்த பயிரும் உழவர்களுக்கு நன்மை செய்யாது; தீமை தான் ஏற்படுத்தும். எனவே, மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு வகையின் விதை உற்பத்திக்கு மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு அளித்துள்ள அனுமதிக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தமிழ்நாட்டில் தற்போது தற்காலிக ஊழியர்கள் பணியாற்றும் பணியிடங்களுக்கு இணையான நிரந்தர பணியிடங்கள் இல்லை.
    • அரசாணை எண் 131-ன்படி அவர்கள் தற்காலிக பணியாளர்களாகவே நீடிக்க முடியும்; பணி நிலைப்பு வழங்க முடியாது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறையில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்கள் 6 பேரை பணி நிலைப்பு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது.

    தற்காலிக பணியாளர்களை பணி நிலைப்பு செய்ய தமிழக அரசு மறுத்த நிலையில், அதை நிராகரித்து அவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சமூக நீதி வழங்கியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.

    தமிழ்நாட்டில் தற்போது தற்காலிக ஊழியர்கள் பணியாற்றும் பணியிடங்களுக்கு இணையான நிரந்தர பணியிடங்கள் இல்லை. அதனால், அரசாணை எண் 131-ன்படி அவர்கள் தற்காலிக பணியாளர்களாகவே நீடிக்க முடியும்; பணி நிலைப்பு வழங்க முடியாது. அதனால் தற்காலிக ஊழியராக சேர்ந்த ஒருவர் 35 ஆண்டுகள் பணியாற்றினா லும் அதே நிலையில் தான் ஓய்வு பெற வேண்டும்; அவருக்கு ஓய்வுக் கால பயன்கள் உள்ளிட்ட எந்த உரிமையும் கிடைக்காது. இதைவிட மோசமான சமூக அநீதி இருக்க முடியாது.

    எனவே, அரசாணை எண் 131-ல் உள்ள நிபந்த னைகளை தளர்த்தி, சென்னை உயர்நீதிமன்றம் காட்டிய கருணையுடன், பத்தாண்டுகள் பணியாற்றிய தற்காலிக பணியாளர்கள் அனைவருக்கும், அவர்கள் எந்த தேதியில் பத்தாண்டு களை நிறைவு செய் தார்களோ, அந்த நாளில் இருந்து அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பெட்ரோல் விற்பனையில் கூடுதல் லாபம் லிட்டருக்கு 6 ரூபாயைத் தாண்டி விட்டது;
    • டீசல் விற்பனையில் இழப்பு லிட்டருக்கு 5 ரூபாய்க்கும் கீழாக குறைந்து விட்டது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலைகளை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் மறுத்து வருகின்றன.

    சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக சமையல் எரிவாயு உற்பத்திச் செலவும் பெருமளவில் குறைந்துள்ளது. அதன்படி வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 6 மாதங்களில் ரூ.615 குறைத்துள்ளன. ஆனால், வீட்டுப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலை ஒரு பைசா கூட குறைக்கப்படவில்லை. மாறாக, மே, ஜூலை காலத்தில் இந்த வகை சமையல் எரிவாயு விலை ரூ.103 உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த பாகுபாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது.

    சர்வதேச சந்தையில் இனிவரும் காலங்களில் கச்சா எண்ணெய் விலைகள் தொடர்ந்து வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் விற்பனையில் கூடுதல் லாபம் லிட்டருக்கு 6 ரூபாயைத் தாண்டி விட்டது; டீசல் விற்பனையில் இழப்பு லிட்டருக்கு 5 ரூபாய்க்கும் கீழாக குறைந்து விட்டது. சமையல் எரிவாயு விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ரூ.22,000 கோடி மானியம் கொடுத்து மத்திய அரசு ஈடு செய்து விட்ட நிலையில், இப்போது எரிவாயு விற்பனையில் ஓரளவு லாபம் கிடைக்கத் தொடங்கியுள்ளது. ஒட்டு மொத்தமாக எரிபொருள் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு லாபம் கிடைக்கும் நிலையில் அதன் பயன்களை வாடிக்கையாளர்களுக்கும் பகிர்ந்தளிக்க முன்வர வேண்டும்.

    விலைவாசி உயர்வால் இந்திய மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வரும் நிலையில், அவர்களின் துயரத்தைப் போக்க வேண்டியது எண்ணெய் நிறுவனங்களின் கடமையாகும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை குறைப்பதன் மூலம் அக்கடமையை எண்ணெய் நிறுவனங்கள் நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பதவி உயர்வுக்கான தேர்வுக்குழுவில் ஆளுனர் மற்றும் அரசு பிரதிநிதிகள் நியமிக்கப்படாதது தான் தாமதத்திற்கு காரணம் ஆகும்.
    • அவர்களை உடனடியாக நியமித்து தகுதியான பேராசிரியர்கள் அனைவருக்கும் உடனடியாக மூத்த பேராசிரியர் பதவி உயர்வை தாமதிக்காமல் வழங்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணி மேம்பாட்டு முறைப்படி உதவி பேராசிரியர்கள் மற்றும் இணை பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், பேராசிரியர்களுக்கான மூத்த பேராசிரியர் பதவி உயர்வு கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. இது பெரும் அநீதியாகும்.

    பதவி உயர்வுக்கான தேர்வுக்குழுவில் ஆளுனர் மற்றும் அரசு பிரதிநிதிகள் நியமிக்கப்படாதது தான் இந்த தாமதத்திற்கு காரணம் ஆகும். அவர்களை உடனடியாக நியமித்து தகுதியான பேராசிரியர்கள் அனைவருக்கும் உடனடியாக மூத்த பேராசிரியர் பதவி உயர்வை தாமதிக்காமல் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • சிங்களப் படையினரால் கடந்த 27-ந்தேதி கைது செய்யப்பட்ட 7 மீனவர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை.
    • தமிழக மீனவர்களை இனி கைது செய்யவோ, தாக்கவோ கூடாது என்று இலங்கை அரசை மத்திய அரசு கடுமையாக எச்சரிக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது. அவர்களின் இரு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. சிங்களப் படையினரின் இந்த அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.

    சிங்களப் படையினரால் கடந்த 27-ந்தேதி கைது செய்யப்பட்ட 7 மீனவர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. 20-ந்தேதி கைது செய்யப்பட்டு இரு நாட்கள் முன் விடுவிக்கப்பட்ட 3 மீனவர்கள் இன்னும் சொந்த ஊர் திரும்பவில்லை. அதற்குள்ளாக அடுத்த அத்துமீறல் நடந்திருக்கிறது.

    மீனவர்கள் கைது செய்யப்பட்டதை தமிழக அரசும், பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளும் கண்டித்து வருகின்றன. ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டமும் நடத்தியுள்ளனர். அதற்குப் பிறகும் தொடரும் சிங்களப் படையினரின் அத்துமீறலுக்கு இந்திய அரசு எப்போது முடிவு கட்டப் போகிறது?

    இப்போது கைது செய்யப்பட்ட 15 மீனவர்களையும், ஏற்கனவே சிறைபட்ட 7 பேரையும் உடனடியாக மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்களை இனி கைது செய்யவோ, தாக்கவோ கூடாது என்று இலங்கை அரசை மத்திய அரசு கடுமையாக எச்சரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஜி.கே.மணிக்கு நேற்று முன்தினம் திடீரென வயிற்று வலி ஏற்பட்டது.
    • ஜி.கே.மணி சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    சேலம்:

    பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக ஜி.கே.மணி பல ஆண்டுகள் பொறுப்பு வகித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜி.கே மணி பா.ம.க. கவுரவ தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது தொகுதியான பென்னாகரத்திற்கு அடிக்கடி சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்து நிவர்த்தி செய்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதை அடுத்து அவர் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    ஜி.கே.மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதை கேள்விப்பட்டு, அருள் எம்.எல்.ஏ அவரிடம் நலம் விசாரித்தார். அதே போல கட்சி நிர்வாகிகளும் அவரிடம் உடல் நலம் குறித்து கேட்டு அறிந்து வருகின்றனர். இதற்கு இடையே தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். மேலும் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அவரிடம் நலம் விசாரித்தார்.

    ×