search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுமாப்பிள்ளை கொலை"

    • கொலையாளிகள் யார் என்று விசாரணை நடத்தப்பட்டது.
    • 2 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.

    தக்கலை:

    குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள அமராவதியை சேர்ந்தவர் மகேஷ்(வயது38). வெளிநாட்டில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்த இவர், தனது மனைவி ஷோபியுடன் தக்கலையில் உள்ள வட்டம் அண்ணா நகரில் ஒரு வீட்டின் மாடியில் வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டின் மொட்டை மாடியில் மகேஷ் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த தக்கலை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மகேசின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது அவருக்கு முதலில் திருமணமாகி மனைவி பிரிந்து விட்டதும், அதன்பிறகு விமானத்தில் ஏற்பட்ட பழக்கத்தில் சென்னையை சேர்ந்த ஷோபி என்பவரை 2-வது திருமணம் செய்திருப்பதும் தெரியவந்தது.

    ஷோபி தனது பெற்றோரை பார்க்க சென்னை சென்றிருந்த நேரத்தில் தான் மகேஷ் கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே அந்த நேரத்தில் வீட்டுக்கு வந்தது யார்? என்று போலீசார் விசாரணையில் இறங்கினர். சம்பவ இடத்திலும், மகேசின் வீட்டிலும் மது பாட்டில்கள் கிடந்ததால், அவர் நண்பர்களுடன் மது அருந்தி இருக்கலாம் என்றும், அப்போது ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருக்கலாம் எனவும் போலீசார் கருதினர்.

    அதனடிப்படையில் கொலையாளிகள் யார் என்று விசாரணை நடத்தப்பட்டது. கொலையாளிகளை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன், இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தியதில் திருவிதாங்கோடு மல்லன்விளையை சேர்ந்த மெக்கானிக் பெனிட்(27), பொற்றைகாட்டுவிளை பெயிண்டர் திரேன்ஸ்(23), மல்லன்விளை பிபின் ஜேக்கப்(23) ஆகிய 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் அவர்கள் 3 பேர் மீதும் போலிசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடிவந்தனர்.

    கேரளா மற்றும் சென்னைக்கு விரைந்த தனிப்படையினர் தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்தநிலையில் மகேசின் உறவினர்கள் நேற்று தக்கலை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கொலையாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று அவர்கள் கூறினர்.

    அவர்களை போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்ற அவர்கள், மகேஷ் உடல் வைக்கப்பட்டு இருந்த ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு வந்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்தநிலையில் மகேஷ் கொலையில் தேடப்பட்ட பிபின் ஜேக்கப், கோவையில் பதுங்கிருப்பது செல்போன் சிக்னல் மூலம் தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படையினர் கோவை விரைந்தனர். அவர்கள் பிபின் ஜேக்கப் தங்கியிருந்த வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்தனர்.

    பின்பு வீட்டுக்குள் இருந்த பிபினை கைது செய்தனர். கைது செய்த அவரை தனிப்படை போலிசார் இன்று காலை தக்கலைக்கு அழைத்து வந்தனர். அவரிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    பிபின் ஜேக்கப் தெரிவித்த தகவலின் அடிப்படையில் மற்ற 2 பேரையும் பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர். விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

    ×