search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆக்கிரப்புகள் அகற்றம்"

    • 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    • அரசுக்கு எதிராக கோஷமிட்டதால் பரபரப்பு.

    சோழவந்தான்:

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள முள்ளிபள்ளம் கிராமத்தில் விதிகளை மீறி ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது.

    முள்ளிபள்ளம் அய்யப்பன் கோவில் முதல் இளங்காளியம்மன் கோவில் வரை ஆக்கிரமித்து 128 வீடுகள் கட்டப்பட்டுள்ள தாகவும், இதனை அகற்ற வேண்டுமென தனி நபர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

    இதையடுத்து சம்பந்தப்பட்ட வீட்டின் ஆக்கிரமிப்பாளர்களுக்கு காலி செய்யுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் வீடுகளை காலி செய்யாமல் அகற்றக் கூடாது என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    ஆனாலும் கோர்ட்டு உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என அதிகாரிகள் தரப்பில் கண்டிப்புடன் தெரிவிக்கப்பட்டது.

    அதன்படி, இன்று காலை நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ராதா முத்துக் கிருஷ்ணன், வாடிப்பட்டி வட்டாட்சியர் ராமச்சந்திரன், சமயநல்லூர் டி.எஸ்.பி. ஆனந்தராஜ், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி ஆகியோர் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

    அதனைத்தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் 4 ஜே.சி.பி. எந்திரங்களின் உதவியுடன் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

    வீடுகளை இடிக்கும் போது அந்தப்பகுதிகளை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும் சிலர் அரசுக்கு எதிராக கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இருப்பினும் கோர்ட்டு உத்தரவுப்படி இன்று மதியம் வரை ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டது. முள்ளிப்பள்ளம் அய்யப்பன் கோவில் முதல் இளங்காளியம்மன் கோவில் வரை 1.2 கிலோ மீட்டரில் கட்டப்பட்டிருந்த 128 ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று மதியம் வரை ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்படும். நாளையும் ஆக்கிரமிப்பை அகற்றும் பணிகள் தொடரும் என அறிவிக்கப்பட்டது.

    இதுகுறித்து சுமார் 50 ஆண்டுகாலம் குடியிருந்து வந்த வீடுகள் இடிக்கப்பட்டதால் அந்தப்பகுதி பொதுமக்கள் சோகத்துடன் காணப்பட்டனர். தொடர் ந்து முள்ளிப்பள்ளத்தில் பதற்றம் நீடிப்பதால் பாதுகாப்புக்காக போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

    ×