என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீஞ்சூர்-வண்டலூர்"

    • சாலையோரம் புழுதி பறக்க கார்கள் வட்டமடித்தன.
    • சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

    பொன்னேரி:

    மீஞ்சூர்-வண்டலூர் இடையே 62 கி.மீட்டர் தூரத்திற்கு 400 அடி வெளிவட்ட சாலை உள்ளது. இந்த சாலையில் விடுமுறை நாட்களில் வாகனப் போக்குவரத்து குறைவாக இருக்கும்.

    இதை பயன்படுத்தி மோட்டார் சைக்கிள், ஆட்டோ ரேஸ், அதிவேகத்தில் மோட்டார் சைக்கிளில் வீலிங் சாகசங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தும் வாகன ரேஸ் தொடர்ந்து நீடித்து வருகிறது.

    இந்த நிலையில் மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் கும்மனூர் அருகே கார் பந்தயம் நடந்த வீடியோ காட்சி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் கட்சி கொடிகளுடன் 5-க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் சாலையில் சீறிப்பாய்கின்றன.

     காரின் மேல் பகுதியை திறந்து காருக்குள் நின்றபடி வாலிபர்கள் தங்களது செல் போன்களில் கார் பந்தயத்தை வீடியோவாக பதிவு செய்தனர். மேலும் சாலையோரம் புழுதி பறக்க கார்கள் வட்டமடித்தன.

    இந்த வீடியோகாட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இது தொடர்பாக செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வாகனங்களின் பதிவு எண்ணை கொண்டு 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலையில் ஆட்டோ ரேஸ் சென்றபோது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற 2 வாலிபர்கள் விபத்தில் சிக்கி பலியானது குறிப்பிடத்தக்கது.

    ×