என் மலர்
நீங்கள் தேடியது "ரெயில் விபத்து ஒத்திகை"
- விபத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து செயல் விளக்கம் செய்து காட்டினர்.
- படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய பயணிகளை மீட்கும் ஒத்திகைக் காட்சிகள் நடந்தன.
திருச்சி:
ரெயில் விபத்துகளின் போது எப்படி துரிதமாக செயல்படுவது என்பது குறித்து மீட்புக் குழுவினர் திருச்சியில் தத்ரூபமாக நடத்திய காட்டினர்.
திருச்சி, முதலியார் சத்திரம், குட்ஷெட் யார்டில் ரெயில் விபத்துகளின் போது மீட்பு நடவடிக்கை குறித்தும் துரிதமாக செயல்படுவது குறித்தும் பாதுகாப்புக் குழுவினர் செயல்விளக்கம் செய்து காட்டினர்.
இதற்காக ஒரு ஏசி மற்றும் 2 பொது பெட்டிகள் என 3 பெட்டிகள் கவிழ்க்கப்பட்டது. இதை விபத்தாகக் கருதி திருச்சி ரெயில்வே கோட்ட அலுவலகத்திலுள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து அபாய சங்கு ஒலிக்கப்பட்டது.
உடனே தளவாட பொருட்கள், அவசர சிகிச்சைக்கான மருந்துப் பொருட்கள், கிரேனுடன் கூடிய விபத்து, மீட்பு ரெயில் ஜங்ஷன் ரெயில் நிலையத்திலிருந்து குட்ஷெட் யார்டுக்கு கொண்டு வரப்பட்டது.
திருச்சி கோட்ட முதுநிலை பாதுகாப்பு பிரிவு அதிகாரி ஸ்ரீதர் தலைமையில் வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் என 300 க்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து செயல் விளக்கம் செய்து காட்டினர்.
இரண்டு ரெயில் பெட்டிகளை கவிழ்த்து, அதில் சிலர் சிக்கியது போன்றும், அவர்களை மீட்புக் குழுவினர் நவீன இயந்திரங்கள் உதவியுடன் உயிரோடு மீட்பது போன்றும் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதற்காக ரெயில்வே மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டனர். விபத்து காட்சிகளை தத்ரூபமாக சித்தரிக்கும் வகையில், விபத்தில் சிக்கிய பயணிகள் அலறுவது போன்றும், ரெயில்வே மீட்புக் குழுவினர் நவீன இயந்திரங்கள் மூலம், ரெயில் பெட்டியை துளையிட்டும், ஜன்னல் கம்பிகளை அறுத்தும் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய பயணிகளை மீட்கும் ஒத்திகைக் காட்சிகள் நடந்தன.
விபத்தில் சிக்கிய நபர்கள் மீட்கப்பட்டு முதலுதவி கொடுக்கப்பட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்வது குறித்து ஒத்திகை தத்துரூபமாக நடத்தி காட்டப்பட்டது.
இதை ஒத்திகை என அறியாத பயணிகள் சிலர் ரெயில் விபத்து நடந்ததாக கருதி பதட்டம் அடைந்தனர். பின்பு ஒத்திகை என அறிந்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.