என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹர்திக் பாண்டியா"

    • கடந்த முறை சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் ஐந்தாவது இடத்தில் மட்டுமே நிறைவு செய்தது.
    • முதுகு காயத்தால் ஜஸ்பிரித் பும்ரா, தடை விதிக்கப்பட்டதால் ஹர்டிக் பாண்டியா ஆகியோர் விளையாடவில்லை.

    ஐபிஎல் 2025 சீசன் போட்டிகள் இன்று கொல்கத்தாவில் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியுள்ளது. ஆர்சிபி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விளையாடி வருகின்றன.

    இதற்கிடையே நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மும்பை இந்தியன்ஸ் பலப்பரீட்சை நடத்துகிறது. சென்னை சேப்பாக்க மைதானத்தில் நடக்க உள்ள இந்த போட்டிக்கு தற்போதிருந்தே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

    டோனிக்கு இப்போது 43 வயதாவதால் சிஎஸ்கே அணியில் இதுவே அவரின் கடைசி சீசன் ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த முறை சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் ஐந்தாவது இடத்தில் மட்டுமே நிறைவு செய்தது.

    எனவே இந்த முறை தனது குறைகளை களைந்து வெற்றி அணியாக சிஎஸ்கே உருவெடுக்குமா என்று ரசிகர்கள் தவம் கிடக்கின்றனர்.

    இதற்கு சாதகமாக அஸ்வின், நூர் அகமது, ஸ்ரேயாஸ் கோபால் மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் சிஎஸ்கேவின் பட்டாளத்தில் புதிதாக களமாடுகின்றனர். டோனியின் அனுபவமும், சிஎஸ்கே கேப்டன் ருதுராஜின் முடிவுகளும் இந்த முறை ஆட்டத்தை வென்றெடுக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

    நாளைய ஆட்டத்தை பொறுத்தவரை மும்பை இந்தியன்ஸ் அணியில் முதுகு காயத்தால் ஜஸ்பிரித் பும்ரா, தடை விதிக்கப்பட்டதால் ஹர்டிக் பாண்டியா ஆகியோர் விளையாடவில்லை. சூர்யகுமார் யாதவ் அணியை வழிநடத்த உள்ளார்

     

    இந்த முறை சிஎஸ்கே அணியை தங்களால் வீழ்த்த முடியும் என கேப்டன் சூர்யகுமார் யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஹர்திக் பாண்டியா விளையாடாதது குறித்து பேசிய சூர்யகுமார், "ஹர்திக் விளையாடவில்லை என்றாலும் அவர் எங்களுடனேயே உள்ளார்.

    அவருக்கு பதிலாக மற்றொரு வீரரை சேர்ப்பது சாத்தியமற்றது. அணியின் மற்ற வீரர்கள் அவரின் வெற்றிடத்தை நிரப்புவார்கள் என்று தெரிவித்துள்ளார். மொத்தத்தில் நாளை சிஎஸ்கே vs மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கிறது.

    • முதல் போட்டியில் கொல்கத்தா - பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
    • மும்பை அணி முதல் போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது.

    ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடர் வருகிற 22-ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் கொல்கத்த நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.

    இன்னும் சில தினங்களில் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ள நிலையில், ஒவ்வொரு அணிகளும் பயிற்சியை துவங்கியுள்ளன. இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி பயிற்சியின் போது அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா மைதானத்தில் ஷா பூ த்ரீ விளையாடினர்.

    பயிற்சின் போது மூவரும் ஒன்றுகூடிய நிலையில், தீவிரமாக ஆலோசனை செய்து பிறகு சா பூ த்ரீ விளையாடினர். உள்ளூர் கிரிக்கெட் மற்றும் இதர விளையாட்டுகளின் போது யார் முதலில் தொடங்குவது என்பதை முடிவு செய்ய சா பூ த்ரீ போடுவது வழக்கம். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் முன்னணி வீரர்களும் இதை விளையாடியது கவனம் பெற்றுள்ளது.

    பலரும் இந்த வீடியோவில் கமென்ட் செய்தும், பகிர்ந்தும் வருகின்றனர். விரைவில் தொடங்க இருக்கும் ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி வருகிற 23-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.


    • சூர்யகுமார் யாதவ் பேட்டிங் பற்றி சொல்ல வார்த்தைகள் போதாது.
    • எங்கள் அணி சார்பாக ரஷீத் கான் மட்டுமே மிகச் சிறப்பாக ஆடினார்.

    மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 57-வது ஐபிஎல் லீக் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணியானது குஜராத் டைட்டன்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பெற்றது. அதுமட்டுமின்றி புள்ளி பட்டியலிலும் 14 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

    இந்நிலையில் தோல்வி குறித்து குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில்:-

    எங்கள் அணி சார்பாக ரஷீத் கான் மட்டுமே மிகச் சிறப்பாக ஆடினார். அவர் பேட்டிங் செய்த விதமும், பவுலிங் செய்த விதமும் மிகவும் அற்புதமாக இருந்தது. அவரை தவிர்த்து நாங்கள் எங்களுடைய சிறப்பான செயல்பாட்டை இன்று வெளிப்படுத்த தவறிவிட்டோம். ஒரு அணியாக நாங்கள் இந்த போட்டியில் இல்லை என்று கூற வேண்டும். ஏனெனில் எங்களுடைய திட்டங்களில் தெளிவு இல்லை.

    அதோடு அதனை நாங்கள் சரியாகவும் பயன்படுத்தவில்லை. இந்த மைதானத்தில் நாங்கள் 25 ரன்கள் வரை கூடுதலாக கொடுத்து விட்டதாக நினைக்கிறேன். சூர்யகுமார் யாதவ் பேட்டிங் பற்றி சொல்ல வார்த்தைகள் போதாது. தற்போதைய டி20 கிரிக்கெட்டில் அவருக்கு எதிரான திட்டங்கள் தவறி போனால் அவர் எப்படி பேட்டிங் செய்வார் என்பதை இந்த போட்டியின் மூலமே அறிந்து கொள்ளலாம்.

    இந்த போட்டியில் எங்களுடைய திட்டங்கள் தவறியதாலே தோல்வி கிடைத்தது. ஆனால் இதிலிருந்து நிச்சயம் நாங்கள் மீண்டு வருவோம்.

    இவ்வாறு ஹர்திக் பாண்டியா கூறினார்.

    • ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடர் வரும் 11ம் தேதி தொடங்க உள்ளது.
    • ஆப்கானிஸ்தான் அணிக்கு இப்ராகிம் ஜட்ரான் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.

    இந்த தொடர் வரும் 11ம் தேதி தொடங்க உள்ளது. முதல் ஆட்டம் மொகாலியிலும், 2வது ஆட்டம் வரும் 14ம் தேதி இந்தூரிலும், 3வது ஆட்டம் வரும் 17ம் தேதி பெங்களூருவிலும் நடைபெறுகிறது.

    இந்தத் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த அணிக்கு இப்ராகிம் ஜட்ரான் கேப்டனாக நியமிக்கப்பட்டார். முஜீப் உர் ரஹ்மான் அணிக்கு திரும்பியுள்ளார்.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய வீரர்கள் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார், ருத்துராஜ் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • இங்கிலாந்தின் பேஸ்பால் போல அதிரடியாக விளையாடிய சர்பராஸ் கான் 48 பந்துகளில் 104.20 ஸ்ட்ரைக் ரேட்டில் 50 ரன்கள் அடித்து அரை சதமடித்தார்.
    • தனது தவறான அழைப்பால் சர்பராஸ் கான் ரன் அவுட் ஆனதாக ஜடேஜா வருத்தம் தெரிவித்துள்ளார். சர்பராஸ் கான் சிறப்பாக விளையாடியதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது. கடந்த சில வருடங்களாகவே உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக ரன்கள் குவித்து வந்த சர்பராஸ் கான் நீண்ட போராட்டத்திற்கு பின் இப்போட்டியில் அறிமுகமானார்.இங்கிலாந்தின் பேஸ்பால் போல அதிரடியாக விளையாடிய சர்பராஸ் கான் 48 பந்துகளில் 104.20 ஸ்ட்ரைக் ரேட்டில் 50 ரன்கள் அடித்து அரை சதமடித்தார்.

    அறிமுக போட்டியில் களமிறங்கும் வீரர்கள் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்க்க முயற்சிப்பார்கள். ஆனால் தன்னுடைய அறிமுக போட்டியில் களமிறங்கியது முதலே இங்கிலாந்தின் பேஸ்பால் போல அதிரடியாக விளையாடிய சர்பராஸ் கான் 48 பந்துகளில் 104.20 ஸ்ட்ரைக் ரேட்டில் 50 ரன்கள் அடித்து அரை சதமடித்தார்.

    அப்போது மைதானத்தில் இருந்த அவருடைய தந்தை மற்றும் மனைவி ஆகியோர் மிகுந்த பெருமிதத்துடன் கைதட்டி பாராட்டினார்கள். அதே போல கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அடங்கிய இந்திய அணியினரும் எழுந்து நின்று அந்த இளம் வீரருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    மேலும் இதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகப் போட்டியிலேயே அதிவேகமாக அரை சதமடித்த இந்திய வீரர் என்ற ஹர்திக் பாண்டியாவின் சாதனையையும் அவர் சமன் செய்தார்.

    இதற்கு முன்பாக கடந்த 2017ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக அறிமுகமான ஹர்திக் பாண்டியா 48 பந்துகளில் 50 ரன்கள் அடித்து அந்த சாதனையை படைத்திருந்தார். அந்த வகையில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சர்பராஸ் 9 பவுண்டரி 1 சிக்சருடன் 62 ரன்கள் எடுத்த போது துரதிஷ்டவசமாக ரவீந்திர ஜடேஜாவின் தவறான அழைப்பால் ரன் அவுட்டானார்.

    தனது தவறான அழைப்பால் சர்பராஸ் கான் ரன் அவுட் ஆனதாக ஜடேஜா வருத்தம் தெரிவித்துள்ளார். சர்பராஸ் கான் சிறப்பாக விளையாடியதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

    இதனைப் பார்த்து பெவிலியனில் இருந்த கேப்டன் ரோகித் சர்மா, கோபத்தில் அணிந்திருந்த தொப்பியை தூக்கி வீசினார். இதுதொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    "சர்பராஸுக்காக நீங்கள் எவ்வளவு தியாகங்கள் மற்றும் கடின உழைப்பு செய்தீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். உங்களுக்கு வாழ்த்துக்கள்" என்று சர்பராஸின் தந்தையிடம் கேப்டன் ரோஹித் சர்மா வாழ்த்து தெரிவித்தார்.

    இந்திய அணியில் 311-வது வீரராக அறிமுகமான சர்பராஸ் கானுக்கு இந்திய அணியின் தொப்பியை அனில் கும்ப்ளே வழங்கினார்.

    இந்த போட்டியை காண சர்பராஸ் கான் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வந்திருந்தனர். சர்பராஸ் கான் இந்திய அணியின் தொப்பியை பெற்றுக் கொண்டதும் அவரது தந்தை கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் வடித்தார். அதேபோல் சர்பராஸ் கான் மனைவியும் ஆனந்த கண்ணீர் வடித்தார். மனைவின் கண்ணீரை துடைத்து விட்டு சர்பராஸ் கான் போட்டிக்கு தயாரானார்.

    • ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடாத போதிலும் ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளார்.
    • ஹர்திக் பாண்ட்யா உள்ளூர் வெள்ளைப்பந்து தொடர்களில் விளையாட வேண்டும்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் வாரியம், வீரர்களுக்கான புதிய ஒப்பந்த பட்டியலை வெளியிட்டது.

    இதில் முன்னணி பேட்ஸ் மேன்களான ஸ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷன் ஆகியோர் நீக்கப்பட்டனர். ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாட இருவரையும் கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியது. ஆனால் அவர்கள் ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடவில்லை. இதையடுத்து இருவரையும் வீரர்கள் ஒப்பந்தத்தில் இருந்து அதிரடியாக நீக்கியது.

    இதற்கிடையே ஒரு ஆண்டாக உள்ளூர் போட்டிகளில் விளையாட ஹர்திக் பாண்ட்யா, 'ஏ' பிரிவு ஒப்பந்தத்தில் இருப்பது குறித்து முன்னாள் வீரர்கள் சிலர் கேள்வி எழுப்பி இருந்தனர்.

    தனது உடல் தகுதி, டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஒத்துழைக்காது என்று ஹர்திக் பாண்ட்யா கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளார்.

    இதை கிரிக்கெட் வாரியம் ஏற்று கொண்டதால், ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடாத போதிலும் ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளார்.

    இந்த நிலையில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு கிரிக்கெட் வாரியம் நிபந்தனை விதித்துள்ளது.

    இந்தியாவுக்காக தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட்டில் விளையாட வேண்டுமென்றால் ஹர்திக் பாண்ட்யா உள்ளூர் தொடர்களான விஜய் ஹசாரே மற்றும் சையது முஷ்டாக் அலி கோப்பை தொடர்களில் விளையாட வேண்டும் என்று கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

    இதுகுறித்து கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    நாங்கள் ஹர்திக் பாண்ட்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அதில் உள்ளூர் வெள்ளைப் பந்து தொடர்களில் விளையாடுமாறு கூறியுள்ளோம்.

    தற்போதைய நிலைமையில் கிரிக்கெட் வாரிய மருத்துவக் குழுவின் பரிந்துரைப்படி அவரால் ரஞ்சிக் கோப்பை போன்ற டெஸ்ட் தொடரில் விளையாட முடியாது. ஆனால் இந்தியாவுக்காக விளையாடாத சமயத்தில் ஹர்த்திக் பாண்ட்யா உள்ளூர் வெள்ளைப்பந்து தொடர்களில் விளையாட வேண்டும். அவர் அதில் விளையாடாவிட்டால் ஒப்பந்தத்தை இழக்க நேரிடும் என்றார்.

    உள்ளூர் போட்டிகளில் விளையாட ஹர்திக் பாண்ட்யா உறுதி அளித்த பிறகே அவர் ஒப்பந்தத்தில் இடம் பெற்றதாக கூறப்படுகிறது.

    அதேபோல் ரோகித் சர்மா, விராட் கோலியும் முதல்தர கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் கீர்த்தி ஆசாத் தெரிவித்துள்ளார்.

    • ஹர்திக் பாண்டியா டிரெசிங் ரூமில் தேங்காய் உடைத்து, பூஜை செய்தார்.
    • வெளிநாட்டவர் ஒருவர் தேங்காய் உடைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2024 டி20 கிரிக்கெட் தொடர் இம்மாதம் 22-ம் தேதி துவங்க இருக்கிறது. 2024 ஐ.பி.எல். தொடருக்காக அணிகள் தங்களது பயிற்சியை துவங்கியுள்ளன. இது தொடர்பாக அந்தந்த அணிகள் சார்பில் சமூக வலைதள பதிவுகள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றன.

    அந்த வரிசையில், மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது. 2024 ஐ.பி.எல். தொடரில் மும்பை அணி கேப்டனாக ஹர்திக் பாண்டியா களமிறங்க இருக்கிறது. இந்த நிலையில், ஐ.பி.எல். தொடரில் மீண்டும் மும்பை அணிக்கு திரும்பியுள்ள ஹர்திக் பாண்டியா டிரெசிங் ரூமில் தேங்காய் உடைத்து, பூஜை செய்துள்ளார்.


    இது தொடர்பான வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் வெளியிட்டு உள்ளது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. வீடியோவின் படி டிரெசிங் ரூமிற்குள் வரும் ஹர்திக் பாண்டியா விளக்கேற்றி, பூஜையை துவங்குகிறார். பிறகு, மும்பை அணியை சேர்ந்த வெளிநாட்டவர் ஒருவர் தேங்காய் உடைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    • மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியா மற்றும் டிம் டேவிட்டை கடைசியில் பேட்டிங் இறக்கி விட்டு என்ன சாதித்தீர்கள்
    • மும்பை அணியில் என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை

    நேற்று மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 170 இலக்கை எட்ட முடியாமல் 145 ரன்னில் ஆல்அவுட் ஆகி 24 ரன்னில் தோல்வியைத் தழுவியது.

    இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் 11 போட்டிகளில் விளையாடி மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் ஏறக்குறைய பிளே ஆப் வாய்ப்பை மும்பை அணி இழந்துள்ளது.

    இந்நிலையில் மும்பை அணியின் தொடர் தோல்விகளுக்கு கேப்டன் ஹர்திக் பாண்டியா தான் காரணம் என்று வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியுள்ளார். அதில், "மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியா மற்றும் டிம் டேவிட்டை கடைசியில் பேட்டிங் இறக்கி விட்டு என்ன சாதித்தீர்கள். எதிர்கொள்வதற்கு நிறைய பந்துகள் இருந்தும் அவர்கள் அவுட்டானார்கள்.

    மும்பை அணியில் என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. பாண்டியா, டேவிட் 7, 8வது இடத்தில் பேட்டிங் செய்வதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருவேளை அவர்கள் முன்கூட்டியே களமிறங்கினால் விரைவில் ஆட்டமிழக்கும் அளவுக்கு மோசமான வீரர்களா?

    குஜராத் கேப்டனாக ஹர்திக் பாண்டியா 4வது இடத்தில் தொடர்ச்சியாக விளையாடியுள்ளார். ஆனால் மும்பை அணியில் என்ன நடந்தது? அதில் நான் குழப்பமடைந்துள்ளேன். மும்பை அணி நிர்வாகம் இந்த வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அங்கு என்ன நடந்தது என்று கேள்வியெழுப்ப வேண்டும். அல்லது தங்களுடைய பேட்டிங் வரிசை ஏன் மாறியது என்பதை வீரர்கள் விளக்க வேண்டும். இங்கே கேப்டன், பயிற்சியாளர் ஆகியோர் மீதும் தவறு இருக்கிறது. எனவே உரிமையாளர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

    • மும்பை அணியின் தோல்விக்கு காரணம் புரியாமல் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
    • இது கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல அனைத்து வகையான விளையாட்டுகளிலும் வரும் பிரச்சனை தான் என்று அணி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

    நடப்பு ஐ.பி.எல். தொடர் மும்பை அணிக்கு ஒரு மோசமான சீசனாக அமைந்துள்ளது. மும்பை அணி விளையாடிய 12 போட்டிகளில் 8 தோல்வி, 4 வெற்றி உட்பட 8 புள்ளிகளுடன் இத்தொடரில் இருந்து வெளியேறிய முதல் அணி இதுவாகும்.

    10 ஆண்டுகளுக்கு பின் புதிய கேப்டனான ஹர்திக் பாண்டியாவுக்கு கீழ் களமிறங்கிய மும்பை அணியில் நட்சத்திர வீரர்கள் ஏராளமானோர் இருந்த போதும், அணியின் தோல்விக்கு காரணம் புரியாமல் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

    இந்நிலையில் மும்பை அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் அணியின் தோல்வி குறித்து தங்களது கருத்தை பயிற்சியாளரிடமும், அணியின் நிர்வாகிகளிடமும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


    தோல்வியின் போது ஒரு வீரரின் மேல் பழியை போடுவதும் மும்பை வீரர்களால் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. வெற்றி பெற வேண்டும் என்ற எனர்ஜி இல்லை. இதற்கு ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி ஸ்டைலே காரணம் என்று கூறியுள்ளனர்.

    இதற்கு மும்பை அணி நிர்வாகிகள், அணி 10 ஆண்டுகளாக ரோகித் சர்மா தலைமையில் விளையாடி வந்துள்ளது. அதனால் வழக்கமாக தலைமை மாற்றத்தின் போது வரும் சவால் தான் மும்பை அணிக்கும் வந்துள்ளது. இது கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல அனைத்து வகையான விளையாட்டுகளிலும் வரும் பிரச்சனை தான் என்று கூறியுள்ளனர்.

    • வலைதளத்தில் இருந்து பாண்டியா பெயரை நீக்கியுள்ளார்.
    • பிரிந்துவிட்டார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது மனைவி நடாஷா ஸ்டான்கோவிக் தம்பதி சமூக வலைதளங்களில் புகைப்படம் மற்றும் பதிவுகளை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இருவரின் புகைப்படங்களை நடாஷா அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் வெளியிட, அவை பலரின் கவனத்தை ஈர்ப்பது வாடிக்கையான ஒன்றுதான்.

    இந்த நிலையில், நடாஷா ஸ்டான்கோவிக் தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் இருந்து பாண்டியா என்ற பெயரை நீக்கியுள்ளார். இன்ஸ்டா பயோ-வில் இருந்து பாண்டியா பெயர் நீக்கப்பட்டு இருப்பதை அடுத்து, இருவரும் பிரிந்துவிட்டார்களோ என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும், இந்த தம்பதியிடையே ஏதும் பிரச்சினை ஏற்பட்டுவிட்டதோ என்றும் அச்சம் தெரிவிக்கின்றனர்.

    கடந்த 2020 ஆம் ஆண்டு ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிக் ஜோடி திருமணம் செய்து கொண்டனர். இதைத் தொடர்ந்து இந்த தம்பதிக்கு முதல் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அகஸ்தியா என பெயர்சூட்டினர்.

    இந்த நிலையில், சமூக வலைதளத்தில் இருந்து பாண்டியா பெயர் நீக்கியது, ஐ.பி.எல். 2024 தொடரின் போட்டிகளின் போது வராமல் இருந்தது, மற்றும் இருவர் தொடர்பான புகைப்படங்கள் நீக்கப்பட்டு இருப்பது இருவரும் உண்மையில் பிரிந்துவிட்டார்களோ என்ற சந்தேகத்தை அதிகப்படுத்தி உள்ளது. 

    • டி20 உலகக் கோப்பை தொடரை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒளிபரப்பி வருகிறது.
    • ஹர்திக் பாண்ட்யாவின் படத்தை தவறாக ஒளிபரப்பியது.

    டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரை ஓ.டி.டி.-யில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒளிபரப்பி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று நடைபெற்ற 2-வது லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பப்புவா நியூகினியா அணிகள் மோதின. இந்த போட்டி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பானது. அப்போது ஒளிபரப்பாளர்கள் இரு அணி வீரர்களின் ஸ்கோரையும், சிறந்த வீரர்கள் யார் என்பவர்களின் படத்தையும் காட்டினார்கள்.

    இதில் பிராண்டன் கிங், சேசா புவா, ஆண்ட்ரே ரஸ்ஸல் மற்றும் ஆசாத் வாலா ஆகியோரின் புகைப்படங்களுக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யாவின் படத்தை வைத்துவிட்டது. மேலும், இதே படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஐந்துமுறை ஒளிபரப்பியதாக கூறப்படுகிறது. 

    இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

    • டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
    • 120 ரன்களை இலக்காக துரத்திய பாகிஸ்தான் அணி கடைசி ஓவர் வரை போராடி தோல்வியை தழுவியது.

    டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 119 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    இதைத் தொடர்ந்து 120 ரன்களை இலக்காக துரத்திய பாகிஸ்தான் அணி கடைசி ஓவர் வரை போராடி தோல்வியை தழுவியது. இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பாகிஸ்தான் அணி போட்டியில் தோற்றது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரான ஷோயப் அக்தர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வீடியோ ஒன்றை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில் "இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்தியா 11 ஓவர்கள் முடிவில் 82 ரன்களில்தான் இருந்தார்கள். 160 ரன்கள் அடிக்க நினைத்த இந்திய அணியால் அதை செய்ய இயலவில்லை. ஆனால் பாகிஸ்தானிற்கு அப்படி கிடையாது அவர்கள் எளிதில் வெற்றி பெற்றிருக்கலாம், ரிஸ்வான் இன்னும் கூடுதலாக 20 ரன்கள் எடுத்து இருந்தால் போதுமானதாக இருந்திருக்கும்."

    "இந்த போட்டியில் வெற்றி எளிமையாகவே இருந்தது, கொஞ்சம் மூளையை உபயோகப்படுத்தி இருந்தால் ஜெயித்திருக்கலாம், 47 பந்துகளில் 46 ரன்கள் தேவை. ஃபகர் இன்னும் ஆட்டமிழக்காமல் இருக்கிறான் அப்படி இருந்தும் நம்மால் ஜெயிக்க முடியவில்லை. இது மிகவும் வருத்தமாக இருக்கிறது" என்று அவரது வேதனையையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தி உள்ளார்.

    இந்த வீடியோவுக்கு அவர், "ஏமாற்றப்பட்டேன், காயமுற்றேன்" போன்ற வார்த்தைகளை நான் பதிவிட தயாராக வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்," என தலைப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

    ×