search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் டி20 உலகக் கோப்பை 2024"

    • சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடிய வீராங்கனையாக சுசி பேட்ஸ் வரலாறு படைத்தார்.
    • மகளிர் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

    மகளிர் டி20 உலகக் கோப்பை 2024 இறுதிப் போட்டி துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக டி20 உலகக் கோப்பை கைப்பற்றி அசத்தியது.

    இந்த போட்டியில் விளையாடியதன் மூலம் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் (334 போட்டிகள்) விளையாடிய வீராங்கனையாக சுசி பேட்ஸ் வரலாறு படைத்தார். 37 வயதான இவர், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜின் சாதனையை முறியடித்துள்ளார். மிதாலியின் 23 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில், இந்திய அணிக்காக மொத்தம் 333 போட்டிகளில் விளையாடினார்.

    அதிக போட்டிகள் விளையாடிய வீராங்கனைகள் பட்டியலில், பேட்ஸ் மற்றும் மிதாலிக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் எலிஸ் பெர்ரி, இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் சார்லோட் எட்வர்ட்ஸ் உள்ளனர்.

    சுசி பேட்ஸ், ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அறிமுகமானதில் இருந்து இதுவரை நியூசிலாந்து அணிக்காக மொத்தம் 163 ஒருநாள் மற்றும் 171 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    இவர், மகளிர் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார். அவர் 168 இன்னிங்ஸ்களில் மொத்தம் 4584 ரன்கள் குவித்துள்ளார். ஒருநாள் போட்டியில் 5178 ரன்கள் எடுத்து நியூசிலாந்துக்காக அதிக ரன்கள் எடுத்தவர் மற்றும் ஒட்டுமொத்தமாக மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

    பேட்டிங் மற்றும் இல்லாமல் பந்து வீச்சிலும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் முறையே 78 மற்றும் 59 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    • மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் நாளை தொடங்குகின்றன.
    • இறுதிப்போட்டி வரும் 20-ம் தேதி துபாயில் நடைபெறுகிறது.

    துபாய்:

    9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. தொடரின் லீக் ஆட்டங்களின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், இங்கிலாந்து, வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.

    இந்நிலையில், இந்த தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் நாளை தொடங்குகின்றன. நாளை துபாயில் நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு முன்னேற கடுமையாக போராடும் என்பதால் நாளைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. நாளை மறுநாள் நடைபெறும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - நியூசிலாந்து அணிகள் சார்ஜாவில் மோத உள்ளன. இந்த தொடரின் இறுதிப்போட்டி வரும் 20-ம் தேதி துபாயில் நடைபெறுகிறது.

    • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து தோல்வியடைந்தது.
    • இதனால் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து இங்கிலாந்து வெளியேறியது.

    மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் கடைசி லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இங்கிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது.

    இந்நிலையில் இந்த தொடரில் இந்தியாவுக்கு பயிற்சி செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் மற்ற அணிகள் பயிற்சி செய்ய இடம் கிடைக்காமல் இருந்தது என இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் டோனி லூயிஸ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஷார்ஜாவில் சரியான முறையில் பயிற்சி செய்ய இந்தியாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மற்ற அணிகள் தங்கள் போட்டிகளுக்கு வார்ம்-அப் செய்ய இரண்டாம் நிலை ஐசிசி அகாடமி மைதானத்தைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. இந்த தொடரில் துபாய் சர்வதேச ஸ்டேடியம் மற்றும் ஷார்ஜா மட்டுமே மைதானமாக பயன்படுத்தப்படுகிறது.

    இங்கு (துபாய் சர்வதேச மைதானம்) பயிற்சி பெற யாருக்கும் வாய்ப்பு இல்லை. நாங்கள் ஐசிசி அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறோம். ஆனால் இந்தியாவுக்கு மட்டும் அந்த வாய்ப்பு கிடைக்கிறது. இதை இந்தியா தான் கேட்டு வாங்கியதா என்பது எனக்கு தெரியவில்லை. அவர்கள் விரும்பியது அவர்களுக்கு கிடைக்கிறது இல்லையா?

    என்று கேள்வியுடன் உரையை டோனி லூயிஸ் முடித்தார்.

    சமீபத்தில் நடந்து முடிந்த ஆடவர் டி20 உலகக் கோப்பையில் இதேபோல் இந்தியா அணியின் மீதும் புகார் வந்தது குறிப்பிடத்தக்கது.

    • கேப்டனை மாற்ற விரும்பினால் நான் இளைய தலைமுறையை தேர்வு செய்வேன்.
    • இந்திய மகளிர் அணியில் எந்த முன்னேற்றமும் இல்லை.

    மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் முடிந்த நிலையில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

    இந்திய அணி லீக் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றம் அளித்தது.

    இந்நிலையில் கடந்த 2- 3 வருடமாக இந்திய அணியில் ஒரு முன்னேற்றமும் இல்லை என இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    தேர்வுக்குழு அணியின் கேப்டனை மாற்ற விரும்பினால் நான் இளைய தலைமுறையை தேர்வு செய்வேன். இதுதான் மாற்றத்துக்கான நேரம். அடுத்தாண்டு மீண்டும் ஒரு உலகக் கோப்பை (ஒருநாள் உலகக் கோப்பை 2025) இருக்கிறது. இப்போது மாற்றம் செய்யாவிட்டால் பிறகு செய்யாதீர்கள். ஏனெனில் அடுத்த உலகக் கோப்பை விரைவில் வரவிருக்கிறது.

    ஸ்மிருதி மந்தனா 2016-ல் இருந்து துணை கேப்டனாக இருக்கிறார். ஆனால், நான் இன்னும் இளமையான 24 வயதாகும் ஜெமிமா மாதிரி ஆள்களை தேர்வு செய்வேன். ஜெமிமா எல்லோரிடமும் கலந்துரையாடுகிறார். அவரது செயல்பாடுகள் இந்தத் தொடரில் சிறப்பாக இருந்தது. கடந்த 2-3 வருடமாக இந்திய அணியில் ஒரு முன்னேற்றமும் இல்லை. எந்த அர்த்தத்தில் என்றால் சிறந்த அணியை வீழ்த்த தயாராக வேண்டும்.

    ஆடவர் அணி எப்படி நன்றாக விளையாடுகிறது? ஒரு பெரிய தொடரை இழந்த பிறகு அணியில் மாற்றத்தை கொண்டு வருகிறார்கள். ஆழமாக பேசினால், மற்றவர்களுக்கு நாம் எப்போது வாய்ப்பளிப்போம்? அதிலும் ஆஸி.க்கு எதிராக ராதா யாதவ், ஜெமிமா தவிர்த்து யாரும் சரியாக விளையாடவில்லை. 11இல் 2 நபர் மட்டுமே விளையாடுவது நல்லதல்ல.

    ஃபிட்னஸ் சார்ந்து நாம் ஒரு புதிய அளவுகோலை முன்வைக்க வேண்டும். ஒரு தொடருக்கு முன்பு மட்டுமே பயிற்சி எடுக்கக் கூடாது. ஆண்டு முழுவதும் பயிற்சி செய்தால் நிச்சயமாக களத்தில் வித்தியாசம் தெரியும்.

    இவ்வாறு மிதாலி ராஜ் கூறினார்.

    • நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 56 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
    • இதன்மூலம் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

    மகளிர் டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி- நியூசிலாந்து மகளிர் அணி மோதியது. இதில் முதலில் விளையாடிய நியூசிலாந்து மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 110 ரன்களை எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 56 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 54 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

    இந்நிலையில் இப்போட்டியில் படுதோல்வியைச் சந்தித்துள்ள பகிஸ்தான் அணி மோசமான சாதனை ஒன்றையும் படைத்துள்ளது. அதன்படி மகளிர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 2-வது இரண்டாவது குறைந்த ஸ்கோரை அடித்த அணி என்ற சாதனையை பாகிஸ்தான் படைத்துள்ளது.

    முன்னதாக கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக வங்கதேச அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானதே மோசமான சாதனையில் முதல் இடமாக உள்ளது.

    அதேசமயம் இப்போட்டியில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்திய நியூசிலாந்து மகளிர் அணி எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மகளிர் டி20 உலகக்கோப்பை நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. இதற்கு முன் நியூசிலாந்து அணி கடந்த 2016-ம் ஆண்டு அரையிறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது. 

    • நியூசிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி அரை இறுதிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.
    • பாகிஸ்தான் வெற்றி பெற்றால் 3 அணிகளில் ரன் ரேட் அடிப்படையில் ஒரு அணி அரை இறுதிக்கு முன்னேறும்.

    துபாய்:

    9-வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் 10 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. 'லீக்' முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

    ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்திடம் 58 ரன் வித்தியாசத்தில் தோற்றது. 2-வது போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்திலும் 3-வது ஆட்டத்தில் இலங்கையை 82 ரன் வித்தியாசத்திலும் வீழ்த்தியது. நேற்று நடந்த 4-வது மற்றும் கடைசி 'லீக்' ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 9 ரன் வித்தியாசத்தில் போராடி தோற்றது.

    ஆஸ்திரேலியா 4 வெற்றியுடன் 8 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்து அரை இறுதிக்கு தகுதி பெறும். இந்த பிரிவில் இருந்து 2-வது அணியாக அரை இறுதிக்கு நுழையும் அணி எது என்பது இன்று தெரிந்து விடும்.

    துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 19-வது 'லீக்' ஆட்டத்தில் 'ஏ' பிரிவில் உள்ள நியூசிலாந்து பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    2 வெற்றி, 1 தோல்வியுடன் 4 புள்ளியுடன் இருக்கும் நியூசிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி அரை இறுதிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.

    பாகிஸ்தான் வெற்றி பெற்றால் இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய 3 அணிகள் தலா 4 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். நிகர ரன் ரேட் அடிப்படையில் ஒரு அணி அரை இறுதிக்கு முன்னேறும்.

    'பி' பிரிவில் இங்கிலாந்து தென் ஆப்பிரிக்கா தலா 6 புள்ளிகள் பெற்று முதல் 2 இடங்களில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் 4 புள்ளியும், வங்காளதேசம் 2 புள்ளியும் பெற்றுள்ளன. ஸ்காட்லாந்து புள்ளி எதுவும் பெறவில்லை.

    நாளை நடைபெறும் கடைசி 'லீக்' ஆட்டத்தில் இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.

    • இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
    • மகளிர் டி20 உலகக் கோப்பையில் தொடர்ந்து 15-வது முறையாக ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.

    சார்ஜா:

    மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 18-வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. கடைசி வரை போராடிய கேப்டன் கவுரால் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல முடியவில்லை.

    இறுதியில் இந்திய அணி 142 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஆஸ்திரேலியா 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி, மகளிர் டி20 உலகக் கோப்பையில் தொடர்ந்து 15-வது முறையாக வெற்றி பெற்று அசத்தி உள்ளது. மேலும், ஆஸ்திரேலியா தொடர்ந்து ஒன்பதாவது முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

    • 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா.
    • இந்திய அணி தனது 4 ஆட்டங்களிலும் ஆடி முடித்து விட்ட நிலையில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளி பெற்றிருக்கிறது.

    10 அணிகள் இடையிலான 9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு சார்ஜாவில் அரங்கேறிய 18-வது லீக் ஆட்டத்தில் கட்டாயம் வென்றாக வேண்டிய சூழலில் இந்திய அணி, 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன் (ஏ பிரிவு) மோதியது.

    இந்த போட்டியில் இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் இந்திய அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு மங்கி உள்ளது. மேலும் இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல வேண்டும் என்றால் அது பாகிஸ்தான் கையில் தான் உள்ளது.

    இந்திய அணி தனது 4 ஆட்டங்களிலும் ஆடி முடித்து விட்ட நிலையில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளி பெற்றிருக்கிறது. ஏ பிரிவில் துபாயில் இன்றிரவு 7.30 மணிக்கு நடக்கும் கடைசி லீக்கில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. இதில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் சிக்கலின்றி 2-வது அணியாக நியூசிலாந்து அரைஇறுதிக்கு முன்னேறி விடும்.

    பாகிஸ்தான் வெற்றி பெறும் பட்சத்தில், இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மூன்று அணிகளும் தலா 4 புள்ளிகளுடன் சமநிலை வகிக்கும். அப்போது ரன்ரேட்டில் முன்னிலை வகிக்கும் அணிக்கு அரைஇறுதி வாய்ப்பு கிடைக்கும். அதாவது இந்திய அணியின் தலைவிதி இப்போது பாகிஸ்தான் கையில் உள்ளது.

    சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக இதுவரை 11 ஆட்டங்களில் மோதியுள்ள பாகிஸ்தான் அதில் 2-ல் வெற்றியும், 9-ல் தோல்வியும் கண்டுள்ளது.

    இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில், 'இனி எங்கள் கையில் எதுவும் இல்லை. எங்களுக்கு இன்னொரு ஆட்டத்தில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக இருக்கும். யார் நன்றாக ஆடுகிறார்களோ அவர்கள் அரைஇறுதிக்கு தகுதி பெறுவார்கள்' என்றார்.

    • மந்தனா, கவுர் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தனர்.
    • 50 ரன்னில் மந்தனா ரன் அவுட் முறையில் வெளியேறினார்.

    துபாய்:

    9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இந்த போட்டி தொடரில் இன்று துபாயில் நடைபெறும் 12-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகிறது.

    இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி தொடக்க வீராங்கனைகளாக ஷபாலி வர்மா- மந்தனா களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 98 ரன்கள் குவித்தது.

    அதிரடியாக விளையாடிய மந்தனா அரை சதம் விளாசி தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அவர் அவுட் ஆன அடுத்த பந்தே ஷபாலி வர்மா 43 ரன்னில் வெளியேறினார்.

    அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 16 ரன்னில் அவுட் ஆனார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கவுர் 27 பந்தில் அரை சதம் விளாசினார். இறுதியில் இந்திய அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் குவித்தது.

    • ஸ்காட்லாந்து அணி 17.5 ஓவரில் 86 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • தென் ஆப்பிரிக்கா தரப்பில் நோன்குலுலேகோ ம்லபா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டின் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டாஸ்மின் பிரிட்ஸ் 43 ரன்னும் லாரா வோல்வார்ட் 40 ரன்களும் எடுத்தனர். நடப்பு டி20 உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவின் அதிக பட்ச ஸ்கோராகும்.

    இதனையடுத்து களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் ஸ்காட்லாந்து அணி 17.5 ஓவரில் 86 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் நோன்குலுலேகோ ம்லபா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • இவ்விரு அணிகளும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை 25 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
    • இதில் 19-ல் இந்தியாவும், 5-ல் இலங்கையும் வென்று இருக்கின்றன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

    துபாய்:

    9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இந்த போட்டி தொடரில் இன்று துபாயில் நடைபெறும் 12-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகிறது.

    இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

    ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க வேண்டும் என்றால் இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். அத்துடன் ரன்ரேட்டிலும் ஏற்றம் காண வேண்டியது முக்கியம்.

    இவ்விரு அணிகளும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை 25 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 19-ல் இந்தியாவும், 5-ல் இலங்கையும் வென்று இருக்கின்றன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

    உலகக் கோப்பையில் 5 ஆட்டங்களில் சந்தித்ததில் 4 ஆட்டத்தில் இந்தியாவும், ஒரு ஆட்டத்தில் இலங்கையும் வென்று இருப்பதும் இதில் அடங்கும். இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • அரை இறுதிக்கான வாய்ப்பில் இருக்க வேண்டுமானால் இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறுவது அவசியமாகும்.
    • இரு அணிகளும் இதுவரை 25 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 19-ல், இலங்கை 5-ல் வெற்றி பெற்றுள்ளன.

    துபாய்:

    9-வது மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் இதில் பங்கேற்றுள்ளன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'லீக்' முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

    'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்திடம் 58 ரன்னில் தோற்றது. 2-வது போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    ஹர்மன் பிரீத்சிங் தலைமையிலான இந்திய அணி 3-வது ஆட்டத்தில் இலங்கையை நாளை (புதன்கிழமை) எதிர்கொள்கிறது. இரவு 7.30 மணிக்கு துபாயில் இந்த ஆட்டம் நடக்கிறது.

    அரை இறுதிக்கான வாய்ப்பில் இருக்க வேண்டுமானால் இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறுவது அவசியமாகும். இலங்கையை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா, ஷபாலிவர்மா, தீப்திசர்மா, பூஜா வஸ்த்ரகர் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    இலங்கை அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 31 ரன் வித்தியாசத்திலும், 2-து போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்றது. அந்த அணி ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து முதல் வெற்றியை பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது.

    இரு அணிகளும் இதுவரை 25 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 19-ல், இலங்கை 5-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவுஇல்லை.

    முன்னதாக நாளை மாலை 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா-ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. தென் ஆப்பிரிக்கா 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. ஸ்காட்லாந்து 2 ஆட்டத்திலும் தோற்று இருந்தது.

    ×