search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமணிமுத்தாறு வெள்ளம்"

    • அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் பரிசல் மூலம் பயணித்து வருகின்றனர்.
    • திருமணிமுத்தாறு-சரபங்கா நதியில் தொடர்ந்து வெள்ளம்.

    சேலம்:

    சேலத்தில் முக்கிய நீராதாரமே மலைகள் தான். ஏற்காடு சேர்வராயன் மலை தொடரில் உள்ளது. திருமணிமுத்தாறின் பிறப்பிடமாக ஏற்காடு மலை திகழ்கிறது . சேர்வராயன் மலைகளில் இருந்து வழிந்தோடும் தண்ணீர் திருமணிமுத்தாறில் சங்கமித்து தொடர் சங்கிலி ஏரிகளை நிரப்பி காவிரியுடன் கலக்கிறது.

    அதாவது திருமணிமுத்தாறு சேலம் நகரம் வழியாக உத்தமசோழபுரம், ஆட்டையாம்பட்டி, வீரபாண்டி வழியாக 120 கி.மீ. ஓடி பரமத்திவேலூர் அருகே காவிரியில் கலக்கிறது. சிறப்புமிக்க திருமணிமுத்தாறில் கடந்த 1972-ம் ஆண்டு பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது திருமணிமுத்தாறில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி பெரும் அழிவை ஏற்படுத்தியது.


    இந்த பெரும் வெள்ளத்தில் கோட்டை மாரியம்மன் கோவில் அம்மன் கருவறை மூழ்கியது. திருவள்ளுவர் சிலை அருகே ஒரு வாரத்திற்கு மேல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக சேலம் மாவட்டத்தில் கடந்த 30-ந்தேதி மற்றும் டிசம்பர் 1,2-ந்தேதிகளில் கன மழை பெய்தது. இதனால் சேலம் மாவட்டத்தில் மற்ற இடங்களை காட்டிலும் ஏற்காட்டில் அதிக மழை பெய்தது.

    அங்கு கடந்த 1-ந்தேதி காலை நிலவரப்படி 144.4 மில்லி மீட்டர் மழையும், 2-ந்தேதி 238 மில்லி மீட்டர் மழையும், 3-ந்தேதி 98.2 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

    இம்மழையால் ஏற்காடு மலைப்பாதை மற்றும் கிராமப்பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தன.

    ஏற்காட்டில் பெய்த பலத்த மழையினால் திருமணிமுத்தாறில் கடந்த 3-ந்தேதி காலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 52 ஆண்டுகளுக்கு பிறகு திருமணிமுத்தாறில் மீண்டும் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கந்தம்பட்டி பைபாஸ் அருகே தரைப்பாலத்திற்கு மேல் இடுப்பளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    பாலத்தில் உள்ள தண்ணீர் மோட்டார்வைத்து வெளியேற்றப்பட்டது. கந்தம்பட்டி மற்றும் ஆற்றங்கரையோரம் உள்ள அனைத்து கிராமங்களிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    திருச்செங்கோடு அருகாமையில் கிராமங்களில் உள்ள திருமணிமுத்தாறு தரைபாலங்கள் அனைத்தும் மூழ்கடித்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பல்வேறு கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

    பரமத்திவேலூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. பரமத்திவேலூர் அருகே உள்ள பில்லூரில் இருந்து வில்லிபாளையம் உள்ளிட்ட தரைபாலம் மூழ்கியது. பொதுமக்கள் தரைபாலத்தை கடக்க வேண்டாம் என வருவாய்துறை, பேரூராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதேபோல் வசிஷ்டநதி, சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சரபங்கா நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் எடப்பாடியில் உள்ள பெரிய ஏரி, சின்ன ஏரி, அரசிராமணி, பேரூராட்சி, குள்ளம்பட்டி, செட்டிப்பட்டியில் தரைபாலத்தை மூழ்கடித்து சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    கிராமங்களில் விளைநிலங்கள் மட்டுமின்றி வீடுகள், பள்ளிகள், கடைகள் என கிராமம் முழுவதும் குளம்போல் தண்ணீர் தேங்கி பெருக்கெடுத்து ஓடியது. குள்ளம்பட்டியில் வெள்ளூற்று பெருமாள் கோவிலுக்கு செல்லும் சிறிய பாலமும் வெள்ளத்தால் சேதமடைந்தது.


    ஓலப்பாளையம், கண்டாயிக்காடு, தைலங்காடு, வயக்காடு, சுக்கலான்காடு, கள்ளப்பாளையம், எல்லாப்பாளையம் உள்ளிட்ட 13-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தரைப்பாலம் மூழ்கியது. நைனாம்பட்டி, ஆரையான்காடு, செரக்காடு, வண்ணாங்காடு, கோட்டக்காடு, பூனையம்காடு, பெரியகாடு, புளியம்பட்டி உள்பட 25 குக்கிராமங்கள் வெள்ளம் சூழப்பட்டு தனித்தீவுகளாக மாறியுள்ளது.

    தேவூர் மயிலம்பட்டி, மேட்டுகடை, பெரமச்சிபாளையம், மேட்டாங்காடு, சோழக்கவுண்டனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நெல், கரும்பு, வாழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

    தண்ணீர் சூழ்ந்த கிராமங்களில் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், வெளியூர் செல்பவர்கள் பரிசல் மூலம் பள்ளிக்கு அழைத்து வந்து விடுகின்றனர். பள்ளி குழந்தைகளுக்கு உணவு, அத்தியாவசிய பொருட்கள், மளிகை பொருட்கள் ஆகியவற்றை பரிசல் மூலம் வீடுகளுக்கு வழங்கி வருகின்றனர். பால, மருந்து, மாத்திரைகள் வாங்க பொதுமக்கள் பரிசல் மூலம் பயணித்து வருகின்றனர்.

    திருமணிமுத்தாறு-சரபங்கா நதி ஆகியவை கிராமங்களில் ஏற்படுத்திய சேதத்தை வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து கணக்கெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அந்த கிராமங்களில் அடிப்படை வசதிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    திருமணிமுத்தாறு-சரபங்கா நதியில் தொடர்ந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 2 ஆறுகள் வெவ்வேறு திசைகளில் பயணித்தாலும் மழை வெள்ளத்தால் கடும் சேதத்தை ஏற்படுத்தி பொதுமக்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது. 

    ×