search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பல்லடம் கொலை"

    • சைபர் கிரைம் போலீசார் கொலை சம்பவம் நடந்த இடத்தில் இருந்த மற்றும் வந்து சென்ற செல்போன் எண்களை வைத்து விசாரணை நடத்தினர்.
    • சேமலைக்கவுண்டம்பாளையத்திற்கு அருகாமையில் உள்ள 20 க்கும் மேற்பட்ட ஊர்களை போலீசார் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம், அவிநாசி பாளையம் அடுத்த சேமலை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் தெய்வசிகாமணி (வயது 75). இவரது மனைவி அலமேலு (73), மகன் செந்தில்குமார் (46) . கடந்த மாதம் 28-ந்தேதி இரவு சேமலைகவுண்டம்பாளையம் தோட்டத்து வீட்டிற்கு வந்த கும்பல் 3 பேரையும் இரும்பு ராடால் தாக்கி கொடூரமாக கொலை செய்துவிட்டு 8 பவுன் தங்க நகையை திருடி சென்றனர். இந்த கொலை சம்பவம் குறித்து அவிநாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

    கொலையாளிகளை பிடிக்க 16 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கொலையாளிகளை பிடிக்க பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத்தினர், உறவினர்களின் கைரேகைகளை சேகரித்து விசாரித்தனர். 2011 ம் ஆண்டு முதல் ஆதாய கொலை வழக்கில் தொடர்புடையவர்களின் பட்டியலை சேகரித்தும் விசாரித்தனர்.

    சென்னிமலை ஆதாயக்கொலையில் தொடர்புடையவர்களின் நெருங்கியவர்கள் யாரேனும் இந்த கொலையை அரங்கேற்றியிருக்கலாமா? என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டது. மேலும், கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய 856 பேரின் பட்டியலை சேகரித்து விசாரித்தனர். பல்வேறு பகுதிகளில் உள்ள 200க்கும் மேற்பட்ட சிசிடிவி., கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    சைபர் கிரைம் போலீசார் கொலை சம்பவம் நடந்த இடத்தில் இருந்த மற்றும் வந்து சென்ற செல்போன் எண்களை வைத்து விசாரணை நடத்தினர். மேலும் சேமலைக்கவுண்டம்பாளையத்திற்கு அருகாமையில் உள்ள 20 க்கும் மேற்பட்ட ஊர்களை போலீசார் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர். அந்த ஊர்களில் வழக்கு உள்ளவர்களின் விபரங்களை சேகரித்து விசாரணை நடத்தினர்.

    உறவினர்கள் போல் யாரேனும் சந்தேகத்திற்கிடமாக வந்து சென்றார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டது. ரோட்டோரம் கம்பளி, போர்வை விற்பனை செய்பவர்களிடம் கைரேகை ஆதார் விபரங்களை பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் கொலை நடந்து 18 நாட்களை கடந்தும் இதில் தொடர்புடையவர்களை நெருங்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். தோட்டத்து வீட்டில் சி.சி.டி.வி. கேமரா இல்லாததால் கொலையாளிகள் எளிதில் தப்பியுள்ளனர். இவ்வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க கோவை சரக டி.ஐ.ஜி., செந்தில்குமார், திருப்பூர் மாவட்ட எஸ்.பி., அபிஷேக் குப்தா ஆகியோர் முழு நேரமும் பல்லடத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வடமாநில கொள்ளை கும்பல் இதில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் தனிப்படையை சேர்ந்த ஒரு குழுவினர் வடமாநிலங்களில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொங்கலூர் சேமலைகவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்த தொழிலாளி பால்ராஜ் ( 45) என்பவர் குடும்பத்தோடு வந்து மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    படுகொலை செய்யப்பட்ட தெய்வசிகாமணி தோட்டத்தில் எனது தந்தை சுப்பன் வேலை செய்து வந்ததால், நான் அடிக்கடி மருந்து அடிப்பது உள்ளிட்ட வேலைக்கு சென்று வந்தேன். இந்த கொலை சம்பவம் தொடர்பாக என்னை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். போலீசார் அடிக்கடி அழைத்து சென்று, நான் தான் காரணம் எனக்கூறி துன்புறுத்துகிறார்கள். வாக்குமூலம் கொடுக்கவும் மிரட்டி நிர்ப்பந்திக்கிறார்கள்.

    மேலும் எனது மனைவி, அங்கன்வாடி பணியாளராக பணியாற்றி வருகிறார். அவரை வேலையில் இருந்து நீக்கி விடுவோம் எனவும் மிரட்டுகிறார்கள். எனவே எங்களை மிரட்டும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது குடும்பத்திற்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

    • பல்லடத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் கண்டனத்துக்குரியது.
    • இரவு நேரங்களில் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் சேமலை கவுண்டன்பாளையத்தை சேர்ந்த தெய்வசிகாமணி, அவரது மனைவி அலமேலு, மகன் செந்தில்குமார் ஆகியோர் கடந்த 29-ந்தேதி மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டனர். இக்கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் இன்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பல்லடத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் கண்டனத்துக்குரியது. இக்கொலையில் ஈடுபட்டவர்களை கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை முதலும் முடிவுமாக இருக்க வேண்டும்.

    அப்போது மற்றவர்கள் பயப்படுவார்கள். தமிழ்நாடு காவல் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொலையாளிகளை பிடிக்க 14 தனிப்படை என்பது பிரம்மாண்ட விசாரணை முறை. இருப்பினும் இந்த கொலை குறித்து சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ள தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம். சி.பி.ஐ., சிறப்பான குற்ற புலனாய்வு அமைப்பு. எனவே அதற்கு தமிழக அரசு அனுமதி தர வேண்டும். போதையால்தான் பெரும்பாலான குற்றச்சம்பவங்கள் நடக்கிறது. எனவே தமிழகத்தில் போதை கலாச்சாரத்தை தடுக்க வேண்டும்.

    தோட்டத்து பகுதியில் வயதானவர்கள்தான் வசித்து வருகிறார்கள். எனவே இரவு நேரங்களில் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உயிரிழந்த செந்தில்குமாரின் மனைவி கவிதா அண்ணாமலையிடம் கூறுகையில், இரவு முழுவதும் கடும் வேதனையுடன் இருந்துள்ளனர். அந்த உயிர் வேதனையை அவர்கள் அனுபவிக்க வேண்டும். குற்றம் செய்தவர்களை எத்தனை நாட்கள் ஆனாலும் பிடித்து தண்டிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • ஜாமினில் வெளியே வந்தவர்களில் யாரேனும் பல்லடம் கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
    • கடந்த 2 நாட்களாக ஈரோடு மாவட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் சேமலைகவுண்டன் பாளையத்தில் தோட்ட வீட்டில் இருந்த தெய்வ சிகாமணி, அலமேலு, செந்தில்குமார் ஆகிய 3 பேரை நள்ளிரவில் மர்ம கும்பல் கொடூரமாக கொலை செய்தது. கொலையாளிகளை கண்டுபிடிக்க 14-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதே சம்பவம் போல் ஈரோடு மாவட்டம் சென்னிமலை, அரச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் தனியாக தோட்ட வீட்டில் வசித்து வந்த வயதான தம்பதிகளை கொலை செய்து தங்க நகைகளை திருடி சென்ற சம்பவம் நடந்தது. இந்த கொலை, கொள்ளை தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு 14 பேரை ஈரோடு மாவட்ட போலீசார் சிறையில் அடைத்தனர்.

    சிறையில் இருந்த சிலர் ஜாமின் பெற்று வெளியே வந்துள்ளனர். ஜாமினில் வெளியே வந்தவர்களில் யாரேனும் பல்லடம் கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் பல்லடம் கொலை சம்பவமும், சென்னிமலை கொலை சம்பவங்களும் ஒரே மாதிரி நடந்துள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    திருப்பூரை ஒட்டிய ஈரோடு மாவட்டத்தில் தோட்ட வீடுகளில் தனியாக வசிக்கும் வயதான தம்ப தியரை தாக்கி இதுபோல் கொலை நடக்க கூடும் என போலீசார் சந்தேகிப்பதால் கடந்த 2 நாட்களாக ஈரோடு மாவட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை பெருந்துறை, சென்னிமலை, அரச்சலூர் போன்ற பகுதிகளில் இதுபோன்று தனியாக ஏராளமான தோட்ட வீடுகள் இருக்கின்றன. இந்த வீடுகளில் வயதான தம்பதிகள் வசித்து வருகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் கடந்த 2 நாட்களாக ஈரோடு மாவட்ட போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் தனியாகவும் சாலையை ஒட்டி பகுதியில் 570 தோட்ட வீடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் பெருந்துறை பகுதியில் மட்டும் 270 வீடு கள் உள்ளன. இந்த 570 வீடுகளுக்கு முன்னுரிமை அளித்து இரவு நேரங்களில் அந்தந்த பகுதியில் உள்ள இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் நேரடியாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இரவு முதல் காலை வரை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதைப்போல் வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. சந்தேகப்படும்படி நபர்கள் யாராவது செல்கிறார்களா என போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×