என் மலர்
நீங்கள் தேடியது "உலகக் கோப்பை கால்பந்து 2034"
- 2034-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கான உரிமத்துக்கு வளைகுடா நாடான சவுதிஅரேபியா மட்டுமே விண்ணப்பித்து இருந்தது.
- சவுதிஅரேபியா உலகக் கோப்பை போட்டியை நடத்த இருப்பது இதுவே முதல் முறையாகும்.
சூரிச்:
23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியை 2026-ம் ஆண்டில் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இதில் மொத்தம் 48 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த நிலையில் 2030 மற்றும் 2034-ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை போட்டியை நடத்தும் உரிமத்தை எந்த நாட்டுக்கு வழங்குவது என்பது குறித்து சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிபா) தலைமையகத்தில் நேற்று 'பிபா' நிர்வாக கமிட்டியினர் கியானி இன்பான்டினோ தலைமையில் ஆலோசித்தனர். இதில் 'பிபா'வின் 211 நாட்டு உறுப்பினர்கள் ஆன்லைன் மூலம் கலந்து கொண்டனர்.
இதன் முடிவில் 2030-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பு ஸ்பெயின், போர்ச்சுக்கல், மொராக்கோ ஆகிய நாடுகளுக்கு வழங்கப்பட்டது. உலகக் கோப்பை தொடங்கி 100 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் வகையில், 2030-ம் ஆண்டு உலகக்கோப்பையில் 3 ஆட்டங்கள் மட்டும் அர்ஜென்டினா, பராகுவே, உருகுவே ஆகிய நாடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தென்அமெரிக்க நாடான உருகுவேயில் தான் முதலாவது உலகக்கோப்பை போட்டி 1930-ம் ஆண்டு நடந்தது நினைவு கூரத்தக்கது.
2034-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கான உரிமத்துக்கு வளைகுடா நாடான சவுதிஅரேபியா மட்டுமே விண்ணப்பித்து இருந்தது. பிபா உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் அந்த நாட்டுக்கு 2034-ம் ஆண்டு போட்டியை நடத்தும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. சவுதிஅரேபியா உலகக் கோப்பை போட்டியை நடத்த இருப்பது இதுவே முதல் முறையாகும்.
இதனை சர்வதேச கால்பந்து சம்மேளனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.