search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாயல்குடி"

    • 40 சதவீத கண்மாய்கள், குளம், குட்டைகளில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.
    • கிராமங்களில் 15 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்தது.

    சாயல்குடி:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதன் காரணமாக மாவட்டத்திலுள்ள 40 சதவீத கண்மாய்கள், குளம், குட்டைகளில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.

    இந்நிலையில், சாயல்குடி அருகே கொக்கரசன் கோட்டை, கொண்டு நல்லான்பட்டி, வாலம்பட்டி, உச்சிநத்தம், வி.சேதுரா ஜபுரம், முத்துராம லிங்கபுரம், வெள்ளையா புரம், பிச்சையாபுரம், டி.கரிசல்குளம், டி.எம். கோட்டை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் தூத்துக்குடி மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது.

    இந்த கிராமங்களில் 15 ஆயிரம் ஏக்கரில் மிளகாய், வெங்காயம், உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு, சோளம், நெல் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்தது.

    சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக, விளாத்திகுளம் ஒன்றியத்தைச் சேர்ந்த லட்சுமிபும், மாவிலோடை கண்மாய்ககளில் தண்ணீர் நிரம்பி அது காட்டாற்று வெள்ளமாக மாறி கஞ்சம்பட்டி ஓடை வழியாக வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் வி. சேதுராஜ புரத்திலிருந்து உச்சிநத்தம் செல்லும் சாலை வழியாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் இப்பகுதியில் 2000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.


    இதனிடையே, எஸ். தரைக்குடி பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்த மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்த ராஜூலு, பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கவுர் உள்ளிட்ட அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்தனர்.

    இதனை தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், வெள்ளத்தால் சாலை சேதமடைந்த போக்குவரத்து துண்டிக்கப்பட்ட காரணத்தால், டிராக்டர் மூலம் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு சென்று ஆய்வு செய்தார்.

    பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய அவர், வெள்ளத்தால் சேதமடைந்து சாலை துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தோம். இதனை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உரிய நடவடிக்கை துரித வேகத்தில் எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×