என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டங்ஸ்டன் சுரங்கம்"

    • டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் இன்று கடையடைப்பு போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
    • அதிமுக சார்பில் மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினரும் தொடர்ந்து அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொள்வார்கள்.

    சென்னை :

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாப்பட்டி-நாயக்கர்பட்டியில் வேதாந்தா குழுமத்தின் Hindustan Zinc நிறுவனம் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் இன்று கடையடைப்பு போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

    இதுகுறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் மீதோ, அவர்கள் சார்பில் கொடுக்கப்படும் வாக்குறுதிகளின் மீதோ மக்களுக்கு துளியும் நம்பிக்கை என்பது கிடையாது.

    மேலூர் பொதுமக்களின் தொடர் போராட்டங்களுக்கு அதிமுக என்றும் துணைநிற்கும்.

    அஇஅதிமுக சார்பில் மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினரும் தொடர்ந்து அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொள்வார்கள்.

    பொதுமக்களின் உணர்வுகளையும், தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் தளமான அரிட்டாபட்டி பாதிக்கப்படுவதையும் கருத்திற்கொண்டு, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அளித்த அனுமதியைத் திரும்பப் பெறுமாறு மத்திய அரசையும், உரிய நடவடிக்கை எடுக்குமாறு திமுக அரசையும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    • 'சுரங்கத்துக்கு அனுமதி கோரி விண்ணப்பம் வந்தால் ஏற்க மாட்டோம்' என தமிழ்நாடு அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது.
    • டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய சுரங்கத் துறை வழங்கிய ஏலத்தை ரத்து செய்யுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    மேலும் அப்பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வல்லாளப்பட்டி வெள்ளி மலையாண்டி கோவில் முன்பு பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனம் தான் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.

    'சுரங்கத்துக்கு அனுமதி கோரி விண்ணப்பம் வந்தால் ஏற்க மாட்டோம்' என தமிழ்நாடு அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    மேலும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது. இதுபோன்ற சுரங்கத் தொழிலை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும் கூறியுள்ளார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி," கடித கபடநாடக ஏமாற்றுவேலைக்கு மக்கள் உரிய நேரத்தில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்" என தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க கடந்த 2023 அக்டோபர் மாதம் விடியா திமுக அரசு தான் அனுமதி கேட்டதாக நாளிதழ் மற்றும் வலைதள செய்திகள் தெரிவிகின்றன.

    அனுமதியை ரத்து செய்யக் கோரி கடிதம் எழுதிய "பேனா வீரர்"

    மு.க. ஸ்டாலின், அனுமதி கேட்டதே தனது அரசு தான் என்பதை மறைத்தது ஏன்?

    நீட் தேர்வைக் கொண்டுவந்துவிட்டு அதை எதிர்ப்பது போல் நாடகமாடும் திமுக, அதே பார்முலாவை பயன்படுத்தி மேலூர் மக்களை ஏமாற்றுகிறது.

    திமுக அரசு மக்களைச் சுரண்டி சுரங்கம் அமைத்து, மக்களின் வாழ்விடத்தைப் பறிக்க திரைமறைவில் முயற்சி எடுத்து விட்டு,

    தற்போது செய்யும் இந்த கடித கபடநாடக ஏமாற்றுவேலைக்கு,

    மக்கள் உரிய நேரத்தில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் நலனை விட தங்களின் நலனுக்கே முன்னுரிமை அளிக்கும்.
    • அரிட்டாப்பட்டி மக்களின் உணர்வுகளை மதித்து அங்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்குட்பட்ட அரிட்டாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 2015 ஏக்கர் பரப்பளவிலான பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசின் இரட்டை வேடத்தை மத்திய அரசு அம்பலப்படுத்தியுள்ளது. டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒருபுறம் அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கி விட்டு, இன்னொரு புறம் அதை எதிர்ப்பது போல, திராவிட மாடல் அரசு நடத்தும் பிள்ளையை கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் நாடகத்தை தமிழ்நாட்டு மக்கள் நம்ப மாட்டார்கள்.

    அரிட்டாப்பட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும், அத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதிய நிலையில், அது குறித்த சில விவரங்களை மத்திய சுரங்கத்துறை வெளியிட்டுள்ளது.

    "அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்கம் ஏலத்தில் விடப்படுவதற்கு முன்பாக தமிழக அரசிடமிருந்து சில உள்ளீடுகள் பெறப்பட்டன. டங்ஸ்டன் சுரங்கத்தை ஏலத்தில் விடுவதற்கு வசதியாக அப்பகுதியில் உள்ள 47.37 ஹெக்டேர் பரப்பளவிலான கிரானைட் சுரங்கத்திற்கான குத்தகையை தமிழக அரசின் டாமின் நிறுவனம் திரும்ப ஒப்படைத்து விட்டது. ஏல நடவடிக்கை தொடங்கிய கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட 07.11.2024 ஆம் தேதி வரை டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எந்த எதிர்ப்பும் வரவில்லை. டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் விடப்படுவதை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசிடமிருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை" என்று மத்திய அரசு கூறியிருக்கிறது.

    டங்ஸ்டன் சுரங்கம் ஏலத்தில் விடப்படுவது குறித்த விவரங்களை தமிழக அரசுக்கு மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்திருக்கிறது. அப்போதெல்லாம் எந்த எதிர்ப்பையும் தமிழக அரசு தெரிவிக்கவில்லை. இன்னும் கேட்டால் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தமிழக அரசே டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு கடந்த ஆண்டே மத்திய அரசின் அனுமதியை தமிழக அரசு கோரியிருக்கிறது. இப்படியாக அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு அனைத்து வழிகளிலும் துணை போன திராவிட மாடல் அரசு இப்போது மக்களிடம் கடுமையான எதிர்ப்பு எழுந்த பிறகு அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதைப் போல நாடகமாடுகிறது.

    திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் நலனை விட தங்களின் நலனுக்கே முன்னுரிமை அளிக்கும். காவிரி பாசன மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு ஆய்வுக்கு அனுமதி அளித்தது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு ஒப்புதல் அளித்தது என திராவிட மாடல் அரசு மக்களுக்கு செய்த துரோகங்களுக்கு ஏராளமான எடுத்துக் காட்டுகளைக் கூறலாம். அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்க விவகாரத்திலும் இப்போது அதே துரோகத்தை திமுக அரசு செய்கிறது. அரிட்டாப்பட்டி மக்களின் உணர்வுகளை மதித்து அங்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றார்.

    • தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.
    • உண்மையை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் கனிமவள சுரங்கம் அமைக்கப்பட்டால், அது சுற்றுப்புறச் சூழலுக்கு பெரும் கேடு விளைவிக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவித்து வரும் நிலையில், மக்களுக்கு ஆதரவாக நானும் எதிர்ப்பை தெரிவித்திருந்தேன். தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.

    மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படுவதற்கு தற்போது பொது மக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் எதிர்த்து வருகின்ற நிலையில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அளிக்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருப்பது தி.மு.க.வின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

    டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது தொடர்பாக கடந்த 7-ந்தேதி வரை தமிழ்நாடு அரசு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. இதற்கு தி.மு.க.வின் பதில் என்ன? இதனை தெளிவுபடுத்த வேண்டிய கடமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உண்டு. இதுகுறித்த உண்மையை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பொதுமக்கள் எதிர்ப்பை அடுத்து, திமுக அரசு நாடகமாடிக் கொண்டிருக்கிறது.
    • பிரதமர் மோடி நல்லாட்சியில், விவசாயிகள் நலனுக்கான திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்பட்டிருக்கின்றன.

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    திமுக அரசின் தவறான, முழுமையற்ற தகவல்களால், மதுரை அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

    இது தொடர்பாக, மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டிக்குக் கடிதம் எழுதியதோடு மட்டுமல்லாமல், மதுரை அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி, கவட்டையம்பட்டி, எட்டிமங்கலம், ஏ.வல்லாளப்பட்டி, அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி, நரசிங்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ள பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து, தொலைப்பேசியிலும் அழைத்து, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

    மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவைக் கைவிடுவதைக் குறித்துப் பரிசீலிக்கிறேன் என்று உறுதி அளித்துள்ளார்.

    மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது குறித்து திமுக அரசு தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் மட்டுமே, இந்தச் சுரங்கம் அமைப்பது குறித்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது, பொதுமக்கள் எதிர்ப்பை அடுத்து, திமுக அரசு நாடகமாடிக் கொண்டிருக்கிறது.

    பிரதமர் மோடி நல்லாட்சியில், விவசாயிகள் நலனுக்கான திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. விவசாயிகள் நலனுக்கு எதிரான எந்தச் செயல்பாடுகளையும், நமது பிரதமர் அவர்கள் மேற்கொள்ள மாட்டார் என்பது உறுதி என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • சுரங்கத்திற்கு தேர்வான பகுதி குடைவரை கோவில், அரிய வகை உயிரின வாழ்வாதாரமாக இருக்கிறது.
    • தீர்மானத்தை முன்மொழிந்து அமைச்சர் துரைமுருகன் உரையாற்றினார்.

    மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக சட்டசபையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சுரங்கத்திற்கு தேர்வான பகுதி குடைவரை கோவில், அரிய வகை உயிரின வாழ்வாதாரமாக இருக்கிறது.

    இந்நிலையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கான அனுமதியை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தீர்மானத்தை முன்மொழிந்து அமைச்சர் துரைமுருகன் உரையாற்றினார்.

    தீர்மானத்தில், டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு இந்துஸ்தான் சிங்க் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தப்பட்டது.

    • அரிட்டாப்பட்டி பாதுகாக்கப்பட்ட மலைப்பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
    • மத்திய பாஜக அரசின் சதியை முறியடிப்போம் என்று வேல்முருகன் கூறினார்.

    மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக சட்டசபையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிரான தமிழக அரசின் தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களும் வரவேற்பு தெரிவித்தனர்.

    அரிட்டாப்பட்டி பாதுகாக்கப்பட்ட மலைப்பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. வரலாற்று சின்னங்களை அழிக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுகிறது. சுரங்கம் அமைப்பதற்கு அனுமதிக்கக்கூடாது என்று அப்துல் சமது கூறினார்.

    தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை அழிக்கும் முயற்சியில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று எம்எல்ஏ ஈஸ்வரன் கூறினார்.

    அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய பாஜக அரசின் சதியை முறியடிப்போம் என்று வேல்முருகன் கூறினார்.

    டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது வரலாற்று சின்னங்களை அழிக்கும் நோக்கம் கொண்டது என்று சிந்தனை செல்வன் கூறினார்.

    • டங்ஸ்டன் சுரங்கம் குறித்த முழு தகவல்களும் தீர்மானத்தில் இல்லை.
    • டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்த புள்ளி கோரப்பட்டபோது தமிழக அரசு அமைதியாக இருந்தது.

    தமிழக சட்டசபையில் மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிரான தமிழக அரசின் தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களும் வரவேற்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தீர்மானத்தின் மீது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * டங்ஸ்டன் சுரங்கம் குறித்த முழு தகவல்களும் தீர்மானத்தில் இல்லை.

    * பாராளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் செயல்பட்டிருக்க வேண்டும்.

    * தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை திமுக எம்.பி.க்கள் தடுத்து நிறுத்த வேண்டும்.

    * மாநில உரிமை பறிபோகும்போது பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.

    * டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்த புள்ளி கோரப்பட்டபோது தமிழக அரசு அமைதியாக இருந்தது.

    * 10 மாதங்கள் மாநில அரசு அமைதியாக இருந்தது என்று அவர் குற்றம்சாட்டினார்.

    • சட்டத்தை திருத்தி டங்ஸ்டன் ஏலம் விடும் அதிகாரத்தை மத்திய அரசு எடுத்தது.
    • டங்ஸ்டன் சுரங்கத்தை தடுக்க மாநில அரசு அனைத்து நடவடிக்கையும் எடுத்தது.

    தமிழக சட்டசபையில் மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிரான தமிழக அரசின் தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களும் வரவேற்பு தெரிவித்தனர்.

    டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தீர்மானத்தின் மீது உரையாற்றிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாநில உரிமை பறிபோகும்போது பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்த புள்ளி கோரப்பட்டபோது தமிழக அரசு அமைதியாக இருந்தது என்று இபிஎஸ் குற்றம்சாட்டினார்.

    இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:

    * சட்டத்தை திருத்தி டங்ஸ்டன் ஏலம் விடும் அதிகாரத்தை மத்திய அரசு எடுத்தது.

    * தவறான செய்திகளை திருப்பி திருப்பி பதிவு செய்யக்கூடாது.

    * மத்திய அரசுக்கு கைகட்டி நிற்கும் வேலைக்காரனா மாநில அரசு.

    * மத்திய அரசு மாநில அரசின் சுயமரியாதைக்கு சவால் விடுத்தது.

    * ஆண்டான் அடிமை மனநிலையில் மத்திய அரசு செயல்படுகிறது.

    * டங்ஸ்டன் சுரங்கத்தை தடுக்க மாநில அரசு அனைத்து நடவடிக்கையும் எடுத்தது.

    * ஏலம், குத்தகை உரிமையை மாநில அரசுக்கு அளிக்க கோரி கடிதம் எழுதினேன்.

    அமைச்சர் கடிதம் எழுதியது எங்களுக்கு எப்படி தெரியும் என இபிஎஸ் எதிர் கேள்வி எழுப்பினார்.

    * நீங்கள் முதலமைச்சராக இருந்தபோது எத்தனை கடிதத்தை வெளியிட்டீர்கள்.

    * கடிதங்களில் இருந்த விபரங்களை அவையில் கூறி விட்டேன் என்று அவர் கூறினார்.

    • 500-க்கும் மேற்பட்டோர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • வேளாண் மண்டலமாக்கிட சட்டம் இயற்ற வேண்டும்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு இந்துஸ்தான் நிறுவனத்துக்கு ஏல அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அரிட்டாப்பட்டி ஏற்கனவே பல்லுயிர் தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட்டால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும்.

    எனவே டங்ஸ்டன் சுரங்கத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என அரிட்டாப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி களை சேர்ந்த முத்து வேல்பட்டி, கிடாரிபட்டி, எட்டிமங்கலம், செட்டி யார்பட்டி, நாயக்கர்பட்டி, வெள்ளாளப்பட்டி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடந்த ஒரு மாதமாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

    டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக மேலூர் பகுதி விவசாயிகள், வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில் இன்று காலை மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு டங்ஸ்டன் சுரங்க திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் பெண்கள், விவசாயிகள் என 500-க்கும் மேற்பட்டோர் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளுடன் திரண்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது சுரங்க ஏல திட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும். தொன்மையான தொல்லியல் சின்னங்கள்-பல்லுயிர் சூழல்கள் அடங்கியுள்ள மதுரை மாவட்டத்தை பாரம்பரிய தமிழ் பண்பாட்டு மண்டலமாக அறிவித்திட வேண்டும்.

    முல்லை பெரியாறு பாசன பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கிட சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். போராட்டத்தை முன்னிட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • 20 அரிய கனிம வள சட்டம் 2023 ஆம் ஆண்டிலேயே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
    • அப்போதே திமுக எம்பிக்கள் தடுத்திருக்க வேண்டும்

    இன்று நடந்த தமிழக சட்டசபை கூட்டத்தின் பின் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.    

    சட்டசபை வளாகத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 20 அரிய கனிம வள சட்டம் 2023 ஆம் ஆண்டிலேயே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதை அப்போதே திமுக எம்பிக்கள் தடுத்திருக்க வேண்டும்.

    டங்ஸ்டன் சுரங்க ஏலம் கடந்த 9 மாதங்கள் முன்பே நடந்து முடிந்தது.  ஆனால் கடந்த 9 மாதமாக தமிழக அரசிடம் இருந்து மத்திய அரசுக்கு எந்த கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை.

    ஆரம்பத்திலேயே பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியிருக்க வேண்டும்.  ஆனால் மழுப்பலான பதிலைத்தான் திமுக அரசு அளித்துக்கொண்டிருக்கிறது.

    அரசு அலட்சியமாக இருந்தது என எடுத்துக் கூறினால் அனைவர்க்கும் கோபம் வருகிறது என்று தெரிவித்துள்ளார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நான் முதல்வராக உள்ளவரை இந்த திட்டத்தை நிறைவேற்ற விடமாட்டேன்.
    • டங்ஸ்டன் சுரங்க திட்டம் வந்தால் ராஜினாமா செய்யவும் தயார்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மதுரை டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிரான தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். இதன் மீது அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் பேசினார்கள். சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    எடப்பாடி பழனிசாமி:- டங்ஸ்டன் சுரங்க ஏலம் விடப்பட்டு 10 மாத காலம் நீங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்:- டங்ஸ்டன் சுரங்க அனுமதியை எதிர்த்து குரல் கொடுக்கவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் கேட்கிறார். பாராளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் இதை கடுமையாக எதிர்த்துள்ளனர். அது மட்டுமின்றி மதுரை பகுதியில் இந்த சுரங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியபோது அமைச்சர் மூர்த்தி அவர்களை பார்த்து போராட்டத்தில் ஈடுபட வேண்டாம். சுரங்க ஏலத்தை ரத்து செய்யக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி வலியுறுத்தி இருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார்.

    எடப்பாடி பழனிசாமி:- நீங்கள் கடிதம் எப்போது எழுதினீர்கள். பிரச்சினை வந்த பிறகு இப்போது தானே எழுதி இருக்கிறீர்கள். இது மக்கள் பிரச்சினை. நீங்கள் தீர்மானம் கொண்டு வந்தால் நாங்கள் எதுவும் சொல்லக்கூடாதா? அப்ப டியே தலையாட்டி விட்டு போக வேண்டுமா? சுரங்க ஏலம் ஒப்பந்தம் போடப்பட்ட பிறகு 10 மாதமாக என்ன செய்தீர்கள்? அதைத் தான் நான் கேட்கிறேன்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்:- பாராளுமன்றத்தில் எங்கள் எம்.பி.க்கள் இதை எதிர்த்து குரல் கொடுத்து இருக்கிறார்கள். தெரியவில்லை என்று சொன்னால் எப்படி? நாங்கள் கடிதம் எழுதி இருக்கிறோம்.

    எடப்பாடி பழனிசாமி:- சுரங்க ஏலம் வரும் போது ஒப்பந்தம் போடப்பட்டு 10 மாத காலம் என்ன செய்தீர்கள்? அப்போதே தடுத்து நிறுத்தி இருக்கலாமே? ஏன் செய்யவில்லை?

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்:- பாராளுமன்ற அவையை ஒத்தி வைக்கிற அளவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளோம். பாராளுமன்றம் இப்போது தொடர்ந்து நடக்கவில்லை. கிடைக்கிற நேரத்தை பயன்படுத்தி பேசி இருக்கிறோம். பாராளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் தரப்பில் அப்போதே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி பேசினார். அவர் பேசி முடித்த பிறகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசும்போது, உங்களின் பார்வையில் நாங்கள் சுரங்க விவகாரத்தில் அலட்சியமாக இருந்ததாக தெரியலாம். ஆனால் அது போன்று நாங்கள் எந்த அலட்சியத்தையும் காட்டவில்லை. எங்களது எதிர்ப்பை கடுமையாகவே பதிவு செய்துள்ளோம். டங்ஸ்டன் திட்டத்தை தடுத்தே தீருவோம். ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.

    திரும்ப திரும்ப தெளிவாக சொல்கிறேன். நான் முதல்வராக உள்ளவரை இந்த திட்டத்தை நிறைவேற்ற விடமாட்டேன்.

    டங்ஸ்டன் சுரங்க திட்டம் வந்தால் ராஜினாமா செய்யவும் தயார். டங்ஸ்டன் சுரங்கம் அமையும் சூழல் ஏற்பட்டால் நான் முதல்வர் பொறுப்பில் இருக்க மாட்டேன்.

    எனவே இந்த தீர்மானத்துக்கு நீங்கள் (அ.தி.மு.க.) ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    இதன் பிறகு பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழக மக்களுக்கு எதிரான எந்த திட்டத்தையும் அ.தி.மு.க. பொறுத்துக் கொள்ளாது. எனவே இந்த தீர்மானத்தை அ.தி.மு.க. ஆதரிக்கிறது என்றார்.

    ×