என் மலர்
நீங்கள் தேடியது "திருவெறும்பூர்"
- நடுகற்களை ஆற்றுப்படை பாரம்பரிய குழுவை சேர்ந்தவர்கள் ஆய்வு செய்தனர்.
- உள்ளூர் வாசிகள் நடு கற்களை பட்டவன் சாமி என்று குறிப்பிடுகிறார்கள்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் பல்வேறு வரலாற்றுச் சான்றுகளை தாங்கி நிற்கிறது. இங்கு சோழர் மற்றும் நாயக்கர் மன்னர்கள் காலத்து பல்வேறு சான்றுகள் கிடைத்து உள்ளன. ஆங்கிலேயர்களுக்கு எதிராக முதன் முதலில் 1801-ம் ஆண்டு மருது சகோதரர்களால் ஜம்பு தீவு பிரகடனம் (ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்ட தேவையில்லை) மலைக்கோட்டை வாசலில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்தநிலையில் திருவெறும்பூர் அருகே வீதி வடங்கம் கிராமத்தில் உள்ள அரசாயி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள நடுகற்களை ஆற்றுப்படை பாரம்பரிய குழுவை சேர்ந்தவர்கள் ஆய்வு செய்தனர். உள்ளூர் மக்களின் காவல் தெய்வமாக இருக்கும் இந்த கோவிலில் நடுகற்களுக்கு அப்பகுதி மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
ஆனால் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை. இதில் ஒரு நடு கல் 2 அடி உயரத்திலும், இன்னொன்று 3.5 அடி உயரத்திலும் உள்ளது. உயரமான கல் 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது எனவும், மற்ற இரண்டு கற்களும் 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் எனவும் ஆற்றுப்படை பாரம்பரிய குழுவின் நிறுவனர் வி பார்த்திபன் கூறினார்.
மேலும் அவர் கூறும் போது, `உள்ளூர் வாசிகள் அந்த நடு கற்களை பட்டவன் சாமி (வீழ்ந்த மாவீரர்கள்) என்று குறிப்பிடுகிறார்கள். அந்த கற்களில் பொறிக்கப்பட்டுள்ள ஆயுதங்கள், வாள்கள், கேடயங்கள் மற்றும் அம்புகளுடன் கூடிய வில் ஆகியவை அது வீர கற்கள் என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது' என்றார்.
மேலும் அவர் கூறும் போது, `திருவெறும்பூர் பகுதியில் வரலாற்று ரீதியாக நாயக்கர் காலத்தில் பல மோதல்கள் நடந்துள்ளன. குறுநில மன்னர்களுக்கும் நாயக்கர் மன்னர் படை வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இவர்கள் வீர மரணம் அடைந்திருக்கலாம்.
ஏனெனில் வேட்டையாடுபவர்களுடன் சண்டையிட்டு மடிந்திருந்தால் கற்களில் புலிகள் போன்ற விலங்குகளின் அடையாளங்கள் இடம்பெற்றிருக்கும். ஆனால் அத்தகைய அடையாளம் எதுவும் இல்லை. ஆகவே இது வீர மரணம் அடைந்த மாவீரர்களின் நடுகற்கள் என தெரியவந்துள்ளது என கூறினார்.
ஆய்வின்போது மத்திய அரசின் ஹெச்.இ.பி. தொழிற்சாலை ஊழியர் தியாகராஜன் உடன் இருந்தார்.