search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நைட்ரேட்"

    • நாடு முழுவதும் 15,259 கண்காணிப்பு பகுதிகளை தேர்வு செய்து நிலத்தடி நீர் ஆய்வு செய்யப்பட்டது.
    • நைட்ரஜன் அளவு அதிகரிப்பது சுற்றுச்சூழல் மற்றும் உடல்நலத்துக்கு குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் நிலத்தடி நீரின் தரத்தை மத்திய நிலத்தடி நீர் வாரியம் ஆண்டுதோறும் ஆய்வு செய்து வருகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டுக்கான ஆய்வறிக்கை தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. இதில் நாடு முழுவதும் 440 மாவட்டங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவிலான நைட்ரேட் நிலத்தடி நீரில் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.

    அதன்படி, நாடு முழுவதும் 15,259 கண்காணிப்பு பகுதிகளை தேர்வு செய்து நிலத்தடி நீர் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 25 சதவீத கிணறுகளில் எடுக்கப்பட்ட மாதிரிகள் விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. குறிப்பாக பருவமழைக்கு முன்னும் பின்னும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 20 சதவீத மாதிரிகளில் உலக சுகாதார அமைப்பு மற்றும் இந்திய தர நிர்ணய அமைப்பு ஆகியவை அனுமதித்த அளவை (லிட்டருக்கு 45 மி.லி) விட அதிகமாக நைட்ரேட் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் 9.04 சதவீத மாதிரிகளில் புளோரைடு அளவும், 3.55 சதவீத மாதிரிகளில் ஆர்சனிக் அளவும் மிகவும் அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    நைட்ரேட்டை பொறுத்தவரை ராஜஸ்தான், கர்நாடகா, தமிழ்நாட்டில் 40 சதவீத மாதிரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. மராட்டியம் (35.74 சதவீதம்), தெலுங்கானா (27.48), ஆந்திரா (23.5), மத்திய பிரதேசம் (22.58) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

    அதேநேரம் உத்தரபிரதேசம், கேரளா, ஜார்கண்ட், பீகார் மாநிலங்கள் குறைந்த சதவீதத்தை கொண்டிருந்தன. அருணாசல பிரதேசம், அசாம், கோவா, மேகாலயா, மிசோரம், நாகாலாந்து மாநிலங்களின் மாதிரிகள் பாதுகாப்பான அளவிலேயே உள்ளன.

    நாடு முழுவதும் 15 மாவட்டங்களில் நிலத்தடி நீரில் அதிகபட்ச நைட்ரேட் அளவு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

    அந்தவகையில் தமிழ்நாட்டின் விழுப்புரம், ராஜஸ்தானின் ஜோத்பூர், பார்மர், மகாராஷ்டிரத்தின் வார்தா, புல்தானா, அம்ராவதி, நாண்டட், பீட், ஜல்கான், யவட்மால், தெலுங்கானாவின் ரங்காரெட்டி, அடிலாபாத், சித்திபேட், ஆந்திராவின் பல்நாடு, பஞ்சாப்பின் பதிண்டா மாவட்டங்களில் நிலத்தடி நீர் அதிகபட்ச நைட்ரேட் அளவுடன் இருப்பது தெரியவந்துள்ளது. நைட்ரஜன் அளவு அதிகரிப்பது சுற்றுச்சூழல் மற்றும் உடல்நலத்துக்கு குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக அவர்கள் தெரிவித்தனர்.

    வேளாண் பிராந்தியங்களில் நைட்ரஜன் உரங்கள் அதிகம் பயன்படுத்துவதாலும், கால்நடை கழிவுகளை திறம்பட கையாளாததாலும் நிலத்தடி நீரில் நைட்ரேட் அளவு அதிகரிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் நகரமயமாக்கல் மற்றும் மக்கள்தொகை அதிகரிப்பு காரணமாக அதிகரிக்கும் கழிவுநீரும் கணிசமான நைட்ரேட் அளவை நிலத்தடி நீரில் சேர்ப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.

    ×