என் மலர்
நீங்கள் தேடியது "எச்.எம்.பி.வி. வைரஸ்"
- சிறு குழந்தைகளை கூட்டங்களுக்குள் கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும்.
- முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும்.
சென்னை:
புதிதாக பரவி வரும் எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்றும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுகா தாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
இந்த வைரஸ் புதியதல்ல. ஏற்கனவே நம்மோடு இருப்பதுதான். கடந்த 2001-ல இந்தியாவில் கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால் அதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே உலகில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இந்த தொற்று ஏற்பட்டால் அதிகபட்சம் 5 நாட்களுக்குள் குணமாகி விடும். தமிழகத்தில் பாதிக் கப்பட்ட 2 குழந்தைகளுக்கும் எந்த ஆபத்தும் இல்லை நலமாக இருக்கிறார்கள். பொதுவாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு இந்த தொற்று ஏற்பட்டால் நுரையீரல் பாதிக்கும்.
வைரஸ் தொற்றுக்களை நினைத்து பீதி அடைய தேவையில்லை. இனி நாம் வைரஸ்களோடு வாழ பழகி கொள்ள வேண்டும் என்று விஞ்ஞானி சவுமியா சாமிநாதன் குறிப்பிட்டதைபோல் நாம்தான் பாதுகாப்பு வழிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் மக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். சிறு குழந்தைகளை கூட்டங்களுக்குள் கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும்.
கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவி விட்டு சாப்பிடுவது, வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும் போது கைகளை சுத்தம் செய்வது போன்ற பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். பொதுவாகவே மார்க்கெட் பகுதி, மக்கள் கூடும் இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும்.
இந்த வைரசை பற்றி பீதி அடைய வேண்டாம். விழிப்புணர்வும், வழிமுறைகளை கடைபிடிப்பதும் அவசியம். பொது சுகாதாரத்துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நுரையீரலை பாதிக்கும் புது வகையான வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
- ஓசூரில், எந்த பாதிப்பும் கண்டறியப்பட வில்லை.
ஓசூர்:
சீனாவில் கண்டறியப்பட்டுள்ள எச்.எம்.பி.வி. என்ற நுரையீரலை பாதிக்கும் புது வகையான வைரஸ் தொற்று, கர்நாடகா மாநிலம், பெங்களூருவை சேர்ந்த, 8 மாதம், 3 மாத குழந்தை என இருவருக்கு இருப்பது நேற்று கண்டறியப்பட்டுள்ளது.
அந்த குழந்தைகளுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. எச்.எம்.பி.வி., வைரஸ் தொற்று, ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடிய வாய்ப்பு உள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு மிக அருகாமையிலுள்ள, தமிழக எல்லையான ஓசூரை சேர்ந்த மக்கள் பல ஆயிரம் பேர், பல்வேறு தேவைகளுக்காக தினமும் பெங்களூரு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், பெங்களூருவில் எச்.எம்.பி.வி., வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளதால், தமிழக எல்லையை உஷார்படுத்தி, ஓசூர் மாநகராட்சி நிர்வாகம், நோய் தொற்று தடுப்பு பணிகளை மேற்கொள்ள கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து, ஓசூர், மாநகர நல அலுவலர் அஜிதா கூறுகையில், ஓசூரில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் காய்ச்சலுக்கு வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்வோர் குறித்த விபரங்கள் பெறப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை ஓசூரில், எந்த பாதிப்பும் கண்டறியப்பட வில்லை என்றார்.
- வைரஸ் தடுப்பு மருந்துகள் அல்லது தடுப்பூசி எதுவும் இல்லை.
- சுகாதார முறைகளை பின்பற்றினால் போதும்.
ஹியூமன் மெட்டா நியூமோ (HMPV) வைரஸ் புதியது அல்ல. இது முதன்முதலில் 2001-ம் ஆண்டு நெதர்லாந்தில் கண்டறியப்பட்டது. இது சுவாச அமைப்பை முதன்மையாக பாதிக்கும் நியூமோவிரிடே குடும்பத்தை சேர்ந்த ஒரு வகை ஆர்.என்.ஏ வைரஸ் ஆகும்.
காய்ச்சல், தலைவலி, மூக்கடைப்பு, இருமல், தும்மல், மூக்கு ஒழுகுதல், மூச்சுத் திணறல், உடல் சோர்வு, தொண்டை வலி போன்றவை இந்நோயின் பொதுவான அறிகுறிகள் ஆகும்.

இது பெரும்பாலும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். நோய் எதிர்ப்பு திறன் குறைவாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் அதிகம் பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர் என்பது உண்மை தான்.
மேலும் இது சர்க்கரை நோயாளிகள், புற்று நோய் பாதிப்புள்ளவர்கள், எச்.ஐ.வி. நோயாளிகள், நோயெதிர்ப்புத் தடுப்பு மருந்து உட்கொள்ளும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், கைக்குழந்தைகள், ஆஸ்துமா நோயாளிகள் ஆகியோருக்கு நிமோனியா, மூச்சுக்குழலழற்சி, சுவாச செயலிழப்பு போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.
இந்நோய் இருமல் அல்லது தும்மலில் வெளிப்படும் வைரஸ் கலந்த சுவாச துளிகள் மூலமாகவும், தொடுவது அல்லது கைகுலுக்குவது போன்ற நெருங்கிய தொடர்புகளாலும், வைரஸ் படிந்த மேற்பரப்புகளை தொட்டு விட்டு, பின்னர் வாய், மூக்கு அல்லது கண்களைத் தொடுவதாலும் பரவுகிறது.

இத்தொற்று 1 அல்லது 2 வாரங்களில் தானாகவே சரியாக கூடிய ஒரு தன்னியக்க நோயாகும். இது குளிர் காலங்களில் மட்டுமே காணப்படுகிறது. HMPV வைரஸ் நோய் தொற்றுக்கு குறிப்பிட்ட வைரஸ் தடுப்பு மருந்துகள் அல்லது தடுப்பூசி எதுவும் இல்லை. இந்நோய் தொற்று வராமல் தடுக்க வழக்கமான சுகாதார முறைகளை பின்பற்றினால் போதும்.
HMPV வைரஸ் தொற்றுக்கும், கோவிட் நோய்க்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இந்நோயின் இறப்பு விகிதமும் கோவிட் நோயுடன் ஒப்பிடுகையில் மிக மிக குறைவு. ஆகையால் எச்.எம்.பி வைரஸ் தொற்று குறித்து நீங்கள் எந்த அச்சமும் கொள்ள வேண்டாம்.