என் மலர்
நீங்கள் தேடியது "போர்க்கப்பல்கள்"
- சத்ரபதி சிவாஜி மகாராஜ் இந்திய கடற்படைக்கு புதிய பலத்தையும் புதிய தொலைநோக்குப் பார்வையையும் அளித்தார்.
- இன்றைய இந்தியா உலகின் ஒரு பெரிய கடல்சார் சக்தியாக வளர்ந்து வருகிறது.
மும்பை:
பிரதமர் மோடி இன்று 3 கடற்படை போர் கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
அவர் இன்று காலை மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள கடற்படை கப்பல் கட்டும் தளத்திற்கு சென்றார். அவருக்கு கடற்படை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் நடந்த விழாவில் ஐ.என்.எஸ். சூரத், ஐ.என்.எஸ். நீலகிரி, ஐ.என்.எஸ். வக்ஷீர் ஆகிய மூன்று முன்னணி கடற்படை போர்க்கப்பல்களை அறிமுகப்படுத்தி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
விழாவில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், கடற்படைத் தளபதி தினேஷ் திரிபாதி, மகாராஷ்டிர முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்-மந்திரிகள் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார், உயர் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-
இந்தியாவின் கடல்சார் பாரம்பரியம், கடற்படையின் புகழ்பெற்ற வரலாறு, சுயசார்பு இந்தியா இயக்கம் ஆகியவற்றிற்கு இன்று ஒரு மிகப் பெரிய நாள். சத்ரபதி சிவாஜி மகாராஜ் இந்திய கடற்படைக்கு புதிய பலத்தையும் புதிய தொலைநோக்குப் பார்வையையும் அளித்தார்.
இன்று அவரது புனித பூமியில் 21-ம் நூற்றாண்டின் கடற்படையை வலுப்படுத்துவதில் மிகப்பெரிய பணியை செய்து உள்ளோம்.
ஒரு நாசகார கப்பல், ஒரு போர்க்கப்பல் மற்றும் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் ஆகிய மூன்றும் ஒன்றாக கடற்படையில் சேர்க்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும். இவை மூன்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவர்கள் என்பது பெருமைக்குரிய விஷயம். இன்றைய இந்தியா உலகின் ஒரு பெரிய கடல்சார் சக்தியாக வளர்ந்து வருகிறது.
சில மாதங்களில், நமது கடற்படை நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள தேசிய-சர்வ தேச சரக்குகளைப் பாதுகாத்துள்ளது. இது இந்தியாவின் மீதான உலகத்தின் நம்பிக்கையை அதிகரித்து உள்ளது. இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படை மீதான இந்த நம்பிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று, ஆசியான், ஆஸ்திரேலியா, வளைகுடா, ஆப்பிரிக்க நாடுகள் என எதுவாக இருந்தாலும், அனைத்துடனும் இந்தியாவின் பொருளாதார ஒத்துழைப்பு வலுவடைந்து வருகிறது.
இந்தியா மிகப்பெரிய கடல்சார் சக்தியாக மாறி வருகிறது.
உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. நாட்டின் தேவைகளைக் கருத்தில் கொண்டு புதிய பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் எல்லையற்ற விண்வெளி மற்றும் ஆழ்கடல் இரண்டும் எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனவே, இன்று இந்தியா விண்வெளி மற்றும் ஆழ்கடல் இரண்டிலும் தனது திறன்களை அதிகரித்து வருகிறது. நமது சமுத்திரயான் திட்டம், கடலில் 6000 மீட்டர் ஆழத்திற்கு அழைத்துச் செல்லப்போகிறது. இதை ஒரு சில நாடுகள் மட்டுமே செய்து உள்ளன. எதிர்காலத்தின் எந்தவொரு சாத்தியக்கூறுகளிலும் அரசாங்கம் எந்த முயற்சியையும் விட்டுவிடவில்லை.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில், இந்தியா முதல் பதிலளிப்பவராக உருவெடுத்துள்ளது.
உலகப் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் இயக்க வியலுக்கு வழிகாட்டுவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கப்போகிறது. பிராந்திய நீர்நிலைகள், வழிசெலுத்தல் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பான வர்த்தக விநியோகக் கோடுகள் மற்றும் கடல் வழிகளைப் பாதுகாப்பது முக்கியம். இந்தியா விரிவாக்கத்திற்காக அல்ல, வளர்ச்சிக்காக பாடுபடுகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் 33 கப்பல்கள், 7 நீர்மூழ்கிக் கப்பல்கள் கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி ரூ.1.25 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
பி15பி ஏவுகணை அழிப்பான் திட்டத்தின் 4-வது மற்றும் இறுதி கப்பலான ஐ.என்.எஸ். சூரத், உலகின் மிகப்பெரிய மற்றும் அதிநவீன அழிப்புக் கப்பல்களில் ஒன்றாகும். இது 75 சதவீதம் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டது. அதிநவீன ஆயுத-சென்சார் தொகுப்புகள், மேம்பட்ட கட்டமைப்புத் திறன்களை கொண்டுள்ளது.
இக்கப்பலின் செயல்பாட்டு வரம்பு 7,500 கிலோ மீட்டருக்கும் அதிகமாகும். இது இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு செயல்படுத்தப்பட்ட போர்க்கப்பல் ஆகும்.
பி17ஏ ஸ்டீல்த் ப்ரிகேட் திட்டத்தின் முதல் கப்பலான ஐ.என்.எஸ் நீலகிரி, இந்திய கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பணியகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அடுத்த தலைமுறை உள்நாட்டு போர்க்கப்பல்களை பிரதிபலிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகள் உள்ளன.
ஐ.என்.எஸ் சூரத், ஐ.என்.எஸ் நீலகிரி ஆகிய 2 போர்க்கப்பல்களிலும் மேம்பட்ட இலகுரக ஹெலி காப்டர் மற்றும் புதிதாக சேர்க்கப்பட்ட எம்.எச்-60ஆர் உள்ளிட்ட பல்வேறு ஹெலிகாப்டர்களை இயக்க முடியும்.
பி75 ஸ்கார்பீன் திட்டத்தின் 6-வது மற்றும் இறுதி நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ்வக்ஷீர் பிரான்ஸ் கடற்படைக் குழுவுடன் இணைந்து கட்டப்பட்டு உள்ளது.
இது நீர்மூழ்கிக் கப்பல் கட்டுமானத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் நிபுணத்துவத்தை பிரதிபலிக்கிறது என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. ஐ.என்.எஸ் வக்ஷீர், உலகின் மிகவும் மேம்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்றாகும். மேலும் டீசல்-மின்சார நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்றாகும்.
இது மேற்பரப்பு எதிர்ப்பு போர், நீர்மூழ்கி எதிர்ப்பு போர், உளவுத்துறை சேகரிப்பு, பகுதி கண்காணிப்பு மற்றும் சிறப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள வடிவமைக்கப்பட்டுள்ளது
பாதுகாப்பு உற்பத்தி மற்றும் கடல்சார் பாதுகாப்பில் உலகளாவிய தலைமைத்துவமாக மாற வேண்டும் என்ற இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் 3 போர் கப்பல்கள் அறிமுகப்படுத்தப்படுவது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது என்றும், இந்தியாவின் கடற்படைக்கு வலுசேர்க்கும் வகையில் இந்த கப்பல்கள் இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
#WATCH | Mumbai, Maharashtra: Prime Minister Narendra Modi dedicates three frontline naval combatants INS Surat, INS Nilgiri and INS Vaghsheer to the nation(Source: ANI/DD) pic.twitter.com/0PI3kxlVT4
— ANI (@ANI) January 15, 2025