என் மலர்
நீங்கள் தேடியது "உத்திரமேரூர்"
- மோதலில் ஈடுபட்ட அந்த வாலிபர் மாயமாகி இருப்பதால் சந்தேகம் வலுத்து உள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர்:
காஞ்சிபுரம் அடுத்த உத்திரமேரூர் அருகே உள்ள பழையசீவரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் பரத்(வயது 17), சத்ரியன்(17), விஷ்வா(17). இவர்கள் 3 பேரும் நண்பர்கள் ஆவர்.
இவர்களில் பரத், ஒரகடத்தில் உள்ள ஐ.டி.ஐ.யிலும், சத்ரியன் வாலாஜா பாத்தில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பும் படித்து வந்தனர். விஷ்வா பிளஸ்-2 முடித்து உள்ளார். கடந்த 12-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற பரத் உள்பட 3 பேரும் பின்னர் வீடுதிரும்பவில்லை. அவர்களை குடும்பத்தினர் தேடி வந்தனர்.
மேலும் இது தொடர்பாக சாலவாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த நிலையில் உத்திரமேரூர் அடுத்த காட்டாங்குளம் ஊராட்சிக்குட்பட்ட விழுத வாடி கிராமத்தில் உள்ள ஏரியில் பரத், சத்ரியன், விஷ்வா ஆகியோர் பிணமாக மிதந்தனர்.
தகவல் அறிந்ததும் உத்திரமேரூர் போலீசார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் காஞ்சிபுரம் டி.எஸ்.பி. சங்கர் கணேஷ், இன்ஸ்பெக்டர் சங்கர சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் மாரி செல்வம் விசாரணை நடத்தினர். மாணவர்கள் 3 பேரும் எப்படி இறந்தனர் என்பது தொடர்ந்து மர்மமாக உள்ளது.
அவர்களின் முகம் தீவைத்து எரிக்கப்பட்டு கருகி இருந்தது. மேலும் மாணவர்களின் முழங்கால், காலின் கீழ் பகுதியில் அரிவாளால் வெட்டப்பட்டதற்கான காயங்கள் இருந்தன. மேலும் இறந்து போன மாணவர்கள் அனைவரும் அவர்கள் அணிந்து இருந்த ஆடையுடன் இருந்தனர்.
அவர்கள் ஏரியில் குளிக்க வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. எனவே மர்ம நபர்கள் மாணவர்கள் 3 பேரையும் கடத்தி எரித்து கொலை செய்து விட்டு உடல்களை ஏரியில் வீசி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. உடல்கள் உப்பிய நிலையில் காணப்படுவதால் அவர்கள் மாயமான 12-ந்தேதியே கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதேபோல் திருட்டு குற்ற வழக்கில் தொடர்புடைய சிறுமையிலூர் கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கும் மர்மமாக இறந்து போன பரத் என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன் பிரச்சனை ஏற்பட்டு வாக்குவாதம் நடந்ததாக சொல்லப்படுகிறது. இந்த தகராறில் கொலை நடந்து உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். மோதலில் ஈடுபட்ட அந்த வாலிபர் மாயமாகி இருப்பதால் சந்தேகம் வலுத்து உள்ளது.
மர்மமாக இறந்து போன 3 மாணவர்களுக்கு வேறு யாருடனும் மோதல் உள்ளதா? கடைசியாக செல்போன்களில் யாருடன் பேசினார்கள்? என்ற விபரத்தை சேகரித்து வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.