என் மலர்
நீங்கள் தேடியது "ஜோதிடர் கொலை"
- பிரேத பரிசோதனையில் ஜான் ஸ்டீபன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அருகே கீழப்பெருவிளை இசக்கியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜான் ஸ்டீபன் (வயது 64), ஜோதிடர். இவரது மனைவி விஜயகுமாரி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. மகன் கோவையில் தங்கி படித்து வருகிறார். இதனால் ஜான் ஸ்டீபனும் விஜயகுமாரியும் இங்கு வசித்து வந்தனர்.
வீட்டு வேலைகள் செய்து வரும் விஜயகுமாரி சம்பவத்தன்று வழக்கம் போல் வீட்டு வேலை செய்வதற்காக வெளியே சென்று இருந்தார். மாலை 5 மணிக்கு அவர் வீட்டிற்கு வந்தபோது ஜான் ஸ்டீபன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஆசாரிபள்ளம் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று ஜான் ஸ்டீபன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விஜயகுமாரி புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பிரேத பரிசோதனையில் ஜான் ஸ்டீபன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கொலை தொடர்பாக இரணியல் அருகே உள்ள கட்டி மாங்கோடு பகுதியை சேர்ந்த கலையரசி (43), நெல்லை மாவட்டம் கருவேலங்குளத்தைச் சேர்ந்த நம்பிராஜன் (25) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கைது செய்யப்பட்ட கலையரசி கணவனை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவர் தன் கணவருடன் சேர்ந்து வாழ்வதற்காக ஜோதிடம் பார்ப்பதற்காக ஜான் ஸ்டீபனிடம் வந்து உள்ளார். அப்போது சில பரிகாரங்களை செய்தால் கணவருடன் சேர்ந்து வாழலாம் என்று ஜான் ஸ்டீபன் கூறியதுடன் பணமும் வாங்கியுள்ளார்.
ஆனால் ஜோதிடம் பார்த்த பிறகு கணவன்- மனைவி இடையேயான தகராறு தான் அதிகரித்தது. இதனை ஜான் ஸ்டீபனிடம் தெரிவித்த கலையரசி, தான் கொடுத்த பணத்தையும் திருப்பி கேட்டார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த விரோதத்தில் தான் ஜான் ஸ்டீபனை தீர்த்து கட்ட கலையரசி முடிவு செய்தார்.
கூலிப்படையை ஏவி கொலை செய்ய அவர் திட்டம் திட்டினார். இதற்காக நெல்லை மாவட்டம் கருவேலங்குளத்தைச் சேர்ந்த நம்பி ராஜனை தொடர்பு கொண்டு பேசினார். அதற்காக அவருக்கு பணமும் கொடுத்து உள்ளார். ஜான் ஸ்டீபனை தீர்த்து கட்டுவதற்காக அவரது வீட்டிற்கு நம்பிராஜன் வந்துள்ளார்.
வீட்டில் தனியாக இருந்த ஜான் ஸ்டீபனை துண்டால் கழுத்தை இறுக்கியும், தரையில் அடித்தும் கொலை செய்து விட்டு தப்பி சென்றது தெரிய வந்து உள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள கலையரசி மற்றும் நம்பி ராஜனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் இருவரையும் போலீசார் இன்று மாலை கோர்ட்டில் ஆஜர் படுத்துகிறார்கள்.