என் மலர்
நீங்கள் தேடியது "பள்ளி தலைமை ஆசிரியர்"
- விமானத்தில் முதன் முதலாக பயணம் மேற்கொள்ள இருந்த மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.
- 5-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அவர்களது வாழ்வில் மறக்க முடியாத ஒரு வித்தியாசமான அனுபவத்தையும், புதிய உயரத்தையும் அளிக்கும்.
மதுரை:
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் கொண்டலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 95 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 5-ம் வகுப்பு பயிலும் 20 மாணவர்களும், 5 ஆசிரியர்களும் 2 நாள் கல்வி சுற்றுலாவாக மதுரையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பயணம் செய்தனர்.
பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு "ரைட் பிரதர்ஸ்" பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, விமானத்தில் போக ஆசையாக இருப்பதாக தலைமை ஆசிரியரிடம் மாணவ-மாணவிகள் தெரிவித்தனர். இதையடுத்து தலைமை ஆசிரியர் மைக்கேல்ராஜ் விமானத்தில் அழைத்து செல்ல திட்டமிட்டார். இதற்காக அவரது துபாய் நண்பர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள், பெற்றோர்கள் உதவியுடன் நிதி திரட்டினார்.
இதைத்தொடர்ந்து 20 மாணவ-மாணவிகள், 5 ஆசிரியர்களுடன் இன்று காலை அவர்கள் மதுரையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டனர். விமானத்தில் முதன் முதலாக பயணம் மேற்கொள்ள இருந்த மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.
சென்னைக்கு செல்லும் அவர்கள் அங்கு பிர்லா கோளரங்கம், அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம், எழும்பூர் அருங்காட்சியகம், சட்டமன்றம், தலைமைச் செயலகம், சென்னை உயர்நீதிமன்றம், வள்ளுவர் கோட்டம், தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்கள், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா என பல இடங்களை சுற்றி பார்த்துவிட்டு நாளை (19-ந் தேதி) ஞாயிறு இரவு பொதிகை ரெயிலில் தென்காசிக்கு திரும்புகிறார்கள்.
இதுகுறித்து கொண்டலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மைக்கேல்ராஜ் கூறும்போது, இந்த விமானப் பயண வாய்ப்பு கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களுக்கு அதுவும் 5-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அவர்களது வாழ்வில் மறக்க முடியாத ஒரு வித்தியாசமான அனுபவத்தையும், புதிய உயரத்தையும் அளிக்கும்.
இம்மாதிரியான விமான பயணத்திற்கு அரசு பள்ளி மாணவர்களையும் அழைத்துச் செல்ல முடியும் என்பதற்கு உதாரணமாக அமைகிறது. இதற்காக ஒரு நபருக்கு ரூ.7 ஆயிரம் விமான டிக்கெட், 2 நாள் ரெயில் பயண டிக்கெட் மற்றும் இதர செலவுகள் என மொத்தம் ரூ. 1 லட்சத்து 91 ஆயிரம் செலவு செய்து உள்ளோம் என்றார்.
இதுகுறித்து 5-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் கூறுகையில், விளையாட்டாக தலைமை ஆசிரியரிடம் கூறினோம். உண்மையிலேயே அழைத்துச் செல்வதாக கூறியவுடன் ரொம்ப சந்தோசமாக இருந்தது. முதல் முறையாக விமானத்தில் பயணித்தது மகிழ்ச்சியாக இருந்தது என்றனர்.