search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேக்கு மரங்கள்"

    • கடம்பாடி ஊராட்சி பொதுமக்கள் வனத்துறை, மற்றும் மாமல்லபுரம் போலீசில் புகார் செய்தனர்.
    • போலீசார் தேக்குமரங்களை வெட்டி கடத்திய கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட மேலகுப்பம் பகுதியில் கடந்த 2006-ம் ஆண்டு ஊராட்சி சார்பில் தேக்கு, பனை, தென்னை, மாமரம் உள்ளிட்ட 1000-க்கும் மேற்பட்ட மரங்கள் வைத்து வளர்க்கப்பட்டது. இந்த மரங்கள் தற்போது நன்கு வளர்ந்த நிலையில் இருந்தன. இந்த மரங்கள் ஏராளமான மயில்கள் உள்ளிட்ட பறவைளுக்கு வாழ்விடமாகவும் இருந்தது. இந்த நிலையில் இங்கிருந்த சுமார் 500 தேக்கு மரங்களை நள்ளிரவில் மர்ம கும்பல் எந்திரத்தால் வெட்டி கடத்தி சென்று விட்டனர்.

    தற்போது அங்கு தேக்குமரக்கிளைகள் மட்டும் குவிந்து கிடக்கிறது. மேலும் அங்கிருந்த சுமார் 100 மயில்களும் மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கடம்பாடி ஊராட்சி பொதுமக்கள் வனத்துறை, மற்றும் மாமல்லபுரம் போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் தேக்குமரங்களை வெட்டி கடத்திய கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருக்கழுகுன்றம் தாசில்தார் ராதா உத்தரவின் பேரில் வருவாய் ஆய்வாளர் புஷ்ப ராஜ், கிராம நிர்வாக அதிகாரி நரேஷ் ஆகியோர் வெட்டப்பட்ட மரங்களை கணக்கெடுத்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, இப்பகுதியில் மனைப்பிரிவு விரிவாக்கம் செய்வதற்காக இந்த மரங்களை மர்ம நபர்கள் வேரோடு வெட்டி சாய்த்து உள்ளனர். அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கா விட்டால் மிகப்பெரிய மறியல் போராட்டம் நடத்துவோம் என்றனர்.

    ×