என் மலர்
நீங்கள் தேடியது "போலி பெண் டாக்டர் கைது"
- 10 வருடங்களுக்கும் மேலாக மருத்துவம் பார்த்து வந்ததும் தெரிந்தது.
- மருத்துவம் முறையாக படிக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.
மதுரை:
மதுரை அரசரடி எல்லீஸ் நகர் பகுதியில் எரோசா என்ற பெயரில் மருத்துவமனை கடந்த 10 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு டாக்டர் என்று கூறிக்கொண்டு சீதாலட்சுமி நகரை சேர்ந்த ஆரோக்கிய ராணி (வயது 56) என்பவர் பலருக்கும் குறைந்த விலையில் சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் மதுரை நாராயணபுரதத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் அந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு சிகிச்சை பெற்ற பின்னர் அவருக்கு கை, கால் நடுக்கம், தலைவலி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டது.
சிகிச்சையில் சந்தேகம் அடைந்த வழக்கறிஞர் தனக்கு மருத்துவம் பார்த்த ராணி என்பவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கடந்த 31-ந்தேதி மதுரை, உசிலம்பட்டி மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் செல்வராஜ் என்பவரிடம் புகார் மனு அளித்தார்.
அதன் அடிப்படையில் நேற்று டாக்டர் செல்வராஜ், திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை கண் மருத்துவ உதவியாளர் சந்திரன், திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை மருந்தாளுனர் சதீஷ், இணை இயக்குனர் நலப்பணிகள் அலுவலக உதவியாளர் சிவகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் அரசரடி பகுதியில் இயங்கி வந்த மருத்துவமனையில் திடீர் ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு ஆரோக்கிய ராணி நோயாளி களுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த இணை இயக்குநர் செல்வராஜ், ஆரோக்கிய ராணி மருத்துவம் படித்ததற்கான ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது அவர் மருத்துவம் முறையாக படிக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.
அத்துடன் அந்த மருத்துவமனையில் 5 படுக்கைகள் அமைக்கப்பட்டு அதில் சிலர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு தங்கி சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களை உடனடியாக வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். அந்த மருத்துவமனையில் 4 பேர் செவிலியர்களாகவும் வேலை பார்த்து வந்தனர்.
மேலும் உரிய மருத்துவ தகுதி எதுவும் இல்லாமல் பொதுமக்களுக்கு உயிர் இழப்பு ஏற்படும் வகையில் சிகிச்சை அளித்து வந்ததும் கண்டறியப்பட்டது.
ஆரோக்கிய ராணி 10-ம் வகுப்பு வரை படித்திருந்ததாகவும், நோயாளிகளுக்கு பல்வேறு சிகிச்சைகளை கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக அளித்த வந்ததும் தெரிந்தது.
இது குறித்து டாக்டர் செல்வராஜ் எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் ஆரோக்கிய ராணி மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலியாக மருத்துவம் பார்த்த ஆரோக்கிய ராணியையும் கைது செய்தனர். மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த பெண் கைதான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.