என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக"

    • வருகிற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்துவதற்கு அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சிகளின் வாக்குகள் சிதற விடாமல் இருப்பதற்காக கூட்டணி விசயத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
    • தமிழகத்தை பொறுத்தவரையில் இதுவரை இல்லாத அளவிற்கு மாறுபட்ட தேர்தல் களத்தை 2026 தேர்தல் சந்திக்க இருக்கிறது.

    சென்னை:

    தமிழக அரசியலில் வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அரசியல் வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள நடிகர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தீவிரமாக களம் இறங்கி உள்ளார். இதையொட்டி அவரது அதிரடி அரசியல் திட்டங்கள் பரபரப்பாகி வருகிறது.

    விக்கிரவாண்டியில் நடைபெற்ற கட்சி முதல் மாநாட்டில் ஆட்சியில் பங்கு மற்றும் ஊழல் மற்றும் மத்திய, மாநில அரசுகள் மீதும் அவர் பேசிய அதிரடி கருத்துகள் அரசியல் அரங்கையே அதிர வைத்தது.

    கடந்த தேர்தலில் அ.தி.மு.க.வுடன், பா.ம.க., பா.ஜ.க., த.மா.கா. கூட்டணியும், தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுடனும், தே.மு.தி.க., டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடனும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகள் தனித்தனியாகவும் போட்டியிட்டன. தேர்தலில் தி.மு.க. கூட்டணி 45.38 சதவீதமும், அ.தி.மு.க. கூட்டணி 39.72 சதவீதமும் பெற்ற நிலையில் 5.66 சதவீத வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க. ஆட்சியை கைப்பற்றியது.

    இந்நிலையில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் திடீரென விரிசல் ஏற்பட்டு கூட்டணி முறிவு ஏற்பட்டது. அடுத்ததாக பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., தே.மு.தி.க. உடனும், பா.ஜ.க., ஓ.பன்னீர் செல்வம், டி.டி.வி.தினகரன் கட்சியுடனும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தேர்தலில் தி.மு.க. கூட்டணி அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி சாதனை படைத்தது.

    எனவே வருகிற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்துவதற்கு அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சிகளின் வாக்குகள் சிதற விடாமல் இருப்பதற்காக கூட்டணி விசயத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. மேலும் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சியின் அரசியல் பார்வை விஜய் கட்சியை உன்னிப்பாக உற்று நோக்கி வந்தது.

    வருகிற தேர்தலில் விஜய் கட்சியுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்து விடும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனித்து போட்டியிடும் எண்ணத்தில் விஜய் உறுதியாக இருந்து வருகிறார். இதை உறுதிப்படுத்தும் வகையில் விஜய்யின் அரசியல் செயல்பாடு அமைந்து கொண்டு இருக்கிறது.

    இந்நிலையில் எதிர்பாராத வகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லிக்கு சென்று மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்தார். இந்த சம்பவம் தமிழக அரசியலில் திடீர் திருப்புமுனையாக அமைந்ததுடன் வருகிற தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இதைத் தொடர்ந்து வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி உருவாகி இருக்கிறது. எனவே தமிழகத்தை பொறுத்தவரையில் இதுவரை இல்லாத அளவிற்கு மாறுபட்ட தேர்தல் களத்தை 2026 தேர்தல் சந்திக்க இருக்கிறது.

    4 முனை போட்டி யாருக்கு சாதகமாக அமையும் என்பது அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பேசும் பொருளாக அமைந்து உள்ளது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணிகளுக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி கனியை பறிப்பதற்காக பிரபல அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை விஜய் தனது கட்சிக்கு அரசியல் ஆலோசகராக நியமித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • தி.மு.க.வில் கட்சி ரீதியாக 72 மாவட்டங்கள் உள்ளன. இதில் சில மாவட்டத்தில் 4 அல்லது 5 சட்டசபை தொகுதிகள் வரை உள்ளன.
    • அனேகமாக டிசம்பர் மாதத்திற்குள் அதற்கான நடவடிக்கைகளை தலைவர் மேற்கொள்வார் என்று கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியும் இப்போதே தேர்தலுக்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

    அந்த வகையில் தி.மு.க.வில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் மண்டல அளவில் நடத்தப்பட்டு வருகிறது. தேர்தல் சமயத்தில் பி.எல்.ஏ.-2 முகவர்கள் மூலமாகத்தான் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படும்.

    இதனால் தகுதியான கட்சி நிர்வாகிகளை பார்த்து அதில் நியமித்துள்ளனர். இவர்களை ஒன்றிய, நகர கழக செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் மாவட்டச் செயலாளர்கள் ஒருங்கிணைத்து வருகின்றன.

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

    இந்நிலையில் சில மாவட்டங்களில் கோஷ்டி பிரச்சினை காரணமாக ஒருங்கிணைந்து செயல்படாமல் சில நிர்வாகிகள் மனக்கசப்புடன் இருப்பதாக தலைமைக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

    இதனால் எந்தெந்த மாவட்டங்களில் பிரச்சினை அதிகம் உள்ளதோ அங்கு கட்சி நிர்வாகிகளிடையே சமரசம் ஏற்படுத்தும் நிகழ்வும் நடந்து வருகிறது. கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு இந்த சமரச முயற்சியை மேற்கொண்டு வருகிறார்.

    தற்போது பாராளுமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் அ.தி.மு.க.வில் 2 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் உள்ளதை போன்று தி.மு.க. விலும் அதே போன்று மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என்று கட்சி மேலிடத்தில் சில நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

    தற்போது தி.மு.க.வில் கட்சி ரீதியாக 72 மாவட்டங்கள் உள்ளன. இதில் சில மாவட்டத்தில் 4 அல்லது 5 சட்டசபை தொகுதிகள் வரை உள்ளன.

    தேர்தல் சமயத்தில் ஏதாவது பிரச்சினை என்றால் அந்த தொகுதிக்கு உடனடியாக செல்வதில் சுணக்கம் ஏற்படும் என்றும் இதை தவிர்க்க எல்லையை சுருக்கினால் பணிகள் வேகமாக நடைபெறும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக 2 தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர்களை நியமித்தால் அ.தி.மு.க.வுக்கு சரிசமமாக ஈடுகொடுக்க வசதியாக இருக்கும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக ஏற்கனவே இப்பிரச்சினை தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டாலும் அவர் அதை விரும்பவில்லை. அந்த ஆலோசனையை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியதாக தெரிகிறது.

    இந்நிலையில் இப்போது மாவட்டங்களை பிரிக்கும் கோரிக்கை மீண்டும் வலியுறுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அனேகமாக டிசம்பர் மாதத்திற்குள் அதற்கான நடவடிக்கைகளை தலைவர் மேற்கொள்வார் என்று கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

    • மாணவியும் தெரிந்தவர் தானே என வீட்டிற்குள் சென்றார்.
    • புகாரின் பேரில் போலீசார் 14 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற முன்னாள் தி.மு.க. கவுன்சிலர் நாகராஜை கைது செய்தனர்.

    கோவை:

    கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    கடந்த 11-ந் தேதி மாணவி பள்ளிக்கு சென்று விட்டு அவரது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த பகுதியில் வசிக்கும் தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் நாகராஜ் (வயது 64) மாணவியிடம் நைசாக பேச்சு கொடுத்து அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார்.

    மாணவியும் தெரிந்தவர் தானே என வீட்டிற்குள் சென்றார்.

    அங்கு வைத்து மாணவியிடம் நாகராஜ் தவறாக நடக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அங்கு இருந்து தப்பி வெளியே ஓடி வந்தார்.

    பின்னர் நடந்த சம்பவங்களை பெற்றோரிடம் கூறி மாணவி கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து மத்திய அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் 14 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற முன்னாள் தி.மு.க. கவுன்சிலர் நாகராஜை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்ததி ஜெயிலில் அடைத்தனர்.

    • கடந்த முறை திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
    • கரூர், திருச்சி, விருதுநகர் போன்ற சில தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுவதில் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் எல்லா கட்சிகளும் கூட்டணிகள் அமைப்பது, தொகுதிகளை தேர்வு செய்வது போன்ற வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன.

    தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்த கட்சிகள் தொகுதி பங்கீட்டை விரைவில் முடிக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணி கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

    இதையடுத்து அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்களையும் அழைத்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே கருத்து கேட்டார்.

    தமிழகத்தின் சார்பில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, பொறுப்பாளர் அஜய்குமார், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த ஆலோசனையின்போது கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட தொகுதிகள், வெற்றி பெற்ற தொகுதிகள், இந்த தேர்தலில் கேட்க வேண்டிய தொகுதிகள் எண்ணிக்கை, எந்தெந்த தொகுதிகளை கேட்பது, வெற்றி வாய்ப்புகள் பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    கடந்த முறை திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

    இதில் தேனியை தவிர அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் வென்றது. எனவே கடந்த முறை 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த முறை கூடுதலாக தொகுதிகள் கேட்க வேண்டும். கூட்டணி கட்சிகளுக்காக விட்டுக்கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும் 9 தொகுதிகளில் குறைய கூடாது என்று தெரிவித்து உள்ளார்கள்.

    அதே நேரம் கடந்த முறை காங்கிரஸ் வென்ற சில தொகுதிகளில் போட்டியிட தி.மு.க.வும், ஒரு சில கூட்டணி கட்சிகளும் விரும்புவதாக கூறப்படுகிறது.

    குறிப்பாக கரூர், திருச்சி, விருதுநகர் போன்ற சில தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுவதில் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் காங்கிரசும் சில தொகுதிகளை விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை வரலாம் என்று கருதப்படுகிறது. அப்படியானால் மாற்று தொகுதிகளாக எந்த தொகுதியை விட்டுக் கொடுப்பது? அதற்கு பதிலாக எந்த தொகுதியை கேட்பது? என்ற குழப்பம் வரும்.

    கடைசி நேரத்தில் சம்பந்தம் இல்லாமல் ஏதாவது தொகுதிகளை வாங்க வேண்டிய சூழ்நிலையை தவிர்ப்பதற்காக காங்கிரசுக்கு சாதகமான தொகுதிகளை கண்டறிந்து அந்த பட்டியலையும் தருமாறு காங்கிரஸ் மேலிடம் கேட்டு உள்ளது.

    இதையடுத்து புதிதாக 9 தொகுதிகள் பட்டியலை காங்கிரஸ் தயாரித்துள்ளது. அந்த பட்டியல் வருமாறு:-

    திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ஈரோடு.

    இந்த தொகுதிகள் பட்டியலும் மேலிடத்தில் கொடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த தொகுதிகளை தேர்வு செய்வதற்கு காரணம் தென்காசியில் 9 முறையும் மயிலாடுதுறையில் 7 முறையும் காங்கிரஸ் வென்றுள்ளது. தஞ்சாவூரில் 4 முறை வெற்றி பெற்றுள்ளது. ராமநாதபுரத்தில் 3 முறை வெற்றி பெற்றுள்ளது. பெரம்பலூர் மற்றும் நெல்லையில் தலா 2 முறையும் காங்கிரஸ் வென்று உள்ளது.

    எனவே வெற்றி பெற முடியும் என்று நம்பப்படும் தொகுதிகளை காங்கிரஸ் தேர்வு செய்துள்ளது.

    இதற்கிடையில் தி.மு.க. தரப்பிலும் ஒரு பட்டியல் காங்கிரஸ் மேலிடத்திடம் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

    அதில் தி.மு.க. போட்டியிட விரும்பும் தொகுதிகள் மற்றும் காங்கிரஸ் தவிர இதர கூட்டணி கட்சிகள் விரும்பும் தொகுதிகள், அந்த தொகுதிகளில் கட்சிகளுக்கான வெற்றி வாய்ப்புகள் பற்றியும் குறிப்பிட்டு உள்ளன. இந்த பட்டியலில் 30 தொகுதிகளுக்கு மேல் இடம் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த தொகுதிகளை அடிப்படையாக வைத்து காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தி.மு.க. மேலிட தலைவர்களுடன் விரைவில் பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளார்கள்.

    • தென்காசியில் தனது முதல் கட்ட பிரசாரத்தை தொடங்கும் கி.வீரமணி, அன்று இரவு 8 மணிக்கு திருநெல்வேலியில் பிரசாரம் செய்கிறார்.
    • 16-ந்தேதி அறந்தாங்கி, பேராவூரணியிலும் பிரசாரம் செய்யும் கி.வீரமணி, 17-ந்தேதி தஞ்சாவூரில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

    சென்னை:

    திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார். இவர் தனது பிரசாரத்தை வருகிற 2-ந்தேதி தென்காசியில் தொடங்கி ஏப்ரல் 17-ந்தேதி தஞ்சாவூரில் நிறைவு செய்கிறார். அவரது சுற்றுப்பயண திட்டமும் தயாராகி உள்ளது.

    வருகிற 2-ந்தேதி மாலை 6 மணிக்கு தென்காசியில் தனது முதல் கட்ட பிரசாரத்தை தொடங்கும் அவர், அன்று இரவு 8 மணிக்கு திருநெல்வேலியில் பிரசாரம் செய்கிறார். 3-ந்தேதி தூத்துக்குடி, விருதுநகரிலும், 4-ந்தேதி ஆண்டிப்பட்டி, மதுரையிலும், 5-ந்தேதி பழனி, உடுமலைப்பேட்டையிலும், 6-ந்தேதி கோவை, மேட்டுப்பாளையத்திலும், 7-ந்தேதி சத்தியமங்கலம், கோபி செட்டிப்பாளையத்திலும், 8-ந்தேதி சேலம், அரூரிலும் முதல்கட்ட பிரசாரத்தை மேற்கொள்கிறார்.

    பின்னர் கி.வீரமணி தனது 2-வது கட்ட பிரசாரத்தை வருகிற 10-ந்தேதி மாலை 6 மணிக்கு அரக்கோணத்தில் தொடங்கும் அவர் அன்று இரவு 8 மணிக்கு திருவள்ளூரில் பிரசாரம் செய்கிறார். 11-ந்தேதி அம்பத்தூர், வடசென்னையிலும், 12-ந்தேதி திண்டிவனம், தியாக துருவத்திலும், 13-ந்தேதி ஜெயங்கொண்டம், பெரம்பலூரிலும், 14-ந்தேதி துறையூர், திருச்சியிலும், 15-ந்தேதி மயிலாடுதுறை, நாகப்பட்டினத்திலும், 16-ந்தேதி அறந்தாங்கி, பேராவூரணியிலும் பிரசாரம் செய்யும் அவர், 17-ந்தேதி தஞ்சாவூரில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

    • தனது சூழ்ச்சிகளை மறைக்க அதிமுக மீது வீண் பழி போட்டு தப்பிக்க நினைப்பது அறிவார்ந்த தமிழ்நாட்டு மக்களிடம் ஒருபோதும் எடுபடாது.
    • தமிழ்நாட்டை பொறுத்தவரை, மக்கள் மன நிலையை பிரதிபலிப்பதும், வெல்வதும் அதிமுக-வின் கணக்கு மட்டுமே.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    அண்ணா அறிவாலயத்தில் திமுக செயற்குழு நடந்தாலும் மு.க.ஸ்டாலின் உட்பட அனைத்து திமுகவினரின் எண்ணம் முழுவதும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையிலேயே இருந்துள்ளது.

    ஆளுங்கட்சியாக இருக்கும் போதே முழு எண்ணமும் அதிமுக குறித்தே இருக்கின்றது, இதுவே அதிமுக ஆட்சி வரப்போகிறது என்ற பயம் திமுகவிற்கு இப்போதே வந்துவிட்டதற்கான வெளிப்பாடு.

    இக்கூட்டத்தில் பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, டங்ஸ்டன் விவகாரம் குறித்து விமர்சனம் செய்துள்ளார்.

    மதுரை , மேலூர் டங்ஸ்டன் சுரங்கத்திற்கான ஏலம் பிப்ரவரி 2024ல் அறிவிக்கப்பட்டது. அப்போது ஏன் எந்த எதிர்ப்பையும் இந்த திமுக அரசு பதிவு செய்யவில்லை?

    ஏலம் அறிவிக்கப்பட்டது முதல் 07.11.2024 அன்று ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு ஏலம் இறுதி செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகும் வரை, 10 மாத காலம் வாயை இறுக்க மூடிக்கொண்டு ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்த திமுக அரசு,

    மக்கள் கொதித்து எழுந்து போராட்டம் நடத்தியதன் விளைவாக , வேறுவழியின்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமருக்கு சுரங்க அனுமதியை ரத்து செய்யுமாறு 29.11.2024 அன்று கடிதம் எழுதியுள்ளார்,

    அந்த கடிதம் கிடைக்க பெற்றவுடன் மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் தனது எக்ஸ் தள பதிவு மூலமாக,

    "இதுவரை மாநில அரசிடம் எந்தவித எதிர்ப்போ, ஏலத்தை கைவிடுமாறு கோரிக்கையோ எங்களுக்கு வரவில்லை" என்ற பதிலை அதே நாளில் பூமராங் போன்று திருப்பி அனுப்பியதை பற்றி இன்று வரை திமுக பேச மறுப்பது ஏன்?

    விடியா திமுக அரசின் நீர்வளத்துறை அமைச்சர் மத்திய சுரங்கத்துறை அமைச்சருக்கு அக்டோபர் 3 2023 அன்று எழுதிய கடிதத்தில் , டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை எதிர்க்காமல், மாறாக சுரங்கத்தை மாநில அரசே ஏற்று நடத்தும் வகையில் கோரி கடிதம் எழுதியது ஏன்? இது மதுரை, மேலூர் மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகம் இல்லையா?

    திமுக பங்கு வகித்த முந்தைய UPA ஆட்சிக்காலத்தில் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு உரிமங்களை வழங்கி, கனிம வளங்கள் முறையற்ற வகையில் இயற்கைக்கு மாறாக சுரண்டபட்டதால், அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டது, ஆதலால் தற்போதைய NDA அரசு கொண்டு வந்த கனிமவள திருத்த சட்ட விவாதத்தின் போது கனிமங்களுக்கான ஏலத்தை நடத்துவதுதன் மூலமாக முறைகேடுகளை தடுக்கவும், மத்திய அரசிற்கு வருவாய் கிடைப்பதற்காகவும் மட்டுமே தம்பிதுரை எம்.பி. தனது கருத்தை தெரிவித்தார்.

    மேலும், என்.எல்.சி. இந்தியா நிறுவனம் நெய்வேலி சுற்றியுள்ள கிராமங்களில் சுரங்க விரிவாக்கத்திற்கான நிலகையெடுப்பை மேற்கொள்வது தமிழ்நாட்டு விவசாயிகளை பாதிப்பது குறித்து தெளிவாக பேசியுள்ளார். இவை அனைத்தும் பாராளுமன்றப் பதிவில் உள்ள உண்மைகளாக இருக்க, திருச்சி சிவா திரித்து பேசுவது ஏன்?

    இதே மசோதா மாநிலங்களவையில் விவாதத்திற்கு வந்தபோது, எந்த எதிர்ப்பையும் திமுக எம்.பி.-க்கள் தெரிவிக்காமல் மவுனமாக கடந்தது ஏன்? திருச்சி சிவா இதற்கான விளக்கத்தை அளிப்பாரா?

    கனிமவள திருத்த சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவருடைய அருமை மைந்தர் உதயநிதி ஸ்டாலினும், பிரதமர் மோடியை சந்தித்த போதெல்லாம் மதுரை டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக பேசாதது ஏன்?

    இதுதான் நீங்கள் தமிழ்நாட்டின் உரிமைகளை காக்கும் லட்சணமா?

    இப்படி டங்ஸ்டன் விவகாரத்தில், முழுக்க முழுக்க தமிழ்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக மதுரை மேலூர் மக்களுக்கு எதிராகவே செயல்பட்ட திமுக அரசு, தனது சூழ்ச்சிகளை மறைக்க அதிமுக மீது வீண் பழி போட்டு தப்பிக்க நினைப்பது அறிவார்ந்த தமிழ்நாட்டு மக்களிடம் ஒருபோதும் எடுபடாது.

    திருச்சி சிவா அவர்களே, எங்களுக்கு கணக்கு பாடம் எடுக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதை உங்கள் தலைவரிடம் சொல்லவும். 87+8+1=107 என்ற அரிய Theory மூலம் நோபல் ஆராய்ச்சியாளர்களையே திகைக்கச் செய்த "கணக்குமாமணி" ஸ்டாலின், என்பதை தமிழ்நாடு நன்கறியும்.

    மேலும், மக்கள் பிரச்சனைகளில் கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் ஸ்டாலினின் திமுக அரசை, மக்களின் உண்மையான விடியல் ஒளியாக, குரல் ஒலியாக இருந்து ஒவ்வொரு முறையும் தட்டி எழுப்பி, ஆளுங்கட்சியின் பணிகளை செய்யவைப்பதே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் அவர்கள் தான் என்ற உண்மையை நீங்கள் உணரவில்லை என்றாலும் கூட , தமிழ்நாட்டின் மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர் .

    கருணாநிதி போட்ட தப்புக்கணக்குகள் தவிடுபொடியானதே தமிழ்நாட்டு அரசியல் வரலாறு. தமிழ்நாட்டை பொறுத்தவரை, மக்கள் மன நிலையை பிரதிபலிப்பதும், வெல்வதும் அதிமுக-வின் கணக்கு மட்டுமே.

    இந்நிலையில், எடப்பாடியார் போட்டு இருக்கும் ஒரே கணக்கு, மக்கள் கணக்கு! மக்களின் எண்ணக் கணக்கை அறிந்த ஒரே இயக்கமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 2026ல் அரியணை ஏறும் நாளில் திமுகவுக்கு இது புரியும்!

    தூங்குபவனை எழுப்பி விடலாம் , ஆனால் கும்பகர்ணன் போல தூங்குபவனை எப்படி எழுப்பவது?

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    • இலட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, இந்த விஷயத்தில் பிரதமர் தலையிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.
    • நிதி வழங்கும் விவகாரங்களில் ஒன்றிய அரசு அழுத்தம் தரும் இத்தகைய முயற்சி, கூட்டாட்சித் தத்துவத்தை அப்பட்டமாக மீறும் செயலாகும்.

    சென்னை :

    தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையிலும், இலட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதியும், தமிழ்நாட்டிற்கு 'சமக்ர சிக்ஷா' திட்டத்தின்கீழ் வரவேண்டிய நிதியினை ஒன்றிய அரசு உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில், "தேசிய கல்விக் கொள்கை-2020-ஐ முழுமையாக அமல்படுத்தி, மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை, தமிழ்நாட்டிற்கான 'சமக்ர சிக்ஷா' (Samagra Shiksha) திட்டத்தின்கீழ் நிதி விடுவிக்கப்பட மாட்டாது" என்று ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் அவர்கள் சமீபத்தில் தெரிவித்திருப்பது குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ள தமிழ்நாடு முதலமைச்சர், இது தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெருத்த கவலையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    தமிழ்நாட்டின் கல்வி மற்றும் சமூகச் சூழலில், இருமொழிக் கொள்கையானது நீண்ட காலமாக ஆழமாக வேரூன்றியுள்ளதாகவும், அதனைப் பின்பற்றுவதில் தமிழ்நாடு எப்பொழுதும் உறுதியாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், அலுவல் மொழிகள் விதி, 1976-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, "அலுவல் மொழிச் சட்டம், 1963"-ஐச் செயல்படுத்துவதில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

    நவோதயா வித்யாலயா போன்ற ஒன்றிய அரசுப் பள்ளிகள் மும்மொழிக் கொள்கையைப் பின்பற்றுவதால் தான், தமிழ்நாட்டில் அவை நிறுவப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இந்த இரு மொழிக் கொள்கை மற்றும் சமூக நீதியின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட முற்போக்குக் கொள்கைகளின் காரணமாக, கடந்த அரை நூற்றாண்டில் தமிழ்நாடு அடைந்துள்ள மகத்தான முன்னேற்றங்கள் மற்றும் அதற்கு வித்திடும் முன்முயற்சிகளைக் காண முடிகிறது எனவும், எங்கள் இருமொழிக் கொள்கையில் எந்தவொரு மாற்றமும் கொண்டுவர உத்தேசிப்பது தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் பெரிய அளவில் பயனளிக்காது என்பதை மேலே உள்ளவை தெளிவாக எடுத்துக்காட்டுவதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார்.

    இதுதவிர, தேசியக் கல்விக் கொள்கை-2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள சில விதிகள் குறித்து 27.08.2024 நாளிட்ட தனது கடிதத்தின் மூலம் தமிழ்நாடு அரசின் ஆழ்ந்த கவலைகள் முறையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதோடு, 27.09.2024 அன்று தனிப்பட்ட முறையில் விரிவான கோரிக்கை மனுவாக இந்தியப் பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ள முதலமைச்சர், இருப்பினும், பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும், "சமக்ரா சிக்ஷா" திட்டத்தின்கீழ் வழங்கப்பட வேண்டிய நிதி ஒன்றிய அரசால் வழங்கப்படாமல் உள்ளதாக கவலையோடு தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    ஒன்றிய அரசின் இரண்டு வெவ்வேறு திட்டங்களான "சமக்ர சிக்ஷா" திட்டத்தையும், தேசிய கல்விக் கொள்கையைப் பிரதிபலிக்கும் பி.எம்.ஸ்ரீ. (PM SHRI) திட்டத்தையும் ஒன்றாகப் பொருத்திப் பார்ப்பது என்பது அடிப்படையில் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்பதைத் தான் மீண்டும் வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், தற்போது ஒரு மாநிலத்தில், அங்குள்ள காலச் சூழலுக்கேற்ப பின்பற்றப்பட்டு வரும் கொள்கைகளுக்கு எதிராக, அந்த மாநிலத்தைக் கட்டாயப்படுத்துவதற்கு, நிதி வழங்கும் விவகாரங்களில் ஒன்றிய அரசு அழுத்தம் தரும் இத்தகைய முயற்சி, கூட்டாட்சித் தத்துவத்தை அப்பட்டமாக மீறும் செயலாகும் என்று தெரிவித்துள்ளதோடு, குறிப்பிட்ட தேவைகளின் அடிப்படையில் தங்களது கல்விக் கொள்கைகளை வடிவமைக்கும் மாநிலங்களின் உரிமைகளை பெருமளவில் பாதிக்கும் என்றும் கவலையோடு சுட்டிக்காட்டியுள்ளார்.

    தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டத்தின்கீழ் நிதி விடுவிக்கப்படாததால், ஆசிரியர்கள் சம்பளம், மாணவர்களுக்கான நலத் திட்டங்களை உள்ளடக்கிய கல்வி முன்னெடுப்பு முயற்சிகள், கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் பயிலும் வறிய நிலையில் வாழும் மாணவர்களுக்கான கல்வித் தொகையைச் திருப்பிச் செலுத்துதல் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கான போக்குவரத்து போன்றவற்றிற்கான பல முக்கிய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில், இலட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, இந்த விஷயத்தில் பிரதமர் தலையிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.

    இந்தத் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு நிதி விடுவிக்கப்படாமல் உள்ளதால் ஏற்பட்டுள்ள வருந்தத்தக்க சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தேசிய கல்விக் கொள்கை-2020-ஐ செயல்படுத்துவதோடு 'சமக்ர சிக்ஷா' திட்டத்தைப் பொருத்திப் பார்க்காமல், 2024-25 ஆம் நிதியாண்டில் இந்தத் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ரூ.2,152 கோடி நிதியினை உடனடியாக விடுவிக்க பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இப்பொருண்மையின் தீவிரத்தை உணர்ந்து, தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

    ×