என் மலர்
நீங்கள் தேடியது "தெலுங்கானா"
- ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் தலா ரூ.100 கோடி வீதம் பேரம் பேசியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.
- பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு மாநில கட்சிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்திரசேகர ராவ் விமர்சனம்
திருப்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் டி.ஆர்.எஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களான பைலட் ரோகித் ரெட்டி, ரேகா காந்தாராவ், பால ராஜு, ஹர்ஷவர்த்தன் ஆகியோரை கடந்த வாரம் மொய்னாபாத் அஜீஸ் நகரில் உள்ள பண்ணை வீட்டில் டெல்லியைச் சேர்ந்த ராமச்சந்திர பாரதி, ஐதராபாதத்தை சேர்ந்த நந்தகுமார், திருப்பதியை சேர்ந்த சின்மலயா ஜி ஆகியோர் சந்தித்ததாகவும், அப்போது டிஆர்எஸ் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்தால் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் தலா ரூ.100 கோடி வீதம் ரூ.400 கோடி பேரம் பேசியதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த சைபராபாத் போலீசார் எம்.எல்.ஏ.க்களுடன் பேரம் பேசிக்கொண்டு இருந்த ராமச்சந்திர பாலாஜி, சின்மையாஜி நந்தகுமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
மேலும் பண்ணை வீட்டில் எம்.எல்.ஏக்களுடன் நடந்த சந்திப்புக்கு ஒரு வாரம் முன்னதாக எம்.எல்.ஏ பைலட் ரோகித் ரெட்டி, ராமச்சந்திர பாரதி ஆகியோரை இடைத்தரகர் நந்தகுமார் கான்பரன்ஸ் மூலம் போனில் இணைத்து உரையாடிய ஆடியோ வெளியாகி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு இடையே சைபராபாத் போலீசாரால் கைது செய்யப்பட்ட 3 பேரும் சைபராபாத் லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பணம் கைமாறியதற்கான ஆதாரம் இல்லாததால் 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இதனை எதிர்த்து போலீசார் ஐதராபாத் ஐகோர்ட்டில் அவசர வழக்கு தொடுத்தனர். அப்போது நீதிபதி 3 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில் எம்.எல்.ஏ.க்களுடன் பேரம் பேசிய 3 மணி நேர வீடியோ ஆதாரத்தை முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வெளியிட்டார். அதை உச்சநீதிமன்ற நீதிபதி மற்றும் ஐதராபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு அனுப்பி வைத்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களுடன், பா.ஜ.க சார்பில் பேரம் பேசிய 3 மணி நேர வீடியோ ஆதாரம் சிக்கி உள்ளது. அந்த வீடியோவை பார்த்தால் இந்த நாடு எப்படி உள்ளது.எங்கே சென்று கொண்டு இருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாக புரியும்.
இவர்கள் ஆட்சியில் அநியாயம் நடக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு மாநில கட்சிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. அவர்களால் நானும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறேன்.
ஆந்திரா, தெலுங்கானா, டெல்லி, ராஜஸ்தான் முதலமைச்சர்களை மாற்ற பா.ஜ.க முயற்சி செய்து வருகிறது. இந்த நாட்டை பாஜக சர்வ நாசம் செய்ய முயற்சி செய்து வருகிறது.இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ரூபாய் நோட்டின் மதிப்பு குறைந்து விட்டது. இந்த வீடியோ ஆதாரம் குறித்து பெரிய அளவில் விசாரணை நடத்த வேண்டும்.
குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இந்த 3 மணி நேர வீடியோவை சிறிய அளவில் எடிட் செய்து விரைவில் அனைத்து மாநில ஐகோர்ட் நீதிபதிகள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம், வனபர்த்தி மாவட்டம், லஷ்மி பள்ளியை சேர்ந்தவர் ஸ்ரீதர் ரெட்டி (வயது 55). இவர் சந்திரசேகர ராவின் பி.ஆர். எஸ் கட்சி தலைவராக இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஸ்ரீதர் ரெட்டி வீட்டிற்கு வெளியே படுத்து தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் ஸ்ரீதர் ரெட்டியை கோடாரியால் சரமாரியாக வெட்டினர்.
இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து ஸ்ரீதர் ரெட்டி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ஸ்ரீதர் ரெட்டியின் மகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஸ்ரீதர் ரெட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தந்தை கொலை செய்யப்பட்டதற்கு உள்ளூர் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தான் காரணம் என குற்றம் சாட்டினர். ஆனால் குற்றச்சாட்டிற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விசாரணையில் பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்தது தெரிய வந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து நித்யாவை கைது செய்தனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் நித்யா (வயது 30). பட்டதாரி வாலிபரான இவர் ஆடம்பரமான வாழ்க்கை வாழ முடிவு செய்தார். அதன்படி தனது தலையில் முடி இல்லாததால் விக்கு வைத்துக் கொண்டார். ஆடம்பரமான விலை உயர்ந்த ஆடைகளை உடுத்திக் கொண்டு சினிமா நடிகர் நடிகைகள் அரசியல் தலைவர்கள் மற்றும் வணிக பிரபலங்களுடன் செல்பி போட்டோ எடுத்து போல மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
திருமண ஆன்லைன் வலைதளங்களில் இவரது படங்களை பார்த்த இளம் பெண்கள் பலரும் இவரை தொடர்பு கொண்டனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட நித்யா இளம் பெண்களை காபி ஷாப் மற்றும் ஓட்டல்களுக்கு அழைத்துச் சென்றார். பின்னர் இளம் பெண்களின் அனுதாபத்தை பெறுவதற்காக தனது கையில் உள்ள வெட்டு காயங்களை காண்பித்தார்.
இளம் பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவர்களது செல்போன் எண்களை வாங்கி நீண்ட நேரம் பேசி மயக்கினார். வாட்ஸ் அப்பில் பெண்களை கவரக்கூடிய வகையில் தகவல்களை அனுப்பினார்.
இதனை உண்மை என நம்பிய இளம் பெண்கள் நித்யாவை திருமணம் செய்து கொள்ள விருப்பமுள்ளதாக அவர்களது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து இளம்பெண்களை ஓட்டலுக்கு அழைத்து சென்று அவர்களுக்கு போதை மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து பலாத்காரம் செய்துள்ளார். அப்போது தனது செல்போனில் இளம்பெண்களை நிர்வாண வீடியோ எடுத்துள்ளார் .
ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்வதாக இளம் பெண்களை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்து வந்துள்ளார். நித்யாவிடம் சிக்கிய இளம் பெண் ஒருவர் தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இளம் பெண்ணின் பெற்றோர் இதுகுறித்து கச்சி பவுலி போலீசில் புகார் செய்தனர்.
விசாரணையில் பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்தது தெரிய வந்தது. மேலும் அவரது செல்போனை ஆய்வு செய்தபோது ஏராளமான இளம் பெண்களின் ஆபாச வீடியோ இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். நித்யா மீது இதுவரை 2 பெண்கள் புகார் செய்துள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து நித்யாவை கைது செய்தனர்.
- 300 மாணவிகளின் ஆபாச படம் பதிவு.
- கல்லூரி நிர்வாகம் இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயற்சி செய்கிறது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் மேட்சல் நகரப் பகுதியில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் உள்ள விடுதியில் மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.
விடுதியில் உள்ள கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டு மாணவிகளின் ஆபாச படம் பதிவு செய்ததாக தகவல் வெளியானது.
இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த போலீசார் கல்லூரிக்கு வந்து மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கடந்த 3 மாதங்களில் விடுதி கழிவறையில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டு 300 ஆபாச வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் விடுதி ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளது.
கல்லூரி நிர்வாகம் இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயற்சி செய்கிறது. பிரச்சனை வெளியே போனால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டி வருகின்றனர்.
ஆபாச படங்களை கண்டறிந்து அவற்றை உடனடியாக அழிக்க வேண்டும். இதற்கு உடந்தையாக இருந்தவர்கள், காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவேசமாக கூறினர்.
போலீசார் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். இது தொடர்பாக கல்லூரியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொதுமக்களிடையே தேசப்பற்று ஏற்படுத்தும் விதமாக தேசிய கொடியை ஏந்தி சென்றதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
- குடியரசு தினத்தை முன்னிட்டு 300 அடி நீளம் உள்ள தேசிய கொடியை உருவாக்கினர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம், கொனிஜார்லா அடுத்த தணிகெல்லாவில் உள்ள பள்ளியில் பெண் குழந்தைகள் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு 300 அடி நீளம் உள்ள தேசிய கொடியை உருவாக்கினர்.
நேற்று மாணவ மாணவிகள் சுதந்திர போராட்ட வீரர்கள் போல் வேடமணிந்து வந்து சாலையில் 300 அடி நீளம் உள்ள தேசிய கொடியை ஏந்தி தேசபக்தி பாடல்களை பாடியபடி சாலைகளில் ஊர்வலமாக சென்றனர்.
பொதுமக்களிடையே தேசப்பற்று ஏற்படுத்தும் விதமாக தேசிய கொடியை ஏந்தி சென்றதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
- தாத்தா கணக்கு கேட்ட போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து கீர்த்தி தேஜாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் அடுத்த பேகம் பேட்டையை சேர்ந்தவர் சந்திரசேகர ஜனார்த்தன் ராவ் (வயது 48). தொழிலதிபரான இவருக்கு படஞ்சேரு, பாலா நகர் பகுதிகளில் பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளன.
இவரது மகள் சரோஜினி தேவி. இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனது மகன் கீர்த்தி தேஜாவுடன் (29) தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.
கீர்த்தி தேஜா தனது தாத்தாவிடம் அடிக்கடி பணத்தை வாங்கி ஆடம்பர செலவு செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது தாத்தாவிடம் ரூ.4 கோடி வாங்கினார்.
தாத்தாவிடம் இருந்து வாங்கிய பணத்தை நண்பர்களுடன் சேர்ந்து செலவழித்தார். இது குறித்து அவரது தாத்தா கணக்கு கேட்ட போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் கீர்த்தி தேஜா நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு மது போதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது தனது தாய்க்கு சேர வேண்டிய சொத்துக்களை பிரித்து தர வேண்டுமென தாத்தாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதற்கு சந்திரசேகர ஜனார்த்தன் ராவ் ஏற்கனவே தன்னிடம் வாங்கிய கோடிக்கணக்கான பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்து விட்டாய். சொத்துக்களை பிரித்து கொடுத்தால் அதையும் செலவு செய்து விடுவாய் என கூறி மறுப்பு தெரிவித்தார்.
இதில் ஆத்திரம் அடைந்த கீர்த்தி தேஜா தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தாத்தாவின் வயிற்றில் சரமாரியாக குத்தினார். இதில் வலி தாங்காமல் ஜனார்த்தன் ராவ் கதறி துடித்தார்.
தந்தையின் அலரல் சத்தம் கேட்டு ஓடி வந்த சரோஜினி தேவி மகனை தடுத்தார். ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த கீர்த்தி தேஜா தாயாரையும் கத்தியால் குத்தினார். ரத்த வெள்ளத்தில் துடி துடித்த சந்திரசேகர ஜனார்த்தன் ராவ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
அக்கம் பக்கத்தினர் இது குறித்து பஞ்சகுடா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சரோஜினி தேவியை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சந்திரசேகர ஜனார்த்தன் ராவ் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கீர்த்தி தேஜாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். சொத்தை பிரித்து தர மறுத்த தாத்தாவை கொலை செய்து, தடுக்க வந்த தாயையும் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- காதல் விவகாரம் குறித்து இருவரும் பெற்றோர்களுக்கு தெரிவித்தனர்
- விழாவில் மணமகன் மற்றும் மணமகளின் உறவினர்கள் நண்பர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தெலுங்கானா மாநிலம்,மேட்சல் மாவட்டம்,மோட்கூர் அடுத்த தச்சரம் பகுதியை சேர்ந்தவர் தர்மைய்யா, லலிதா தம்பதி. இவர்களது மகன் சந்தீப் குமார்.
இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மேல் படிப்பு படிப்பதற்காக அமெரிக்கா சென்றார். அங்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் முதுகலை பட்டப்படிப்பு முடித்துவிட்டு டெக்ஸாசில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார்.
அதே நிறுவனத்தில் அவனி எலெனா என்பவர் மேலாளராக வேலை செய்து வருகிறார். சந்தீப் குமார் அவனி எலெனா இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். இவர்களது நட்பு பின்னர் காதலாக மாறியது.
தங்களது காதல் விவகாரம் குறித்து இருவரும் பெற்றோர்களுக்கு தெரிவித்தனர். சந்தீப் குமார் காதலுக்கு அவரது பெற்றோர் முதலில் எதிர்ப்பு தெரிவித்தனர். மகனின் எதிர்காலத்தை கருதி பின்னர் சம்மதம் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் மாலை திருமண வரவேற்ப நிகழ்ச்சி மல்காஜ் கிரி அடுத்த காட் கேசரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வெகு விமர்சையாக நடந்தது. விழாவில் மணமகன் மற்றும் மணமகளின் உறவினர்கள் நண்பர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து வேத மந்திரங்கள் முழங்க இந்து முறைப்படி சந்தீப் குமார், மணமகள் கழுத்தில் தாலி கட்டினார். மணமக்களுக்கு ஏராளமானோர் பரிசுப் பொருட்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
- சாய் சைதன்யாவின் பெற்றோர் மற்றும் ரியாவின் பெற்றோர் காதல் திருமணத்திற்கு ஒப்புதல் அளித்தனர்.
- வீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களுக்கு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், கே.சமுத்திரத்தை சேர்ந்தவர் ராஜேஷ் யாதவ். இவரது மகன் சாய் சைதன்யா. இவர் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மேல் படிப்பு படிப்பதற்காக ஆஸ்திரேலியா நாட்டிற்குச் சென்றார்.
பட்டப்படிப்பு முடித்து பின்னர் அங்குள்ள நிறுவனம் ஒன்றில் மேலாளராக வேலை செய்து வந்தார்.
அப்போது தென் அமெரிக்கா நாடான கொலம்பியாவை சேர்ந்த ரியா என்பவருடன் சாய் சைதன்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சாய் சைதன்யாவின் பெற்றோர் மற்றும் ரியாவின் பெற்றோர் காதல் திருமணத்திற்கு ஒப்புதல் அளித்தனர்.
அதன்படி நேற்று அமினாபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் சாய் சைதன்யா மற்றும் ரியா திருமணம் இந்து முறைப்படி பிரமாண்டமான முறையில் நடந்தது.
இரு வீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களுக்கு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.