என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "கார்-கண்ணாடி உடைப்பு"
- காரை அரிவாளால் வெட்டியும், வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தும் ரகளை.
- முக்கூடல் போலீசார் 3 பேரையும் தேடி வருகின்றனர்.
முக்கூடல்:
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள வடக்கு அரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் செல்வ குமரேசன் (வயது 38).
இவர் நக்சல் தடுப்பு பிரிவில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று வேலை விஷயமாக மதுரையில் உள்ள நக்சல் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் வடக்கு அரியநாயகிபுரம் ஊருக்குள் சென்றது. அங்கிருந்த செல்வகுமரேசன் வீட்டுக்குள் புகுந்த அந்த கும்பல் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த அவரது காரை அரிவாளால் வெட்டியும், வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தும் ரகளையில் ஈடுபட்டது.
பின்னர் அரிவாளை வீட்டின் கதவு மேல் வீசிவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக வீட்டில் இருந்த செல்வ குமரேசன் குடும்பத்தினர், மதுரைக்கு சென்றிருந்த செல்வகுமரேசனிடம் செல்போனில் தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக முக்கூடல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று செல்வகுமரேசன் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தபோது, 3 பேர் கும்பல் மோட்டார் சைக்கிளில் வந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிய நபர் ஹெல்மட் அணிந்திருந்த நிலையில், பின்னால் அமர்ந்திருந்த நபரின் முகம் தெளிவாக தெரிந்தது.
அந்த காட்சிகளை கொண்டு நடத்திய விசாரணையில், அட்டகாசத்தில் ஈடுபட்டவர்கள் சேரன்மகாதேவி அருகே உள்ள சங்கன்திரடு பகுதியை சேர்ந்த முப்புடாதி (வயது 28), அவரது நண்பர் முத்துக்குமார் (27) மற்றும் அவரது கூட்டாளி ஒருவர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் எதற்காக செல்வகுமரேசன் வீட்டில் புகுந்தனர் என்பது குறித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு செல்வகுமரேசன் சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். அப்போது முப்புடாதியும், முத்துக்குமாரும் அரிய நாயகிபுரம் காட்டுப்பகுதியில் அமர்ந்து மதுகுடித்துவிட்டு தகராறு செய்ததாகவும், அதனை அந்த வழியாக சென்ற செல்வகுமரேசன் தட்டி கேட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அங்கு வந்த செல்வகுமரேசனின் உறவினர் ஒருவர், முப்புடாதியை தாக்கியுள்ளார். இதனால் அவர்களுக்குள் ஏற்பட்ட முன்விரோதத்தில் நேற்று இரவு முப்புடாதி தனது கூட்டாளிகளுடன் வந்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சம்பவத்தில் தொடர்புடைய முப்புடாதி மீது 2 கொலை வழக்குகளும், முத்துகுமார் மீது சில வழக்குகளும் நிலுவையில் இருக்கிறது. இதனால் இவர்கள் பெயர் ரவுடிகள் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மேலும் முப்புடாதி அவரது நண்பருடன் இணைந்து அரிவாளால் தாக்குவது, பின்னர் மோட்டார் சைக்கிளில் தப்பிச்செல்வது உள்ளிட்ட சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன் அடிப்படையில் முக்கூடல் போலீசார் 3 பேரையும் தேடி வருகின்றனர்.