search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Elephant"

    • யானை போடர்பாளையம் கிராமத்துக்குள் புகுந்து மாதேவன் வீட்டை இடித்து சேதப்படுத்தியது.
    • வனப்பகுதி விட்டு வெளியேறிய ஒற்றை யானை சாலையோரம் உலாவிக் கொண்டிருந்தது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, கரடி, மான், காட்டெருமை உட்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    குறிப்பாக தாளவாடி வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் வறட்சி காரணமாக யானைகள் உணவு, தண்ணீரை தேடி ஊருக்குள் புகுவதும், பயிர்களை சேதப்படுத்துவதும் தொடர்கதை ஆகி வருகிறது.

    இந்நிலையில் தாளவாடி அடுத்த கேர்மாளம் அருகே உள்ள போடர் பாளையத்தை சேர்ந்தவர் மாதேவன். கூலி தொழிலாளி. தனது குடும்பத்தினருடன் வெளியே சென்று இருந்தார். இந்நிலையில் நேற்று வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை யானை போடர்பாளையம் கிராமத்துக்குள் புகுந்து மாதேவன் வீட்டை இடித்து சேதப்படுத்தியது.

    இந்நிலையில் நேற்று மாலை மாதேவன் வெளியூரிலிருந்து வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீடு இடிந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினர் ஒற்றை யானை வீட்டை இடித்து சேதப்படுத்திய தகவலை கூறினர். நல்ல வாய்ப்பாக யானை வீட்டை இடித்து சேதப்படுத்திய நேரத்தில் மாதேவன் தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்ததால் அதிர்ஷ்டவசமாக அவர் குடும்பத்துடன் உயிர் தப்பினார்.

    இதேப்போல் திம்பம் மலைப்பாதையில் நேற்று இரவு வனப்பகுதி விட்டு வெளியேறிய ஒற்றை யானை சாலையோரம் உலாவிக் கொண்டிருந்தது.

    இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை சற்று தொலைவில் நிறுத்தினர். சிறிது நேரம் சாலையில் நின்று கொண்டிருந்த ஒற்றை யானை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதன் பின்னரே அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.

    • வனச்சரக பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
    • யானை ஒன்று அந்த வழியாக வரும் வாகனங்களை நிறுத்தி சிறிது நேரம் தும்பிக்கையால் கரும்பு உள்ளதா என பார்க்கிறது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை, மான் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக திம்பம், தாளவாடி, ஆசனூர் போன்ற வனச்சரக பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

    சமீப காலமாக அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையோரம் உலா வருவதும், அந்த வழியாக வரும் வாகனங்களை வழிமறித்து கரும்பு கட்டுகள் உள்ளதா என பார்ப்பதும் தொடர் கதையாகி வருகின்றது.

    இந்நிலையில் தமிழக-கர்நாடக எல்லை பகுதியான காரப்பள்ளம் சோதனை சாவடியில் அருகே நேற்று இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை யானை ஒன்று அந்த வழியாக வரும் வாகனங்களை நிறுத்தி சிறிது நேரம் தும்பிக்கையால் கரும்பு உள்ளதா என பார்க்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

    இது குறித்து வனத்துறையினர் கூறும்போது,

    காரப்பள்ளம் சோதனை சாவடியில் ஒற்றை யானை நடமாடி வருகிறது. கரும்புகளை தேடி அந்த வழியாக வரும் வாகனங்களை நிறுத்தி வருகிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும். எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ×