என் மலர்
நீங்கள் தேடியது "உயர்நீதிமன்ற மதுரை கிளை"
- தலைவர்களின் சிலைகள், கட்சி கொடிகளை சொந்த அலுவலகத்தில் வைத்துக் கொள்ள வேண்டியது தானே?
- மனுதாரர் தரப்பில் மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.
மதுரை:
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் முத்துக்கிருஷ்ணன், மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
திருவாரூர் குடவாசல் சாலை பகுதியில் நாச்சியார் கோவில் குளக்கரை பகுதியில் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர். சிலை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த சிலை பொதுமக்களுக்கோ, போக்குவரத்துக்கோ பாதிப்பு இல்லாத வகையில் தான் உள்ளது. இருப்பினும் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலைத்துறை பொறியியல் பிரிவு அதிகாரிகள் எம்.ஜி.ஆர். சிலை அதன் அருகில் உள்ள கட்சிக்கொடியை அகற்றுமாறு நோட்டீஸ் அனுப்பினர்.
எம்.ஜி.ஆர். சிலையை அகற்றக்கூடாது என அ.தி.மு.க. சார்பிலும் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 3 முறை முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரின் சிலையை தன்னிச்சையாக அகற்றக்கூடாது, எம்.ஜி.ஆர். சிலை அகற்றப்பட்டால் மக்கள் வருத்தமடைவார்கள். எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு சிலை மற்றும் அதனருகில் உள்ள அ.தி.மு.க. கொடியை அகற்ற வழங்கிய நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் ஸ்ரீமதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் போது, எந்த கட்சியாக இருந்தாலும் அவர்களின் தலைவர்களின் சிலைகள், கட்சி கொடிகளை சொந்த அலுவலகத்தில் வைத்துக் கொள்ள வேண்டியது தானே? பொது இடங்களில் வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி. இயக்கமாக இருந்தாலும் சரி. கட்டாயமாக அனுமதிக்க முடியாது.
எனவே இந்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய நேரிடும் என நீதிபதிகள் தெரிவித்தனர். மனுதாரர் தரப்பில் மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மனுவை திரும்ப பெற அனுமதித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.
- சமூகத்தில் அச்சு ஊடகம் மற்றும் காட்சி ஊடகங்களுக்கு முறையான கட்டுப்பாடுகள் உள்ளது.
- சமூக வலைதளங்கள் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் செயல்பட்டு வருவதாக தமிழக அரசு சார்பாக ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் கூறினார்.
மதுரை:
நீதிமன்றத்தையும் நீதிபதிகளையும் அவதூறாக பேசியதாக மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து தொடரப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கர் 6 மாத தண்டனை பெற்று கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சவுக்கு சங்கர் பேசிய வீடியோக்களை டுவிட்டர், பேஸ்புக், யூ-டியூப் போன்ற சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என மத்திய தகவல் தொலைத்தொடர்பு அமைச்சகத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. அந்த உத்தரவை நிறைவேற்றியது சம்பந்தமாக இன்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஏற்கனவே ஐகோர்ட்டு தெரிவித்திருந்தது.
நீதிமன்றத்தின் உத்தரவு நிறைவேற்றுவது குறித்து தெரிந்து கொள்ள நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் புகழேந்தி அமர்வு முன்பு இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது யூ-டியூப், பேஸ்புக், டுவிட்டர் நிறுவனத்தின் சார்பாக வழக்கறிஞர்கள் ஆஜராகினர். அப்போது அவர்கள் கூறுகையில், தனிப்பட்ட ஒரு பதிவை நீக்க வேண்டும் என்றால் நீதிமன்றம் குறிப்பிட்ட பதிவை நீக்க கோரி உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும் அல்லது மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இதை தவிர்த்து நாங்களாக நீக்க முடியாது என தெரிவித்தனர்.
தமிழக அரசு சார்பாக ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் கூறுகையில், சமூகத்தில் அச்சு ஊடகம் மற்றும் காட்சி ஊடகங்களுக்கு முறையான கட்டுப்பாடுகள் உள்ளது. ஆனால் சமூக வலைதளங்கள் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் செயல்பட்டு வருகிறது.
இதனால் தனிமனித உரிமை பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் சட்ட ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படுகிறது. இதை வரைமுறைபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதனை தொடர்ந்து நீதிபதிகள் சமூக வலைதள வழக்கறிஞர்களிடம் வீடியோ பதிவு செய்பவர்கள், யார்? அதற்கு கருத்து பதிவிடுபவர்கள் யார்? அவர்களை கண்டுபிடிக்க முடியுமா? நடவடிக்கை எடுக்க முடியுமா? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு சமூக வலைதள வழக்கறிஞர்கள் வலைதளங்களில் பதிவிடுவதற்கு முன்பாக என்ன விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதோ அதை மட்டுமே பார்க்க முடியும் என தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.
- பிள்ளைகள் ஸ்மார்ட் போன்கள் மற்றும் கம்ப்யூட்டர் மூலம் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டிய முக்கிய பொறுப்பு பெற்றோருக்கு உண்டு.
- ஆன்லைன் கேம்களை விளையாடுபவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து கேம்களை அன்-இன்ஸ்டால் செய்ய வைக்க வேண்டும்.
மதுரை:
மதுரை ஐகோர்ட்டு பதிவாளர் தாமாக முன்வந்து மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-
நமது தேசத்தின் எதிர்காலம் இளைய தலைமுறையின் கைகளில் உள்ளது. அவர்கள்தான் நம் நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக உள்ளார்கள், அதற்காக அவர்கள் உடல், உளவியல், பொருளாதாரம், சமூகம் என எல்லாவற்றிலும் தகுந்தவர்களாக இருக்க வேண்டும்.
ஆனால் இன்றைய இளம்தலைமுறையினர் பப்ஜி, பிரீ பயர் போன்ற ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி, கல்வி மற்றும் ஆரோக்கியமான பொழுதுபோக்குகள் போன்றவற்றிலிருந்து அவர்கள் விலகிச் செல்கிறார்கள். அதன் மூலம் அவர்கள் தங்கள் எதிர்காலத்தை பணயம் வைக்கிறார்கள்.
அதன் விளைவாக நமது நாட்டின் வளர்ச்சி பெருமளவில் பாதிக்கப்படுகிறது. எனவே இந்த வகையான ஆன்லைன் விளையாட்டுகளின் அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதற்கான அவசரத்தேவை ஏற்பட்டுள்ளது. இளைஞர்களை, அதிலும் குறிப்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வை நாம் ஏற்படுத்த வேண்டும்.
இந்த விவகாரத்தில் காவல்துறைக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் பங்கு உள்ளது. பிள்ளைகள் ஸ்மார்ட் போன்கள் மற்றும் கம்ப்யூட்டர் மூலம் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டிய முக்கிய பொறுப்பு பெற்றோருக்கு உண்டு.
ஆன்லைன் கேம்களை விளையாடுபவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து கேம்களை அன்-இன்ஸ்டால் செய்ய வைக்க வேண்டும். ஆகையால் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு நிரந்தர தடை விதிக்கும் வகையில் இணையதள மாற்றங்களை ஏற்படுத்தவும், ஆன்லைன் விளையாட்டு விளையாடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை உருவாக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-
இந்த விவகாரம் எதிர்கால தலைமுறையினர் சம்பந்தப்பட்டது. இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கியதால் தற்போதைய இளைஞர்கள், மாணவர்கள் மைதானங்களுக்கு சென்று விளையாடுவதையே மறந்து விட்டனர். இப்படியே இந்த விவகாரத்தை விட்டு விட்டால் பெரும் ஆபத்தில் முடியும். இதற்கு முடிவு கட்டாமல் இந்த கோர்ட்டு விடப்போவதில்லை.
எனவே ஆன்லைன் விளையாட்டுகளை முழுவதுமாக தடை செய்வது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும். வருகிற 27-ந்தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
- மனிதர்கள் மலம் அள்ளுவதை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கையை அரசு தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவு.
- விசாரணையை 3 வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
மதுரை:
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த அய்யா என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் துப்புரவாளர்கள் கையால் மலம் அள்ளும் நிலை தொடர்ந்து வருகிறது. பாதாள சாக்கடைகளில் இறங்கி துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றும் சமயங்களில் விஷவாயு தாக்கி, அவர்கள் பரிதாபமாக இறக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டே இருக்கின்றன. துப்புரவு தொழிலாளர்கள் கையால் மலம் அள்ளுவதை தடுக்கும் வகையில் கடந்த 2013-ம் ஆண்டு மறுவாழ்வு சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் கையால் மலம் அள்ளுவது முழுவதுமாக தடுக்கப்படவில்லை. இந்த சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அரசுகளை அறிவுறுத்தி வருகிறது.
மனிதர்கள் மலம் அள்ளுவதை தடுக்க ரோபோ எந்திரங்களை பயன்படுத்தலாம். இதன் மூலம் பாதாள சாக்கடைகளில் விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் இறப்பது தடுக்கப்படும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இதுவரை எந்த பதிலும் இல்லை.
எனவே எனது மனுவின் அடிப்படையில் மனிதர்கள் மலம் அள்ளுவதை தடுக்க ரோபோ எந்திரங்களை பயன்படுத்தவும், துப்புரவு தொழிலாளர்கள் மறுவாழ்வு சட்டத்தை கடுமையாக அமல்படுத்தவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் பாதாள சாக்கடைகளில் இறங்கி தொழிலாளர்கள் பணியாற்றுவது தொடர்பான புகைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த புகைப்படங்களை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள் இவை எங்கே எடுக்கப்பட்டவை என கேள்வி எழுப்பினர்.
அதற்கு மனுதாரர் வக்கீல், சென்னை, திருவண்ணாமலை ஆகிய நகரங்களில் எடுக்கப்பட்டவை என தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், மனுதாரர் சமர்ப்பித்த புகைப்படங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்படுவார் என எச்சரித்தனர்.
மேலும் மனிதர்கள் மலம் அள்ளுவதை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கையை அரசு தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை 3 வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
- மாஜிஸ்திரேட்டு உத்தரவின்பேரில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டது.
- மனுதாரர் புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மதுரை:
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த வக்கீல் கலந்தர் ஆஷிக் அகமது, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நான் வக்கீலாக பணியாற்றுகிறேன். பல்வேறு சமூக சேவகைளிலும் ஈடுபட்டு வருகிறேன். என் மீது பொய்யான புகாரின்பேரில் கடந்த 2020-ம் ஆண்டில் தொண்டி போலீசார் வழக்குபதிவு செய்தனர். பின்னர் என்னை சட்டவிரோதமாக கைது செய்து, போலீஸ் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கினர். இதில் எனது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
பின்னர் என்னை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது எனது தலையில் காயம் ஏற்பட்டதை மாஜிஸ்திரேட்டு குறித்து வைத்து நீதிமன்ற காவல் தொடர்பான அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளார். எனவே சட்டவிரோத காவலில் தாக்கிய சம்பவத்தில் தொடர்புடைய போலீஸ் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளேன்.
அவர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தேன். அந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, 2 வாரத்தில் மனுதாரரின் மனுவை விசாரித்து குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும்பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குபதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
2 வாரம் முடிந்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாஜிஸ்திரேட்டு உத்தரவின்பேரில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி சத்திகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரர் புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு அரசு வக்கீல் தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் தொடர் விடுமுறையில் உள்ளார். அதனால்தான் மனுதாரர் புகார் நிலுவையில் உள்ளது என்றார்.
இதை ஏற்க இயலாது என்று அதிருப்தி தெரிவித்த நீதிபதி, போலீசாருக்கு அவகாசம் அளித்து வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
- மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது.
- இந்த தடை உத்தரவு பின்னடைவை ஏற்படுத்தி விட்டது.
தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பொதுமக்களிடையே கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் சட்டத்துறை சார்ந்த உறுப்பினர் நியமிக்கும் வரை கட்டண உயர்வு தொடர்பாக முடிவெடுக்கவும், கருத்து கேட்பு கூட்டம் நடத்தவும் தடை விதிக்க கோரி, நூற்பாலைகள் சங்கம் மற்றும் சில நிறுவனங்கள் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மின் கட்டண உயர்வு தொடர்பான மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்க தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக மின்வாரியம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஸ்ரீமதி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிர், மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது என்றும், மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டம் சார்ந்த உறுப்பினரை நியமிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இந்த நிலையில் மின்கட்டண அறிவிப்பு வெளியிடும் நேரத்தில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பது பின்னடைவை ஏற்படுத்தி விட்டது என்றும் தெரிவித்தார். எனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும், என்று அவர் குறிப்பிட்டார்.
இதையடுத்து மின்கட்டணத்தை உயர்த்துவது சம்பந்தமாக இறுதி முடிவு எடுக்க தடை விதித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த மேல்முறையீட்டு மனு குறித்து எதிர்தரப்பினர் அனைவரும் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இந்த உத்தரவு மூலம் மின் கட்டண உயர்வு தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடிவு எடுப்பதற்கான தடை தற்காலிகமாக நீங்கி இருக்கிறது.
- மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினர் நியமிக்கப்படவில்லை.
- மனுதாரர்கள் தங்களது கோரிக்கையை தெரிவிக்க ஒருவாரம் அவகாசம்.
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சமீபத்தில் அறிவித்தார். மின் கட்டண உயர்வு தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டங்கள் சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டன. இந்த கூட்டங்களில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு நூற்பாலைகள் சங்க தலைமை ஆலோசகர் கே.வெங்கடாசலம் உள்ளிட்ட சிலர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் மற்றும் 2 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். தற்போது தலைவர் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் மட்டும் உள்ளனர். சட்டத்துறை சார்ந்த உறுப்பினர் நியமிக்கப்படவில்லை. இந்த நிலையில் தமிழகத்தின் மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரி மின்வாரியம் சார்பில் ஒழுங்குமுறை ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை ஒழுங்குமுறை ஆணையம் விசாரணைக்கு ஏற்று, பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தி வருகிறது. தலைவர் மற்றும் ஒரு உறுப்பினர் மட்டும் இருக்கும்போது, ஒழுங்குமுறை ஆணையம் கூடியது சட்டவிரோதம். எனவே, மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையத்தில் சட்டத்துறை சார்ந்த உறுப்பினரை நியமிக்கும் வரை கட்டண உயர்வு தொடர்பாக முடிவு எடுக்கவும், கருத்து கேட்பு கூட்டம் நடத்தவும் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:- தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் சட்ட உறுப்பினராக வெங்கிடசாமி, கடந்த 17.2.2019 அன்று நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் கடந்த 5.5.2022 அன்று ஓய்வு பெற்றுவிட்டார். தொழில்நுட்ப உறுப்பினராக இருந்தவர் கடந்த மார்ச் 17-ந் தேதி ராஜினாமா செய்துள்ளார்.
இந்த உறுப்பினர் பதவிக்கு மட்டும் தகுதியான நபரை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. அந்த குழு, 2 பேரை பரிந்துரைத்திருக்கிறது. இதில் வெங்கடேசனை தொழில்நுட்ப உறுப்பினராக மாநில அரசு தேர்வு செய்தது. அவர் கடந்த மாதம் 18-ந் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதையடுத்து ஆணையத்தின் தலைவர் சந்திரசேகர், உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர், மின்வாரியத்தின் மின் கட்டண உயர்வு தொடர்பான மனுக்களை ஏற்றுக்கொண்டனர். அதன்படி கருத்து கேட்பு கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இதை எதிர்த்து இந்த வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.
மனுதாரர்கள் சார்பில் இந்த வழக்கில் ஆஜரான வக்கீல்கள், சட்டத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர் இல்லாமல் மின் கட்டண உயர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வது அரசியலமைப்பு சட்டத்திற்கும், உச்சநீதிமன்ற உத்தரவுகளுக்கும் எதிரானது என தெரிவித்தனர்.
மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையத்தின் தொழில்நுட்ப உறுப்பினரை தேர்வு செய்து நியமித்த அதே நேரத்தில் சட்டத்துறை சார்ந்த உறுப்பினரையும் அந்த பதவியில் நியமித்து இருக்கலாம் என்று வாதிட்டுள்ளனர்.
ஆனால் அரசு தரப்பில், பல ஆண்டுகளாக மின் கட்டண உயர்வுக்கான நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது எடுத்துள்ள நடவடிக்கையை தாமதப்படுத்துவது ஆபத்தில் முடியும். எனவே இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள், உத்தரவுகளை பின்பற்றுவது உயர்நீதிமன்றங்களின் கடமையாகும். அந்த வகையில் ஒரு ஆணையத்தில் சட்ட உறுப்பினர் இருப்பது கட்டாயம் என உச்சநீதிமன்றம் தெரிவிக்கிறது. அப்படி இருக்கும்போது, அந்த பதவிக்குரிய நபரை நியமிக்காதது நியாயம் இல்லை. மேற்கண்ட 2 பதவிகளுக்கான நபர்களை ஒரே நேரத்தில் நியமிப்பதற்கு மாநில அரசுக்கு எந்த தடையும் இல்லை. ஆனால் அதை செய்யவில்லை.
இந்த காரணத்திற்காகவே, தமிழக மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினர் நியமிக்கப்படும் வரை, மேற்கூறிய கட்டண உயர்வு அனுமதி கோரும் மனுக்கள் மீதான இறுதி உத்தரவை பிறப்பிக்க தடை விதிக்கிறேன். மின் கட்டண உயர்வு தொடர்பான தற்போதைய நடவடிக்கைகளை தொடரலாம்.
ஆனால் சட்ட உறுப்பினரை நியமித்த உடனேயே, இந்த தடை உத்தரவு காலாவதியாகி விடும். மனுதாரர்கள் தங்களது கோரிக்கையை உரிய ஆணையத்தில் தெரிவிக்க ஒருவாரம் அவகாசம் அளிக்கப்படுகிறது. இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
- கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக காவல்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை.
- கோவில் திருவிழாக்களில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருந்தால் மற்றும் ஸ்பீக்கர்கள் வைக்க, ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் காவல்துறையினரிடம் முறையாக அனுமதி பெற்றால் போதும்.
மதுரை:
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சீனி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள வலையப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டு அரசி அம்மன் கோவில் திருவிழா பல ஆண்டுகளாக எந்த பிரச்சனையும் இன்றி சுமூகமாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு கோவில் பொங்கல் திருவிழாவை ஆகஸ்டு 19 மற்றும் 20-ந் தேதி நடத்துவதற்கு திட்டமிட்டு, காவல்துறையிடம் அனுமதி கோரினோம். இதுவரை எந்தவிதமான பதிலும் தெரிவிக்கப்படவில்லை. எனவே திருவிழா நடத்துவதற்கு உரிய அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் தனது உத்தரவில், கிராமங்களில் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக காவல்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. கோவில் திருவிழாக்களில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருந்தால் மற்றும் ஸ்பீக்கர்கள் வைக்க, ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் காவல்துறையினரிடம் முறையாக அனுமதி பெற்றால் போதும்.
இந்த வழக்கை பொறுத்தவரை கிராம மக்கள் அனைவரும் திருவிழா நடத்துவதற்கு ஒத்துழைப்பு தருகின்றனர். எனவே, சட்ட ஒழங்கு பிரச்சினை ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை எனக் கூறி திருவிழா நடத்துவதற்கு அனுமதி வழங்கி வழக்கினை நீதிபதி முடித்து வைத்து உத்தரவிட்டார்.
- நெல்லை மாவட்டம் தாழையூத்து கிராமத்தைச் சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் கண்ணன் என்பவரை 10 பேர் கும்பல் பயங்கர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்தது.
- இந்த கொலை வழக்கில் மொத்தம் 18 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இவர்களில் பலர் கைதானார்கள். இந்த வழக்கு நெல்லை மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
மதுரை:
நெல்லை மாவட்டம், வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்து மனோ என்பவர் ஒரு வழக்கில் கைதாகி பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அடைக்கப்பட்டார். அவரை சிறைக்குள் கைதிகள் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்துக்குக் காரணமாக இருந்த சிறைத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி 72 நாள்களாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அவரது உடலைப் பெற்ற உறவினர்கள் கடந்த ஆண்டு ஜூலை 2-ந் தேதி அடக்கம் செய்தனர்.
இவரது கொலைக்கு பழி வாங்கும் வகையில் அடுத்த சில நாட்களில் நெல்லை மாவட்டம் தாழையூத்து கிராமத்தைச் சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் கண்ணன் என்பவரை 10 பேர் கும்பல் பயங்கர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்தது.
இந்த கொலை வழக்கில் மொத்தம் 18 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இவர்களில் பலர் கைதானார்கள். இந்த வழக்கு நெல்லை மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கொல்லப்பட்ட கண்ணனின் தந்தை நாராயணன், மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-
எனது மகன் கண்ணன் கொலை வழக்கில் கைதானவர்களை ஜாமீனில் விடுதலை செய்தால் அவர்களால் சாட்சிகள் மிரட்டப்படுவார்கள். சாட்சிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும்.
எனவே கண்ணன் கொலை வழக்கை விரைவாக விசாரித்து முடிக்கவும், அதுவரை குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் கிருஷ்ணா தாஸ் ஆஜராகி, கண்ணன் கொலை வழக்கில் கைதான முக்கிய குற்றவாளிகள் மீது ஏற்கனவே பல கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களில் பலர் குற்றப் பின்னணியை கொண்டவர்கள். ரவுடிகள் பட்டியலிலும் இடம் பெற்றவர்கள். எனவே இந்த வழக்கை விரைவாக விசாரித்து தீர்ப்பளிக்க உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.
விசாரணை முடிவில் நீதிபதி, மனுதாரர் மகன் கொலை வழக்கை சம்பந்தப்பட்ட கீழ் கோர்ட்டு 6 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
- நீதிபதிகள், இந்துக்கள் அல்லாதோர் நுழைய வேண்டாம் என அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. குடமுழுக்கு விழாவில் இந்துக்கள் அல்லாதோர் பங்கேற்கக்கூடாது என விதிகள் இல்லை.
- 120 கோடி மக்களில் கோவிலுக்கு செல்லும்போது, அவர்களின் மதத்தினை கேட்கும் போது பிரச்சினை ஏற்படும் என தெரிவித்தனர்.
மதுரை:
கன்னியாகுமரி மாவட்டம் பிரம்மபுரத்தை சேர்ந்த சோமன் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார்.
அதில், திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கோவிலின் குடமுழுக்கு விழாவிற்காக பக்தர்களிடம் இருந்து தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ள தொழில்நுட்பத் துறை அமைச்சருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பூசாரிகள் மட்டுமே, கலச பூஜைகள் செய்ய வேண்டும். இந்த விழா அரசு விழாவாக நடத்தப்படும்போது இதுபோன்ற சம்பிரதாயங்கள் முறையாக கடைபிடிக்கப்படாமல் புனிதம் கெட்டு விடுவதற்கான வாய்ப்புள்ளது.
ஆகவே கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோவில் குடமுழுக்கு விழாவின் போது இந்துக்கள் அல்லாதோர் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்துக்கள் அல்லாதோர் நுழைய வேண்டாம் என அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. குடமுழுக்கு விழாவில் இந்துக்கள் அல்லாதோர் பங்கேற்கக்கூடாது என விதிகள் இல்லை.
120 கோடி மக்களில் கோவிலுக்கு செல்லும்போது, அவர்களின் மதத்தினை கேட்கும் போது பிரச்சினை ஏற்படும் என தெரிவித்தனர்.
மனுதாரர் தரப்பில், கோவில் குடமுழுக்கு விழாவிற்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டது. அதில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பெயர் இடம்பெற்றிருப்பதை குறிப்பிட்டு அவர் இந்து அல்ல. ஆனால் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க உள்ளார் என தெரிவித்தனர்.
அதற்கு நீதிபதிகள், ஜேசுதாஸ் வேறு சமயத்தைச் சார்ந்தவர். இந்து பாடல்களை பாடியுள்ளார். வேளாங்கண்ணி தேவாலயத்திற்கும், நாகூர் தர்காவிற்கும் ஏராளமான இந்துக்கள் சென்று வழிபட்டு வருகின்றனர். ஆகவே, நீதிமன்றம் குறுகிய பார்வையில் அணுக விரும்பவில்லை என்ற அடிப்படையில் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.
- அரசுத் தரப்பில் ஆசிரியர்கள் தற்காலிகமாகவே நியமிக்கப்பட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.
- அதற்கு நீதிபதி, நிரந்தரமாக ஆசிரியர்களை நியமிப்பதில் அரசுக்கு என்ன பிரச்சனை? அரசின் இந்த பதில் திருப்திகரமாக இல்லை என்றார்.
மதுரை:
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில் கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஏராளமானோர் அப்போதிருந்த வெயிட்டேஜ் முறையால் பணிக்கு தேர்வாகவில்லை. ஆனால் அவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள்.
இந்நிலையில் தமிழக அரசின் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப திட்டமிட்டு அரசு கடந்த 23-ம் தேதி ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு தொடர்பாக முறைப்படுத்தப்பட்ட வழிமுறைகள் எதுவும் இல்லை. அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் அவர்களுக்கு தேவையான நபர்களை பணியில் நியமித்து கொள்ள வாய்ப்பு உள்ளது. இதனால் தகுதியற்றவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு, தமிழக அரசின் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்புவது தொடர்பான அறிவிப்பை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், அரசுத் தரப்பில் ஆசிரியர்கள் தற்காலிகமாகவே நியமிக்கப்பட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, நிரந்தரமாக ஆசிரியர்களை நியமிப்பதில் அரசுக்கு என்ன பிரச்சனை? அரசின் இந்த பதில் திருப்திகரமாக இல்லை என்றார்.
எனவே தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பான அறிவிப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டு வழக்கை வருகிற 8-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
மதுரை மாவட்டம் முதலைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பு. இவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திருவிழாவின் போது கலைநிகழ்ச்சிகள், ஆடல்-பாடல் மற்றும் நாடகங்கள் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனுவை கடந்த வாரம் விசாரணை செய்த தனி நீதிபதி, ஆடல்-பாடல் மற்றும் நாடகங்கள் நடத்த நிபந்தனைகள் விதித்து அனுமதி அளித்தார். அதில் ஆடல்-பாடல் மற்றும் நாடகங்கள் நடத்தும் போது ஆபாச வார்த்தைகள், ஆபாச நடனங்களை அனுமதிக்ககூடாது என்றும், நிகழ்ச்சிகளை இரவு 8 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே நடத்திக் கொள்ளலாம் என்றும் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் மனுதாரர் தரப்பில் நாடகங்கள் நடத்துவதற்கு இரவு 8 மணி முதல் 11 மணி வரை நேரம் போதாது. எனவே இரவு 8 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை நடத்த நேரத்தை நீட்டித்து தர அனுமதி வழங்க வேண்டும் என 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன், விஜயகுமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இரவில் நாடகங்கள் நடத்த உள்ளதால் நேரத்தை அதிகரித்து அனுமதிக்க வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார். அதனை பரிசீலனை செய்து ஏற்றுக்கொண்ட நீதிபதி இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை நாடகம் நடத்திக்கொள்ள அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு கோவில் திருவிழா குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.