search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காருக்குறிச்சி மண்பானைகள்"

    • மண் சார்ந்த பொருட்கள் என்பது தமிழர்களின் பாரம்பரியமாகும்.
    • உடலுக்கு எந்த வித தீங்கும் ஏற்படுத்துவதில்லை.

    நெல்லை:

    தமிழகத்தில் வழக்கமாக மார்ச் மாதத்தில் தொடங்கி மே மாதம் முடியும் வரையிலும் கோடை கால மாகவே கருதப்படுகிறது. இந்த காலகட்டங்களில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் நீராகாரங்களை பருகுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இந்த காலகட்டங்களில் ஏழைகளின் குளிர்சாதன பெட்டி என்று அழைக்கப்படும் மண்பானைகளுக்கு மவுசு அதிகரித்து விடும்.

    பொதுவாக மண் சார்ந்த பொருட்கள் என்பது தமிழர்களின் பாரம்பரியமாகும். நவ நாகரிகத்தை நாடிச் சென்ற தமிழ் மக்கள் சிலர் காலப்போக்கில் மண்பாண்ட பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர் என்றேகூறலாம்.


    சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை சமையல் செய்வதில் தொடங்கி பொங்கல் வைப்பது, தண்ணீர் அருந்துவது என அனைத்தும் மண்பாண்ட பொருட்களையே பயன்படுத்தினர். ஆனால் காலப்போக்கில் எல்லாம் மாறிப்போய் விட்டது. ஆனாலும் கோடை காலத்தில் மட்டும் மண்பானைகளின் பயன்பாடு அதிகரித்து விடுகிறது.

    இதற்காக நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையம் குறிச்சி, சேரன்மகாதேவி அருகே உள்ள காருக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் ஏராள மான தொழிலாளர்கள் காலம் காலமாக மண்பாண்ட உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அவ்வாறு தயாரிக்கும் இந்த மண்பாண்டங்களுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட வெளிமாநிலங்கள் என்று மட்டுமல்லாமல் வளைகுடா நாடுகள், மலேசியா, சிங்கப்பூர், ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் அதிக மவுசு உள்ளது.

    இன்றளவும் காருக்குறிச்சி யில் தயாரிக்கப்பட்டு வரும் அகல் விளக்குகள், தேநீர் கோப்பைகள், தண்ணீர் பாட்டில்கள், அலங்கார பூச்சட்டிகள், சாம்பிராணி கிண்ணம், பிரியாணி பானைகள், சூப் கிண்ணம், பொங்கல் வைப்பதற்கான மண் பானைகள் உள்ளிட்டப் பல்வேறு பொருட்கள் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    காருக்குறிச்சி பகுதியில் தயாரிக்கப்படும் மண் பானை, மண் குடங்கள் உள்ளிட்டவை சுமார் ரூ.150 முதல் அதிகபட்சமாக ரூ.600 வரை தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் விற்பனைக்காக ஏற்றுமதி செய்து வருகின்றனர்.


    மூடி வைக்கப்படும் குவளைகள் 5 லிட்டர் அளவு கொண்டவை ரூ.100 வரையிலும், 8 லிட்டர் பானைகள் ரூ.120-க்கும், 10 லிட்டர் அளவு கொண்ட பானைகள் ரூ.185 ஆகவும் விற்பனையாகிறது. இந்த கிராமங்களில் பரம்பரை பரம்பரையாக மண்பாண்டம் தொழில் செய்து வரும் தொழிலாளர்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் ஆண்டாண்டு காலமாக மண்பானை தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறோம். இயற்கை முறையில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலும், உடலுக்கு நன்மை பயக்கும் வகையிலும் இந்த மண்பானைகளை தயாரித்து வருகிறோம்.


    முதல் நாளில் கரம்பை மண்ணை நன்றாக காய வைத்து தூசி தட்டி வைத்துக்கொள்வோம். பின்னர் அதனை ஊற வைத்து தூசி தட்டிய பிறகு கரம்பை மண்ணை தனியாக போட்டு அதன் மீது தண்ணீர் ஊற்றி ஈரப்பதமாக்க வேண்டும்.

    சுமார் 4 மணி நேரம் வரை அதில் ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். 2-ம் நாள் கரம்பை மண்ணை எந்திரத்தில் போட்டு அரைத்து அதனை தனியாக வைத்துக்கொள்ள வே்ணடும்.

    பின்னர் பானைகளை வடிவமைத்து காய வைப்பார்கள். பின்னர் பானைகளை நெருப்பு மூலம் சுட்டு எடுத்து அடுக்கி வைப்பார்கள்.

    வெளிநாடுகளுக்கு அவற்றை அனுப்பும்போது அட்டைப்பெட்டிகளில் வைக்கோலை சுற்றிவைத்து அடுக்கி லாரிகளில் ஏற்றி செல்வோம். பின்னர் அதனை தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலமாக மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வெயில் காலத்தில் குளிர்சாதன பெட்டியை விட மண்பானை, மண்குடம் மூலமாக குடிக்கும் தண்ணீர் உடலுக்கு எந்த வித தீங்கும் ஏற்படுத்துவதில்லை என்பதால் காருக்குறிச்சியில் தயாரிக்கப்படும் இயற்கை யான மண்பாண்டங்கள், தண்ணீர் குவளைகள் உள்ளிட்டவைகளுக்கு இன்றளவும் மவுசு குறையாமல் இருக்கிறது.

    இந்த மண்பானைகள் 5 லிட்டர் முதல் 15 லிட்டர் வரை தண்ணீர் நிரப்பி பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்படுகிறது. இதில் பொதுமக்கள் தங்களின் தேவைக்கேற்ப குழாய் பொருத்தி கேட்டால் அந்த பானைகளில் நல்லி பொருத்தி கொடுக்கிறார்கள்.

    தற்போது தமிழகம் முழுவதும் வெயிலின் அளவு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிகமான அளவில் மண்பானைகளை உபயோகப்படுத்த தொடங்கி உள்ளதால் மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×