search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94519"

    தேர்ந்தெடுத்த மக்களுக்கு நம்பிக்கையுள்ள ஆட்சியாக தி.மு.க. ஆட்சி இல்லை என்பதுதான் பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது என ஓ. பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களுக்குத் தாங்களே நம்பிக்கை உள்ளவர்களாக நடந்துகொண்டால் மட்டும் போதாது. தேர்ந்தெடுத்த மக்களுக்கும் நம்பிக்கையுள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும்." என்றார் பேரறிஞர் அண்ணா.

    ஆனால் இதற்கு முரணான நிலைதான் தமிழ்நாட்டில் அனைத்துப் பிரச்சனைகளிலும் நிலவுகிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தேர்ந்தெடுத்த மக்களுக்கு நம்பிக்கையுள்ள ஆட்சியாக தி.மு.க. ஆட்சி இல்லை என்பதுதான் பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது.

    ஒரு பக்கம் அம்மா உணவகங்களை இருட்டடிப்பு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வரும் தி.மு.க.வினர், மறுபக்கம் அம்மா உணவகங்களில் பணிபுரிவோரை வேலையிலிருந்து நீக்கும் முயற்சியையும் செய்து வருகின்றனர். மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட அம்மா உணவகங்களில் பணியாற்றுவோரை பணிநீக்கம் செய்வதாக மாநகராட்சியினர் தெரிவித்தபோது 
    அதனைக் கண்டித்து அங்கு பணிபுரியும் பெண் பணியாளர்கள் சில நாட்களுக்கு முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், அவ்வாறு அறநெறியில் போராடியவர்களை காவல் துறையில் புகார் அளித்து  கைது செய்வோம் என மாநகராட்சி அதிகாரிகள் மிரட்டியதாகவும்- பத்திரிகைகளில் செய்தி வந்தன.

    திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்ட அம்மா உணவகங்களிலும் இதே நிலைமைதான் நீடிப்பதாக செய்திகள் வருகின்றன. சில இடங்களில் நிதிச் சுமையை காட்டி பணியாளர்களை விலகச் சொல்கிறார்கள் என்ற தகவலும் வருகிறது. மொத்தத்தில், தமிழ்நாடு முழுவதும் தற்போது அம்மா உணவகங்களில் பணியாற்றுபவர்களை பணியிலிருந்து நீக்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது அவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது.

    இந்தச் சூழ்நிலையில் கம்பம் நகர தி.மு.க. செயலாளர் அம்மா உணவகத்தில் பணிபுரியும் பெண்களிடம் பேசிய ஓர் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில், தி.மு.க. நகரச் செயலாளர் அம்மா உணவகங்களில் பணிபுரியும் பெண்களிடம், தாங்கள்தான் ஏழு ஆண்டுகள் பணிபுரிந்து விட்டீர்களே, புதிதாக மற்றவர்களுக்கு வழிவிடுங்கள் என்றும்,

    தன்னுடைய சொந்த ஓட்டலில் வேலை ஏற்படுத்தித் தருவதாகவும், கட்சிப் பணி புரிந்தவர்களுக்கு வேலை தர வேண்டிய கட்டாயத்தில் தான் உள்ளதாகவும், கட்சிக்காக வேலை பார்த்தவர்கள் பத்து ஆண்டுகள் வேலையில்லாமல் இருந்ததால் தங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கூறுவதாகவும் தெரிவித்து இருக்கிறார்.

    இதற்கு அந்தப் பெண்கள் தாங்கள் ஏழு ஆண்டுகளாக இங்குதான் பணிபுரிந்து வருகிறோம் என்றும், இதை நம்பித்தான் தங்களுடைய வாழ்வாதாரம் உள்ளது என்றும், தங்களில் பெரும்பாலானோர் கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள் என்றும் கூறியுள்ளனர். ஆனால் தி.மு.க.வின் நகரச் செயலாளரோ அவர்களை பணியிலிருந்து எடுப்பதில் உறுதியாக உள்ளதாக அந்த ஆடியோச் செய்தியிலிருந்து தெரிய வருகிறது.

    தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற செயலில் தி.மு.க.வினர் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வருகின்றன. தி.மு.க.வினரின் இதுபோன்றச் செயல் கடும் கண்டனத்திற்குரியது.  அம்மா உணவகங்களில் கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள், மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள்தான் பணியாற்றுகின்றனர்.

    கொரோனா நோய்த்தொற்று உச்சத்தில் இருக்கும்போது, அனைத்து  உணவகங்களும் முற்றிலுமாக மூடப்பட்ட நிலையில், தங்களது உயிரை - துச்சமென மதித்து, நேரம், காலம் பார்க்காமல் அல்லும் பகலும் அயராது உழைத்து ஏழை, எளிய மக்களின் பசியை ஆற்றும் மகத்தான பணியைச் செய்தவர்கள். அவர்களை அந்தப் பணியிலிருந்து எடுத்துவிட்டு அங்கு தி.மு.க.விற்கு பணியாற்றியவர்களை வேலைக்கு அமர்த்துவது என்பது நியாயமற்ற செயல். இயற்கை நியதிக்கு முரணானது. 

    "எங்களுக்கு வாக்களித்தவர்கள், இவர்களுக்கு வாக்களித்தோமே என்று மகிழ்ச்சி அடையக்கூடிய வகையிலே, வாக்களிக்கத் தவறியவர்கள், இவர்களுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று வருத்தப்படக்கூடிய வகையிலே எனது பணி இருக்கும்" என்று  ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசும்போது முதலமைச்சர் குறிப்பிட்டார்.

    ஓ. பன்னீர்செல்வம்

    அம்மா உணவகங்களில் பணியாற்றுபவர்கள் எல்லாம் யாருக்கு வாக்களித்தார்கள் என்று தெரியாத நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் பணியமர்த்தப்பட்டவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களை பணியிலிருந்து நீக்க முயற்சிப்பது, பணியிலிருந்து விலகுமாறு மிரட்டுவது முதலமைச்சரின் கூற்றுக்கு எதிராக அமைந்துள்ளது. அம்மா உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ்நாடு அரசிற்கு இருக்கிறது.

    எனவே, முதலமைச்சர்  இதில் உடனடியாகத் தலையிட்டு, களத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தீர விசாரித்து, அம்மா உணவகங்களில் பணியாற்றும் ஏழை, எளியத் தொழிலாளர்கள் தொடர்ந்து பணியாற்றிட வழிவகை செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் ஓ. பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
    வருமானத்தின் அடிப்படையில் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைத்து அனைவருக்குமான பொது வினியோகத் திட்டத்தின் நோக்கத்தையே சீர்குலைக்கும் முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டால் அதனை அ.தி.மு.க. கடுமையாக எதிர்க்கும் என ஓபிஎஸ் கூறியுள்ளார்.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி நியாயவிலை கடைகள் மூலம் பொருட்களை வழங்கி வரும் சூழ்நிலையில், தமிழ்நாட்டில் தான் விலையில்லா அரிசி அல்லது கோதுமை குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

    இது தவிர சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு ஆகிய பொருட்களும் மானிய விலையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் சுமார் 2 கோடியே 20 லட்சம் குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன.

    தமிழ்நாட்டில் நடைமுறையில் இருப்பது அனைவருக்குமான பொது வினியோகத் திட்டம். அதே சமயத்தில் மற்ற மாநிலங்களில் நடைமுறையில் இருப்பது தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கு சார்ந்த பொது வினியோகத் திட்டம்.

    இதன்படி, முன்னுரிமை பெற்ற குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் மட்டும் ஒரு நபருக்கு, ஒரு மாதத்திற்கு ஒரு கிலோ அரிசி மூன்று ரூபாய் என்ற விதத்தில் ஐந்து கிலோ அரிசி பெறத்தகுதியுடையவர்கள் ஆவர்.

    மேலும் இந்த சட்டத்தின்படி மொத்த பயனாளிகளின் எண்ணிக்கை ஊரக மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கு மேல் செல்லக்கூடாது. இதன் அடிப்படையில் தான் தமிழ்நாட்டிற்கு அரிசியை மத்திய அரசு வழங்குகிறது.

    இந்த அரிசி போதுமானதாக இல்லை என்பதால், தமிழ்நாடு அரசு வெளிச்சந்தையிலிருந்து தனது சொந்த நிதி மூலமாக அதிக விலை கொடுத்து வாங்கி மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.

    இந்தத் திட்டத்தில் உள்ள பயனாளிகளை குறைக்கும் பொருட்டு, வருமான வரி விவரங்களை தமிழ்நாடு அரசின் உணவுத்துறை கேட்கிறதோ என்ற எண்ணம் தற்போது மக்கள் மத்தியில் நிலவுகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    ‘ஒரே நாடு, ஒரே ரே‌ஷன்’ என்ற திட்டத்தை எதிர்த்தவர் அப்போதைய எதிர்க்கட்சி தலைவர், தற்போதைய முதல்-அமைச்சர். அவ்வாறு எதிர்த்ததற்கான காரணங்களில் முக்கியமான ஒன்று அனைவருக்குமான பொது வினியோகத் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுவதுதான்.

    ஏனெனில் பிற மாநிலங்களில் இலக்கு சார்ந்த பொது வினியோகத் திட்டம் தான் பின்பற்றப்படுகிறது. இதன் மூலம் முன்னுரிமை பெற்றவர்கள் மட்டுமே பயனடைய முடியும். ஆனால் தற்போது அரசின் உணவுத்துறை எடுக்கும் நடவடிக்கையை பார்த்தால், ஒரு வேளை தமிழ்நாடு அரசு அனைவருக்குமான பொது வினியோகத் திட்டம் என்ற நோக்கத்தில் இருந்து தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கு சார்ந்த பொது வினியோகத் திட்டத்திற்கு திசை மாறுகிறதோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    பொதுவான வேண்டுகோளின் அடிப்படையில் வசதி படைத்தவர்கள் தாமாக முன்வந்து ரே‌ஷன் பொருட்களை விட்டுத்தர முன்வந்தால் அதில் யாருக்கும் எந்தவிதமான ஆட்சேபணையும் இல்லை.

    அதே சமயத்தில் வருமானத்தின் அடிப்படையில் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைத்து அனைவருக்குமான பொது வினியோகத் திட்டத்தின் நோக்கத்தையே சீர்குலைக்கும் முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டால் அதனை அ.தி.மு.க. கடுமையாக எதிர்க்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    எனவே முதல்-அமைச்சர் இதில் தனி கவனம் செலுத்தி, அனைவருக்குமான பொது வினியோகத் திட்டம் என்பது தொடர்ந்து செயல்படுத்தப்படுவதையும், அரசின் செலவினத்தை மிச்சப்படுத்துவதற்காக பயனாளிகளின் எண்ணிக்கையை வருமானத்தின் அடிப்படையில் குறைத்து இலக்கு சார்ந்த பொது வினியோகத் திட்டமாக மாற்றும் முயற்சி தடுத்து நிறுத்தப்படுவதையும் உறுதி செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


    மேட்டூர் அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்-அமைச்சர் ஸ்டாலின் படத்துடன் முதல்-அமைச்சர் மினி கிளினிக் என பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அ.தி.மு.க. அரசு சார்பில் 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டன. சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா நவப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்திலும் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டது.

    இந்தநிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு நவப்பட்டி அம்மா மினி கிளினிக் முன்புறம் இருந்த பெயர் பலகை திடீரென மாற்றப்பட்டது. பின்னர் முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்-அமைச்சர் ஸ்டாலின் படத்துடன் முதல்-அமைச்சர் மினி கிளினிக் என பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து நவப்பட்டி ஊராட்சி தலைவர் காளியம்மாள் கூறுகையில், அம்மா மினி கிளினிக் பெயர் பலகையை மாற்றம் செய்து ஊராட்சி அலுவலகம் முன் தி.மு.க.வினர் போர்டு வைத்துள்ளனர். இதற்காக ஊராட்சியில் எந்த வித அனுமதியும் பெறவில்லை. இது குறித்து உள்ளாட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

    அம்மா மினி கிளினிக் பெயர் மாற்றப்பட்டு அதில் இருந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா படம் நீக்கப்பட்டதற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து அந்த பகுதியில் அ.தி.மு.க.வினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

    நடைமுறையில் இருக்கின்ற ஒரு திட்டத்தை இரு பெயர்களில் செயல்படுத்துவது என்பது இதுவரை நடைமுறையில் இல்லாத வினோதமான ஒன்று என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்தியாவில் மாதிரி சமுதாய சமையல் கூடம் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து நேற்று புதுடெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உணவுத்துறை அமைச்சர் வருங்காலத்தில் 500 சமுதாய உணவகங்கள் “கலைஞர் உணவகம்” என்ற பெயரில் அமைக்கப்பட உள்ளதாக கூறி உள்ளார். இது அம்மா உணவகம் என்ற பெயரை இருட்டடிப்பு செய்யும் நோக்கம் கொண்டதாக, அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டதாக உள்ளது. இதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை மாநகரில் வாழும் ஏழை எளிய மக்கள், அன்றாட கூலி வேலை செய்பவர்கள், ஓட்டுநர்கள், பாரம் தூக்குபவர்கள் என குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்களும், பணி நிமித்தமாக பிற மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வந்து செல்லும் ஏழை எளிய மக்களும் பயன்பெறும் வகையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 2013-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அம்மா உணவகங்கள் படிப்படியாக பிற மாவட்டங்களுக்கும் நீட்டிக்கப்பட்டன.

    இது மட்டுமல்லாமல், சென்னையில் உள்ள பெரிய மருத்துவமனைகளிலும், மாவட்ட தலைநகரங்களில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் மற்றும் அரசு தலைமை மருத்துவமைகைளிலும் அம்மா உணவகங்கள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் ஏழை எளிய வெளிப்புற நோயாளிகள், நோயாளிகளுக்கு உதவியாக இருக்கும் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரும் பயன் அடைந்து வருகின்றனர். இன்று தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 700 அம்மா உணவங்கள் செயல்படுகின்றன.

    அம்மா உணவகம்


    அம்மா உணவகம் என்று நடைமுறையில் இருக்கின்ற ஒரு திட்டத்தை அந்தப் பெயரிலேயே விரிவுபடுத்தாமல் புதிதாக அதற்கு “கலைஞர் உணவகம்” என்று பெயர் வைப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். காலப்போக்கில், அம்மா உணவகம் என்ற திட்டத்தையே கலைஞர் உணவகம் என்று மாற்றுவதற்கான ஒரு முயற்சியாக அமைச்சரின் பேச்சு அமைந்து இருக்கிறது.

    தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று சில மாதங்களே ஆகியுள்ள நிலையில், புதிதாக திட்டங்களை தீட்டுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

    எனவே, புதிதாக தீட்டப்படும் இதுபோன்ற திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைப்பதில் அ.தி.மு.க.வுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை.

    அதே சமயத்தில் நடைமுறையில் இருக்கின்ற ஒரு திட்டத்தை இரு பெயர்களில் செயல்படுத்துவது என்பது இதுவரை நடைமுறையில் இல்லாத வினோதமான ஒன்று. இது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்றே நான் கருதுகிறேன்.

    ஏழை எளிய மக்களுக்காக குறைந்த விலையில் உணவகங்களை அமைப்பது என்பது அம்மாவின் சிந்தனையில் உதித்த ஓர் அற்புதமான திட்டம். எனவே, இந்த திட்டம் “அம்மா உணவகம்” என்ற பெயரிலேயே தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பது தான் பொதுமக்களின் விருப்பம் ஆகும்.

    எனவே முதல்-அமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, பொதுமக்களின் விருப்பத்தினை நிறைவேற்றும் வகையில், புதிதாக எத்தனை உணவகங்கள் அமைக்கப்பட்டாலும், அவை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் “அம்மா உணவகம்” என்ற பெயரிலே தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


    நாளை முதல் அ.தி.மு.க. சார்பில் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    மதுரை:
     
    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆணைக்கிணங்க மதுரை மாநகராட்சி தேர்தலில் 72 வார்டுகள் மற்றும் பேரவை பேரூராட்சி வார்டுகளில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினரிடம் இருந்து விருப்ப மனு பெறப்படுகிறது.

    இதற்காக நாளை (26-ந் தேதி) காலை 10 மணிக்கு மாவட்ட அலுவலகத்தில் விருப்பமனு விநியோகம் தொடங்குகிறது.

    வருகிற 28-ந்தேதி வரை 3 நாட்களுக்கு தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு அளிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் உட்பட்ட மதுரை மாநகராட்சி 29 வார்டுகளில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க. நிர்வாகிகள் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் 28-ந் தேதி மாலை 5 மணி வரை திருப்பரங்குன்றத்தில் உள்ள சட்ட மன்ற அலுவலகம் மற்றும் மாவட்ட அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம்.

    எனவே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் கழக நிர்வாகிகள் ஆர்வத்துடன் விருப்ப மனுஅளிக்க கேட்டுக்கொள்கிறோம்

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஒவ்வொரு முறையும் திமுக ஆட்சிக்கு வரும் பொழுதும் தமிழகம் அமைதி பூங்கா என்ற பட்டத்தை இழந்து வருவதாக எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
    சென்னை:

    தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்தே சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, திமுக-வினரால் அரசு அதிகாரிகள் மிரட்டப்படுதல், அதிகார துஷ்பிரயோகம், சமூக ஊடகவியலாளர்களை அச்சுறுத்துதல், காவல் துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் பணி செய்யும் போது சமூக விரோதிகளால் தாக்கப்படுதல் போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகியுள்ளன. 

    அந்த வரிசையில் நேற்று தாம்பரம் அருகே காவல்துறையினரின் வாகன சோதனையின் போது பட்டாக்கத்தியுடன் இளைஞர்கள் பிடிபட்டுள்ளது காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது,

    ஒவ்வொரு முறையும் திமுக ஆட்சிக்கு வரும் பொழுதும் தமிழகம் அமைதி பூங்கா என்ற பட்டத்தை இழந்து வருவதற்கு இது மற்றுமொரு எடுத்துக்காட்டு. காவல் துறையினருக்கு அம்மாவின் அரசு அளித்ததுபோல் முழு சுதந்திரத்துடன் செயல்பட அனுமதித்து சட்டம் ஒழுங்கை திமுக அரசு நிலைநாட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    பட்டாக்கத்திகளுடன் இளைஞர்கள் பிடிபட்டபோது பதிவு செய்யப்பட்ட வீடியோவையும் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    டிசம்பர் 1 ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சி தலைமை தெரிவித்துள்ளது.
    சென்னை:

    அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்  உள்கட்சி விவகாரம் குறித்து காரசாரமாக விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில், அதிமுக செயற்குழு கூட்டம் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி நடைபெறும் என்று அதிமுக தெரிவித்துள்ளது.

    டிசம்பர்  1-ம் தேதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு  ஓபிஎஸ்- ஈபிஎஸ் தலைமையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் அவைத்தலைவர் தேர்வு, உள்கட்சி தேர்தல் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படலாம் எனத்தெரிகிறது. 

    மதுரை மாவட்டத்தில் ரேசன் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும் என்று ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
    மதுரை:

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்டத்தில் உள்ள ரேசன் கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் அரிசி துர்நாற்றம் வீசுவதாகவும், சாப்பாட்டுக்கு உகந்ததாக இல்லை எனவும் கடந்த 3 மாதங்களாகவே தொடர்ந்து பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

    மாவட்டத்தில் பல இடங்களில் ஆங்காங்கே பொதுமக்கள் சாலையில் அரிசியை கொட்டி மறியலில் ஈடுபட்டு வருவது தொடர் நிகழ்வாக நடைபெற்று வருவதை மாவட்ட நிர்வாகம் கருத்தில் கொண்டு மாவட்டம் முழுவதும் விநியோகிக்கப்படுகிற அரிசியின் தரம் குறித்து முழுமையான ஆய்வை மேற்கொண்டு மக்கள் சாப்பிடுவதற்கு ஏற்றதாக தராமான அரிசியை பொது விநியோகத்திட்டதின் கீழ் விநியோகம் செய்வதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் நிலவும் பிரச்சனைகளை தீர்க்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசிற்கு உள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவித்து இருந்தது.

    இந்த வாக்குறுதியை நம்பி போக்குவரத்துத் தொழிலாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் தி.மு.க.விற்கு வாக்களித்தனர். அவர்களுடைய வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்துள்ள தி.மு.க. அதனை நிறைவேற்றாதது மன வருத்தத்தை அளிப்பதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறிவிட்டு, ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு, ஓய்வூதியர்களுக்கான பணப்பலன்கள், அகவிலைப்படி உயர்வு ஆகியவற்றை கூட வழங்காமல் நிறுத்தி வைத்திருப்பது அவர்களை ஆற்றொணாத் துயரத்தில் தி.மு.க. ஆழ்த்தியுள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால் அவர்கள் ஏளனமாகப் பேசுவதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

    அரசு போக்குவரத்துக் கழகங்களில் நிலவும் பிரச்சனைகளில் முதல்-அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    இது ஒருபுறமிருக்க, மதுரையில் இருந்து திருப்பூர் செல்லும் அரசுப் பேருந்து ஆரப்பாளையத்தல் இருந்து கிளம்பி காளவாசல் சென்று கொண்டிருந்தபோது போக்குவரத்து நெரிசல் காரணமாக பின்னால் வந்த தனியார் வாகனத்திற்கு வழி கொடுக்க இயலாத நிலையில், ஆத்திரமடைந்த தனியார் வாகன ஓட்டுநர் அரசுப் பேருந்தை முந்திச் சென்று மறித்து அரசுப் பேருந்து ஓட்டுநரை இரும்பு கம்பியால் தாக்கி கைகளில் ரத்தக் காயத்தை ஏற்படுத்தியதாக செய்தி வந்துள்ளது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.

    அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது.

    தி.மு.க. அரசு பொறுப்பேற்று 6 மாதங்கள் கடந்துள்ள நிலையில், கடன் சுமையை குறைப்பதிலும், சிக்கனத்தைக் கடைபிடிப்பதிலும், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியப் பயன்களை வழங்குவதிலும், அகவிலைப்படி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வழங்குவதிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காது மெத்தனமாக அரசு செயல்படுகின்றது. சட்டம்-ஒழுங்கும் சீரழிந்து கொண்டிருக்கிறது.

    அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் நிலவும் பிரச்சனைகளை தீர்க்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசிற்கு உண்டு.

    எனவே, முதல்-அமைச்சர் அரசு போக்குவரத்துக் கழகங்களில் நிலவும் பிரச்சனைகளை தீர விசாரித்து, போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி, ஓய்வூதியப் பயன்கள், ஊதிய உயர்வு ஆகியவற்றை வழங்கும், முறைகேடுகளைக் களையவும், கடன் சுமையை குறைக்கவும் உதிரி பாகங்கள் வாங்க நிதி ஒதுக்கவும், இலவசப் பயணம் காரணமாக நடத்துனர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பினை ஈடுகட்டவும், சட்டத்தை மீறி செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் ஆவண செய்ய வேண்டுமென்று அ.தி.மு.க. சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    பின்னலாடை தயாரிப்புக்கு மூலப்பொருளாக இருக்கும் நூலின் விலையை குறைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பின்னலாடை தயாரிப்புக்கு முக்கிய மூலப்பொருளாக இருந்து வருவது நூல் ஆகும். நூலின் பங்கு ஆடை தயாரிப்பில் இன்றியமையாததாக இருந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக நூல் விலை உயர்ந்து வருகிறது.

    இந்த விலை உயர்வால் ஆடை தயாரிப்பாளர்கள், ஏற்றுமதியாளர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

    நூல் விலை உயர்வினாலும், துணி உற்பத்திக்கான புதிய ஆர்டர் கிடைக்கப் பெறாததாலும், ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர் போன்ற மாவட்டங்களில் உள்ள விசைத்தறி நெசவாளர்கள் பல மாதங்களாக வேலையின்றி சிரமப்பட்டு வருகின்றனர்.

    விசைத்தறி ஒன்றின் விலை சுமார் ரூ. 1,10,000 ஆகும். பல மாதங்களாக வாழ்வாதாரத்திற்கான வருமானமின்றி தவிக்கும் விசைத்தறி உற்பத்தியாளர்கள், தங்களது விசைத்தறியை பழைய இரும்புக் கடையில், எடைக்கு எடை என்ற முறையில், ஒரு தறியை வெறும் ரூ. 31,000-க்கு விற்று வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இதுவும் ஓரிரு மாதங்கள் மட்டுமே தாக்கு பிடிக்கும்.

    பிறகு என்ன செய்வது என்று செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றனர். வரும் நாட்களில் கஞ்சித் தொட்டி திறப்பதைத் தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என்று தங்களது வேதனையை பகிர்கின்றனர்.

    கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு வேலை அளிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும், வசதியற்ற ஏழை, எளியவர்கள் பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்ற தீர்க்க சிந்தனையுடன் அம்மாவும், தொடர்ந்து அம்மாவின் அரசும் விலையில்லா வேட்டி, சேலைகளை வழங்கி வந்தது.

    கடந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்றினால் பெருமளவு பாதிப்படைந்திருந்த கைத்தறி மற்றும் விசைத்தறி உற்பத்தியாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், 2021-ம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகைக்கு 169.41 லட்சம் சேலைகள் மற்றும் 169.31 லட்சம் வேட்டிகள் என்று 490.27 கோடி ரூபாய் மதிப்பில் தயாரிக்க ஆர்டர் வழங்கப்பட்டு, தொடர் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டு வந்தது. ஒவ்வொரு ஆண்டும் அம்மாவின் அரசு ஜூலை மாதத்திலேயே விலையில்லா வேட்டி, சேலைக்கான ஆர்டரை வழங்கும் போது, நூலும் நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டுவிடும்.

    இதனால் குறிப்பிட்ட காலத்தில் வேட்டி, சேலைகள் தயாரிக்கும் பணி முடிக்கப்பட்டு, பொங்கலுக்கு 10 நாட்களுக்கு முன்பே பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டுவிடும்.

    ஆனால், இந்த அரசு பொறுப்பேற்றபின் விலையில்லா வேட்டி, சேலைக்கான ஆர்டர் ஆகஸ்ட் மாதம் தேதியிட்டு, இந்த நவம்பர் மாதம்தான் நெசவாளர்களுக்கு வழங்கப்பட் டுள்ளது. மேலும் முழுமையாக நூல் வழங்கப்படவில்லை. விலை உயர்வினால் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் வெளிச்சந்தையில் நூலை வாங்க முடியாமல், விலையில்லா வேட்டி, சேலையை உற்பத்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

    கைத்தறி நெசவாளர்களுக்கு மாதம் 200 யூனிட் விலையில்லா மின்சார மும், விசைத்தறி நெசவாளர்களுக்கு மாதம் 750 யூனிட் விலையில்லா மின்சாரமும் அம்மாவின் அரசால் வழங்கப்பட்டு வந்தது.

    மேலும், கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர் வேலை வழங்கும் விதமாக, கைத்தறித் துணிகளுக்கு தள்ளுபடி மானிய திட்டமும், 15 விழுக்காடு சிறப்புத் தள்ளுபடி மானியமும், மாநில அரசின் ஆறு கூட்டுறவு நூற்பாலைகளுக்கு நூலின் தரத்தை மேம்படுத்தவும், இயந்திரங்களின் திறனை மேம்படுத்தவும், கார்டு வயர்ஸ், காட்ஸ், ஏப்ரான்ஸ் மற்றும் ஸ்பின்டல்ஸ் ஆகிய உதிரி பாகங்களை மாற்றம் செய்யும் பொருட்டும் 2,076 கோடி ரூபாயை அம்மாவின் அரசு நிதி ஒப்பளிப்பு செய்து வழங்கியது.

    கைத்தறி நெசவாளர்களுக்கு 10,000 பசுமை வீடுகள் மற்றும் பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 2.10 லட்சம் ரூபாய் மானியத்துடன் வீடுகள், சுமார் 75 ஆயிரம் நெசவாளர்களுக்கு தமிழக முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் மருத்துவக் காப்பீடு, புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கை 2019 அறிவிக்கப்பட்டு புதிய சலுகைகள், கொரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் சுமார் 1.60 லட்சம் நெசவாளர்களுக்கு நிவாரணம் என்று, கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களின் தேவைகளை அம்மாவின் அரசு பூர்த்தி செய்து வந்தது.

    முக்கிய ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், கைத்தறி மற்றும் விசைத்தறி சங்கத்தினர், ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் போன்ற முக்கிய சங்கங்களை அழைத்துப் பேசி அவர்களது குறைகளைப் போக்கவும்; இறக்குமதி பஞ்சுக்கான வரியினை குறைக்கவும், மூலப்பொருள் ஏற்றுமதியினை தடை செய்யவும், நிர்வாக ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    மூலப்பொருட்களான, பஞ்சு மற்றும் நூல் ஆகியவற்றை பதுக்கி வைத்திருப்பதைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்; நூலிற்கு மானியம் வழங்க வேண்டும் என்றும்; நூல் மற்றும் பஞ்சுக்கு விதிக்கப்படும் 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியினை முழுமையாக ரத்து செய்ய, ஜி.எஸ்.டி. குழு கூட்டத்தில் வலியுறுத்த வேண்டும் என்றும், விலையில்லா வேட்டி, சேலை தயாரிப்பதற்கான நூலினை நெசவாளர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்றும், இந்த தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    சசிகலா விவகாரம் அ.தி.மு.க.வில் விவாதப் பொருளாக மாறி உள்ள நிலையில் அதுபற்றி இன்றைய கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
    சென்னை:

    அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பங்கேற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரது தலைமையில் இன்று கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10 மணியளவில் முதலில் வந்தார். அவரை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வமும் தலைமை அலுவலகத்திற்கு வந்தார்.

    இருவரையும் வாழ்த்தி தொண்டர்கள் கோ‌ஷமிட்டனர். இந்த கூட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட அனைவரும் வருகை தந்திருந்தனர்.

    நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை தழுவிய பிறகு சசிகலா தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார். பல்வேறு மாவட்டங்களில் அதிருப்தியில் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகளை அவர் போனில் தொடர்பு கொண்டும் பேசினார்.

    இது அ.தி.மு.க. வட்டாரத்திலும், அரசியல் களத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதன்பிறகு அ.தி.மு.க. பொன்விழா கொண்டாட்டத்தின் போது சசிகலா அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்கிற பெயர் பொறித்த கல்வெட்டையும் திறந்து வைத்தார்.

    பொதுச்செயலாளர் என்ற பெயரில் தொடர்ந்து அவர் அறிக்கைகளையும் விட்டுவருகிறார். அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் அதிருப்தியாளர்களிடம் போனிலும் தொடர்ந்து பேசி வருகிறார்.

    தி.நகரில் உள்ள வீட்டில் பலரும் சசிகலாவை சந்தித்தும் வருகிறார்கள். சசிகலாவுடன் இதுபோன்று தொடர்பில் இருந்தவர்கள் மீது அ.தி.மு.க. தலைமை நடவடிக்கையும் எடுத்துள்ளது.

    சசிகலா அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற பெயரில் அறிக்கை விடுவதுடன், கொடியையும் பயன்படுத்தி வருகிறார். இதுதொடர்பாக அ.தி.மு.க. சார்பில் போலீஸ் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த விவகாரங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் சசிகலா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து இருந்தனர்.

    சசிகலாவுக்கு எதிராக அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் கருத்து தெரிவித்துவரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்ப்பது பற்றி நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என்று அவர் கூறிய கருத்துக்கள் கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

    இதற்கு அ.தி.மு.க.வில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் எழுந்தன.

    சசிகலா

    இப்படி சசிகலா விவகாரம் அ.தி.மு.க.வில் விவாதப் பொருளாக மாறி உள்ள நிலையில் அதுபற்றி இன்றைய கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    இன்று கூட்டம் நிறைவு பெற்ற பிறகு இதுதொடர்பான விரிவான தகவல்களை கட்சியின் முன்னணி நிர்வாகிகள் தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க. தோல்வியை தழுவியது. இந்த நிலையில் விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் இன்றைய கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படுகிறது.

    தங்களது பகுதியில் செல்வாக்கு உள்ள நபர்கள் யார், யார் என்பது பற்றிய தகவல்களை மாவட்ட செயலாளர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகளிடம் கட்சி தலைமை கேட்டுள்ளது. அதுபோன்ற நபர்களை தேர்தலில் நிறுத்தி எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்று அ.தி.மு.க. தலைமை திட்டமிட்டுள்ளது. மேலும் இதுபோன்ற பல புதிய வியூகங்கள் இன்றைய கூட்டத்தில் வகுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.



    தமிழகத்தில் தற்போது 6 கோடியே 40 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.
    சென்னை:

    டிசம்பர் மாதத்துக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    இதையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் துரிதப்படுத்தி வருகிறது.

    இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு மாவட்ட செயலாலர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் அ.தி.மு.க.  ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகின்றனர்.

    இந்தக் கூட்டத்தில் தேர்தலுக்கான திட்டமிடல், கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைப்பது மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடக்கலாம் என தெரிகிறது. 

    ×