search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுச்சேரி"

    • கோர்ட்டில் நிலுவையில் இருந்த 624 வழக்குகளும் அடங்கும்.
    • நிகழ்ச்சியில் சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலர் அம்பிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் புதுச்சேரி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் மற்றும் காரைக்கால், ஏனாம் கோர்ட்டுகளிலும் நடந்தது.

    இதற்காக புதுச்சேரியில் 15 அமர்வுகளும், சட்டப்பணிகள் ஆணைய வளாகத்தில் ஒரு அமர்வும், ஏனாமில் ஒரு அமர்வும் செயல்பட்டது.

    இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தை தலைமை நீதிபதி சந்திரசேகரன் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலர் அம்பிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் நேரடி வழக்குகள் என 6 ஆயிரத்து 305 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 857வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இவற்றில் கோர்ட்டில் நிலுவையில் இருந்த 624 வழக்குகளும் அடங்கும்.

    இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு தொகை, நஷ்டஈடு, நிவாரணம் என மொத்தம் ரூ.5 கோடியே 70 லட்சத்து 756 உடனடியாக பட்டுவாடா செய்யப்பட்டது.

    • கடந்த சில நாட்களாக ஜிப்மர் ஊழியர்கள் குடியிருப்பில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது.
    • போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட ஜிப்மர் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கோரிமேட்டில் ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த கல்லூரி வளாகத்தில் ஜிப்மர் இயக்குனர், டீன் மற்றும் அதிகாரிகள், ஊழியர்களுக்கான குடியிருப்புகளும் உள்ளன.

    கடந்த சில நாட்களாக ஜிப்மர் ஊழியர்கள் குடியிருப்பில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் அங்கு வசிக்கும் ஊழியர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    அதுபோல் நேற்று நள்ளிரவும் மின்தடை ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஊழியர்கள் அங்குள்ள ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் தங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோரிமேடு போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட ஜிப்மர் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனையேற்று ஜிப்மர் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். நள்ளிரவில் நடந்த இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • கிரேன் மூலம் 21 அடி உயரமுள்ள விநாயகர் சிலை கடற்கரை சாலையில் இருந்து தூக்கப்பட்டு கடலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
    • சிலை கரைக்கும் நிகழ்ச்சியில் சில நிமிடங்கள் பதட்டம் ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நகரம், கிராமங்களில் விநாயகர் சதுர்த்தி பேரவை, இந்து முன்னணி சார்பில் 150 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

    இந்த விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் நேற்று தொடங்கியது. புதுவை முழுவதும் வைக்கபட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் வேன், மாட்டு வண்டிகள் மூலம் சாரம் அவ்வை திடலுக்கு கொண்டு வரப்பட்டது.

    அங்கு நிறுவப்பட்டுள்ள 21 அடி உயர விநாயகர் சிலை முன்னே செல்ல அனைத்து சிலைகளும் அணிவகுத்து பின்னே சென்றன. ஊர்வலம் செல்லும் நேருவீதி, காந்திவீதி, எஸ்.வி.படேல் சாலை வழியாக மாலை 6 மணிக்கு கடற்கரை சாலையை அடைந்தது. பிறகு விநாயகர் சிலைகளுக்கு மங்கள ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கவர்னர் கைலாஷ்நாதன், சபாநாயகர் ஏம்பலம் செல்வம், செல்வகணபதி எம்.பி. மற்றும் பலர் பங்கேற்றனர்.

    தொடர்ந்து கிரேன் மூலம் 21 அடி உயரமுள்ள விநாயகர் சிலை கடற்கரை சாலையில் இருந்து தூக்கப்பட்டு கடலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அப்போது காற்று பலமாக வீசியதால் திடீரென விநாயகர் சிலை அந்தரத்தில் மேலே சுழன்று மீண்டும் கரை பகுதிக்கு சென்றது. கடற்கரையில் கவர்னர் கைலாஷ்நாதன், சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் பொது மக்கள் நின்று கொண்டிருந்த பகுதிக்கு மேலே வந்து சுழன்றது. இதனால் அங்கிருந்த அனைவரும் அச்சமடைந்து கூச்சலிட்டதால் திடீர் பதட்டம் ஏற்பட்டது. இதனிடையே கவர்னர் கைலாஷ்நாதன் தலைக்கு மேல் கிரேனில் ஏற்றிய 21 அடி விநாயகர் சிலை 3 முறை சுழன்றது.

    இதனை உணர்ந்த போலீசார் உடனடியாக ஓடி சென்று கிரேன் ஆபரேட்டரிடம் கூறினர். கிரேன் ஆபரேட்டர் சுதாரித்து கொண்டு விநாயகர் சிலை சுழல்வதை நிறுத்தி கடல் பக்கம் திருப்பினார். அதேநேரத்தில் பாதுகாப்புடன் போலீசார் கவர்னரை அங்கிருந்து அழைத்து சென்றனர்.

    இதனால் சிலை கரைக்கும் நிகழ்ச்சியில் சில நிமிடங்கள் பதட்டம் ஏற்பட்டது. தொடர்ந்து அனைத்து விநாயகர் சிலைகளும் பாதுகாப்புடன் கடலில் கரைக்கப்பட்டன.

    • தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
    • மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை.

    சென்னை:

    வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

    அது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்திற்கு கிழக்கே ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு கிழக்கு தென் கிழக்கே நிலை கொண்டிருந்தது.

    இது மேலும் வடக்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில் நேற்றிரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

    இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று காலை கணிப்பின் படி மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து சென்று இன்று மாலைக்குள் ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள கடற்கரையை ஒடிசா புரி மற்றும் சத்தீஷ்கர் இடையே கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில் புயல் காலை 8 மணி அளவில் கரையை கடக்கத் தொடங்குயதாகவும், மேலும் 11 மணி அளவில் வடகிழக்கு பகுதியை நோக்கி நகரத் தொடங்கியதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    புயல் கரையை கடக்கும் வேளையில் புவனேஸ்வர் மற்றும் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் ஆலயம் உள்ள பகுதிகள் அனைத்தும் வெள்ளக்காடாய் மாறி உள்ளது.

    இதனால் மேலும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இடிமின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். மேலும் தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

    • பிற மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் இரட்டை குடியுரிமை சான்றிதழ் பெற்று புதுச்சேரி மாணவர்களுக்கான இடங்களை அபகரித்து வருகின்றனர்.
    • புதுச்சேரியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ஆயுஷ்மான் மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் புதுவை மாநில மாணவர்களுக்காக 64 இடங்கள் ஒதுக்கப்படுகிறது.

    இந்த இடங்களில் பிற மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் இரட்டை குடியுரிமை சான்றிதழ் பெற்று புதுச்சேரி மாணவர்களுக்கான இடங்களை அபகரித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக ஒவ்வொரு ஆண்டு புகார் தெரிவிக்கப்பட்டு அவர்களுக்கான இடங்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு அகில இந்திய மருத்துவ கவுன்சில் நடத்திய கலந்தாய்வில் புதுச்சேரி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில் பிற மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் 9 பேருக்கு இடம் ஒதுக்கப்பட்டது.

    இது புதுச்சேரி மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சமூக அமைப்பினர் புதுச்சேரி அரசிடம் அந்த பெயர்களை நீக்க நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்தனர்

    இந்த நிலையில் அகில இந்திய மருத்துவ கவுன்சில், புதுச்சேரி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில் வெளிமாநில மாணவர்களின் பெயரை நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

    இதுதொடர்பாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது-

    புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் புதுச்சேரி, காரைக்காலில் 250 இடங்கள் உள்ளன இதில் 64 இடங்கள் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்காக மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் இரட்டை குடியுரிமை பெற்று பிற மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் 9 பேர் இடம் பெற்றுள்ளதாக புகார்கள் எழுந்தது.

    இது தொடர்பாக கவர்னர் கைலாஷ்நாதன் மத்திய அரசை தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்டமாணவர்களை நீக்க நடவடிக்கை எடுத்தார்.

    அதன்படி தற்போது அந்த 9 மாணவர்களின் பெயர்களையும் தேசிய மருத்துவ ஆணையம் நீக்கியுள்ளது. இதனால் ஜிப்மரில் புதுச்சேரியை சேர்ந்த மாணவர்கள் 64 பேர் சேரும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

    புதுச்சேரியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ஆயுஷ்மான் மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளது. அனைவருக்குமான முதலமைச்சரின் மருத்துவ நிதியுதவி திட்டம் கொண்டுவரப்படும் (ரூ.5லட்சம் வரை சிகிச்சைபெற) என்று சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

    அதன்படி விரைவில் அரசு ஊழியர்கள் தவிர, அனைவருக்குமான மருத்துவ நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான கோப்புகள் தயாராகி உள்ளன. இதில் பயன்பெறுபவர்கள் நமது அரசு ஆஸ்பத்திரியின் தடையில்லா சான்றிதழை பெற்று சிகிச்சை பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் மின்சாரம் முழுவதும் இலவசமாக வழங்கப்படும்.
    • புதுச்சேரியில் வீடு உபயோகத்திற்கு மின் கட்டணம் அண்டை மாநிலங்களை விட குறைவாகவே உள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி மின்சாரச் சட்டம் 2003 பிரிவு 55-ன் விதிகளின்படி, வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு அரசு மானியம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து வீட்டு மின் நுகர்வோருக்கும் முதல் 100 யூனிட்டுக்கு 45 பைசாவும், 101 யூனிட் முதல் 200 யூனிட் வரை பயன்படுத்தும் மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டுக்கு 40 பைசாவும் மானியம் வழங்கப்படும். இந்த மானியம் 16.6.2024 முதல் இந்த நிதி ஆண்டில் நடைமுறையில் இருக்கும்.

    அதே நேரத்தில் 201-300 யூனிட் வரை நிர்ணயித்த கட்டணமான யூனிட்டுக்கு ரூ. 6-ம், 300 யூனிட்டுக்கு மேல் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் யூனிட்டுக்கு ரூ.7.50-ம் என்பது அப்படியே தொடரும்.

    மேலும் தற்போது நடைமுறையில் உள்ள மாதம் 100 யூனிட் மின்சாரம் உபயோகப்படுத்தப்படும் வீட்டு நுகர்வோர்களுக்கு 50 சதவீதம் அரசு மானியம் தொடரும். அதேபோல் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் மின்சாரம் முழுவதும் இலவசமாக வழங்கப்படும்.

    புதுச்சேரியில் 300 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் ஒவ்வொரு யூனிட் மின்சாரத்திற்கும் ரூ 7.50 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் 300 யூனிட்டுகளுக்கு மேல் உபயோகிக்கப்படும் மின்சாரத்திற்கு ரூ 9.65, 400 யூனிட்களுக்கு மேல் ரூ 10.70, 500 யூனிட்டுக்கு மேல் ரூ. 11.80 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    எனவே புதுச்சேரியில் வீடு உபயோகத்திற்கு மின் கட்டணம் அண்டை மாநிலங்களை விட குறைவாகவே உள்ளது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    மேலும் அமைச்சர் நமச்சிவாயம் தனது அறிக்கையில், புதுச்சேரி, தமிழக மின் கட்டணத்தை அட்டவணையாக வெளியிட்டு அமைச்சர் ஒப்பீடு செய்து புதுச்சேரியில் கட்டணம் குறைவு என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்தியா கூட்டணி கட்சியினர் மின் கட்டணத்தை ரத்து செய்ய கோரி ஊர்வலம் - ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் இதனை சுட்டிக்காட்டி தெரிவித்துள்ளார்.

    • வீட்டு உபயோக மின்சாரத்துக்கான கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது.
    • குடிசை தொழில், தோட்டக்கலை, பண்ணைகளுக்கான மின்சார கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் ஆண்டுதோறும் மின்கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.

    மின்துறையின் வரவு - செலவு கணக்குகளை கணக்கிட்டு கட்டணத்தை உயர்த்த கோவாவில் உள்ள இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்துறை கோரிக்கை வைக்கும்.

    ஆணையம் கட்டண உயர்வு தொடர்பாக பொது மக்களிடம் கருத்துகேட்டு கட்டணங்களை உயர்த்த அனுமதி அளிக்கும். ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் கட்டண உயர்வு வழக்கமாக அமலுக்கு வரும்.

    ஜூன் மாதம் முதல் உயர்வு இந்த நிதியாண்டிற்கான (2024-25) கட்டணத்தை நிர்ணயிக்கும் விதமாக கடந்த டிசம்பர் மாதம் மின்கட்டணத்தை உயர்த்த புதுவை மின்துறை ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தது.

    ஜனவரி மாதத்தில் இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் புதுவை வந்து பொதுமக்களிடம் கருத்து கேட்டது.

    இதனைதொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 16-ந்தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

    இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே சட்டசபை கூட்டத்தொடர் நடந்ததால் மின் கட்டணம் உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்ட மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டணமானது கடந்த ஜூன் மாதம் 16-ந்தேதி முதல், அதாவது 2 மாதம் முன்கூட்டியே நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி வீட்டு உபயோக மின்சாரத்துக்கான கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. இதுவரை 50 யூனிட் வரை உபயோகப்படுத்துபவர்களுக்கான கட்டணம் ரூ. 1.45 ஆக இருந்தது. அது ரூ.1.95 ஆக உயர்ந்துள்ளது.

    100 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கான்கட்டணம் ரூ.2.25-லிருந்து ரூ.2.70 ஆகவும், 101 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.3.25-லிருந்து ரூ.4 ஆகவும், 201 முதல் 300 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கான கட்டணம் ரூ.5.40-லிருந்து ரூ.6 ஆகவும், 301 யூனிட்டுக்கு மேல் ரூ.6.80-லிருந்து ரூ.7.50 ஆக உயர்ந்துள்ளது.

    வர்த்தகபயனபட்டிற்கான கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதேநேரத்தில் அவர்களுக்கான நிலைக்கட் டணமானது கிலோவாட் டுக்கு ரூ.75-லிருந்து ரூ.200 ஆக உயர்ந்துள்ளது. உயர் மின் அழுத்த மின்சாரத்தை பயன்படுத்துபவர்களுக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.5.60-லிருந்து ரூ.6ஆகஉயர்ந்துள்ளது. அவர்களுக்கான நிலைக் கட்டணம் ரூ. 420-லிருந்து ரூ.450 ஆக உயர்ந்துள்ளது.

    சிறு விவசாயிகளுக்கான நிலைக் கட்டணம் ரூ.20-லிருந்து ரூ.25 ஆகவும், இதர விவசாயிகளுக்கு ரூ.75- லிருந்து ரூ.100 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் குடிசை தொழில், தோட்டக்கலை, பண்ணைகளுக்கான மின்சார கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை.

    குறைந்த மின் அழுத்ததொழிற்சாலைகளுக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.6.35-லிருந்து ரூ.7 ஆகவும், உயர்மின் அழுத்ததொழிற்சாலைகளுக்கான கட்டணம் ரூ.5.45-லிருந்து ரூ.6.00 ஆகவும், நிலைக்கட்டணங்களும் கிலோவாட்டுக்கு ரூ.30 உயர்ந்துள்ளது.

    • அரசு அதிகாரிகள் மீதான புகார்கள் குறித்த விவரங்களை கேட்டுள்ளார்.
    • விசாரணை இன்னும் தொடங்காமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை அரசுத்துறை அதிகாரிகள் மீது பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த புகார்கள் தொடர்பாக விசாரணைகளும் நடைபெற்று வருகின்றன.

    சிலர் மீது துறை ரீதியிலான விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகைகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் பலர் மீதான விசாரணை இன்னும் தொடங்காமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சமீபத்தில் புதிதாக பதவி ஏற்றுள்ள கவர்னர் கைலாஷ்நாதன் அரசு அதிகாரிகள் மீதான புகார்கள் குறித்த விவரங்களை கேட்டுள்ளார். இதனால் அரசு அதிகாரிகள் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து புதுவை அரசின் சார்பு செயலாளர் கண்ணன் அரசுத்துறைகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசுத்துறைகளில் பணிபுரியும் குரூப் ஏ மற்றும் பி பிரிவு அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான வழக்குகளில் கவர்னருக்கு விரிவாக தெரிவித்திட அவசரமாக தகவல்கள் தேவைப்படுகிறது.

    எனவே அத்தகையவர்கள் குறித்த முழு விவரங்களை வருகிற 31-ந்தேதிக்குள் vigil@py.gov.in என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

    அதில் சம்பந்தப்பட்ட அதிகாரியின் பெயர், அவர் மீதான குற்றச்சாட்டு, பணியிடை நீக்கம் என்றால் எதனால்? விசாரணை அதிகாரி யார்? அந்த வழக்கின் தற்போதைய நிலை என்ன? என்பன போன்ற விவரங்களை தெரிவிக்கவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சமூக அமைப்பினரின் இந்த போராட்டம் புதுச்சேரி குடிமைப்பணி அதிகாரிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • முதலமைச்சர் ரங்கசாமியை அரசு அதிகாரிகள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் அரசிதழ் பதிவு பெறாத குரூப் 'பி' பணியிடங்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவதாக சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

    ஆனால் கடந்த 2022-ம் ஆண்டு இந்த பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போதைய இந்த அறிவிப்புக்கு அரசு சார்பு செயலாளர்கள் 2 பேர் தான் காரணம் என்று கூறி அவர்களது வீடுகளை சமூக அமைப்பினர் முற்றுகையிட்டு ஒப்பாரி போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    சமூக அமைப்பினரின் இந்த போராட்டம் புதுச்சேரி அரசு குடிமைப்பணி அதிகாரிகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    தனிப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறுவது குறித்து அவர்கள் ஒருவருக்கொருவர் அதிருப்தி தெரிவித்துக்கொண்டனர்.

    இந்த நிலையில் குடிமைப்பணி அதிகாரிகள் சங்க தலைவரான தொழில் துறை இயக்குனர் ருத்ர கவுடுவுடன் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது இதுதொடர்பாக முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து முறையிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து 80-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கோரிமேட்டில் உள்ள முதலமைச்சர் ரங்கசாமியின் வீட்டிற்கு சென்றனர். அங்கு முதலமைச்சர் ரங்கசாமியை முற்றுகையிட்டனர்.

    அப்போது முதலமைச்சர் ரங்கசாமியிடம் அரசின் அறிவிப்புக்காக தனிப்பட்ட அதிகாரிகளின் வீட்டு முன்பு போராட்டம் நடத்துவது என்பது அதிகாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், அதிகாரிகளின் குடும்பத்தினர் மிகவும் மன உளைச்சலுடன் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

    ஓய்வு பெற குறுகிய காலமே உள்ள அதிகாரிகள் இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால் விருப்ப ஓய்வு பெறும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்றும் கூறினார்கள். தங்களுக்கும் குழந்தைகள் இருப்பதால் அவர்களும் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.

    எனவே அதிகாரிகள் வீடுகள் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஜாமீனில் வர முடியாத பிரிவில் வழக்கு தொடர வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

    இதையடுத்து முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரிகள் வீடுகள் முன்பு போராட்டம் நடத்தியவர்கள் குறித்து போலீசாரை அழைத்து பேசுவதாகவும், அதிகாரிகளுக்கு எப்போதும் அரசு பாதுகாப்பாக இருக்கும் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார். முதலமைச்சர் ரங்கசாமியின் உறுதிமொழியை ஏற்று அதிகாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    முதலமைச்சர் ரங்கசாமியை அரசு அதிகாரிகள் முற்றுகையிட்ட சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 23-ந் தேதி முதல் 25-ந்தேதி வரை சர்வதேச காற்றாடி திருவிழா நடக்கிறது.
    • 40-க்கும் மேற்பட்ட காற்றாடி ஆர்வலர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் உள்ள அழகிய கடற்கரையில் நீல நிறக்கொடி சான்று பெற்ற வீராம்பட்டினம் ஈடன் கடற்கரையும் ஒன்று.

    இந்த கடற்கரையில் வரும் 23-ந் தேதி முதல் 25-ந்தேதி வரை 3 நாட்கள் சர்வதேச காற்றாடி திருவிழா நடக்கிறது. இந்த 3 நாட்களும் மதியம் 2 மணி முதல் மாலை வரை காற்றாடி திருவிழா நடக்கிறது.

    இதற்கான முன்பதிவு பட்டத்திருவிழா இணையதளத்தில் ஆன்லைனில் வரவேற்கப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், தாய்லாந்து, சுவிட்சர்லாந்து, வியட்நாம், பிரான்ஸ், ஜெர்மனி உட்பட பல நாடுகளில் இருந்து 40-க்கும் மேற்பட்ட காற்றாடி ஆர்வலர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.

    குறைந்தபட்சம் 6 அடி முதல் 19 அடி வரையிலான 120 ராட்சத காற்றாடிகள் பறக்கவிடப்பட உள்ளது. புதுவையில் பிரம்மாண்டமாக சர்வதேச அளவில் ஒருங்கிணைத்து காற்றாடி திருவிழா முதல்முறையாக நடத்தப்படுகிறது.

    12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நுழைவு கட்டணம் இல்லை. 12 வயதுக்கு மேற்பட்ட காற்றாடி விரும்பிகள் ரூ.100 செலுத்தி பங்கேற்க வேண்டும்.

    • கூட்டுறவு பதிவாளர் தீவிர விசாரணை.
    • 6,237 சங்கங்கள் அதிரடியாக கலைக்கப்பட்டுள்ளன.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் ஊழி யர்கள், உறுப்பினர்கள் நலனுக்கான கூட்டுறவு சங்கங்கள் தொடங்கப்படு கின்றன. சங்க உறுப்பினர் களிடமிருந்து நிதி திரட்டி இந்த சங்கங்கள் வழியாக கடனுதவி, நலத்திட்டங்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்கின்றன.

    இந்த கூட்டுறவு சங்கங்கள், புதுச்சேரி கூட்டுறவு சொசைட்டி சட்டத்தின் கீழ் கூட்டுறவு துறையில் பதிவு செய்யப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான சங்கங்கள், முறையாக செயல்படாமல் பெயரளவுக்கு உள்ளதாக, கூட்டுறவு துறைக்கு புகார்கள் சென்றன.

    இது தொடர்பாக கூட்டுறவு பதிவாளர் தீவிர விசாரணை நடத்தினார். இதனை யடுத்து தற்போது 86 கூட்டுறவு சங்கங்கள் அதிரடியாக கலைக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை கூட்டு றவு பதிவாளர் யஸ்வந்தையா பிறப்பித்தார்.

    இந்த பட்டியலில் புதுச்சேரி பல்கலைக்கழகம், புதுச்சேரி பொறியியல் கல்லூரி, எரிசாராய ஆலை, காவலர், சுதேசி காட்டன் மில் உள்பட பல்வேறு அரசு ஊழியர்களின் கூட்டுறவு சங்கங்களும் அடங்கியுள்ளன.

    இந்த கலைப்பு பட்டியல் அரசாணையாக பொது மக்களின் பார்வைக்காக தற்போது வெளியிடப் பட்டுள்ளன.

    புதுச்சேரியில் ஏற்கனவே கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1995-ம் ஆண்டு வரை 1256 சங்கங்களும், 1996-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரை 1512 சங்கங்களும் கலைக்கப்பட்டுள்ளன.

    கடந்த 32 ஆண்டுகளில் புதுச்சேரியில் செயல்படாத 6,237 சங்கங்கள் அதிரடியாக கலைக்கப்பட்டுள்ளன. இந்த அதிரடியை இந்திய கம்பெனியின் மாவட்ட சங்கங்களின் பதிவாளர் எடுத்து இருந்தார்.

    தற்போது அந்த வரிசையில் கூட்டுறவு பதிவாளரும் இறங்கி, கூட்டுறவு சங்கங்களை அதிரடியாக கலைத்துள்ளார். இந்த கூட்டுறவு சங்கங்கள் செயல் படுகின்றதா? என்பதை அறிய பல முறை, நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. அதற்கு முறையான பதில் வரவில்லை.

    சங்க முகவரிக்கு அனுப்பப்பட்ட கடிதங்களும் திரும்பி வந்தது. இதனையடுத்து அதிரடியாக 86 கூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்பட்டுள்ளது.

    • சமீபத்தில் புதுச்சேரி கவர்னராக கைலாஷ்நாதன் நியமிக்கப்பட்டார்.
    • புதுச்சேரியில் சூரிய மின் சக்தி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன், குஜராத் தில் சப்-கலெக்டராக பணியில் சேர்ந்து, கலெக்டர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர்.

    இவர் குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடி, முதல்-மந்திரியாக இருந்த போது, முதன்மை தலைமை செயலராக பணி புரிந்து ஓய்வு பெற்றார். ஓய்விற்கு பின்னரும், கடந்த ஜூன் மாதம் வரை முதன்மை செயலாராக பணி புரிந்தார்.

    இந்நிலையில் தான் சமீபத்தில் புதுச்சேரி கவர்னராக கைலாஷ்நாதன் நியமிக்கப்பட்டார். குஜராத்தை பொருத்தவரை, சோலார் மின் உற்பத்தியில், மின் மிகை மாநிலமாக உள்ளது.

    நாட்டிலேயே, புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திறனில் குஜராத் முன்னணியில் இருக்க முக்கிய காரணமாக விளங்கியவர் கவர்னர் கைலாஷ்நாதன்.

    இந்நிலையில் அவர் தற்போது புதுச்சேரியில் சூரிய மின் சக்தி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இங்குள்ள அனைத்து அரசு அலுவலங்களிலும், சூரிய சக்தி மின் உற்பத்தியை தொடங்க உத்தரவிட்டுள்ளார்.

    இதைத்தொடர்ந்து, இது சம்பந்தமான விரிவான திட்ட மதிப்பீடு அறிக்கையை தயாரிக்கும் பணியை, மின்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின் றனர்.

    இதையடுத்து அனைத்து அரசு அலுவலக கட்டிடங்களில், சூரிய சக்தி மின் உற்பத்தி விரைவில் தொடங்க உள்ளது. இதற்கான அனைத்து பணிகளும் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ×