search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிமங்கலம்"

    • குடிமங்கலம் நால்ரோடு வழியில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
    • சேலம், சென்னை மற்றும் வட மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்களும் இந்த வழியாக செல்கின்றன.

    உடுமலை :

    உடுமலையிலிருந்து பல்லடம் திருப்பூர் செல்லும் சாலை, பொள்ளாச்சியில் இருந்து தாராபுரம் செல்லும் சாலை ஆகியவை சந்திக்கும் முக்கியமான இடமாக குடிமங்கலம் நால்ரோடு பகுதி உள்ளது. இந்த வழியில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக உடுமலை பகுதியில் இருந்து சேலம், சென்னை மற்றும் வட மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்களும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்களும் இந்த வழியாக செல்கின்றன. மேலும் சுற்றுவட்டாரத்தில் ஏராளமான கிராமங்கள் உள்ளன வேலைக்கு செல்வோர் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கும் குடிமங்கலம் நால்ரோடு பகுதி வந்து பஸ் ஏறி செல்கின்றனர். நால்ரோடு பகுதி மிகவும் விசாலமாகவும் ரவுண்டான அமைக்கும் வகையிலும் உள்ளது இதனால் சாலை கடப்பதற்கு வேகமாக வரும் வாகனங்கள் பாதசாரிகளின் மீது மோதி விடுகின்றன.

    இங்கு போக்குவரத்து போலீசாரும் பணியில் இருப்பதில்லை. எனவே குடிமங்கலம் நால்ரோடு பகுதியில் தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நிலம் செம்மைப்படுத்தவும், இடுபொருட்களும் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
    • நிலங்களிலுள்ள முட் புதர்களை அகற்றுதல், சமன் படுத்துதல், உழவு செய்தல் ஆகிய பணிகளுக்கு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

    குடிமங்கலம் :

    குடிமங்கலம் வட்டாரத்தில், 24 கிராமங்களில் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நிலம் செம்மைப்படுத்தவும், இடுபொருட்களும் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

    இது குறித்து குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா கூறியதாவது:-

    விவசாய நிலங்கள், போதியளவு மழை பொழிவு இல்லாததாலும், தொழிலாளர் பற்றாக்குறையாலும், விவசாயம் செய்யப்படாமல், தரிசு நிலங்களாக மாறி வருகிறது. வேளாண் துறை சார்பில், வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ், தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இத்திட்டத்தின் கீழ், நிலங்களிலுள்ள முட் புதர்களை அகற்றுதல், சமன் படுத்துதல், உழவு செய்தல் ஆகிய பணிகளுக்கு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. மேலும் இந்நிலங்களில் சாகுபடி மேற்கொள்ள தேவையான விதைகள், நுண்ணுயிர் உரங்கள், நுண்ணுாட்ட உரங்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்துகளும், வேளாண் விரிவாக்க மையங்கள் வாயிலாக, மானிய விலையில் வழங்கப்படுகிறது.

    குடிமங்கலம் வட்டாரத்தில் 24 கிராமங்களில், தரிசு நில மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தரிசு நில விவசாயிகள், சிட்டா, பட்டா, ஆதார் அட்டை நகல், போட்டோ ஆகியவற்றுடன், வேளாண் அலுவலங்களை அணுகி தரிசு நிலங்களை திருத்தி விளை நிலங்களாக மாற்றி பயன்பெறலாம்.இவ்வாறு வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்தார்.

    • 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    • பெரும்பாலான கிராமங்களில், குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

    குடிமங்கலம் :

    குடிமங்கலம் ஒன்றியக்குழு சாதாரணக்கூட்டம், துணைத்தலைவர் புஷ்பராஜ் தலைமையில் நடந்தது. பி.டி.ஓ.,க்கள் சிவகுருநாதன், சாதிக்பாஷா முன்னிலை வகித்தனர்.ஒன்றிய அலுவலக செலவினங்கள், லிங்கமநாயக்கன்புதூர் முதல் சனுப்பட்டி வரையிலான ரோட்டை 78 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பித்தல் உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் திருமூர்த்திமலை கூட்டுக்குடிநீர் திட்டத்தில் சீரான வினியோகம் இல்லாததால், ஒன்றியத்துக்குட்பட்ட பெரும்பாலான கிராமங்களில், குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு நடத்தி வினியோகத்தை சீராக்க வேண்டும்.கிராமங்களில் ரோடு மேம்பாடு உள்ளிட்ட பணிகளுக்காக கவுன்சிலர்கள் வழங்கிய கருத்துரு மீது ஒன்றிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.ஒன்றிய பொது நிதியில், வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய கவுன்சிலர்கள் பேசினர்.

    • உலக மக்கள் தொகை தினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது.
    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    குடிமங்கலம் :

    குடிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் உலக மக்கள் தொகை தினம், அரசு மேல்நிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது.பள்ளித்தலைமையாசிரியர் பழனிசாமி தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரபாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    இந்த தினத்தையொட்டி ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. உதவித்தலைமை ஆசிரியர்கள் பத்மகீதா, சக்திவேல்ராஜா, ஓவிய ஆசிரியர்கள் தியாகராஜன், மாசிலாமணி, சுகாதார ஆய்வாளர் உட்பட பலர் பங்கேற்றனர்.

    • பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
    • உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

    மடத்துக்குளம்:

    அ.தி.மு.க. தலைமை கழக அலுவலகத்தின் சீலை அகற்றி சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் கொடுக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை கொண்டாடும் விதமாக குடிமங்கலம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பாக சிவசக்தி காலனியில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய கழக செயலாளர் ஆர்.முருகேசன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளரும் உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் பாசறை துணைச்செயலாளர் காரத்தொழுவு சுரேஷ்,செல்வராஜ், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் விஸ்வநாதன், ஐ.டி.விங் மாவட்ட தலைவர் சுப்பரமணியம், ஐ.டி.விங் ஒன்றிய செயலாளர் ஜாஹீர் உசேன் ,பெரியகோட்டை ஊராட்சி கிளை கழக செயலாளர்கள் இளம்பிறை எம்.சாதிக், நாகராஜ், கே.எஸ்.கே.செந்தில், ரத்தினசாமி, மணிகண்டன், மயிலாத்தாள் , பாரதி,பாபு, புஷ்பா, வரதராஜ், துரைசாமி, வைரவேல், மற்றும் கிளை கழக பொறுப்பாளர்கள் தங்கராஜ், நடராஜ் , மகாலட்சுமி , சென்டிரிங் சுப்பிரமணி , ராமசாமி , வேல்முருகன், காளிமுத்து , சிவசாமி, ஐ.டி. விங் நிர்வாகி எஸ்.ஷாஜகான் , கே.வினோத்குமார், எஸ்.ஈஸ்வரன்மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.  

    • இலவச மின்சாரத்திற்கு போராடி உயிர் நீத்த விவசாயிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டு தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    குடிமங்கலம் :

    இலவச மின்சாரத்திற்கு போராடி உயிர் நீத்த விவசாயிகளுக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி திருப்பூர் தெற்கு மாவட்டம் குடிமங்கலத்தில் நடைபெற்றது.

    இதில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகிகள், திருப்பூர் தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், அப்பிலியபட்டி பரமேஸ்வரன், ரமேஷ், வரதராஜபுரம் கிளை பொறுப்பாளர் ராஜகோபால், சுகுணா ரமேஷ், இராமச்சந்திரபுரம் ராஜ்குமார், செந்தில்குமார், முருகேஷ், கோவிந்தசாமி, சோமசுந்தரம், குமாரபாளையம் காவடி முருகேஷ், ராசு , நாச்சிமுத்து , சம்பத் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு உயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி, உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    • ஊராட்சிகளில் கடுமையான குடிநீர்தட்டுப்பாடு நிலவுகிறது.
    • அதிகாரிகள் உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குடிமங்கலம்,

    குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழுவின் சாதாரணக்கூட்டம் நடந்தது. துணைத்தலைவர் புஸ்பராஜ் தலைமை வகித்தார்.கூட்டத்தில், கவுன்சிலர்கள் ராஜமாணிக்கம் (தி.மு.க.,) தமயந்தி (அ.தி.மு.க.,) உள்ளிட்ட கவுன்சிலர்கள் பேசியதாவது:-

    பெரியபட்டி, வாகத்தொழுவு, மூங்கில்தொழுவு உள்ளிட்ட ஊராட்சிகளில் கடுமையான குடிநீர்தட்டுப்பாடு நிலவுகிறது. மக்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் தவிப்புக்குள்ளாகின்றனர். குடிநீருக்காக பல்வேறு இடங்களுக்கும் சென்று பெற வேண்டியதுள்ளது.திருமூர்த்தி அணை கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து போதுமான அளவு தண்ணீர், கிராமங்களை வந்தடைவதில்லை.குடிநீர் வடிகால் வாரியம், ஒன்றிய அதிகாரிகளிடம், பலமுறை புகார் தெரிவித்தும் கண்டுகொள்வதும் கிடையாது. மூங்கில் தொழுவில், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டும் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.

    இதனால் அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். இப்பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    அப்போது அதிகாரிகள் பதில் அளிக்கையில், குடிநீர் வடிகால் வாரிய திட்டத்தின் வாயிலாக ஊராட்சிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவு குடிநீர் நீரேற்று நிலையத்தில் இருந்து வழங்கப்படுகிறது. தற்போது தெரிவிக்கப்படும் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்துநடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    வட்டார வேளாண் உதவி இயக்குனர் திருமகள்ஜோதி, வட்டார வேளாண்மை அலுவலர் சுனில் கவுசிக் உட்பட குழுவினர் உரங்கள் இருப்பு மற்றும் விற்பனை குறித்து ஆய்வு செய்தனர்.
    குடிமங்கலம்:

    குடிமங்கலம் வட்டாரத்தில் வடகிழக்கு பருவமழைக்கு பிறகு விவசாய சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன. தென்னை, மக்காச்சோளம் மற்றும் காய்கறி சாகுபடிகளில் கூடுதல் விளைச்சல் பெற உரமிட்டு வருகின்றனர்.

    மேலும் இப்பகுதியில் பருவமழையை ஆதாரமாகக் கொண்டு 3 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக மானாவாரியாக கொண்டைக்கடலை சாகுபடி செய்யப்படும். நடப்பு சீசனில் நல்ல மழை பெய்துள்ளதால் வழக்கத்தை விட உரங்களின் தேவை அதிகரித்துள்ளது.

    அடியுரம் மற்றும் மேல் உரத்திற்கு கூடுதல் தேவை ஏற்பட்டுள்ளதால் உரங்களின் இருப்பு மற்றும் செயற்கை விலையேற்றம் குறித்தும், யூரியாவுடன் பிற உரங்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு வேளாண் துறையினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

    இதையடுத்து வட்டார வேளாண் உதவி இயக்குனர் திருமகள்ஜோதி, வட்டார வேளாண்மை அலுவலர் சுனில் கவுசிக் உட்பட குழுவினர் உரங்கள் இருப்பு மற்றும் விற்பனை குறித்து ஆய்வு செய்தனர்.

    வட்டாரத்திலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் உரங்களின் இருப்பு, விற்பனை முனைய கருவி வாயிலாக உர விற்பனை ரசீது வழங்கல், விலைப்பட்டியல் பராமரித்தல் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 

    ரபி பருவத்தில், மானாவாரியாக பல ஆயிரம் ஏக்கரில் சாகுபடி தொடங்க உள்ளதால் தட்டுப்பாடு இல்லாமல் உரங்களை இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டது. விவசாயிகள் உரத்தட்டுப்பாடு மற்றும் உர விற்பனை குறித்த புகார்களை 97884 25208 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ள வேளாண்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
    இரு நாட்களாக, ஒரு பெட்டி ஆயிரம் முதல் ரூ.1,200 வரை விற்பனையானது. சில்லரை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.120 வரை விற்பனையானது.
    குடிமங்கலம்:

    உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. சுற்றுப்பகுதிகளில் விளையும் தக்காளி உடுமலை நகராட்சி சந்தை மற்றும் புற நகர் பகுதியிலுள்ள தக்காளி மார்க்கெட்களில் ஏல முறையில் விற்பனை செய்யப்படுகிறது.

    கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தக்காளி செடிகள், காய்கள் அழுகி சாகுபடியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடி முறையில் நடவு செய்யப்பட்ட தக்காளி மட்டுமே தற்போது சந்தைகளுக்கு விற்பனைக்கு வருகிறது. 

    உடுமலை நகராட்சி சந்தைக்கு 14 கிலோ கொண்ட பெட்டிகள் சராசரியாக 30 ஆயிரம் வரை வரத்து காணப்படும். மழை காரணமாக தக்காளி வரத்து சரிந்து சந்தையிலுள்ள 32 கமிஷன் கடைகளுக்கும் தலா 20 முதல் 100 பெட்டிகள் மட்டுமே வரத்து உள்ளது.

    வரத்து குறைவு காரணமாக தினசரி தக்காளி ஏலம் பரபரப்பாக நடந்து வருகிறது. கடந்த வாரம், ஒரு பெட்டி ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. கடந்த 20-ந்தேதி புதிய உச்சமாக ரூ.1,500க்கு விற்றது. தொடர்ந்து மழை ஓரளவு குறைந்ததோடு, வெளி மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் வருகை ஓரளவு குறைந்ததால் விலை குறைய தொடங்கியது. 

    இரு நாட்களாக, ஒரு பெட்டி ஆயிரம் முதல் ரூ.1,200 வரை விற்பனையானது. சில்லரை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.120 வரை விற்பனையானது.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:

    நிலைப்பயிராக இருந்த தக்காளி செடிகள் அழுகிய நிலையில் தொடர் மழை காரணமாக புதிதாக நடவு செய்ய முடியாமலும் உள்ளது. கொடி முறையில் நடவு செய்த தக்காளி மட்டுமே தற்போது விற்பனைக்கு வருகிறது.

    கடந்த 20-ந்தேதி, ஒரு பெட்டி ரூ.1,500 வரை விற்பனையான நிலையில் போதியளவு தக்காளியும் வரத்து இல்லாததால் கேரளா மாநிலம் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் வரத்து குறைந்தது.

    இதனால் ரூ.300 வரை குறைந்து அதிகப்பட்ச விலையாக ரூ.1,200 நிலவுகிறது. மழை குறைந்து தக்காளி நடவு செய்து வரத்து வந்தால் மட்டுமே சீரான விலை நிலவ வாய்ப்புள்ளது என்றனர்.

    இந்தநிலையில் பந்தல் முறையில் தக்காளி பயிரிட்டால் பாதிப்புகளை குறைத்து விலை உயர்வை தடுக்க முடியும் என திருப்பூர் மாவட்டம் சித்தம்பலம் புதூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இவர் பந்தல் முறையில் காய்கறி சாகுபடி செய்வதில் கைதேர்ந்தவர். பலத்த மழையிலும் பயிர்கள் சேதம் அடையாத வகையில் பந்தல் முறையில் தக்காளி பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளார்.

    இதுகுறித்து பழனிசாமி கூறியதாவது:

    பருவ மழைகளின்போது காய்கறிப் பயிர்கள் சேதமடைவது இயற்கை. இதிலிருந்து பயிர்களை பாதுகாக்க நாம் முயற்சித்தால் நஷ்டத்தில் இருந்து தப்பிவிடலாம். பெரும்பாலான விவசாயிகள் சாதாரண முறையில் தக்காளி நடவு செய்கின்றனர்.

    இதனால் மழையின்போது தக்காளிகள் அழுகி வீணாகி விடுகின்றன. அவ்வாறு ஏற்பட்ட பாதிப்பு காரணமாகவே  தட்டுப்பாடு ஏற்பட்டு  தக்காளி இன்று கடும் விலை உயர்வை எட்டியுள்ளது. வரும் நாளில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    நான் நீண்ட காலமாக பந்தல் முறையில் தக்காளி சாகுபடி செய்து வருகிறேன். இதனால் பூ, காய், பழம் என எதுவும் பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு இல்லை. ஏக்கருக்கு 12, 15 டன் வரை கிடைக்கும். இம்முறையில், ஏக்கருக்கு 6 ஆயிரம் நாற்றுகள் நட முடியும்.

    பந்தல் அமைக்க ஏக்கருக்கு ரூ. 25ஆயிரம் முதல் ரூ.40ஆயிரம் வரை கூடுதல் செலவாகும். செலவைக் கருத்தில் கொண்டு விவசாயிகள் பந்தல் அமைக்க முன் வருவதில்லை. இதனால் காய்கள் அழுகி நஷ்டத்தை சந்திக்கின்றன. 

    பந்தல் முறையில் தக்காளி சாகுபடி செய்ய விவசாயிகள் முயற்சிக்க வேண்டும். தமிழக அரசு இதற்கு மானியம் வழங்கி தக்காளி சாகுபடியை ஊக்குவித்தால் விலை குறைவதுடன் பொதுமக்களுக்கும் குறைந்த விலைக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
    இனவிருத்தி செய்ய ஆயிரம் பசுக்களுக்கு ஒரு காளை மட்டுமே உள்ள நிலை காணப்படுகிறது.
    உடுமலை:

    உடுமலை சுற்றுப்பகுதியில் 62 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ளன. உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்களில் கால்நடை மருத்துவமனைகள், கால்நடை மருந்தகங்கள் மற்றும் கிளை கால்நடை மையங்கள் செயல்படுகின்றன.

    ஆனால் இனவிருத்தி செய்ய போதிய எண்ணிக்கையில் காளை மாடுகள் கிடையாது. இதனால் மாதம்தோறும் இலக்கு நிர்ணயித்து செயற்கை முறையில் கருவூட்டல் செய்யப்படுகிறது.
     
    இதுகுறித்து கால்நடைத்துறையினர் கூறியதாவது:

    இனவிருத்தி செய்ய ஆயிரம் பசுக்களுக்கு ஒரு காளை மட்டுமே உள்ள நிலை காணப்படுகிறது. இதனால் கலப்பின வகைகளை உருவாக்குவதில் பிரச்சினை ஏற்பட்டது. இதை தவிர்க்கவே கால்நடைகளுக்கு செயற்கை முறையில் கருவூட்டல் செய்யப்படுகிறது. 

    இதற்காக காளை மாடு பண்ணைகளில் இருந்து உயிரணுக்கள் சேகரிக்கப்பட்டு உயிரணுக்கள் சேமிப்பு மையத்தில் இருப்பு வைக்கப்படுகிறது. பின் அந்தந்த பகுதிகளில் உள்ள கால்நடை மருந்தகங்களுக்கு தேவையான அளவில் அனுப்பப்படுகிறது.

    உடுமலை கோட்டத்தில் மாதம்தோறும் 200 எண்ணிக்கையில் இலக்கு நிர்ணயித்து கருவூட்டல் செய்யப்படுகிறது. கர்ப்பப்பை வளர்ச்சி, ஆரோக்கியத்துடன் கூடிய உடல் அமைப்பை பெறுவதற்கு எல்லா சத்துக்கள் நிறைந்த தாது உப்புகளும் பசுக்களுக்கு அளிக்கப்படுகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
    கொசு உற்பத்தி அதிகரித்துள்ளதால் மக்களுக்கு நோய் பரவல் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது.
    குடிமங்கலம்:

    குடிமங்கலம் வட்டாரத்தில் நடப்பாண்டு நல்ல மழை பெய்துள்ளது. தொடர் மழையால் கிராம குடியிருப்புகளில் மழை நீர் தேங்கியுள்ளது. நீர் நிலைகளுக்கும் வரத்து கிடைத்துள்ளது. விளைநிலங்கள் மற்றும் சாலையோரங்களில் பசுமை திரும்பியுள்ள நிலையில் கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ளது. 

    டெங்கு காய்ச்சல் தடுப்புக்காக மேற்கொள்ளப்பட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ள நிலையில் நன்னீர் மற்றும் கழிவு நீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    வழக்கமாக பருவமழை சீசனில் காய்ச்சல் பரவும் வாய்ப்புள்ளது. கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ளதால் மக்களுக்கு நோய் பரவல் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே சுகாதாரத்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கொசு ஒழிப்பு பணிகளை மீண்டும் தீவிரப்படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    காலிபிளவர் சாகுபடியை பொறுத்தவரை மண்வளம் மட்டுமல்லாமல் பயிரிடுவதற்கான சரியான பருவம் மற்றும் சிறந்த பராமரிப்பு அவசியமாகும்.
    குடிமங்கலம்:

    குடிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் காலிபிளவர் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் ஒரு சில விவசாயிகள் சிறந்த லாபம் தரக்கூடிய காலிபிளவர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். 

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

    காலிபிளவர் சாகுபடியை பொறுத்தவரை மண்வளம் மட்டுமல்லாமல் பயிரிடுவதற்கான சரியான பருவம் மற்றும் சிறந்த பராமரிப்பு அவசியமாகும். சர்க்கரை நோயாளிகளும் சாப்பிட கூடியது மற்றும் கால்சியம் சத்து அதிகம் கொண்டது என்ற வகையில் காலிபிளவர் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. 

    இதனால் எல்லா காலத்திலும் காலிபிளவருக்கு நல்ல விலை கிடைக்கிறது. ஒரு ஏக்கரில் 15 ஆயிரம் கன்றுகள் வரை நடவு செய்யலாம். காலிபிளவரை நல்லமுறையில் பராமரித்து வந்தால் 60 நாட்களில் பூக்கத் தொடங்கும். ஒரு செடிக்கு ஒரு பூ மட்டுமே வரும். 90 நாள்களில் அறுவடை செய்யலாம்.

    அறுவடை செய்யப்படும் காலிபிளவர் உடுமலை மற்றும் பொள்ளாச்சி சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு செல்கிறோம். உழவர் சந்தையிலும் விற்பனை செய்யப்படுகிறது. காலிபிளவர் சாகுபடியை பொருத்தவரை பூக்களை அறுவடை செய்யக் கூடிய தருணத்தில் மழை பெய்ததால் பூக்கள் அழுகி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

    அதுமட்டுமல்லாமல் அசுவினி பூச்சிகள், வெட்டுப்புழுக்கள், கூட்டுப்புழு, நூற்புழு மற்றும் இலைப்புள்ளிநோய் வேர் முடிச்சு போன்றவற்றினால் காளிபிளவர் சாகுபடியில் பாதிப்பு ஏற்படும். பெதப்பம்பட்டி பகுதியில் காலிபிளவரில் நோய்த்தாக்குதல் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் மகசூல் பாதிக்கும் நிலை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
    ×