search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95579"

    • அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து நேட்டோ ராணுவ அமைப்பை உருவாக்கி செயல்பட்டு வருகின்றன.
    • தென்சீன கடல் பகுதியில் சீன ஆதிக்கம் செலுத்த முயற்சித்து வருகிறது.

    அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து நேட்டோ ராணுவ அமைப்பை உருவாக்கி செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆசியா-பசிபிக் பகுதியில் நேட்டோ போன்ற அமைப்பை உருவாக்க முயற்சிக்கக் கூடாது என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சிங்கப்பூரில் நடந்த பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்ற சீன பாதுகாப்பு மந்திரி லீ ஷங்பூ கூறும்போது, ஆசிய-பசிபிக்கில் நேட்டோ போன்ற முயற்சிகள் பிராந்திய நாடுகளில் மோதல்களை பெரிதுப்படுத்துவதற்கான ஒரு வழியாகும். இது ஆசிய-பசிபிக்கை சர்ச்சைகள் மற்றும் மோதல்களின் சுழலில் மட்டுமே மூழ்கடிக்கும்.

    இன்றைய ஆசிய-பசிபிக் பகுதிக்கு திறந்த மற்றும் உள்ளடக்கிய ஒத்துழைப்பு தேவை. அனைத்து நாடுகளின் மக்களும் இரண்டு உலக போர்கள் கொண்டு வந்த கடுமையான பேரழிவுகளை மறந்து விடக்கூடாது. இது போன்ற சோகமான வரலாறு மீண்டும் வருவதை நாம் அனுமதிக்கக் கூடாது என்றார்.

    தென்சீன கடல் பகுதியில் சீன ஆதிக்கம் செலுத்த முயற்சித்து வருகிறது. தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா கூறி வருகிறது. இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து தைவானுக்கு ஆதரவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • எலான் மஸ்கிற்கு என்ன ஆச்சு, நீண்ட நேரமாக டுவிட் இல்லையே என்ற கேள்வி எழத்தது.
    • எலான் அக்கவுண்டில் இருந்தே பதிவுகள் வெளியாகாததற்கு காரணம் அவர் தற்போது இருக்கும் இடம் தான்.

    டுவிட்டர் நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் சமீப காலமாக அடிக்கடி டுவிட் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இந்த நிலையில், சுமார் 48 மணி நேரமாக எலான் மஸ்க் அக்கவுண்டில் இருந்து டுவிட் எதுவும் காணப்படவில்லை. எலான் மஸ்கிற்கு என்ன ஆச்சு, நீண்ட நேரமாக டுவிட் எதுவும் பதிவிடவில்லையே என்ற கேள்விகள் எழத்துவங்கியது.

    திடீரென டுவிட்டர் உரிமையாளர் அக்கவுண்டில் இருந்தே பதிவுகள் வெளியாகாததற்கு காரணம் அவர் தற்போது இருக்கும் இடம் தான். எலான் மஸ்க் சென்றிருக்கும் நாட்டில் டுவிட்டர் சேவையை பயன்படுத்த முடியாது. எலான் மஸ்க் தற்போது சீனா சென்றிருக்கிறார். அங்கு டுவிட்டர் தளத்தை பயன்படுத்த முடியாது என்பதால், அவர் டுவிட் எதுவும் செய்யவில்லை.

    இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் இந்த ஆண்டு துவங்கியதில் இருந்து எலான் மஸ்க் ஒவ்வொரு நாளும் பலமுறை டுவிட் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். சமயங்களில் ஒன்றிரண்டு டுவிட்களையேனும் பதிவிட்டு வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஜூன் 2022 முதல் எலான் மஸ்க் நீண்ட நேரம் டுவிட் செய்யாமல் இருந்தது இதுவே முதல் முறை ஆகும்.

    அப்போது டுவிட்டரை வாங்குவதில் எலான் மஸ்க் குறியாக இருந்தார். இதன் காரணமாக அவர் அதிக டுவிட்களை மேற்கொள்ளவில்லை. தற்போது சீனாவில் இருப்பதால் எலான் மஸ்க் டுவிட் செய்வதை நிறுத்தி வைத்துள்ளார். சீனாவில் டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் என பல்வேறு வெளிநாட்டு சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • விண்வெளி போட்டிகள் தற்போது தீவிரம் அடைந்து வருகிறது.
    • சீனாவும், ரஷியாவும் சர்வதேச சந்திர ஆராய்ச்சி நிலையத்தை அமைக்கும் திட்டத்தை அறிவித்தன.

    பீஜிங் :

    சீனா கடந்த காலங்களில் வெற்றிகரமாக சந்திரன் மற்றும் செவ்வாய் கோளுக்கு ரோவரை அனுப்பி உள்ளது. அதேபோல் 2021-ல் சீனாவும், ரஷியாவும் சர்வதேச சந்திர ஆராய்ச்சி நிலையத்தை அமைக்கும் திட்டத்தை அறிவித்தன.

    இந்தநிலையில் விண்வெளி போட்டிகள் தற்போது தீவிரம் அடைந்து வரும் நிலையில் வருகிற 2030-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை சீனா நேற்று அறிவித்தது.

    இதன் மூலம் மனிதர்களை நிலவில் தரை இறக்குவது, நிலவினை ஆய்வு செய்தல் மற்றும் அது தொடர்பான தொழில்நுட்ப பரிசோதனைகளை மேற்கொள்வதே தனது இலக்கு என சீனா கூறி உள்ளது.

    • பெற்றோருக்கு மகளாக வாழ்வதற்கு ஒவ்வொரு மாதமும் 4 ஆயிரம் யுவான்களை நியானன் பெறுகிறார்.
    • பெற்றோருக்கு முழு நேர மகளாக செயல்படும் நியானன், அவர்களுடன் தினமும் ஒரு மணி நேரம் நடனம் ஆடுகிறார்.

    பெற்றோருக்கு மகளாக பணியாற்றுவதற்காக, தான் மேற்கொண்டு வந்த பணியை ராஜினாமா செய்த சீன பெண் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறார்.

    சீனாவை சேர்ந்த 40 வயதான நியானன் செய்தி நிறுவனம் ஒன்றில் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். 2022-ம் ஆண்டு பணியிடத்தில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டதால், ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக, இவரது மன அழுத்தம் கடுமையாக அதிகரித்து இருக்கிறது. மேலும் பணியில் எந்நேரமும் ஈடுபாடுடன் இருக்க வேண்டிய அவசியம் இருந்து வந்துள்ளது.

    இத்தகைய சவாலான சூழ்நிலையில், அவரது பெற்றோர் தலையிட்டு நியானனுக்கு உதவ முயற்சித்தனர். பொருளாதார ரீதியில் உதவி செய்வதாக பெற்றோர் நியானனிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்டு மகிழ்ச்சி அடைந்த நியானன், தான் மேற்கொண்டு வந்த பணியை ராஜினாமா செய்துவிட்டார்.

    பெற்றோருக்கு மகளாக வாழ்வதற்கு ஒவ்வொரு மாதமும் 4 ஆயிரம் யுவான்கள், இந்திய மதிப்பில் ரூ. 47 ஆயிரத்து 648 வரை சம்பளமாக வழங்க நியானன் பெற்றோர் முடிவு செய்தனர். நியானனின் பெற்றோருக்கு ஒவ்வொரு மாதமும் 10 ஆயிரம் யுவான்கள் பென்ஷன் தொகையாக கிடைக்கிறது. இந்த தொகையில் இருந்து, 4 ஆயிரம் யுவான்களை நியானனுக்கு சம்பளமாக, அவரின் பெற்றோர் கொடுக்கின்றனர்.

    கிடைக்கும் வருவாய்க்கு ஈடு செய்யும் வகையில் நியானன் தனது பெற்றோருக்கு செல்ல மகளாக இருந்து வருகிறார். பெற்றோருக்கு முழு நேர மகளாக செயல்படும் நியானன், அவர்களுடன் தினமும் ஒரு மணி நேரம் நடனம் ஆடுகிறார். இதுதவிர மளிகை சாமான் வாங்க கூட செல்கிறார். மாலை நேரங்களில் இரவு உணவு சமைக்க பெற்றோருக்கு நியானன் உதவியாக இருக்கிறார்.

    இத்துடன் மின்சாதனங்கள் சார்ந்த பணிகளை மேற்கொள்வது, பெற்றோருக்கு ஓட்டுனராக இருப்பது, ஒவ்வொரு மாதமும் குடும்பமாக வெளியில் செல்லவும், சுற்றுலா செல்லவும் திட்டமிடுவது போன்ற பணிகளை நியானன் மேற்கொண்டு வருகிறார். 

    • உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 2017-ம் ஆண்டு சி-919 என்ற விமானம் உருவாக்கப்பட்டது.
    • சுமார் 130 பயணிகளுடன் புறப்பட்ட இந்த விமானம் ஷாங்காயில் இருந்து அதன் தலைநகரான பீஜிங்குக்கு சென்றடைந்தது.

    பீஜிங் :

    சீனாவில் முதன் முதலாக பயணிகள் விமானத்தை முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சீனாவின் வணிக விமான கழகத்தால் உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 2017-ம் ஆண்டு சி-919 என்ற விமானம் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு பல கட்டமாக சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டது.

    அந்த வகையில் உயர் வெப்பநிலை, அதிக ஈரப்பதம், காற்று மற்றும் உறைபனி உள்ளிட்ட பல்வேறு இயற்கை சூழல்களில் சி-919 விமானம் சோதித்து பார்க்கப்பட்டது. இந்த சோதனைகள் வெற்றியடைந்ததையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் சிவில் விமான நிர்வாகத்தால் அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

    சி-919 என பெயரிடப்பட்ட இந்த விமானம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அரசுக்கு சொந்தமான சீனா கிழக்கு ஏர்லைன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த நிறுவனம் வணிக செயல்பாட்டை கருத்தில் கொண்டு 100 மணி நேர விமான சரிபார்ப்பு பணிகளை நிறைவு செய்தது.

    இந்த நிலையில் சி-919 விமானம் நேற்று தனது முதல் வணிக பயணத்தை தொடங்கியது. சுமார் 130 பயணிகளுடன் புறப்பட்ட இந்த விமானம் ஷாங்காயில் இருந்து அதன் தலைநகரான பீஜிங்குக்கு சென்றடைந்தது. இதனையடுத்து பீஜிங் விமான நிலையத்தில் மரியாதையின் அடையாளமாக இந்த விமானத்தின் பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு நீர் வணக்கம் செலுத்தப்பட்டது.

    இதற்கிடையே விமானத்தின் பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயல்திறன் ஆகியவை விரிவாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறியது. இதன் காரணமாக 32 வாடிக்கையாளர்களிடம் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்களை செய்வதற்கு ஆர்டர் வந்துள்ளதாக அந்த நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆணையம் தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

    இதன் மூலம் சர்வதேச சிவில் விமான சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் போயிங், ஏர்பஸ் போன்ற நிறுவனங்களுக்கு சீனா போட்டியை ஏற்படுத்தக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ஒமிக்ரான் வேரியண்டின் புதிய XBB வகை கொரோனா திரிபு மூலம் அந்நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
    • கொரோனா தொற்றின் போது ஒரே நாளில் அதிகபட்சமாக சுமார் 3.7 கோடி பேருக்கு தொற்று ஏற்பட்டது.

    சீனாவில் வேகமாக பரவி வரும் புதிய வகை கொரோனா வேரியண்டை கட்டுப்படுத்த அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை அதிகாரிகள் வேகமாக மேற்கொண்டு வருகின்றனர். ஜூன் மாத வாக்கில் புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தை அடையும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது.

    கடந்த ஏப்ரல் மாதம் முதலே, ஒமிக்ரான் வேரியண்டின் புதிய XBB வகை கொரோனா திரிபு மூலம் அந்நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை சுமார் 4 கோடி பேருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. வாரத்திற்கு அதிகபட்சம் 6.5 கோடி பேரை பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

    சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் ஜீரோ கொவிட் திட்டம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அந்நாட்டில் ஏற்படும் மிகப்பெரும் கொரோனா அலை இது ஆகும். முன்னதாக ஏற்பட்ட கொரோனா தொற்றின் போது ஒரே நாளில் அதிகபட்சமாக சுமார் 3.7 கோடி பேருக்கு தொற்று ஏற்பட்டது. இதன் மூலம் அந்நாட்டு சுகாதார துறை ஸ்தம்பித்தது.

    புதிய XBB திரிபு ஒமிக்ரான் BA.2.75 மற்றும் BJ.1 ஆகியவற்றின் ஹைப்ரிட் வேரியண்ட் ஆகும். இது BA.2.75 வேரியண்டை விட அதிவேகமாக பரவுவதோடு, நோய் எதிர்ப்பு திறனை வீரியம் கொண்டு அழிக்கும் திறன் கொண்டுள்ளது. நோய் எதிர்ப்பு மண்டலம் XBB திரிபை கண்டறிய அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். புதிய திரிபு வேகமாக செயல்பட்டு ஒருவருக்கு எளிதில் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

    கொரோனா தொற்றின் புதிய திரிபு தேசத்தில் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படும் நிலையில், இதனை எதிர்கொள்ள சீனா தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    • காமெடி நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஒரு தியேட்டரில் நிகழ்ச்சி நடந்தது.
    • பிரபல காமெடி நடிகர் லீ ஹாவ்ஷி கலந்து கொண்டு நடித்தார்.

    பீஜிங் :

    சீன தலைநகர் பீஜிங்கில் சியாகுவோ என்ற காமெடி நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஒரு தியேட்டரில் நிகழ்ச்சி நடந்தது. இதில் பிரபல காமெடி நடிகர் லீ ஹாவ்ஷி கலந்து கொண்டு நடித்தார். அப்போது அவர் சீன ராணுவம் குறித்து அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நிகழ்ச்சியை நடத்திய சியாகுவோ நிறுவனத்துக்கு சுமார் ரூ.16 கோடி அபராதம் விதித்து அந்த நாட்டின் அரசாங்கம் உத்தரவிட்டது.

    இதற்கிடையே இந்த தவறுக்கு மன்னிப்பு கோரிய லீ ஹாவ்ஷி தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் நிறுத்த போவதாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து அனைத்து நிகழ்ச்சிகளில் இருந்தும் அவரை சஸ்பெண்ட் செய்ததாக சியாகுவோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு அவரது ரசிகர்கள் `இது காமெடியை மேலும் ஒடுக்க வழிவகுக்கும்' என கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    • தைவானை தங்களது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீனா உரிமை கொண்டாடி வருகிறது.
    • சீன வெளியுறவு மந்திரி குயின் கேங் அமெரிக்க தூதர் நிக்கோலஸ் பர்ன்சை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பீஜிங்:

    தைவானை தங்களது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதற்கிடையே தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியது. அதன் ஒருபகுதியாக சீனாவின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி தைவானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதனையடுத்து தைவான் வான் எல்லைக்குள் சீனா தனது போர் விமானங்களை பறக்க விட்டு அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் சீன வெளியுறவு மந்திரி குயின் கேங் அமெரிக்க தூதர் நிக்கோலஸ் பர்ன்சை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, தைவானில் பிரிவினைவாத சக்திகளுக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்துமாறு அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்தார். மேலும் சீனாவின் பாதுகாப்பு, இறையாண்மை போன்றவற்றின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • விபத்து ஏற்பட்ட இரசாயன ஆலை ஷாங்டாங் மாகாணத்தின் லியோசெங் பகுதியில் அமைந்துள்ளது.
    • இந்த விபத்துக்கான காரணம் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

    சீனாவின் பீஜிங் நகரில் உள்ள இரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவருக்கு பலத்த காயமும், ஒருவர் காணாவில்லை என்று தகவல்கள் வெளியாகி் வருகின்றன.

    இந்த சம்பவம் இரசாயன ஆலையினுள் ஹைட்ரஜன் பெராக்சைடு உற்பத்தி செய்யும் பகுதியில் நடைபெற்று இருக்கிறது. விபத்து ஏற்பட்ட இரசாயன ஆலை ஷாங்டாங் மாகாணத்தின் லியோசெங் பகுதியில் அமைந்துள்ளது. இந்த விபத்துக்கான காரணம் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

    பயங்கர வெடி விபத்து என்ற போதிலும், இரசாயன ஆலையில் தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விட்டது. விபத்தில் காயமுற்றோருக்கு உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்து நடந்த இரசாயன ஆலையில் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. 

    • பிலிப்பைன்ஸ் கப்பல் பின்வாங்கியதால் மோதல் தவிர்க்கப்பட்டது. இது தென் சீன கடல் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
    • சீனா தனது கடல் எல்லையை தாண்டி வந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    வாஷிங்டன்:

    தென் சீனக்கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்து வருகிறது. சீனாவுக்கு எதிராக மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற நாடுகள் உள்ளன.

    இவ்விவகாரத்தில் சீனா-அமெரிக்கா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வருகிறது. சீனாவுக்கு எதிராக உள்ள நாடுகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது.

    இதற்கிடையே தென் சீன கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் எல்லை அருகே சீன கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டது. அங்கு பிலிப்பைன்ஸ் கடற்படை கப்பலும் ரோந்து சென்றது. அப்போது 2 கப்பலும் மோதுவதுபோல் அருகருகே வந்தது.

    பிலிப்பைன்ஸ் கப்பல் பின்வாங்கியதால் மோதல் தவிர்க்கப்பட்டது. இது தென் சீன கடல் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த நிலையில் சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. சர்ச்சைக்குரிய தென் சீன கடலில் ஆத்திரமூட்டும் மற்றும் பாதுகாப்பற்ற செயலை சீனா நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறும்போது, சீனா, அதன் ஆத்திரமூட்டும் மற்றும் பாதுகாப்பற்ற நடத்தையில் இருந்து விலகுமாறு கேட்டுக் கொள்கிறோம். பிலிப்பைன்ஸ் ஆயுதப்படைகள் மீதான எந்தவொரு தாக்குதலும் அமெரிக்காவை பதிலடிக்கு தூண்டும் என்றார்.

    சீனா தனது கடல் எல்லையை தாண்டி வந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    • இலங்கையிடம் இருந்து ஒரு லட்சம் குரங்குகளைக் கொள்முதல் செய்ய விரும்புவதாக சீனா தெரிவித்து உள்ளது.
    • பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து சில வகை விலங்கினங்களை சீனா கடந்த ஆண்டு நீக்கியது.

    கொழும்பு:

    டாக் மகாக் வகையைச் சேர்ந்த குரங்குகள் இலங்கையில் வசிக்கின்றன. இவை ஆபத்தின் விளிம்பில் உள்ளதாக சர்வதேச இயற்கை பாதுகாப்பு அமைப்பின் சிவப்பு பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இலங்கையிடம் இருந்து ஒரு லட்சம் குரங்குகளைக் கொள்முதல் செய்ய விரும்புவதாக சீனா தெரிவித்து உள்ளது. சீனாவின் இந்த கோரிக்கை குறித்து பரிசீலிக்குமாறு இலங்கை வேளாண்துறை அமைச்சர் மகிந்தா அமரவீரா தன் நாட்டு உயர் அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார். சீன உயிரியல் பூங்காக்களில் விடுவதற்காக குரங்குகள் தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார்.

    இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "சீனாவில் உள்ள 1,000 உயிரியல் பூங்காக்களில் விடுவதற்காக ஒரு லட்சம் குரங்குகளை அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

    எனினும் இது தொடர்பான நிதி சார்ந்த அம்சங்கள் ஏதும் தெரியவில்லை.

    சீனாவுக்கு குரங்குகளை அனுப்பி வைப்பது தொடர்பாக கடந்த 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) சிறப்பு விவாதம் நடைபெற்றது.

    இலங்கையில் குரங்குகளின் எண்ணிக்கை 30 லட்சத்தை எட்டியுள்ளதாகவும் குரங்குகள் உள்ளூரில் சாகுபடி செய்யப்படும் பயிர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பான சட்ட நடைமுறைகள் குறித்து ஒரு குழுவை அமைப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

    பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து சில வகை விலங்கினங்களை சீனா கடந்த ஆண்டு நீக்கியது. அவற்றில் அந்நாட்டின் 3 குரங்கு இனங்கள், மயில்கள் உள்ளிட்டவை அடங்கும். இதன்மூலம் அவற்றை விவசாயிகள் கொல்வதற்கு இருந்த தடை நீங்கியுள்ளது.

    இலங்கைக்கு மிகப்பெரிய அளவில் கடன் கொடுக்கும் நாடுகளில் சீனாவும் ஒன்று என்பதை மனதில் கொண்டு குரங்கள் தொடர்பான அந்நாட்டின் கோரிக்கையை இலங்கை பரிசீலிக்கும் என்று தெரிகிறது.

    • துடிப்பான கிராமங்கள் என்ற திட்டத்தை அமித் ஷா தொடங்கி வைத்தார்.
    • இந்திய அதிகாரிகளின் செயல்பாடுகள் சீனாவின் இறையாண்மையை மீறுவதாக சீனா கருத்து

    புதுடெல்லி:

    அருணாச்சல பிரதேசத்தை தங்கள் பிராந்தியத்தின் ஒரு பகுதி என கூறி வரும் சீனா, அங்குள்ள சில இடங்களுக்கு கடந்த வாரம் புதிய பெயர்களை சூட்டியது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அந்த பெயர்களை நிராகரித்தது. அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒரு அங்கம் என்றும், புதிதாக பெயர்களை கண்டுபிடித்து சூட்டுவது கள யதார்த்த நிலையை மாற்றாது என்றும் கூறியது.

    இந்த சூழ்நிலையில் அருணாச்சல பிரதேசத்தில் உள்துறை மந்திரி அமித் ஷா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். எல்லையோர கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கிபித்தூ பகுதியில் துடிப்பான கிராமங்கள் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    உள்துறை மந்திரி அமித் ஷாவின் அருணாச்சல பிரதேச பயணத்திற்கு சீனா கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது. இந்திய அதிகாரிகளின் செயல்பாடுகள் சீனாவின் இறையாண்மையை மீறுவதாகவும், இது எல்லைப் பகுதிகளில் அமைதியான சூழலுக்கு உகந்ததாக இல்லை என்றும் சீன வெளியுறத்துறை செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறினார். 

    ×