என் மலர்
நீங்கள் தேடியது "சென்னை உயர் நீதிமன்றம்"
- டெண்டர் ஒதுக்குவது தொடர்பான கொள்கை முடிவில் அறப்போர் இயக்கம் தலையிட முடியாது என வாதம்
- மலிவான விளம்பரத்திற்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பதாக எடப்பாடி தரப்பில் வாதிடப்பட்டது.
சென்னை:
2016 முதல் 2021 வரை அதிமுக ஆட்சியின்போது நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.692 கோடி இழப்பு ஏற்படுத்தி முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. அப்போது, நெடுஞ்சாலைத் துறையை கையில் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, அறப்போர் இயக்கம் சார்பில், தலைமைச் செயலாளர், லஞ்ச ஒழிப்புத்துறை ஆகியவற்றில் கடந்த ஜூலை மாதம் புகார் அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக அறப்போர் இயக்கம் சமூக வலைத்தளங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகார் குறித்த செய்திகள் மற்றும் தகவல்களை பதிவிட்டிருந்தது. இதையடுத்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷ், இணை ஒருங்கிணைப்பாளர் ஜாகீர் உசேன் ஆகியோருக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தாக்கல் செய்தார்.
அவர் தனது மனுவில், அறப்போர் இயக்கத்தின் செயல் தனது பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தக்கூடிய வகையில் இருந்ததாகவும், மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் கூறியிருந்தார். மேலும், தனக்கு எதிரான அவதூறு கருத்துக்களை பதிவு செய்வதற்கும் தன்னைப்பற்றி பேசுவதற்கும் தடை விதிக்க வேண்டும், 1.10 கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு வழங்க உத்தரவிடவேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார். விசாரணையின்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடும்போது, எந்த அடிப்படையில் டெண்டர் ஒதுக்குவது என்பது கொள்கை முடிவு, அதில் அறப்போர் இயக்கம் தலையிட முடியாது என்று குறிப்பிட்டார்.
டெண்டரில் கலந்துகொண்ட நிறுவனங்கள் சார்பில் யாரும் டெண்டரில் முறைகேடுகள் நடந்ததாக எந்த வழக்கும் தொடரவில்லை. புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் மலிவான விளம்பரத்திற்காகவும் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பதாக எடப்பாடி தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால், தங்களிடம் இருக்கும் ஆதாரங்கள் அடிப்படையிலேயே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டதாகவும், தனிப்பட்ட முறையில் எந்த குற்றச்சாட்டும் கூறவில்லை என்றும், அறப்போர் இயக்கம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். அதன்படி இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி குறித்து அறப்போர் இயக்கம் அவதுறாக பேச தடைவிதித்து நீதிபதி உத்தரவிட்டார். எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, அறப்போர் இயக்கத்திற்கு எதிராக இந்த தடை உத்தரவை நீதிபதி பிறப்பித்துள்ளார்.
மேலும், டெண்டர் முறைகேடு புகாரில் அறப்போர் இயக்கத்திற்கு எதிராக ரூ.1.10 கோடி மானநஷ்ட ஈடு கோரிய பிரதான வழக்கு தள்ளிவைக்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி குறித்து அறப்போர் இயக்கம் அவதுறாக பேச தடைவிதித்தது சென்னை உயர் நீதிமன்றம்
- புதிய நீதிபதிகள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மத்திய அரசு புதிய நீதிபதிகளை நியமிக்கும் பட்சத்தில், நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக உயரும்.
சென்னை:
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. 5 வழக்கறிஞர்கள் மற்றும் 3 நீதித்துறை அலுவலர்களை நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்திருக்கிறது. இதையடுத்து புதிய நீதிபதிகள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பரிந்துரை செய்யப்பட்ட நீதித்துறை அலுவலர்கள்:
1. பெரியசாமி வடமலை
2. ராமச்சந்திரன் கலைமதி
3. கோவிந்தராஜன் திலகவதி
பரிந்துரை செய்யப்பட்ட வழக்கறிஞர்கள்:
1. வெங்கடாச்சாரி லட்சுமிநாராயணன்
2. லெஷ்மண சந்திர விக்டோரியா கவுரி
3. பிள்ளைப்பாக்கம் பாகுகுடும்பி பாலாஜி
4. ராமசாமி நீலகண்டன்
5. கந்தசாமி குழந்தைவேலு ராமகிருஷ்ணன்
கடந்த 17ம் தேதி நடந்த கொலிஜியம் கூட்டத்தில், மேற்கண்ட பரிந்துரை தொடர்பான முடிவு எடுக்கப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் மொத்த எண்ணிக்கை 75 ஆகும். தற்போது 52 நீதிபதிகள் உள்ளனர். புதிய பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசு, நீதிபதிகளை நியமிக்கும் பட்சத்தில், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக உயரும்.
- தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது
- சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கை 75 ஆகும்
புதுடெல்லி:
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக 4 மாவட்ட நீதிபதிகளை நியமிக்கும்படி உச்ச நீதிமன்ற கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் அளித்த பரிந்துரையில் இடம்பெற்ற 4 மாவட்ட நீதிபதிகள் பெயர்கள்:
1. ஆர்.சக்திவேல்
2. பி.தனபால்
3. சின்னசாமி குமரப்பன்
4. கே.ராஜசேகர்
சென்னை உயர் நீதிமன்ற கொலிஜியம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக முதல்வர் மற்றும் தமிழக ஆளுநரின் ஒப்புதலுடன் இந்த நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரை செய்திருந்தது.
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதிகள் பணியிடங்களில் தற்போது 52 நீதிபதிகள் உள்ளனர். 4 புதிய நீதிபதிகள் பதவியேற்றால் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 56 ஆக உயரும்.
- அமைச்சர் ரகுபதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை சந்தித்து ஆலோசித்தார்.
- நீதிமன்றங்களில் எந்த தலைவர்களின் புகைப்படத்தையும் அகற்ற உத்தரவிடப்படவில்லை.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நீதிமன்ற வளாகங்களில் இனி திருவள்ளுவர், மற்றும் மகாத்மா காந்தி ஆகியோரின் உருவப்படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்றும், மற்ற தலைவர்களின் படங்கள் அகற்றப்பட வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டின் பதிவுத்துறை அனைத்து நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
உயர்நீதிமன்ற அறிவுறுத்தலில், சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் படம் இடம்பெறாததற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக அமைச்சர் ரகுபதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை சந்தித்து ஆலோசித்தார்.
அப்போது, அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்பட கூடாது என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டினை அமைச்சர் ரகுபதி கடிதமாக வழங்கினார்.
பேச்சுவார்த்தையின்போது, நீதிமன்றங்களில் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படக்கூடாது என்ற தமிழக அரசின் நிலைப்பாடு ஏற்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.
மேலும், நீதிமன்றங்களில் எந்த தலைவர்களின் புகைப்படத்தையும் அகற்ற உத்தரவிடப்படவில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
- கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் மதிப்பை விட 3 மடங்கு அதிகமாக இழப்பீடு வழங்கப்பட்டதாக என்எல்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
- அரிசிக்கும் காய்கறிக்கும் அடித்துக்கொள்வதை நம் தலைமுறையிலேயே பார்க்கத்தான் போகிறோம் என நீதிபதி கருத்து.
சென்னை:
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி 2-வது சுரங்கத்தை விரிவாக்கம் செய்வதற்காக கரிவெட்டி, கத்தாழை, மும்முடிசோழகன், வளையமாதேவி உள்ளிட்ட பகுதியில் ஏற்கனவே என்.எல்.சி.யால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் நேற்று முன்தினம் முதல் முதற்கட்ட பணியை தொடங்கியது. கால்வாய் அமைப்பதற்காக அந்த நிலத்தில் சாகுபடி செய்திருந்த பயிர்கள் பொக்லைன் எந்திரங்கள் மூலம் அழிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் தொடர் போராட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில், பயிர்கள் செழித்து வளர்ந்திருந்த நிலங்களில் என்எல்சி நிர்வாகம் பள்ளம் தோண்டியது தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் சரமாரியான கேள்விகளை எழுப்பி வேதனை தெரிவித்துள்ளது.
என்எல்சி தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி என்எல்சி நிர்வாகம் தொடர்ந்த அவசர வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது போராட்டம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்று கூறி காவல்துறை தரப்பில் வீடியோ ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்து என்எல்சி நிறுவனம் மற்றும் ஊழியர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக ஆகஸ்ட் 3ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறி வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தார்.
இதற்கிடையே கால்வாய் அமைக்கும் பணிக்காக நிலங்களை தோண்டுவது குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது, என்எல்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறும்போது, 20 வருடங்களுக்கு முன்பு கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் மதிப்பை விட 3 மடங்கு அதிகமாக இழப்பீடு வழங்கப்பட்டதாகவும், இப்போது நிலத்தை என்எல்சி நிர்வாகம் சுவாதீனம் எடுத்துக்கொள்ள உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, 20 ஆண்டுகளாக நிலத்தை சுவாதீனம் எடுக்காமல் இருந்துவிட்டு, இப்போது பயிர்கள் அறுவடை செய்யும் வரை 2 மாதம் காத்திருக்க முடியாதா? என்று கேள்வி எழுப்பினார்.
நிலத்தில் புல்டோசர் வைத்து கால்வாய் தோண்டும் பணிகளை பார்த்து அழுகையே வந்துவிட்டது. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் எனக் கூறிய வள்ளலார் பிறந்த ஊருக்கு அருகிலேயே பயிர்கள் அழிக்கப்படுவதை காண முடியவில்லை. நிலத்தை எடுப்பதற்கு ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், பயிர்கள் அழிக்கப்படுவதை ஏற்க முடியாது. நாம் உயிருடன் இருக்கும் காலத்திலேயே பெரிய பஞ்சத்தை பார்க்கப்போகிறோம். அரிசிக்கும் காய்கறிக்கும் அடித்துக்கொள்வதை நம் தலைமுறையிலேயே பார்க்கத்தான் போகிறோம். அப்படி ஒரு நிலைமை வரப்போகிறது. அப்போது இந்த நிலக்கரியெல்லாம் பயன்படாது. இதற்காக என்எல்சி கோபித்துக்கொண்டாலும் பரவாயில்லை.
கொள்ளிடம் பாயும் இடங்கள் எல்லாம் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. பஞ்சத்தின் ஆபத்தை உணராமல் தோண்டிக்கொண்டே இருக்கிறார்கள். இதுபோன்ற நிறுவனங்கள் காரணமாக, சோழநாடு சோறுடைத்து என்ற பெருமையை அந்த பகுதிகள் இழந்துவிட்டன.
பூமியை தோண்டித் தோண்டி நிலக்கரி, மீத்தேன் என ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டே இருந்தால் அந்த வெற்றிடத்தை எப்படி நிரப்புவது? என்ற கேள்வி எழுகிறது. மூன்று மடங்கு இழப்பீடு வழங்கப்பட்டிருப்பதாக என்எல்சி கூறுகிறது. ஆனால் எத்தனை மடங்கு இழப்பீடு வழங்கினாலும்கூட பணத்தை வைத்துக்கொண்டு விவசாயி என்ன பண்ணுவான்? மக்கள் பாதிக்கப்படுவதை அதிகாரிகளும் புரிந்துகொள்ளவில்லை.
இவ்வாறு நீதிபதி தண்டபாணி வேதனை தெரிவித்தார்.
- கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களில் ஒருவரான முருகன் என்பவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
- அறுவடைக்கு பின் நிலத்தை ஒப்படைப்பது குறித்து மனுதாரர் உத்தரவாதம் வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சென்னை:
நெய்வேலியில் என்.எல்.சி. கையகப்படுத்திய நிலங்களில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். தற்போது அந்த நிலத்தின் வழியாக கால்வாய் தோண்டும் பணியை என்.எல்.சி. நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இதற்காக செழித்து வளர்ந்துள்ள நெற்பயிர்கள் அழிக்கப்படுகின்றன. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், என்.எல்.சி. விரிவாக்க பணி தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. என்.எல்.சி.யால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களில் ஒருவரான முருகன் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்தார். அதில், என்.எல்.சி. கையகப்படுத்திய நிலத்தை 5 ஆண்டுகளாக என்.எல்.சி. பயன்படுத்தவில்லை என்பதால், நிலத்தை மீண்டும் விவசாயிகளிடமே ஒப்படைக்க வேண்டும். மேலும் அறுவடை முடியும் வரை விவசாயிகளுக்கு என்.எல்.சி. தொந்தரவு தரக்கூடாது என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கால்வாய் தோண்டாவிட்டால் சுரங்கத்திற்குள் வெள்ளம் புகுந்துவிடும் என்றும், 1.5 கிமீ நீளத்துக்கு சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க தயாராக இருப்பதாகவும் என்.எல்.சி. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நிலத்தை பயன்பாட்டிற்கு எடுக்காவிட்டால் மின்சார உற்பத்தி பாதிக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. செப்டம்பர் 15ம் தேதிக்குள் அறுவடை செய்து நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.
இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், நிலத்தை கையகப்படுத்தியபின் சாகுபடி செய்ய அனுமதித்தது ஏன்? அந்த நிலத்துக்கு வேலி அமைக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினர்.
மேலும், என்.எல்.சி.க்காக அரசு கையகப்படுத்திய நிலத்தில் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசு, என்.எல்.சி. நிர்வாகம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அறுவடைக்கு பின் நிலத்தை ஒப்படைப்பது குறித்து மனுதாரரும் உத்தரவாதம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பிரமாண பத்திரம், மனுதாரரின் உத்தரவாதம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறிய நீதிபதிகள், வழக்கு விசாதரணையை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்தனர்.
- இருதரப்பும் கலந்து ஆலோசித்து ஆகஸ்ட் 11ம் தேதி தெரிவிக்கும்படி உத்தரவிட்டார்.
- ஊழியர்கள் போராட்டம் நடத்த வரையறுக்கப்பட்ட இடங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவு.
சென்னை:
என்.எல்.சி. தொழிலாளர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரியும், பணிக்கு வரும் ஊழியர்களுக்கும், என்.எல்.சி. நிறுவனத்திற்கும் பாதுகாப்பு வழங்கக் கோரியும் என்.எல்.சி. தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, என்எல்சி நிர்வாகத்திற்கும் ஒப்பந்த தொழிலாளர்களுககும் இடையிலான பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியத்தை நியமிக்கலாம் என நீதிபதி யோசனை தெரிவித்தார்.
அப்போது, பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அதிகாரிகள் அடங்கிய குழு ஏற்கனவே இருப்பதாக என்.எல்.சி. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, தீர்வை விரும்புகிறீர்களா? பிரச்சனையை விரும்புகிறீர்களா? என கேள்வி எழுப்பினார். மேலும் இந்த விஷயத்தில் இருதரப்பும் கலந்து ஆலோசித்து ஆகஸ்ட் 11ம் தேதி தெரிவிக்கும்படி உத்தரவிட்டார்.
அதேசமயம், ஊழியர்கள் போராட்டம் நடத்த வரையறுக்கப்பட்ட இடங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய கடலூர் மாவட்ட எஸ்.பி.க்கு உத்தரவு பிறப்பித்தார். அறிக்கை தாக்கல் செய்ய தவறினால் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரித்தார்.
- ஆதியோகி சிலை மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டடங்களுக்கு முன் அனுமதியும், தடையில்லா சான்றும் பெறவில்லை என வாதம்.
- சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோவை நகர திட்ட இணை இயக்குனருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
கோவையில், மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளதாக வெள்ளியங்கிரி மலை பழங்குடியின பாதுகாப்பு சங்க தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியின் முன்னிலையில் வந்தது.
அப்போது, ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலை மற்றும் அருகில் உள்ள கட்டடங்களுக்கு அனுமதி பெறவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில், ஈஷா யோகா மையம் "ஆதியோகி சிலைக்கான உரிய ஆவணங்கள் தங்களிடம் உள்ளதாக" பதிலடி கொடுத்துள்ளது.
இதுகுறித்து ஈஷா மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஆதியோகி சிலைக்கான உரிய ஒப்புதல்கள் எங்களிடம் உள்ளது. அதை எங்கேயும் எப்போதும் சமர்ப்பிக்க தயாராக உள்ளோம். ஆதியோகி சிலை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய அனுமதிகளை பெற்றுள்ளோம்.
மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி அதிகாரிகள் முன் அதை சமர்பிப்போம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- மலேரியா, டெங்கு போல் சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டியது என்றார் உதயநிதி
- சனாதனம் பல கடமைகளை குடிமகன்களுக்கு வலியுறுத்துகிறது என்றார் நீதிபதி
கடந்த செப்டம்பர் 2ம் தேதியன்று சென்னையில் "முற்போக்கு எழுத்தாளர் சங்கம்" எனும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த "சனாதன எதிர்ப்பு" கூட்டத்தில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அதில் அவர், "சனாதன தர்மம் எதிர்க்கப்பட வேண்டியது அல்ல; மலேரியா, டெங்கு போல் ஒழிக்கப்பட வேண்டிய ஒரு நோய்" என பேசினார்.
உதயநிதியின் கருத்திற்கு தமிழகத்தின் ஆளும் தி.மு.க. கூட்டணியின் பல தலைவர்களிடம் இருந்து ஆதரவு கிடைத்தது. ஆனால், தமிழக எதிர்கட்சியான அ.தி.மு.க. மற்றும் மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணியின் பல தலைவர்களிடம் இருந்து எதிர்ப்பும் கிளம்பியது. தற்போது வரை இந்த சர்ச்சை ஓயவில்லை.
இது சம்பந்தமாக உதயநிதிக்கு எதிராக முதலில் உத்தர பிரதேசத்திலும், பிறகு மகராஷ்டிரத்திலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டம் கிடாரம்கொண்டான் பகுதியில் உள்ள திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியில், அக்கல்லூரி முதல்வர் சார்பாக மாணவர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில் தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த சி.என். அண்ணாதுரையின் பிறந்த நாளான நேற்று சனாதனத்திற்கு எதிராக மாணவர்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
இந்த சுற்றறிக்கை அரசியல் சாசனத்திற்கு எதிரானது என உத்தரவிடுமாறு இதனை எதிர்த்து தமிழகத்தின் இந்து முன்னணியை சேர்ந்த டி. இளங்கோவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். இவர் சார்பில் ஜி. கார்த்திகேயன் எனும் மூத்த வழக்கறிஞர் வாதாடினார். இவ்வழக்கு விசாரணையின் போது நீதிபதி என். சேஷசாயி கருத்து தெரிவிக்கும் போது:
"கருத்து சுதந்திரம் முழுமையான கட்டுப்பாடற்ற சுதந்திரமல்ல. அரசியலமைப்பு சட்டத்தின் 19-(2) பிரிவின்படி சில நியாயமான கட்டுப்பாடுகளும் அதில் விதிக்கப்பட்டுள்ளது. பொது அரங்கில் கருத்து சுதந்திரத்தை மத உணர்வு சம்பந்தமான விஷயங்களில் பயன்படுத்தும் போது எவர் மனமும் புண்படாமல் பேச வேண்டும்."
"சமூகத்தை முன்னோக்கி எடுத்து செல்லும் விதமாக கருத்து சுதந்திரம் பயன்படுத்தப்பட வேண்டும். கருத்து சுதந்திரம் வெறுப்பு பேச்சுக்கான அனுமதி அல்ல. மேலும், ஒரு குடிமகன் நாட்டிற்கும், நாட்டை ஆள்பவருக்கும், தனது பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மற்றும் ஏழை எளிய மக்களுக்கும் ஆற்ற வேண்டிய கடமையை சனாதனம் வலியுறுத்துகிறது. சனாதனத்தை அழிக்க வேண்டும் என கூறுபவர்கள் அத்தகைய கடமைகளையும் அழிக்க வேண்டும் என வலியுறுத்துகிறீர்களா? ஒவ்வொரு மதத்திற்கும் சில நம்பிக்கைகள் உள்ளன," என்று தெரிவித்தார்.
- மன்தூர் அலிகான் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- மன்சூர் அலிகான் முன் ஜாமின் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல்.
நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மன்சூர் அலிகானுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
பெண்களை இழிவுபடுத்தி பேசுதல் உள்பட 2 பிரிவுகளின் கீழ், சென்னை ஆயிரம் விரளக்கு மகளிர் போலீசார் மன்தூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்தது.
பின்னர், இந்த வழக்கில் மன்சூர் அலிகான் முன் ஜாமின் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், மன்சூர் அலிகான் தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சர்ச்சை பேச்சை தொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகான் திரிஷாவிடம் மன்னிப்பு கோரினார். தொடர்ந்து, திரிஷாவும் மன்னிப்பை ஏற்றுக்கொண்டதாக பதிவு வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நடிகை திரிஷா குறித்து பேசியது சர்ச்சையாக வெடித்தது.
- மன்சூர் அலிகான் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்க்குப்பதிவு செய்யப்பட்டது.
நடிகர் மன்சூர் அலிகான் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கூறியிருந்தார். இதற்கு நடிகை திரிஷா கண்டனம் தெரிவித்தார். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
மன்சூர் அலிகான் பேசிய கருத்து மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. இதனால் பெண்களை இழிவுப்படுத்தி பேசுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தனர். இதற்கிடையே மன்சூர் அலிகான் தன்னுடைய கருத்து வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார். நடிகை திரிஷாவும் மன்னித்ததாக தெரிவித்தார்.
இந்த நிலையில் நடிகைகள் திரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவிக்கு எதிராக மன்சூர் அலிகான் மான நஷ்டஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மூவரும் தலா ஒரு கோடி ரூபாய் வீதம் ரூ.3 கோடி வழங்க உத்தரவிட வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்துள்ளார். மன்சூர் அலிகான் தாக்கல் செய்த வழக்கு வரும் திங்கள்கிழமை நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடவடிக்கை எடுக்க வேண்டாம்- திரிஷா
நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் தொடர்பாக திரிஷா தரப்பிடம் விளக்கம் கேட்டு ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கடிதம் அனுப்பினர். இந்த விவகாரம் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என திரிஷாவுக்கு காவல்துறை அறிவுறுத்தியது.

இதையடுத்து நடிகர் மன்சூர் அலிகான் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டதால் அவர் மீது மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என நடிகை திரிஷா தெரிவித்திருந்தார். இருந்தபோதிலும் நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுத்து விட்டது.
திரிஷாவுக்கு ஆதரவாக சிரஞ்சீவி கருத்து
"நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய கண்டிக்கத்தக்க கருத்துகள் என் கவனத்திற்கு வந்தது. அவரின் இந்த மரியாதை இல்லாத அருவருக்கத்தக்கப் பேச்சு நடிகைக்கு மட்டுமல்ல எந்த பெண்ணுக்கும் நேரக்கூடாது.

இதனை கடுமையான வார்த்தைகள் கொண்டு கண்டிக்க வேண்டும். இதுபோன்ற வக்கிரமான வார்த்தைகள் பெண்களை துவண்டு போகச் செய்திடும். திரிஷாவுக்கு மட்டுமல்ல இது போன்ற மோசமான கருத்துகளை எதிர்கொள்ளும் பெண்களுக்கும் ஆதரவாக உடன் நிற்கிறேன்" என சிரஞ்சீவி குறிப்பிட்டிருந்தார்.
- ஏரிகளை பழைய நிலைக்கு மீட்கப்பட உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிவித்துள்ளது.
- கேரளா, ஆந்திரா ஆகியவற்றுடன் நீர் பங்கீடு தொடர்பாக ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளை ஆழப்படுத்தவும், ஆழ்துளை கிணறுகள் அமைக்கவும் அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், தமிழகம் முழுவதும் 2,300 ஏரிகள் உலக வங்கி உதவியுடன், ஆழப்படுத்தி பழைய நிலைக்கு மீட்கப்பட உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாத புள்ளி விவர கணக்கின்படி 20,150 ஆக்கிரமிப்புகள் அகற்றி 7,569 ஏரிகள் ஆக்கிரமிப்புகள் அற்றவையாக பராமரிக்கப்பட்டுள்ளது.
கேரளா, ஆந்திரா ஆகியவற்றுடன் நீர் பங்கீடு தொடர்பாக ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளது.
அவை மீறப்படும் பட்சத்தில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க உரிய அமைப்பை நாடி வருவதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.