என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை மாநகராட்சி"

    • பிளீச்சிங் பவுடருக்கு பதில் சுண்ணாம்பை தெளித்தாக மேயரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
    • மாநகராட்சியே கொள்முதல் செய்த பிளீச்சிங் பவுடரை தான் பயன்படுத்துகிறோம்.

    சென்னை:

    சென்னை புளியந்தோப்பு ஆடுதொட்டி பகுதியில் முதலமைச்சரின் பிறந்தநாளையொட்டி அன்னம் தரும் அமுதக்கரங்கள் என்ற அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் சேகர்பாபுவுக்கு பதிலாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கலந்து கொண்டார்.

    புளியந்தோப்பு ஆடுதொட்டி பகுதியில் அதிக அளவில் துர்நாற்றம் வீசும் என்பதால் அருகில் வைக்கப்பட்டிருந்த குப்பைகளை தூய்மை செய்து அகற்றி இருந்தனர்.

    இருப்பினும் துர்நாற்றம் அதிக அளவில் வீசியதால் அந்தப் பகுதியில் பிளீச்சிங் பவுடருக்கு பதில் சுண்ணாம்பை தெளித்தாக மேயரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    இது குறித்து பேசிய மேயர் பிரியா சென்னை மாநகராட்சியில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு மூட்டையிலும் சுண்ணாம்பு மற்றும் பிளீச்சிங் பவுடர் பாதிக்கு பாதி இருக்க வேண்டும். மாநகராட்சியே கொள்முதல் செய்த பிளீச்சிங் பவுடரை தான் பயன்படுத்துகிறோம்.

    இந்த புகார் குறித்து உரிய ஆய்வு செய்து விசாரணை நடத்தப்படும். புளியந்தோப்பு ஆடுதொட்டியின் பின்பகுதி என்பதால் துர்நாற்றம் அதிக அளவில் இருக்கும்.

    இந்த மாதிரியான பிளீச்சிங் பவுடர் எங்கிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதனுடைய தரம் குறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

    மீண்டும் அதே இடத்தில் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது. தொழிலாளி ஒருவர் பிளீச்சிங் பவுடர் மூட்டையில் கொண்டு வந்து பெண் ஒருவர் மூலமாக ஆடுதொட்டி பின்புறம் உள்ள குப்பை சேகரிக்கும் இடத்தில் தெளிக்கப்பட்டது.

    • வடசென்னை பகுதியில் 4 மேம்பால பணிகள் நடக்கிறது.
    • சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கட்டுமானத்திற்கான வரைவு வழிகாட்டுதல் வெளியிடப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் இன்று நடந்தது. துணைமேயர் மகேஷ்குமார், கமிஷனர் குமரகுருபரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரத்தில், மண்டல தலைவர் நேதாஜி கணேசன் பேசும்போது, நேதாஜி நகர், 1, 2 மற்றும் மெயின் தொகுதிகளில் மழைக் காலங்களில் மழைநீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதனால் அங்கு விரைவாக மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும். வடசென்னை பகுதியில் 4 மேம்பால பணிகள் நடக்கிறது.

    இந்த பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். கொருக்குபேட்டை மேம்பாலப் பணியை விரைவில் தொடங்க வேண்டும் என்றார். கவுன்சிலர் கதிர் முருகன் (அ.தி.மு.க.) கூறும்போது குழந்தைகள் பிறப்பு சான்றிதழில் பிழைகள் இருப்பதால் பள்ளியில் சேர்ப்பதில் பல சிரமங்கள் ஏற்படுகின்றன. இவற்றை சரி செய்ய சிறப்பு முகாம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

    அதற்கு மேயர் பிரியா பதிலளிக்கையில், மருத்துவமுகாம் நடத்துகின்றபோது அதனுடன் சேர்ந்து பிறப்பு - இறப்பு சான்றிதழ் திருத்தம் செய்வதற்கான முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

    பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கட்டுமானத்திற்கான வரைவு வழிகாட்டுதல் வெளியிடப்பட்டு உள்ளது. காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக கட்டிட கட்டுமானப் பணிகளுக்கு இந்த வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கப்படுகிறது.

    ஒரு ஏக்கர் வரை பரப்பளவு கொண்ட திட்ட தளங்களில் வெளிப்புற இடங்களில் தூசி, குப்பைகள் பரவுவதை தடுக்க தகரம், உலோக தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும். புதிய கட்டுமானம் அல்லது இடிக்கப்படும் அனைத்து கட்டமைப்புகளில் இருந்து வெளிவரும் தூசி, துகள்கள் பரவுவதை தடுக்க துணி, தார்ப்பாய், பச்சை வலையால் மூடப்பட்டு இருக்க வேண்டும்.

    கட்டுமானத்தின்போது உருவாகும் எந்த ஒரு கழிவு பொருட்களையும் திறந்த வெளியில் காற்றில் பரவுவதை தவிர்க்க மூடப்பட்ட தட்டுகள் பயன்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 18 பரிந்துரைகள் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இந்த வழிகாட்டுதல்களை மீறுபவர்கள் மீது 20 ஆயிரம் சதுர மீட்டருக்கு அதிகமான பரப்பளவு கொண்ட தளங்களில் வழிகாட்டு மீறுதல்களுக்கு ரூ.5 லட்சம் அபராதமும், 300 ச.மீ. மேல் 20 ஆயிரம் ச.மீ. பரப்பளவில் உள்ள தளங்களுக்கு ரூ.25 ஆயிரமும், 300 ச.மீ. முதல் 500 ச.மீ. பரப்பளவில் அமைந்துள்ள தளங்களுக்கு ரூ.10 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும்.

    குறைந்தபட்சம் ரூ.1000 முதல் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

    மழைக் காலங்களில் ஓட்டேரி நல்லா நீர்வழி கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய்களில் மழைநீர் தங்கு தடையின்றி சீராக செல்ல இந்த கால்வாய்களை புனரமைக்க முடிவு செய்யப்பட்டது. ஓட்டேரி நல்லா கால்வாய் பணிக்கு ரூ.65 கோடியும், விருகம்பாக்கம் கால்வாய்க்கு ரூ.30 கோடியும் செல்வாகும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.

    இந்த கால்வாய்களை சீரமைக்கும் பணிக்கு தயாரிக்கப்பட்ட திட்ட அறிக்கை மதிப்பீட்டுத் தொகை ரூ.95 கோடிக்கு அரசின் அனுமதி மற்றும் நிதி ஆதாரம் பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

    தி.நகர் தொகுதிக்கு உட்பட்ட உஸ்மான் சாலையில் கட்டப்பட்டு உள்ள புதிய மேம்பாலத்திற்கு மறைந்த மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் பெயரை சூட்டுவது, 'மாமேதை கார்ல் மார்க்ஸ்' சிலையை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் அமைக்க அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு தடையில்லா சான்றிதழ் வழங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.

    மேற்கண்ட தீர்மானம் உள்பட 236 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • 20 முதல் 40 வயதுக்குட்பட்ட பெண்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
    • தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மாநகராட்சி பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 179 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வின் மூலம் ஊழியர்களை நியமனம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. 20 முதல் 40 வயதுக்குட்பட்ட பெண்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை https://chennaicorporation.gov.in என்னும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கூடுதல் கல்வி அலுவலர், கல்வித்துறை, சத்துணவு பிரிவு, அம்மா மாளிகை பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை-600 003 என்னும் முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை மற்றும் மண்டல அலுவலகங்களில் நேரடியாகவோ வருகிற 30-ந்தேதி மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    விண்ணப்பதாரர்கள் பள்ளி மாற்றுச் சான்றிதழ், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை இருப்பிடச் சான்றிதழ், ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் அதற்கான சான்றிதழ், மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்றிதழ் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். இதில் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நேர்முகத் தேர்வின் போது தாங்கள் சமர்ப்பித்த சான்றிதழ்களின் அசல்களை கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நீல கொடி கடற்கரை திட்டத்தின் கீழ் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது.
    • பராமரிப்பு பணிகளுக்கான கட்டணத்தை மாநகராட்சியே ஈடு செய்யும்.

    மெரினா கடற்கரைக்கு செல்ல கட்டணம் வசூலிக்கப்படும் என வெளியான செய்தி தவறானது. நீல கொடி கடற்கரை திட்டத்தின் கீழ் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. பராமரிப்பு பணிகளுக்கான கட்டணத்தை மாநகராட்சியே ஈடு செய்யும் என மாநிகராட்சி ஆணையர் குமரகுருபரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    • பெரம்பூர், வில்லிவாக்கம், கள்ளிக்குப்பம் மற்றும் சைதாப்பேட்டை ஆகிய 4 இறைச்சிக் கூடங்களும் வருகின்ற வியாழக்கிழமை அன்று அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன.
    • இறைச்சிக் கூட வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறையின் (கால்நடை மருத்துவப்பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் பெரம்பூர், வில்லிவாக்கம், கள்ளிக்குப்பம் மற்றும் சைதாப்பேட்டை ஆகிய 4 இறைச்சிக் கூடங்களும் வருகின்ற 10.4.2025 (வியாழக்கிழமை) அன்று மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன. ஆகவே, இறைச்சிக் கூட வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னையில் சாலையோரங்களில் 24 மணி நேர ஏசி ஓய்வறை ஏற்பாடு செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
    • அண்ணாநகர், நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்க திட்டம்.

    சென்னையில் உணவு டெலிவரி ஊழியர்களுக்காக சாலையோரங்களில் 24 மணி நேர ஏசி ஓய்வறை ஏற்பாடு செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னை அண்ணாநகர், நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏசி ஓய்வறை அமைக்க திட்டமிட்டுள்ளது.

    கழிவறை, குடிநீர், ஸ்மார்ட்போன் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை அடங்கிய அறை மூலம் பெண் தொழிலாளர்கள் அதிக பயனடைவர்.

    • சாலை மைய தடுப்புகள், தீவுத்திட்டுகளை அழகுபடுத்தி பராமரிக்க ரூ.18 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
    • மேம்பாலங்கள் மற்றும் ரெயில்வே மேம்பாலங்களின் கீழ் அழகுப்படுத்தும் பணி ரூ.42 கோடியில் நடைபெறும்.

    2025-2026-ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் சென்னை மாநகரை அழகுபடுத்த ரூ.65 கோடி ஒதுக்கப்படுவதாக மேயர் பிரியா அறிவித்துள்ளார்.

    அதன்படி சாலை மைய தடுப்புகள், தீவுத்திட்டுகளை அழகுபடுத்தி பராமரிக்க ரூ.18 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    மாநகராட்சி நுழைவாயில்கள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் மின் ஒளியுடன் கூடிய செயற்கை நீரூற்றுகள் ரூ.5 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ளது.

    மேம்பாலங்கள் மற்றும் ரெயில்வே மேம்பாலங்களின் கீழ் அழகுப்படுத்தும் பணி ரூ.42 கோடியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னை பெருநகர மாநகராட்சியில் முதன்முறையாக 8,404.70 கோடி ரூபாய்க்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    • சென்னை மாநகராட்சியில் மேயர் பிரியா தலைமையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது.

    சென்னை மாநகராட்சியின் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம், ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நேற்று முன்தினம் நடந்தது. மேயர் பிரியா 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

    சென்னை பெருநகர மாநகராட்சியில் முதன்முறையாக 8,404.70 கோடி ரூபாய்க்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    வருவாய் செலவினம் ரூ.5,214.09 கோடி, மூலதன செலவினம் ரூ.3,190.6 கோடி என மொத்தம் ரூ.8,404.70 கோடிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் மேயர் பிரியா தலைமையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது.

    மாநகராட்சி கூட்டத்தில் பாதிக்கும் மேற்பட்ட இருக்கைகள் காலியாக உள்ளன. 100-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை. சென்னை மாநகராட்சி பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்க கவுன்சிலர்கள் ஆர்வம் காட்டவில்லை.

    பட்ஜெட் மீதான விவாதத்தில் மொத்தமுள்ள 200 கவுன்சிலர்களில் சுமார் 90 பேர் மட்டுமே மட்டுமே கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • வளர்ப்பு நாய்களால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க சென்னை மாநகராட்சி கடந்த ஆண்டு பல்வேறு கடும் கட்டுப்பாடுகளை வெளியிட்டது.
    • காலை மற்றும் மாலை நேரத்தில் நடைபயிற்சிக்கு அழைத்து வரும்போது வாய்மூடி இல்லாமலேயே அழைத்து வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னையில் வளர்ப்பு நாய் மற்றும் தெரு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் காலையில் நடைபயிற்சி செல்பவர்களும், சாலையில் செல்லும் பொதுமக்களும் அச்சத்துடனே செல்கின்றனர். இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை கும்பலாக சேர்ந்து நாய்கள் துரத்துவதால் விபத்துகளும் ஏற்படுகிறது. இதில், வளர்ப்பு நாய்களால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க சென்னை மாநகராட்சி கடந்த ஆண்டு பல்வேறு கடும் கட்டுப்பாடுகளை வெளியிட்டது.

    நாய் வளர்ப்பவர்கள் சாலையில் அழைத்துச்செல்லும் போது நாய்களுக்கு வாய்மூடி கட்டாயம் அணிவிக்க வேண்டும். ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்த வேண்டும். கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும். வளர்ப்பு நாய்கள் கடித்தால் அதன் உரிமையாளர்களே பொறுப்பு ஆகிய கட்டுப்பாடுகளை விதித்தது. இதற்கிடையே கருத்தடை, வெறிநாய் கடி தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், சென்னை மாநகராட்சியின் இந்த உத்தரவுகளை பெரும்பாலான நாய் வளர்ப்பவர்கள் கடைபிடிக்கவில்லை.

    காலை மற்றும் மாலை நேரத்தில் நடைபயிற்சிக்கு அழைத்து வரும்போது வாய்மூடி இல்லாமலேயே அழைத்து வருகிறார்கள். இதுகுறித்து மாநகராட்சிக்கு தொடர் புகார்கள் வந்தது. எனவே, மாநகராட்சியின் உத்தரவை கடுமையாக அமல்படுத்தும் வகையில் நடைபயிற்சி செல்லும் போதும், பொது இடங்களுக்கு அழைத்து வரும் போதும் வளர்ப்பு நாய்களுக்கு வாய்மூடி அணிவிக்காவிட்டால் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து சென்னை மாநகராட்சி ஆலோசித்து வருகிறது.

    இதுகுறித்து சென்னை மாநகராட்சி கால்நடைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    வளர்ப்பு நாய்களுக்கு 'மைக்ரோசிப்' பொருத்துவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில், கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட உத்தரவுகளை கடுமையாக பின்பற்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்படும். அதாவது, உரிமம் பெறுவது, ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவது, வாய்மூடி அணிவது ஆகியவற்றை பின்பற்ற வலியுறுத்தப்படும். பொது இடங்களுக்கு அழைத்துவரப்படும் வளர்ப்பு நாய்களுக்கு வாய்மூடி அணிவிக்காவிட்டால் நாயின் உரிமையாளர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிப்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. வழிகாட்டு நெறிமுறைகளில் அபராதம் குறித்து தெரிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தெருக்களில் செல்லும் பொதுமக்களை விரட்டி சென்று நாய் கடித்து குதறுகிறது.
    • தெரு நாய்களை கொல்லக்கூடாது என்பதால் கருத்தடை செய்து மீண்டும் அந்த பகுதியிலேயே விடப்படுகிறது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் நேரமில்லா நேரத்தில் கவுன்சிலர்கள் பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது 134-வது வார்டு பா.ஜனதா கவுன்சிலர் உமா சரமாரி கேள்விகளை எழுப்பினார். அவர் பேசியதாவது:-

    சென்னையில் தெரு நாய்களின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெருக்களில் செல்லும் பொதுமக்களை விரட்டி சென்று கடித்து குதறுகிறது. சிறுவர்கள் நாய்க்கடியால் பாதிக்கப்படுகிறார்கள்.

    தெரு நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. கருத்தடை செய்த பிறகும் தெரு நாய்களின் பெருக்கம் அதிகரிப்பது ஏன்?

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதற்கு கமிஷனர் ககன்தீப்சிங் பேடி பதில் அளித்து கூறியதாவது:-

    புதியமன்ற கூட்டம் கூடிய பிறகு தெரு நாய்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. சிங்காரச் சென்னை திட்டத்தின் கீழ் தெரு நாய்களின் இன உற்பத்தியை தடுக்க சிகிச்சை மையங்கள் மேம்படுத்தப்படுகிறது. கண்ணம்மாபேட்டை கால்நடை மருத்துவ மையத்துக்கு ரூ.7 கோடி, லாயிட்ஸ் காலனியில் உள்ள மையத்துக்கு ரூ.6 கோடியே 64 லட்சம், புளியந்தோப்பில் உள்ள சிகிச்சை மையத்துக்கு ரூ.6 கோடியே 23 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

    இது தவிர மீனம்பாக்கம், சோழிங்கநல்லூரில் கிளை மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரூ.20 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டு தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தெரு நாய்களை கொல்லக்கூடாது என்பதால் கருத்தடை செய்து மீண்டும் அந்த பகுதியிலேயே விடப்படுகிறது. வாரத்திற்கு 400 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்க முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.
    • மீறும் நபர்களுக்கு அபராதம் விதித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னை மாநகரைத் தூய்மையாகவும், அழகுடனும் பராமரிக்க சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    சென்னை மாநகரைத் தூய்மையாகப் பராமரிக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மையின் கீழ் பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும், சென்னை மாநகரில் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு, அவ்விடங்களில் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும், வரலாற்று சிறப்புகளையும் குறிக்கும் வகையிலான வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு அழகுபடுத்தப்பட்டு வருகின்றன.

    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 16.10.2022 முதல் 29.10.2022 வரை பொது இடங்களில் குப்பை கொட்டிய நபர்களுக்கு ரூ.8 லட்சத்து 48 ஆயிரத்து 400 அபராதமும், கட்டுமானக் கழிவுகளை கொட்டிய நபர்களுக்கு ரூ.7 லட்சத்து 28 ஆயிரத்து 900 அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.

    மேலும், அரசு, மாநகராட்சி கட்டிடங்கள் மற்றும் பொது இடங்களில் விதிகளை மீறி சுவரொட்டி ஒட்டிய 318 நபர்களுக்கு ரூ.1 லட்சத்து 31 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டும், காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.17 லட்சத்து 8 ஆயிரத்து 800 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

    எனவே, பொதுமக்கள் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டுதல், பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுதல் ஆகியவற்றைத் தவிர்த்து சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்க முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். இதனை மீறும் நபர்களுக்கு அபராதம் விதித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 2-ம் அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்த காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
    • வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்த டிசம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

    சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்ட விதிகளின்படி ஒவ்வொரு அரையாண்டின் தொடக்கத்தின் முதல் 15 தினங்களுக்குள் சொத்துவரி செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு செலுத்தப்படும் சொத்து வரியில் 5 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

    2022-23-ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் சொத்துவரி சீராய்வு செய்யப்பட்ட நிலையில், தற்போது 2-ம் அரையாண்டுக்கான சொத்துவரி சீராய்வின்படி, சொத்து உரிமையாளர்களால் 1.10.22 முதல் செலுத்தப்பட்டு வருகிறது.

    சொத்துவரி சீராய்வின்படி உயர்த்தப்பட்ட சொத்து வரியினை செலுத்தாத சொத்து உரிமையாளர்கள் சொத்து வரியினை தனி வட்டி இல்லாமல் செலுத்துவதற்கு 15.11.2022 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இதன்படி உயர்த்தப்பட்ட சொத்து வரியினை 5 லட்சத்து 92 ஆயிரம் சொத்து உரிமையாளர்கள் நிலுவை இல்லாமல் செலுத்தி உள்ளனர்.

    இந்நிலையில், சொத்து உரிமையாளர்களின் நலன் கருதி, உயர்த்தப்பட்ட சொத்து வரியினை இதுநாள்வரை செலுத்தாதவர்கள், வட்டி இல்லாமல் செலுத்த டிசம்பர் 15-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    எனவே, இதுவரை சொத்து வரியை செலுத்தாத சொத்து உரிமையாளர்கள், இந்த வாய்ப்பினை பயன்படுத்தி டிசம்பர் 15-ந் தேதிக்குள் சொத்துவரியை செலுத்தி 2 சதவீத தனி வட்டியினை தவிர்க்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×