search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sore Throat"

    • சில நாட்களாகவே மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
    • பலர் சளி, இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் கடந்த சில நாட்களாகவே மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் சாரல் மழையும் பெய்கிறது. இந்த பருவ நிலை மாற்றம் காரணமாக சென்னையில் வசிக்கும் பலர் சளி, இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதையடுத்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    வழக்கமாக மருத்துவமனைகளுக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகளை விட தற்போது 2 மடங்கு நோயாளிகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

    இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னையில் சமீபகாலமாகவே பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் பலத்த மழையும் பெய்கிறது. இதனால் பொதுமக்கள் பலர் சளி, இருமல், தொண்டை வலி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மாநகராட்சி நகர்ப்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், தனியார் கிளீனிக்குகள் போன்றவற்றில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    பருவ நிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் காரணமாக சென்னை முழுவதுமே காய்ச்சல் பாதிப்பு பரவலாக உள்ளது. எனவே பொதுமக்கள் குடிநீரை நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

    வெளியில் உணவு வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதன்மூலம் பருவநிலை காரணமாக பரவும் காய்ச்சல் பாதிப்பில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • தினமும் இரண்டு முறை பல் துலக்க வேண்டும்.
    • சாப்பிட்டு முடித்தவுடன் வாயை நன்றாக கொப்பளிப்பது அவசியம்.

    வாய் துர்நாற்றம் என்பது மூச்சு விடும் போது வாயில் இருந்து வெளிப்படும் ஒரு விரும்பத்தகாத வாடை அல்லது உணர்வாகும். இதற்கு பெரும்பாலும் வாய் அசுத்தம் காரணமாக இருந்தாலும் சில சமயங்களில் நோய்களை வெளிப்படுத்தும் அறிகுறியாகவும் இருக்கிறது. பல் இடுக்குகளில் அதிக உணவுத் துகள்கள் தங்குதல், மோசமான வாய் சுகாதாரம், புகைப்பழக்கம், மதுப்பழக்கம், நீர்ச்சத்து குறைபாட்டால் வாய் வறட்சி ஆகியவை பொதுவான காரணங்களாகும்.

    சர்க்கரை நோய், குடல் புண், ஈறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் (ஈறு தொற்று, சீழ்) பல் சிதைவு, தொண்டை அழற்சி, செரிமானக்கோளாறு, நுரையீரல் பிரச்சினை, மன அழுத்தம் ஆகியவை மருத்துவக் காரணங்களாக கண்டறியப்பட்டுள்ளன. அதிக மசாலா கலந்த உணவுகளை (பூண்டு, வெங்காயம்) உண்ணும் போது அவை வாய் துர்நாற்றத்தை அதிகரிக்கச் செய்கிறது.

     சர்க்கரை நோயாளிகளுக்கு ஈறுகளில் தொற்று மற்றும் வாய் வறட்சி ஏற்படுவதாலும், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகும் போது உடலில் குளுக்கோஸ் ஆற்றலை பயன்படுத்தாமல் கொழுப்பை ஆற்றலாக பயன்படுத்த முயற்சிக்கும் போது கீட்டோன்ஸ் அதிகரிப்பதாலும் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு திறன் குறைவாக இருப்பதால் வாயில் பாக்டீரியா தொற்று அதிகரித்து வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கு ஒரு காரணமாக விளங்குகிறது. சர்க்கரை நோயாளிகள் வாய் துர்நாற்றம் ஏற்படாமல் இருக்க கீழ்க்கண்டவற்றை பின்பற்றலாம்:

     தினமும் இரண்டு முறை (காலை தூங்கி எழுந்தவுடன் மற்றும் இரவு தூங்குவதற்கு முன்) பல் துலக்க வேண்டும். சாப்பிட்டு முடித்தவுடன் வாயை நன்றாக கொப்பளிப்பது, தினமும் நாக்கைச் சுத்தம் செய்வது அவசியம். வாய் வறட்சி ஏற்படாமல் இருக்க நிறைய தண்ணீர் குடியுங்கள். மருத்துவரின் ஆலோசனை பெற்று குளோர்ஹக்ஸிடின் கொப்பளிப்பான் பயன்படுத்தலாம். ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

    • அரசு ஆஸ்பத்திரிகளில் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளில் இரவு 11 மணி வரை கூட்டம் அதிகமாக உள்ளது.
    • தற்போது தேர்வு காலம் தொடங்கி இருப்பதால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

    சென்னை:

    கோடை வெயிலின் தாக்கம் இப்போதே அதிகரிக்க தொடங்கி விட்டது. கடந்த மாதம் வரை பனி, குளிர் இருந்த நிலையில் பருவ நிலை மாற்றத்தின் காரணமாக சென்னையில் வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருகிறது.

    சளி, வறட்டு இருமல், தொண்டை வலியுடன் காய்ச்சல் பாதிப்பு ஏற்படு கிறது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். காய்ச்சல்விட்டாலும் வறட்டு இருமல் ஒரு வாாரம் வரை தாக்குகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சளி, இருமலுடன் காய்ச்சல் பாதித்தவர்கள் மருத்துவமனைகளில் அதிகளவில் சிகிச்சை பெறுவதை காண முடிகிறது.

    அரசு ஆஸ்பத்திரிகளில் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளில் இரவு 11 மணி வரை கூட்டம் அதிகமாக உள்ளது. முதியவர்களுக்கு கை-கால் வலியுடன் காய்ச்சல் ஏற்படுகிறது. தற்போது தேர்வு காலம் தொடங்கி இருப்பதால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

    பெரும்பாலானவர்கள் முதலில் சளி, இருமலால் பாதிக்கப்பட்டு பின்னர் வைரஸ் காய்ச்சல் ஏற்படுகிறது. வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து உஷ்ணம் அதிகமாக உள்ள நிலையில் குளிர்ந்த நீர், ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் போன்றவற்றை குடிப்பதன் மூலம் பலர் சிக்கிக் கொள்கிறார்கள்.

    இந்த காய்ச்சல் பாதிப்பு சென்னையில் பல்வேறு பகுதிகளில் அதிகமாக உள்ளது. மேலும் தற்போது கொசுக்கள் பெருகி வருவதும் இதற்கு ஒரு காரணமாகும்.

    கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகக் கூடிய இந்த காலத்தில் நீர்நிலைகளில் கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டாலும் மழைநீர் கால்வாய்களில் விடப்படும் கழிவுநீர் மூலம் கொசுக்கள் பெருமளவில் உற்பத்தியாகின்றன.

    மாநகராட்சி அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகின்ற போதிலும் கொசுக்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் கடிக்கிறது.

    இந்நிலையில் பருவ நிலை மாற்றத்தால் ஏற்படுகின்ற வைரஸ் காய்ச்சல் பாதிப்பை தடுக்க சுகாதாரத்துறை மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். குறிப்பாக பள்ளி தேர்வு காலத்தில் மாணவர்கள் பாதிக்காமல் இருக்க சுகாதார நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

    இதுபற்றி டாக்டர்கள் கூறும்போது, பருவ நிலை மாற்றத்தால் வைரஸ் காய்ச்சல் ஏற்படுகிறது. காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். வீட்டில் ஒருவருக்கு காய்ச்சல் வந்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருகின்றனர்.

    பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும். குளிர்சாதனை பெட்டியில் வைத்து குடிநீரை அருந்தக் கூடாது. ஓட்டல்களில் சாப்பிடுவதை தவிர்த்து வீட்டு சமையலை உண்பதன் மூலம் வைரஸ் காய்ச்சல் பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும் என்றனர்.

    • நம்மை பாதுகாத்துக்கொள்ள சித்த மருத்துவம் பெரிதும் உதவுகிறது.
    • கொசுக்கள் கடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் பரவுகிறது.

    மழைக்காலம் என்றாலே `ஜில்' என்ற உணர்வும், மகிழ்வும் தோன்றும். தென்றல் காற்று மெல்ல வாடைக்காற்றாக வீசி தேகத்தை சில்லென்று சிலிர்க்க வைக்கும். உள்ளம் குதூகலித்து உணர்ச்சிகள் பொங்கும். மழையில் நனைந்து ஆட்டம் போட விரும்புவர்களுக்கு இது உற்சாக காலம்.

    மழைக்காலத்தை பலர் விரும்பினாலும், அப்போது தோன்றும் சில நோய்கள் மக்களை வாட்டுவதும் உண்டு. மழைக்காலத்தை அனுபவிக்கும் அதேநேரத்தில், அந்தக்காலத்தில் வரும் நோய் ஆபத்துகள், பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள சித்த மருத்துவம் பெரிதும் உதவுகிறது. நமது வீட்டின் சமையல் அறையின் அஞ்சறைப்பெட்டியில் உள்ள பொருட்களைக்கொண்டே நோய்களை நம் முன்னோர்கள் விரட்டியடித்துள்ளனர். அத்தகைய மகத்துவம் நிறைந்த சித்த மருத்துவம் எந்த அளவுக்கு மழைக்காலத்தில் நமக்கு பலன் தரும் என்பதை பார்ப்போம்.

    டெங்கு காய்ச்சல்

    ஏடீஸ் எஜிப்டி கொசுக்கள் கடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் பரவுகிறது, இந்நோய் கடுமையான காய்ச்சல், வாந்தி, எலும்பு வலி, கண்களுக்குப் பின்னால் வலி போன்ற அறிகுறிகளைக் காட்டுகிறது. ரத்தத்தில் தட்டணுக்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படும். இந்நிலை தீவிரமானால் உயிரிழப்பு கூட ஏற்படும். ஆகவே காய்ச்சல் வந்தவுடன் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவது மிக அவசியம்.

    உங்கள் சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். கொசுக்கடியில் இருந்து பாதுகாக்க உதவும் ஆடைகளை அணியவும்.

    மருந்துகள்:

    சித்த மருத்துவத்தில் நிலவேம்பு குடிநீர் - பெரியவர்கள் 60 மி.லி. வீதம் இருவேளையும், சிறுவர்கள் 30 மி.லி. வீதம் இருவேளையும் தொடர்ந்து ஒரு வாரம் குடிக்க வேண்டும். ரத்த தட்டணுக்கள் குறைந்தால் கூடவே பப்பாளி இலைச்சாறு பெரியவர்கள் 30 மி.லி. வீதம் இருவேளை, சிறுவர்கள் 10 மி.லி. வீதம் இருவேளை சுவைக்காக தேன் கலந்து குடிக்க வேண்டும். இருமல் இருந்தால் ஆடாதோடை மணப்பாகு, பெரியவர்கள் 15 மி.லி. வீதம் இருவேளை, சிறுவர்கள் 5 மி.லி. வீதம் இருவேளை குடிக்க நல்ல பலனை தரும்.

    சிக்குன்குனியா

    மழைக்காலத்தில் வருகின்ற மற்றொரு நோய் சிக்குன்குனியா. ஏடிஸ் எஜிப்டி மற்றும் ஏடிஸ் அல்போபிக்டஸ் கொசுக்கள் கடித்த மூன்று முதல் ஏழு நாட்களுக்குள் காய்ச்சல் அடிக்கத்தொடங்கும். அப்போது, கடுமையான மூட்டு வலி, காய்ச்சல், உடல் சோம்பல், பலவீனம் காணப்படும்.

     மருந்துகள்:

    சிக்குன்குனியா காய்ச்சலுக்கு நிலவேம்பு குடிநீருடன், அமுக்கரா மாத்திரை, வாத ராட்சசன் மாத்திரை, விஸ்ணு சக்கர மாத்திரைகளை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி எடுக்கலாம்.

    தலைபாரம், மூக்கடைப்பு, சைனஸ் தொந்தரவுகள்

    மழைக்காலத்தில் தலைநீர் கோர்ப்பதால் நீர்க்கோவை எனப்படும் சைனசைட்டிஸ் என்னும் நோய் ஏற்படுகிறது. இந்நோயில் கடுமையான தலைவலி, தலைபாரம், மூக்கடைப்பு, தும்மல், கண்களில் பாரம் போன்ற குறி குணங்கள் ஏற்படும்.

    மருந்துகள்:

    சுத்தமான உப்புநீர்க் கரைசலை ஒரு மூக்குத் துளையில் விட்டு இன்னொரு மூக்குத் துளை வழியே வெளியேற்ற வேண்டும். நன்றாக கொதிக்க வைத்த நீரில் மஞ்சள்தூள் போட்டு போர்வையால் நன்கு மூடிக்கொண்டு ஆவி பிடிக்க வேண்டும். அல்லது நொச்சி இலைகளை நன்றாகத் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆவி பிடிக்க வேண்டும். தும்பைப்பூ மலர்களை கசக்கி ஒரு சொட்டு வீதம் இரு மூக்குத்துளைகளிலும் விடலாம். நீர்க்கோவை மாத்திரையை நீரில் உரசி நெற்றி, கன்னத்தில் பற்றிடலாம்.

    தாளிசாதி சூரணம் 1 கிராம் அல்லது திரிகடுக சூரணம் 1 கிராம், சிவனார் அமிர்தம் 200 மி.கி., பலகரை பற்பம் 200 மி.கி., கஸ்தூரி கருப்பு 200 மி.கி. இவைகளை மூன்று வேளை தேன் அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும். தலைக்கு தேய்த்து குளிக்க சுக்குத்தைலம், அரக்குத்தைலம், பீனிசத் தைலம், நாசிரோக நாசத்தைலம் இவற்றில் ஒரு மருந்தை பயன்படுத்தலாம்.

    சைனசைட்டிஸ் தடுப்புமுறைகள்:

    மழைநீரில் நனைந்தாலும் அல்லது தலைக்கு குளித்த உடனும் நன்கு ஈரம் காய தலையை துடைத்துக்கொள்ள வேண்டும். இளவெதுவெதுப்பான வெந்நீர், மிளகு கலந்த பால், சுக்கு கலந்த பால் போன்றவற்றை குடிப்பது நல்லது. நோய் எதிர்ப்பு சக்திக்குரிய கீரைகள், பழங்கள், பால், முட்டை, பயிறு வகைகள் போன்றவற்றை தினசரி உட்கொள்ள வேண்டும்.

    ஜன்னலோர பஸ் பயணம், மின்விசிறி காற்றுக்கு நேராக கீழே படுத்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இரவு ஆறு முதல் ஏழு மணி நேரம் தொடர்ச்சியாக தூங்கவேண்டும். பகல் தூக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.

    ஆஸ்துமா

    மழைக்காலம் மற்றும் பனிக்காலத்தில் ஆஸ்துமா பாதிப்புள்ளவர்கள் அதிக சிரமப்படுகிறார்கள். இரைப்பு நோய் (ஆஸ்துமா) என்பது மூச்சு விடுவதற்கு சிரமத்தை தருகின்ற நோய் ஆகும். தூசி, புகை, பனி, குளிர் காற்று, காற்று மாசுபாடு, மலைப்பகுதிகளில் பயணம் செய்வது, நுரையீரலை தீவிரமாக பாதிக்கும் பாக்டீரியா, வைரஸ் நோய்கள் போன்ற பல காரணங்களால் இந்த நோய் வருகிறது.

    இரைப்பு நோயை குணப்படுத்த துளசி, ஆடாதோடை, கஞ்சாங்கோரை, கரிசலாங்கண்ணி, கண்டங்கத்திரி, தூதுவளை, நஞ்சறுப்பான் என்று ஏராளமான மூலிகைகள் சித்த மருத்துவத்தில் உள்ளன.

    சித்த மருந்துகள்:

    1) தாளிசாதி சூரணம் ஒரு கிராம், கஸ்தூரி கருப்பு 100 மி.கி., சிவனார் அமிர்தம் 100 மி.கி., பவள பற்பம் 100 மி.கி. இவற்றை தேன் அல்லது வெந்நீரில் மூன்று வேளை உணவுக்குப் பின் சாப்பிட வேண்டும்.

    2) சுவாசகுடோரி மாத்திரை 1 அல்லது 2 வீதம் காலை, மதியம், இரவு 3 வேளை உணவுக்குப் பின் சாப்பிட வேண்டும்.

    3) கஸ்தூரி மாத்திரை 1 அல்லது 2 வீதம் இருவேளை சாப்பிட வேண்டும்.

    4) கண்டங்கத்திரி லேகியம், தூதுவளை நெய், ஆடாதோடை மணப்பாகு இவற்றில் ஒன்றை காலை, இரவு உணவுக்கு பின் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    5) குளிர்ந்த பொருள்கள் சாப்பிடுதல், பனிக்காற்றில் நடமாடுதல், ஊதுபத்தி, கொசுவர்த்தி சுருள்களின் புகை, புகைப்பழக்கம், ஒட்டடை அடித்தல் போன்றவற்றை இரைப்பு நோய் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.

    பொதுவான நோய் தடுப்புமுறைகள்

    பாதுகாப்பான மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை குடிக்கவும். கொதிக்க வைத்த இள வெதுவெதுப்பான வெந்நீர் மிகச் சிறந்தது. பழங்கள் மற்றும் காய்கறிகள், கீரைகள் இவற்றை நன்கு கழுவிய பிறகு பயன்படுத்த வேண்டும்.

    கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். முதல் நாள் மீதமான உணவை மறுநாள் சூடு செய்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஈ, பூச்சிகள் மொய்த்திருக்கும் தெரு உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். வீட்டுக்கருகில் நல்ல தண்ணீர் அல்லது அசுத்தமான தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டு ஜன்னல்கள், கதவுகளில் கொசு வலை பயன்படுத்துவது நல்லது.

    சேற்றுப்புண்

    மழைக்காலத்தில் வருகின்ற மற்றொரு பாதிப்பு, 'சேற்றுப்புண்' ஆகும். இந்நோயில் விரல் இடுக்குகளில் வெள்ளை நிறத்தில் புண்கள் மற்றும் நீர்க்கசிவு, அரிப்பு, வலி இவை காணப்படும். சேற்றுப்புண் பாதித்த பகுதிகளை தண்ணீரில் நன்றாகக் கழுவி படிகார நீர் விட்டு துடைத்து, கிளிஞ்சல் மெழுகு அல்லது வங்க வெண்ணெய் போட்டு வர, சேற்றுப்புண் ஆறி வரும்.

    தொண்டை வலி

    மழைக்காலத்தில் குளிர்ந்த தண்ணீர், சுகாதாரமற்ற குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் குடிப்பதால் டான்சிலைடிஸ் எனப்படும் உள்நாக்கு அழற்சி நோய் ஏற்படுகிறது. இந்நோயால் தொண்டைவலி, குரல் கம்மல் இவற்றுடன் சில நேரம் காய்ச்சலும் வரும். இந்நோய்க்கு சித்த மருத்துவத்தில் சிறப்பான மருந்துகள் உள்ளன.

    இளஞ்சூடான வெந்நீரை அடிக்கடி குடிக்க வேண்டும். உப்பு, மஞ்சள் கலந்து அந்த நீரை, தொண்டையில் படும்படியாக வாய் கொப்பளித்து வரவேண்டும். சூடாக தேநீர், காபி அடிக்கடி இந்நேரங்களில் குடிக்கலாம்.

    மருந்துகள்:

    பூண்டு சிறிதளவு எடுத்து, அதை இடித்து ஒரு வெள்ளைத் துணியில் முடிந்து லேசாக நெருப்பில் வாட்டிப் பிழிய, அதிலிருந்து சாறு வரும். அதனுடன், சிறிதளவு தேன் கலந்து உள்நாக்கு அழற்சி உள்ள பகுதியில் காலை, இரவு என இருவேளைகளில் தடவி வர, தொண்டை வலி, கரகரப்பு நீங்கும். உள்நாக்கு அழற்சியும் குணமடையும்.

    ஆடாதோடை, மிளகு, தேன் அல்லது பனங்கற்கண்டு கலந்து காலை, இரவு என இருவேளை மென்று சாப்பிடலாம். சின்ன வெங்காயத்துடன், நாட்டு வெல்லம் வைத்து சாப்பிட உள்நாக்கு அழற்சி வலி மாறும். வெற்றிலை, கிராம்பு, மிளகு இதனுடன் உலர் பழங்கள் அல்லது நாட்டு வெல்லம் வைத்து சாப்பிட்டு வரவேண்டும்.

    தாளிசாதி வடகம், துளசி வடகம் இரண்டு மாத்திரை வீதம் சாப்பிட்டு வர தொண்டை சதை அழற்சி நீங்கும். கற்பூரவல்லி இலைச்சாறுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர, தொண்டை சதை வளர்ச்சி நீங்கும்.

    பாலுடன் மஞ்சள், மிளகு கலந்து காலை, இரவு அருந்தலாம். முட்டையை வேகவைத்து அதனுடன் மிளகு, மஞ்சள், சீரகம் கலந்து சாப்பிட்டு வரலாம். நாட்டுக்கோழி சூப், நண்டு சூப் வைத்து சாப்பிடலாம். நோயற்ற வாழ்வுக்கு எப்போதும் வெந்நீரையே அருந்த வேண்டும்.

    • குப்பைமேனி ஒரு காயகல்ப மூலிகை என்பது குறிப்பிடத்தக்கது.
    • குப்பைமேனி இலை சாறு குடிப்பதால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

    குப்பைமேடுகளில் எளிதாக கிடைக்கக்கூடிய மூலிகைதான் குப்பைமேனி. பெரும்பாலானோர் இந்த செடியை கண்டிப்பாக பார்த்திருப்போம். ஆனால் இதுதான் குப்பைமேனி என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதேபோல் குப்பைமேனி செடியை களலைச்செடியாக பலர் பிடுங்கி வீசுகின்றனர்.

     பல வகையான நோய்களுக்கு தீர்வு அளிக்கும் குப்பைமேனி ஒரு காயகல்ப மூலிகை என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி குப்பைமேனி செடியின் அனைத்து பாகங்களும் சிறப்பு வாய்ந்தது. அதேபோல் பல வகையான நோய்களுக்கு மருந்தாக குப்பைமேனி பயன்படுகிறது.

    குப்பைமேனி இலையின் சாறு பிழிந்து குடிப்பதால் சளி, இருமல், தொண்டை கட்டுதல் போன்ற நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும். மேலும் உடல் வெப்பத்தையும் சரி செய்கிறது.

    குப்பைமேனி இலையின் சாறு பிழிந்து, ஒரு ஸ்பூன் அளவு வெந்நீரில் கலந்து குடித்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் அனைத்தையும் வெளியேற்றி விடும். அதேபோல் குப்பைமேனி இலை பொடியை விளக்கெண்ணையில் கலந்து சாப்பிட்டாலும் வயிற்றுப் புழுக்கள் வெளியேறிவிடும்.

    குப்பைமேனி இலை சாறு குடிப்பதால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதிலும் குறிப்பாக சைனஸ் எனப்படும் நோய்க்கு சிறந்த மருந்தாக உள்ளது.

    சொத்தை பல் உள்ளவர்களுக்கு பல்லில் வலி 2 அல்லது 3 இலைகளை நன்றாக கழுவி விரல்களால் நசுக்கி வலிக்கும் பல்லில் வைத்தால் சொத்தை பல்லில் உள்ள கிருமிகள் வெளியேறி வலி நீங்கும்.

    அதேபோல் படை, சிரங்கு, சொறி, அரிப்பு போன்ற தோல் நோய் உள்ளவர்கள் குப்பைமேனி இலையுடன் சேர்த்து மஞ்சள் மற்றும் கல் உப்பு சேர்த்து நன்கு அரைத்து தேய்த்து கழுவி வர அனைத்து நோய்களும் குணமாகும்.

    உடலில் ஏற்படும் வலிகளை குணப்படுத்த குப்பைமேனி இலையின் சாற்றை நல்லெண்ணையோடு சேர்த்து காய்ச்சி உடலில் தேய்த்தால் குணமாகும். அதேபோல் வயதானவர்களுக்கு ஏற்படும் மூட்டு வலிகளுக்கு குப்பைமேனி இலையை சுண்ணாம்பு கலந்து பூசுவதால் நல்ல தீர்வு கிடைக்கிறது.

    தேள், பூரான், விஷப்பூச்சி கடித்தால் குப்பைமேனி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து கடித்த இடத்தில் பூசினால் விஷம் முறியும்.

    ×