search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "spiritual"

    • மரத்தினால் செய்யப்பட்ட தொட்டில் வாங்கி கட்டினால் உடனே குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
    • செண்பகவல்லியும், நீலாதேவியும் நல்ல அறிவுடனும், அழகுடனும் வளர்ந்து வந்தனர்.

    சுமார் 500 ஆண்டுகளுக்குமுன்னாள் கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலைக்கு அருகில் உள்ள பத்மநாதபுரத்தில் இருக்கக்கூடிய சிவன் கோவிலில் அர்ச்சகராக ஒருவரை பணியமர்த்தினர். அந்த அர்ச்சகருக்கு நாளடைவில் திருமணமும் நடைபெற்றது. திருமணம் முடிந்து ஒரு வருடத்திலேயே அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த அர்ச்சகர் தன்னுடைய பெண்குழந்தைக்கு செண்பகவல்லி என்று பெயர் சூட்டினார். அதுமட்டுமில்லாமல் இனி அடுத்து பிறக்கும் குழந்தைக்கு சுவாமியின் பெயரான நீலகண்டன் பெயரை சூட்ட வேண்டும் என்று மனதில் நின்னைத்துக்கொண்டார்.

    அடுத்த வருடமே மீண்டும் ஒரு பெண்குழந்தை அர்ச்சகருக்கு பிறந்தது. பெண்குழந்தை என்பதால் சுவாமியின் பெயரான நீலகண்டன் என்பதை நீலா என்றும், மகள் சக்தியின் ரூபமாக திகழவேண்டும் என்று உணர்ந்த அந்த அர்ச்சகர் தன்னுடை மகளுக்கு நீலாதேவி என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.

    செண்பகவல்லியும், நீலாதேவியும் நல்ல அறிவுடனும், அழகுடனும் வளர்ந்து வந்தனர். மகள்கள் இருவரும் பருவம் அடைந்தனர். அவர்கள் விரும்பும் நகைகள், ஆடைகள் போன்றவற்றை வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சியுடன் வளர்த்து வந்தார் அர்ச்சகர். மகள்களை தனியே வெளியே செல்ல அனுமதிக்காகல் தாய் அல்லது தந்தையுடன் தான் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். அந்த அளவுக்கு கட்டுக்கோப்பாக வளர்த்து வந்தார் அர்ச்சகர்.

    இப்படி இருக்கும் காலக்கட்டத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக பத்மநாதபுரம் இருந்தது. பதமநாதபுரம் கோட்டைக்கு அருகில் மகாராஜா மார்த்தாண்ட வர்மாவிற்கு தனி தளபதியாக இருந்தவர் தான் பத்மநாபன். இவர் சுருள்வாள்வீசுவதில் வல்லவராகவும், சிறந்த வீரராகவும் இருந்தார்.

    பத்மநாபனின் பணி என்னவென்றால் படை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது. இந்த பணியைதான் பத்மநாபன் கவனித்து வந்தார். ஒரு நாள் காலையில் புலியூர் குறிச்சியில் இருந்து பத்மநாதபுரம் அரண்மணை நோக்கி குதிரையில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார் பத்மநாபன். அப்போது கோவிலுக்கு சென்றுவிட்டு அக்காவும் தங்கையுமான செண்பகவல்லியும், நீலாதேவியும் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

    குதிரையில் வந்த பத்மநாபன் அக்கா தங்கையான செண்பகவல்லியையும், நீலாதேவியையும் பார்த்தார். ஆஹா... என்ன அழகு என்று வியந்து பார்த்துவிட்டு சென்றார். சிறிது தூரம் சென்ற பத்மநாபன் மறுபடியும் அந்த இரு பெண்களின் மீது ஆசை கொண்டு கோட்டைக்கு செல்லாமல் பெண்களை பின்தொடர்ந்து சென்றார்.

    குதிரையின் சத்தம் அருகில் வரவர அக்காவும் தங்கையும் வேகமாக நடந்து சென்றனர். தங்களுடைய வீட்டிற்கு போய் பயத்தில் திரும்பி பார்த்தனர். அப்போது பத்மநாபன் தெருவின் முனையில் நின்றுகொண்டு கையசைத்துவிட்டு சென்றார்.

    கோட்டைக்கு சென்றதும் பத்மநாபன் நடந்த அனைத்தையும் தன்னுடைய ஆலோசகரிடம் விளக்கி கூறினார். ஆலோசகரிடம் பத்மநாபன் அந்த பெண்கள் இருவரும் யார்? அவர்களது தந்தை யார் என்பதை அறிய வேண்டும் என்று கூறினார். உடனே அந்த ஆலோசகரும் அந்த தெருவில் வசித்து வரும் இளைஞர் ஒருவரை அழைத்துக்கொண்டு வந்தார்.

    அந்த இளைஞர், அந்த பெண்கள் இருவரும் அர்ச்சகரின் மகள்கள் என்றும், பெரியவள் பெயர் செண்பகவல்லி, இளையவள் நீலாதேவி என்றும் கூறினார். உடனே பத்மநாபன் மறுநாள் காலை சிவன் கோவில் அர்ச்சகரிடம் மகள்கள் பற்றி பேசலாம் என்று ஆலோசகரிடம் கூறினார்.

    இதை கேட்டதும் பத்மநாபனின் ஆலோசகர் இன்றைக்கு வேண்டாம். அடுத்தவாரம் சிவன் கோவிலில் கொடியேறுகிறது. எனவே அப்போது அங்கு செல்லலாம் என்று கூறினார். இப்படி சில நாட்கள் நகர்ந்தது. பங்குனி தேரோட்டத்துக்கு கொடியேறியதும் கோவில் அர்ச்சகரை பத்மநாபன் தன்னுடைய கோட்டைக்கு அழைத்துள்ளார்.

    கோட்டைக்கு வந்த அர்ச்சகரை அந்த ஆலோசகர் வழிமறித்து உன்னுடைய பெண்களை பத்மநாபன் பார்த்துள்ளார். உன்னுடைய இரு மகள்களையும் அவருக்கு பிடித்துள்ளது. திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறார் என்று ஆலோசகர் கூறினார். அதனால் நீங்களே ஒரு நல்ல நாளாக பார்த்து சீக்கிரம் சொல்லுங்கள் என்றார் ஆலோசகர். அதற்கு அர்ச்சகர் பதில் சொல்லாமல் துக்கம் தொண்டையை அடைக்க, கை கால்கள் நடுநடுங்க வீட்டுக்கு வேகமாக நடந்து வந்தார். நடந்ததை பற்றி தன்னுடைய மனைவியிடம் கூறி வருத்தப்பட்டார் அர்ச்சகர்.

    படைவீரர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடிய பத்மநாபன் நம்முடைய குழந்தைகளை பெண் கேட்கிறான். அவன் குலத்தால் வேறுபட்டவன். திருமணம் செய்துகொடுப்பதற்கு மறுத்தால் கொலை செய்வதற்கும் அஞ்சமாட்டான். பத்மநாபன் மன்னருக்கு பக்கபலமாக இருப்பவன். என்ன செய்வது என்று தன் மனைவியிடம் ஆதங்கத்துடன் கூறினார் அர்ச்சகர்.

    உடனே அர்ச்சகரின் மனைவி, எல்லாவற்றையும் அம்மையப்பன் பார்த்துக்கொள்வான். இப்போது நீங்கள் உறங்குங்கள் என்று ஆறுதல் கூறினார். இப்படி ஒரு வாரம் சென்றபிறகு, ஆவணி தேரோட்டம் 10-ம் நாள் திருவிழாவிற்கு வந்த சிறப்பு அர்ச்சகர்கள் எல்லோரும் கோவிலில் இருந்து திரும்பிக்கொண்டிருந்தனர். அர்ச்சகர் தனது வீட்டிற்கு வருகிறார். அப்போது அவருடைய மனைவியும், மகள்களும் தேரோட்டத்தை காண கிளம்பிக்கொண்டிருந்தனர்.

    அவர்களை பார்த்ததும் அர்ச்சகர் இப்போது கோவிலுக்கு செல்ல வேண்டாம். மகள்கள் இருவருக்கும் தோஷம் கழிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். எனவே இன்றைக்கு 6 வகை கூட்டு வச்சி, பாயசம் தயார் செய்து அப்பளத்துடன் சாப்பாட்டை தயார் செய்து வைக்குமாறு கூறினார்.

    இதை பிள்ளைகள் கையினால் 7 பேருக்கு தானம் செய்த பிறகு நாம் சாப்பிட வேண்டும் என்றார் அர்ச்சகர். பின்னர் தன்னுடைய இரு மகள்களையும் கோட்டைக்கு அருகில் பாழடைந்த ஆழ்கிணறு ஒன்று உள்ளது. அந்த பாழடைந்த ஆழ்கிணற்றுக்கு இரு பெண்களையும் அழைத்துக் கொண்டு சென்றார் அர்ச்சகர்.

    செண்பகவல்லியும், நீலாதேவியும் ஒரேநேரத்தில் கிணற்றில் உள்ள 21 படிகளை தாண்டி இறங்கி காலை கழுவுங்கள் என்று சொன்னார் அர்ச்சகர். உடனே செண்பகவல்லி அப்பா... இந்த பாழடைந்த கிணற்றை காண்பதற்கே பயமாக உள்ளது என்றாள். உடனே நீலாதேவி அது ஒன்றும் இல்லை வா... என்று கூறி அக்காவின் கையை பிடித்து கூட்டிக்கொண்டு சென்றார்.

    முதலில் அவர்கள் இருவரும் நடந்து செல்ல அவர்களது பின்னால் நடந்து சென்றார் அர்ச்சகர். கடைசி படிக்கடில் இறங்கி இருபெண்களும் கால்களை கழுவிக்கொண்டு இருக்கும் போது அர்ச்சகர் அவர்கள் இருவரையும் கிணற்றுக்குள் தள்ளிவிட்டு விடுகிறார் அர்ச்சகர். என்ன செய்வதென்று அறியாத இரு பெண்களும் கிணற்றுக்குள் தத்தளித்தனர். உடனே செண்பகவல்லி மூச்சுத்திணறி இறந்துவிடுகிறாள்.

    உடனே நீலாதேவிமட்டும் கிணற்றில் தத்தளித்தபடி ஏன் அப்பா எங்களை இப்படி தள்ளிவிட்டீங்க... பத்மநாபனுக்கு பயந்து எங்களை இப்படி கொல்ல துணிந்துவிட்டீர்களே என்று சொல்லிக்கொண்டே நீலாதேவியும் உயிரை விட்டாள். இருமகள்களை பறிகொடுத்த அர்ச்சகர் வீட்டிற்கு திரும்பினார். அவரும் தன் உயிரை மாய்த்துக்கொண்டார். அர்ச்சகரின் மனைவியும் கணவனின் மார்பில் சாய்ந்து உயிரைவிட்டாள்.

    இப்படி தன்னுடைய அப்பாவால் உயிரிழந்த அக்காள் செண்பகவல்லியும், தங்கை நீலாதேவியும் ஆவியாகி கோட்டையை சுற்றி ஆதாளிபோட்டு வருவோரையும், போவோரையும் அடித்து துன்புறுத்தி வந்தனர். அதுமட்டுமில்லாமல் நீலாதேவி பத்மநாபனை கொன்று அவனது குடலை உறுவி மாலையாக போட்டு சந்தோசமாக ஆரவாரம் செய்து வந்தாள். அதுமட்டுமல்லாமல் பத்மநாபனை சார்ந்தவர்களும், கோட்டையை சுற்றி இருந்த ஊர்மக்களும் நோய்வாய்பட்டு இறந்து வந்தனர். சிலர் அகால மரணம் அடைந்தனர்.

    இதையெல்லாம் அறிந்த மகாராஜா, மலையாள நம்பூதிரிகளை வரவழைத்து சோளிபோட்டு பார்த்தனர். இதற்கெல்லாம் காரணம் அக்காள் செண்பகவல்லியும், தங்கை நீலாதேவியும் தான் என்பது தெரியவந்தது. உடனே இதற்கு என்ன பரிகாரம் என்று கேட்டார் மகாராஜா.

    நல்ல மந்திரவாதியை வைத்து பலிகொடுத்து படையல் பூஜை செய்து அவர்களை சாந்தப்படுத்துங்கள் என்று கூறினார்கள் நம்பூதிரிகள். நம்பூதிரிகள் சொன்னபடியே செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பூஜை செய்யலாம் என்று முடிவு செய்தனர். உடனே மகாராஜா மலையாள மந்திரவாதிகள் 3 பேரை வரவழைத்தார். கோட்டைக்கு கிழக்கு பக்கத்தில் மண்ணால் ஆன இரண்டு பெண் உருவத்தை பிடித்து வைத்தனர்.

    அதன்பிறகு அங்கு ஆடு, கோழி பலியிடப்பட்டு, ஒருகோட்டை அரிசி பொங்கி ஒரே படையலாக படைத்தனர். இந்த படையல்கள்படைத்த பிறகுதான் செண்பகவல்லியும், தங்கை நீலாதேவியும் சாந்தம் அடைந்தனர். காலப்போக்கில் பூஜை நடைபெற்ற இடத்தில் ஒரு கோவிலை கட்டினர். அதுதான் மேலாங்கோட்டில் உள்ள அக்காள் தங்கை கோவில். கோவிலில் வீற்றிருக்கக்கூடிய அக்கா தங்கை இருவரும் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர்.

    அக்கா செண்பகாதேவி கோவிலில் பலிகள் கிடையாது சைவ படையல் மட்டும் தான் படைக்கப்படுகிறது. தங்கை நீலாதேவி கோவிலில் தான் பலிகள் உண்டு. முதல் பூஜை அக்கா செண்பகாதேவிக்கு தான். பிறகு தங்கை நீலாதேவிக்கு பூஜை செய்யப்படுகிறது.

    ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை கொடைவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறும். அதன்பிறகு தங்கை கோவிலான நீலாதேவி என்ற இசக்கி அம்மன் கோவிலில் ஆடி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை கொடை விழா சிறப்பாக நடைபெறும்.

    ஒருதடவை இந்த திருவிழாவைக்காண திருவிதாங்கூர் மகாராணி வந்தார். கோவிலில் நடைபெறக்கூடிய உயிர்பலியை பார்த்துவிட்டு எதற்கு இப்படி உயிர்பலி கொடுக்குறீர்கள். அடுத்த திருவிழாவிற்கு பலி கொடுக்க கூடாது என்று கட்டளையிட்டு விட்டு சென்றார் மகாராணி.

    அன்று இரவு மகாராணிக்கு கடுமையான உதிரப்போக்கு ஏற்பட்டது நிற்கவே இல்லை. உடனே மகாராஜா நீலாதேவி கோவிலுக்கு சென்று மன்னிப்பு கேட்டார். மன்னிப்பு கேட்ட மறுநிமிடமே உதிரப்போக்கு நின்றுவிட்டது. அன்று இரவு நீலாதேவி அம்மன் மகாராணியின் கனவில் விரிசடை முடியோடும், வீரப்பல்லோடும் அம்மன் காட்சி கொடுத்தாள். இதை பார்த்ததும் இருகரம் குவித்து வணங்கினார்.

    மறுநாள் காலையில் மகாராஜாவிடம், மகாராணி கனவில் விரிசடை முடியோடும், வீரப்பல்லோடும் நீலாதேவி அம்மன் வந்ததை கூறினார். இவ்வாறு காட்சி கொடுத்தது இசக்கி அம்மன் தான். எனவே அவரை இசக்கி அம்மன் என்று அழையுங்கள் என்று கூறுனார். அன்றுமுதல் நீலாதேவி அம்மனை இசக்கி அம்மன் என்று அழைக்கப்பட்டார்.

    ஒரு தடவை தனது குலதெய்வமான பத்மநாபரையும், குருவாயூரப்பனையும் வணங்கிவிட்டு வந்தார். தனது மனைவிக்கு ஏற்பட்ட கடுமையான உதிரப்போக்கு நின்றதால் தனது காவல் தெய்வமான அக்கா தங்கை கோவிலுக்கு காணிக்கை செலுத்துவதற்கு வந்தனர்.

    மகாராஜா அக்காள், தங்கை கோவிலில் இருவருக்கும் கையில் காப்பும், காலில் தண்டையும் அணிவித்துவிட்டு தன்னுடைய அரண்மனைக்கு புறப்பட்டார். அரண்மனைக்கு வந்த பிறகு அன்று இரவு மன்னனுடைய கனவில் தோன்றிய செண்பகவல்லி அம்மன் தனக்கு மோதிரம் வேண்டும் என்று கேட்டார். உடனே மகாராஜா மறுநாள் மாலை மோதிரத்தை செய்து கொண்டுவந்து அம்மனுக்கு அணிவித்தார்.

    அன்று இரவு அம்மன் கோவிலில் இசைக்கச்சேரி நடந்தது. இசை கச்சேரியை முடித்துக்கொண்டு மகாராஜாவிடம் பரிசுத்தொகையை வாங்கிக்கொண்டு பாடகர் வில்லு வண்டியில் தனது ஊரான குமரி மாவட்டத்தில் உள்ள கொட்டாரத்திற்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.

    அந்த வில்லு வண்டி பத்மநாதபுரம் கிழக்கு பகுதியில் வரும்போது அங்குள்ள சுமைதாங்கி கல்லில் கேரள பெண்கள் போல இருவர் உடை அணிந்து தலையில் அழகிய கொண்டையிட்டு வந்தனர். அந்த இரு பெண்களும் வில்லு வண்டியை நிறுத்தினார்கள். பாடகரை பார்த்து அரண்மனையில தான் பாடுவீங்களா... இங்கேயும் பாடுங்க என்று கேட்டாங்க நீலாதேவி.

    இதை சற்றும் எதிர்பாராத பாடகர் அப்படியே மவுனமாகி நின்றார். ம்... பாடுங்கள் என்று சத்தமாக கத்தினார் நீலாதேவி. பாடகர் பயத்தி நடுநடுங்கி போனார். இதை பார்த்த செண்பகவல்லி, நீலா இங்கே வா... என்று கூறிக்கொண்டு பாடகர் அருகில் சென்றார்.

    நீலாவை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்க பாடுங்க அப்டீன்னு சொல்ல அந்த பாடகர் அந்த இருவரையும் போற்றி பாடினார். பாடல் பாடி முடிந்தது செண்பகவல்லி அம்மன் விரலில் கிடந்த அழகிய மோதிரத்தை, அதாவது மன்னர் கொடுத்த அந்த மோதிரத்தை பாடகருக்கு கொடுத்தாள். மறுநாள் காலையில் கோவிலுக்கு வந்த பூசாரி அம்மன் கையில் கிடந்த மோதிர விரலில் கிடந்த மோதிரம் காணவில்லை என்று உடனே மன்னரிடம் சொன்னார்.

    மன்னர் கோவமுடன் நான் செய்து போட்ட மோதிரம் காணவில்லையா? மோதிரத்தை களவு செய்தவர்களை என்முன் கொண்டுவாருங்கள். அவனை மாறுகால், மாறு கை வாங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். உடனே அரசரின் கட்டளையை முரசுகொட்டி ஆங்காங்க ஊர்மக்களுக்கு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் தான் பாடகர் அரண்மனைக்கு வந்து நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொன்னார். உடனே மன்னர் என்னுடைய காவல் தெய்வம் உன் முன்னால் வந்தார்களா? நீ பாக்கியவான் தான் என்று சொல்லி பாடகருக்கு மேலும் பல பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

    அதுமட்டுமில்லாமல் அம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். குழந்தை வரம் வேண்டுபவர்கள் அந்த கோவிலில் மரத்தினால் செய்யப்பட்ட தொட்டில் வாங்கி இந்த கோவிலில் கட்டினால் உடனே குழந்தை பாக்கியம் கிடைக்குமாம்.

    உண்மையிலேயே தன்னை நம்பி வரும் பக்தர்களை உயர்வாகி வைக்கிறார் மேலாங்கோட்டு அம்மன். இந்த கோவில் எங்க இருக்கு என்று நினைக்கிறீர்களா? நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லக்கூடிய சாலையில் தக்கலைக்கு முன்னால் குமாரகோவில் செல்லக்கூடிய பாதையில் தான் மேலாங்கோட்டு அம்மன் கோவில் அமைந்துள்ளது.  நாமும் அந்த அம்மன் கோவிலுக்கு செல்வோம். வழிபடுவோம்.

    • 250 ஆண்டுகள் பழமையான ஜமீந்தர் குடும்பத்தின் அரண்மனைகளில் ஒன்றாகும்.
    • 1781-ம் ஆண்டில் மகாராஜா ஜாய்நாராயண் கோஷல் பகதூரால் கட்டப்பட்டது.

    காயத்ரி மந்திர், புகைலாஷ் என்பது மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும். அங்கு சுற்றிலும் ஏராளமான போஜ்புரி பேசும் மக்கள் வசிக்கும் இடம். புகைலாஷ் எஸ்டேட் கிட்டத்தட்ட 250 ஆண்டுகள் பழமையான ஜமீந்தர் குடும்பத்தின் அரண்மனைகளில் ஒன்றாகும். இது புகைலாஸ் ராஜ்பரி என்று அழைக்கப்படுகிறது. முழு பகுதியும் 100 பிகாஸ் நிலப்பரப்பில் பரவி இருந்தது, ஆனால் கிடர்போர் கப்பல்துறை விரிவாக்கம் காரணமாக சொத்து குறைக்கப்பட்டது.

    ஒரு குளத்தின் கரையில், ரக்தா-கமலேஷ்வர் மற்றும் கிருஷ்ணா-சந்திரேஷ்வர் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இரட்டை சிவன் கோயில்கள் 1781-ம் ஆண்டில் மகாராஜா ஜாய்நாராயண் கோஷல் பகதூரால் கட்டப்பட்டது. இரண்டு பெரிய சிவலிங்கங்கள் ஒவ்வொன்றும் சுமார் 11 அடி உயரம் கொண்டவை. இங்குள்ள கோவில் அமைப்பு கடந்த காலத்தை நினைவுபடுத்தும் புகைலாஷ் ஜமீன்தார்களின் காலத்து கோயில் கட்டிடக்கலையை நினைவுபடுத்துகிறது. இது வங்காளத்தின் பொதுவான கோவில்களின் வடிவமைப்பே ஆகும்.

    ஜாய்நாராயண் கோஷல் (1752-1821) கோபிந்தபூரில் பிறந்தார் மற்றும் சமஸ்கிருதம், இந்தி, பெங்காலி, அரபு, பாரசீகம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நன்கு புலமை பெற்றவர். அவர் பாட்னா, முர்ஷிதாபாத், டாக்கா மற்றும் பர்த்வான் ஆகிய மாகாண சபைகளுக்கு சேவை செய்ய நவாப் முபாரக் தவுலத்தால் பரிந்துரைக்கப்பட்டார். அவர் டெல்லி பேரரசர் முகமது ஜஹந்தர் ஷாவிடமிருந்து அரச மானியம் பெற்றார் மற்றும் மகாராஜா பகதூர் என்ற பட்டத்தை வழங்கினார். அருகாமையில் உள்ள கல்வெட்டு படி, அவர் போலீஸ் சூப்பிரண்டு ஜான் ஷேக்ஸ்பியரின் காலத்தில் ஒரு கண்காணிப்பாளராகவும் இருந்தார் மற்றும் ராஜா ராம்மோகன் ராய் மற்றும் ஈஸ்வர்சந்திர வித்யாசாகர் ஆகியோருடன் இணைந்து நற்பணி செயல்களில் ஈடுபட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஜமீந்தர் அரண்மனை சிதிலமடைந்து சில தூண்கள் மற்றும் உள் முற்றம் மற்றும் நஹபத்-கானா ஆகியவை கடந்த காலத்தை நினைவுபடுத்துகின்றன. 1782-ம் ஆண்டு கட்டப்பட்ட துர்கா தேவியின் வழிபாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் உள் முற்றத்தில் அமைந்துள்ளது.

    மேலும் சாதக் ராம்பிரசாத் இந்த கோவிலுக்கு விஜயம் செய்ததாக நம்பப்படுகிறது, மேலும் அவர்தான் புகைலாஷ் அல்லது பூமியில் உள்ள கடவுள்களின் இருப்பிடம் என்று பெயர் சூட்டினார். மறுசீரமைப்பு திட்டத்தில் இரண்டு கோயில்கள் மட்டுமின்றி, பெரிய குளம் மற்றும் சுற்றுப்புறமும் புனரமைக்கப்பட்டது. இரண்டு கோவில்களுக்கு இடையே பெரிய நந்தி காளை சிலை வைக்கப்பட்டது.

    தற்போது ஆட்சல சிவன் கோவில்கள் ஒவ்வொன்றிலும் உயர்ந்த சிவலிங்கங்கள் உள்ளன. கிழக்கே உள்ள லிங்கத்திற்கு ரக்தகமலேஷ்வர் என்றும், மேற்கு லிங்கம் கிருஷ்ணசந்தனேசுவரர் என்றும் பெயர். இரண்டு கோயில்களும் உயர்ந்த சிவலிங்கங்கள், கிருஷ்ணசந்தனேசுவருடன், ரக்தகமலேஷ்வரரை விட சற்று உயரமாக உள்ளது. சிவலிங்கங்கள் இந்தியாவிலேயே மிக உயரமானவை என்று கோவில் தளத்தில் பலகை கூறுகிறது.

    கோவில் வளாகத்தின் பெரிய பகுதியில் சிவகங்கா என்ற பெரிய ஏரி உள்ளது. புதிதாக கட்டப்பட்ட சுவரில் பழைய மாத்திரைப் பெட்டிகளும், தெற்கே உள்ள குவிமாடப் பந்தல் ஜெய்நாராயண் கோசலின் சிலையும் உள்ளன. புகைலாஷ் ராஜ்பரி சாலையின் மறுபுறத்தில் அமைந்துள்ளது.

    தாழ்வாரத்தின் வழியாக நுழைவது இப்போது தடுக்கப்பட்டுள்ளது மற்றும் உட்புறங்களை ஒரு பக்க நுழைவாயில் வழியாக அணுகலாம். நுழைவாயில் பல கோயில்களுடன் வரிசையாக ஒரு பெரிய முற்றத்திற்கு செல்கிறது. இடதுபுறம் மிகப்பெரிய நடன மண்டபம் உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, கூரை நீண்ட காலமாக இடிந்து விழுந்தது. இந்த வளாகத்தில் இரண்டு சிறிய பீரங்கிகளும் உள்ளன.

    வலதுபுறத்தில் கோசல் குடும்பத்தின் குலதெய்வமான ஸ்ரீ ஸ்ரீ பதிதா பபோனி துர்கா மந்திர் உள்ளார். மகிசாஷுர்மர்தினி தோரணையில் உள்ள துர்க்கை தெய்வம் மற்றும் எட்டு உலோகங்கள் (அஷ்டதாது) கலவையால் ஆனது. ஜெய்நாராயண் கோசால் கட்டப்பட்ட ராஜ்பரி வளாகம் 1782-ம் ஆண்டிற்கு முந்தையது மற்றும் அதன் சில பகுதிகள் இன்னும் கோசல் குடும்பத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

    கோவிலின் உட்புறச் சுவர்களில் ஒரு பெரிய செப்புப் தகடு ஜெய்நாராயண் கோசலின் வாழ்க்கைக் கதையை பாரசீக மற்றும் ஆங்கிலத்தில் விவரிக்கிறது. கோயிலின் வெளிப்புறச் சுவர்களில் வங்காள மொழியில் ஒரு சிறிய கல்வெட்டு, கோவிலை நிறுவியவரின் சுருக்கமான வாழ்க்கை வரலாற்றைத் தருகிறது.

    ஆனால் இன்று ராஜ்பரி படப்பிடிப்பு நோக்கங்களுக்காக மற்றும் பல பெங்காலி தொடர்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன. இந்த கோவிலுக்கு கொல்கத்தாவின் பிற பகுதிகளில் இருந்து வருபவர்கள் அரிதாகவே வந்தாலும் உள்ளூர் மக்களை வெகுவாக ஈர்க்கிறது. சிவராத்திரியின் போது கோயில்களுக்கு உள்ளூர் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    • ஆனந்த பைரவர் சூலத்துக்கு பதிலாக கதாயுதத்துடன் காட்சி தருவது சிறப்பு.
    • பக்தர்கள் முதலில் பைரவரை வழிபட்ட பிறகே, சிவன், அம்பாளை வணங்குகிறார்கள்.

    இங்கு பைரவரே இத்தலத்தின் பிரதான மூர்த்தியாவார். பக்தர்கள் முதலில் பைரவரை வழிபட்ட பின்பே, சிவன், அம்பாளை வணங்குகிறார்கள்.

    இங்கு சிவன், அம்பாளுக்கு செய்யப்படும் கற்பூர ஆரத்தியை பக்தர்கள் கண்ணில் தொட்டு வைக்க அனுமதி கிடையாது. பைரவருக்கு ஆரத்தி எடுத்த கற்பூரத்தட்டையே பக்தர்களுக்கு காட்டுகிறார்கள். பைரவருக்கு முக்கியத்துவம் தரும். வகையில் இவ்வாறு செய்வதாக சொல்கிறார்கள்.

    தேய்பிறை அஷ்டமியில் இங்கு சிறப்பு ஹோமம் நடக்கிறது. ஹோமம் முடிந்ததும் சுவாமிக்கு விசேஷ அபிஷேக, அர்ச்சனை நடந்து அதன்பிறகு பைரவர் உற்சவர் பிரகார உலா செல்கிறார்.

    சிவன் கோயில்களில் விழாக்களின் போது, சுவாமி, அம்பாள், விநாயகர், முருகன் சண்டிகேஸ்வரர் ஆகிய மூர்த்திகளே பஞ்சமூர்த்திகளாக வீதியுலா செல்வர். ஆனால், இக்கோவிலில் நடக்கும் ஆனி உத்திர விழாவில் சண்டிகேஸ்வரருக்கு பதிவாக பைரவர் வீதியுலா செல்வது விசேஷம்.

    பைரவர் தலம் என்பதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோஷ்டத்தில் உள்ள யோக தட்சிணாமூர்த்தி சிம்ம மண்டபத்தில் காட்சிதருகிறார். இவரது தலையில் கிரிடம் அணிந்துள்ளது. முதல்பூஜை சூரியனுக்கு. தினமும் இக்கோவிலில் காலை பூஜையில் முதலில் சூரியனுக்கு யூஜை செய்யப்பட்டு அதன்பிறகே பிற சுவாமிகளுக்கு பூஜை நடக்கிறது. சூரியன் இத்தலத்தில் தவமிருந்தவர் என்பதால், இவ்வாறு செய்வதாக சொல்கிறார்கள்

    சூரியனால் வழிபட்ட தலம் என்பதாலும், சூரியச்செடிகள் நிறைந்த வனமாக இருந்ததாலும் சூரியக்குடி எனப்பட்ட இத்தலம், பிற்காலத்தில் சூரக்குடி என மருவியது.

    நடராஜர், தெற்கு நோக்கி இருக்கிறார். சுவாமி சன்னதி எதிரில் நந்தி, சிம்மங்கள் தாங்கும் மண்டபத்தில் உள்ளது. பைரவர் சன்னதியின் பின்புறம் பிரகாரத்தில் மற்றொரு பைரவர் கையில் கதாயுதத்துடன் காட்சி தருகிறார்..

    பார்வதிதேவியின் தந்தை தட்சன். ஒரு யாகம் நடத்தினான் ஆனால், மருமகன் சிவபெருமானை யாகத்திற்கு அழைக்கவில்லை. யாகத்தில் அவிர்பாகம் (பலன்) ஏற்பதற்காக சூரியன் கலந்து கொண்டார் அப்போது சிவன் தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பி யாகத்தை நிறுத்தச் சொன்னார். வீரபத்திரர், யாகத்தை நிறுத்தியதோடு அதில் கலந்து கொண்ட சூரியன் முதலானவர்களை தண்டித்தார்.

    சிவனின் கோபத்திற்கு ஆளான சூரியன், பூலோகம் வந்து இத்தலத்தில் தங்கி விமோசனம் கேட்டு அவரை வழிபட்டார். சிவனும் அவர் மீது கருணை கொண்டு காட்சிதந்து சாப விமோச்சனம் தந்தார். இதன் அடிப்படையில் இவ்விடத்தில் சிவனுக்கு கோயில் எழுப்பப்பட்டது.

    பொதுவாக பைரவர் கையில் சூலத்துடன் காட்சி தருவார் ஆனால் இங்குள்ள ஆனந்த பைரவர் சூலத்துக்கு பதிலாக கதாயுதத்துடன் காட்சி தருவது சிறப்பு.

    பரிகாரம்

    குடும்பத்தில் ஐஸ்வரியம் பெருக, மனகுழப்பம் நீங்கி அமைதி நிலவ இங்கு வந்து வேண்டிக்கொள்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியவர்கள் சுவாமி பைரவருக்கு வஸ்திரம் அணிவித்து, விசேஷ வழிபாடு செய்கிறார்கள்.

    திறக்கும் நேரம் காலை 4 மணிமுதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் 7.30 மணிவரை.

    விழாக்கள்

    பைரவர் ஜென்மாஷ்டமி, ஆனி உத்திர திருவிழா, மார்கழி ஆருத்ரா தரிசனம், அறுபத்துமூவர் குருபூஜை

    • தட்சிணாமூர்த்தி, தலையில் கிரீடம் அணிந்து காட்சி தருவது வித்தியாசமான அம்சம்.
    • அம்பாள் சன்னதி எதிரிலுள்ள தூணில் சிம்ம வாகனத்தில் அமர்ந்த வாராஹி சிற்பம் இருக்கிறது.

    தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், சிவகங்கை மாவட்டம், இலுப்பைக்குடியில் அமைந்துள்ளது. சுவாமி சன்னதி முன்மண்டபத்தில் உள்ள தூணில் ஒரு அங்குல அளவே உள்ள குட்டி விநாயகர் சிற்பம் இருக்கிறது. இந்த சிலையில் கண் இமை, விரல் நகங்களும் துல்லியமாகத் தெரியும்படி நேர்த்தியாக சிற்ப வேலைப்பாடு செய்யப்பட்டிருப்பது சிறப்பு. சுவாமி சன்னதி கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தி, தலையில் கிரீடம் அணிந்து காட்சி தருவது வித்தியாசமான அம்சம். அம்பாள் சன்னதி எதிரிலுள்ள ஒரு தூணில் சிம்ம வாகனத்தில் அமர்ந்த வாராஹி சிற்பம் இருக்கிறது. நகரத்தார் திருப்பணி செய்த கோயில்களில் இதுவும் ஒன்று.

    இங்குள்ள பைரவர் சொர்ண ஆகர்ஷண பைரவர் எனப்படுகிறார். இரட்டை நாய் வாகன பைரவர் இருப்பது சிறப்பம்சம். தலவிநாயகரின் திருநாமம் வரசித்தி விநாயகர். நடராஜர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, பெருமாள், மகாலட்சுமி, முருகன், சனீஸ்வரர் மற்றும் நவக்கிரக சன்னதிகள் உள்ளன.

    பைரவர் சன்னதி

    இத்தலத்து பைரவர், "சொர்ண ஆகர்ஷண பைரவர்' என்று பெயர் பெறுகிறார். அவரது இடது கையில் கபாலத்துக்கு பதிலாக அட்சய பாத்திரம் இருக்கிறது. சொர்ணம் (தங்கம்) தந்தருளியவர் என்பதால் கபாலத்தை, அட்சய பாத்திரமாக வைத்திருப்பதாக சொல்கிறார்கள். இவரிடம் வேண்டிக் கொள்ள வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இவர் இரண்டு நாய் வாகனங்களுடன் காட்சி தருவது மற்றொரு சிறப்பு.

    வலப்புறம் உள்ள நாய் அமர்ந்த நிலையில், சுவாமியின் பாதத்தைப் பார்க்கிறது. இடதுபுறம் உள்ள நாய் நின்று கொண்டிருக்கிறது. பைரவர் சன்னதியின் கீழே யந்திர பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தேய்பிறை அஷ்டமியில் இவருக்கு விசேஷ யாகம் நடக்கிறது. அப்போது 16 கலசம் வைத்து பூஜித்து, அந்த புனித நீரால் சிவன், அம்பாள், பைரவருக்கு அபிஷேகமும், கோமாதா பூஜையும் நடக்கிறது.

    தான்தோன்றீஸ்வரர், சிறிய அளவிலேயே இருக்கிறார். அம்பாள் சவுந்தர்ய நாயகி சிலை திருவாசியுடன் இணைத்து அமைக்கப்பட்டிருக்கிறது. பைரவர் சன்னதி எதிரிலுள்ள ஒரு தூணில் நாய் படம் வரையப்பட்ட "நாய்க்கடி பலகை' இருக்கிறது. நாய்க்கடி பட்டவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, தூணை சுற்றி வந்து விஷத்தன்மை முறிய பைரவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

    சித்திரை பிரம்மோற்சவத்தின் போது கொங்கணர் புறப்பாடாகிறார். இலுப்பை வனத்தின் மத்தியில் சிவன் காட்சி தந்த தலமென்பதால், "இலுப்பைக்குடி' என்று இவ்வூர் அழைக்கப்படுகிறது. சித்தர்களில் ஒருவரான கொங்கணர், மூலிகைகளை பயன்படுத்தி இரும்பைத் தங்கமாக மாற்றினார். அவர் மாத்தூர் என்னும் தலத்தில் தங்கத்தை ஐநூறு மாற்றுக்களாக தயாரித்தார். மேலும் அதிக மாற்று தங்கம் தயாரிக்க வேண்டும் என விரும்பி அதற்கு அருள்தருமாறு, சிவபெருமானை வழிபட்டார்.

    சிவன் அவருக்கு காட்சி தந்து, இலுப்பை மரங்கள் நிறைந்த இப்பகுதியில் பைரவரை வணங்கி, தங்கத்தை ஆயிரம் மாற்றாக உயர்த்தி தயாரிக்க அருள் செய்தார். அதன்படி கொங்கணர் பைரவரை வழிபட்டு, ஆயிரம் மாற்று தங்கம் தயாரித்தார். அந்த தங்கம் ஜோதி ரூபமாக மின்னியது. அதை அவர் எடுக்க முயன்றபோது, அந்த ஜோதி பூமிக்குள் புதைந்து சிவலிங்கமாக காட்சியளித்தது. பிரகாசமான ஜோதியில் இருந்து தோன்றியதால் சுவாமிக்கு, "சுயம்பிரகாசேஸ்வரர்' என்றும், `தான்தோன்றீஸ்வரர்' என்றும் பெயர்கள் ஏற்பட்டன.

    சுவாமி சன்னதி முன்மண்டபத்தில் உள்ள தூணில் ஒரு அங்குல அளவே உள்ள "குட்டி விநாயகர்' சிற்பம் இருக்கிறது. இந்த சிலையில் கண் இமை, விரல் நகங்களும் துல்லியமாக தெரியும்படி நேர்த்தியாக சிற்ப வேலைப்பாடு செய்யப்பட்டிருப்பது சிறப்பு. சுவாமி சன்னதி கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தி, தலையில் கிரீடம் அணிந்து காட்சி தருவது வித்தியாசமான அம்சம். அம்பாள் சன்னதி எதிரிலுள்ள ஒரு தூணில் சிம்ம வாகனத்தில் அமர்ந்த வாராஹி சிற்பம் இருக்கிறது.

    பரிகாரங்கள்:

    குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக, திருமண, புத்திர தோஷங்கள் நீங்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.தீராத நோய் மற்றும் கிரக தோஷம் நீங்க இங்குள்ள பைரவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள். திருமணத்தடையுள்ள பெண்கள் வாராகிக்கு சந்தனக்காப்பு செய்து, நெய்தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.

    சிவன், அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், பைரவருக்கு வடை மாலை அணிவித்து விசேஷ பூஜை செய்தும் வேண்டிக்கொள்கிறார்கள். தீராத நோய் மற்றும் கிரக தோஷம் நீங்கியவர்கள் பைரவர் சன்னதியில் தேங்காயில் நெய் தீபம் ஏற்றியும், வடை மாலை அணிவித்தும் நேர்த்திக்கடன் செய்கின்றனர்.

    திறக்கும் நேரம்:

    காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

    • குமாரபாளையம் வேதாந்த மடத்தில் மாணவ, மாணவியருக்கு ஆன்மீக பயிற்சி முகாம் நடைபெற்றது.
    • இதில் பயிற்சியாளர்கள் மூலம் மாணவ மாணவியருக்கு இலவச பயிற்சி வழங்கப்பட்டது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் வேதாந்த மடத்தில் மாணவ, மாணவியருக்கு ஆன்மீக பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமில் மடாதிபதி சுவாமி சித்ருபானந்தா தலைமை வகித்தார். இதில் பயிற்சியாளர்கள் மூலம் மாணவ மாணவியருக்கு இலவச பயிற்சி வழங்கப்பட்டது. புராண கதைகள், இந்து மதத்தின் சிறப்பம்சங்கள், எடுத்துரைத்ததுடன், ஸ்லோகங்கள் கற்றுக்கொ டுக்கப்பட்டு, வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டன.

    இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியர்கள் மற்றும் பயிற்சி முகாமில் பங்கேற்றவர்களுக்கு பேனா, பென்சில், நோட்டுகள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. பள்ளி பாளையம் தர்மரட்சனா சமிதி அமைப்பை சேர்ந்த பொறுப்பாளர் தனவேல் பங்கேற்று பேசினார். இதில் நிர்வாகிகள் தலைவர் ரங்கநாதன், பொருளர் சண்முகம், அழகரசன், விஸ்வநாதன், முருகேசன், சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    ×