என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Srivaikuntam"

    • கனமழையால் ஸ்ரீவைகுண்டம்- செய்துங்க நல்லூர் இடையே தண்டவாளத்தில் சேதம்.
    • கனமழையால் ஸ்ரீவைகுண்டம் ரெயில்நிலையம் போக்குவரத்தில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடியில் கனமழை பெய்ததால் திருச்செந்தூரில் இருந்து சென்னை புறப்பட்ட ரெயில் ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. ஸ்ரீவைகுண்டம்- செய்துங்கநல்லூர் இடையே ரெயில் தண்டவாளம் அமைக்கப்பட்ட இடம் மழை வெள்ளத்தில் அரித்து செல்லப்பட்டது. இதனால் தண்டவாளம் அந்தரத்தில் தொங்கியதால் ஸ்ரீவைகுண்டத்திலேயே ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டது.

    மேலும், ரெயில் நிலையத்தை சுற்றியுள்ள பக்கங்கள் மழை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டன. இதனால் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையம் தீவானது. இதனால் ரெயிலில் சுமார் 800 பயணிகள் சிக்கித் தவித்தனர். அவர்களில் சுமார் 400 பேர் அருகில் உள்ள பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டனர்.

    சுமார் 300 பேர் ரெயில் நிலையத்திலேயே தவித்தனர். அவர்கள் உணவு, குடிநீ்ர் கிடைக்காமல் அவதிப்பட்டனர். ராணுவ ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், வானிலை மோசம் காரணமாக உணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.

    இதற்கிடையே ஆர்.பி.எஃப். குழு மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழு ஆகியவை ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையம் புறப்பட்டனர். ஆனால், திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அவர்களால் விரைவாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஆர்.பி.எஃப். குழு ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தை அடைந்துள்ளது. அவர்கள் பயணிகளுக்கு உணவு வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹெலிகாப்டர் அந்த இடத்திற்கு சென்ற பிறகு அவர்கள் மீட்கப்படுவார்கள்.

    ஹெலிகாப்டரில் 2 டன் உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது. பள்ளியில் தங்க வைக்கப் பட்டுள்ளவர்களுக்கு உணவு சமைத்து வழங்கப்பட்டுள்ளது.

    • மாணவ-மாணவிகளுக்கு சண்முகசுந்தரம் சிலம்பம் கற்றுக்கொடுத்தார்.
    • பிரான்ஸ் நாட்டினர் தங்களுக்கும் சிலம்ப கலையை கற்று கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்திரு நகரியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். (வயது 70).

    இவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்று, தற்போது ஆழ்வார்திருநகரியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக சிலம்பம் கற்றுக்கொடுத்து வருகிறார்.

    நேற்று ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஆழ்வார்திருநகரி பகுதியில் மழை பெய்த காரணத்தினால் அங்குள்ள சிறு அரங்கத்தில் மாணவ-மாணவிகளுக்கு சிலம்பம் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தார்.

    இந்நிலையில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 20 பேர் கொண்ட குழுவினர் தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாதலங்களை பார்வையிடுவதற்காக வருகை தந்தனர். அவர்கள் ஏரல் அருகே உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் தங்கியிருந்தனர்.

    இந்த நிலையில் திடீரென மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக சிலம்பம் சொல்லி கொடுப்பது குறித்து அறிந்த அவர்கள் நேரடியாக 20 பேரும் வருகை தந்தனர்.

    காலையில் மழை அதிகமாக பெய்த காரணத்தினால் அரங்கத்திற்குள் நுழைந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்களை சிலம்ப ஆசான் சண்முகசுந்தரம் வரவேற்றார்.

    பிரான்ஸ் நாட்டினர் முன்னிலையில் மாணவ-மாணவிகளுக்கு சண்முகசுந்தரம் சிலம்பம் கற்றுக்கொடுத்தார்.

    அதை பார்த்து ஆச்சரியப்பட்ட பிரான்ஸ் நாட்டினர் தங்களுக்கும் சிலம்ப கலையை கற்று கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

    உடனே அதே இடத்தில் பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்தவர்களுக்கு நெடுங்கம்பு, நடுகம்பு மற்றும் ரெங்கராட்டினத்தைச்சுற்றி பயிற்சி அளித்தார். சிறிது நேரத்திலேயே சிலம்ப கலையைக்கற்றுக்கொண்ட பிரான்ஸ் நாட்டினர், ரெங்கராட்டினத்தை தானாகவே சுற்றி அசத்தினர்.

    அப்போது உடன் இருந்த மாணவ-மாணவிகளும், அங்கு வந்த பிரான்ஸ் நாட்டினரும் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.

    • தாமிரபரணி பாசன விவசாயிகள் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.
    • ஆழ்வார்திரு நகரியில் 200-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீவைகுண்டம்:

    ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி பாசன வடிநில கோட்ட அலுவலகம் 150 ஆண்டுகளுக்கு மேலாக தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் செயல்பட்டு வருகிறது.

    தற்போது இந்த தாமிரபரணி பாசன வடிநில கோட்ட அலுவலகம் நிர்வாக காரணங்களுக்காக இரண்டாகப் பிரித்திட திட்டமிடப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    இதற்கு தாமிரபரணி பாசன விவசாயிகள் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி பாசன வடிநில கோட்டத்தை இரண்டாகப் பிரிக்க கூடாது. மீண்டும் பழைய முறைப்படி இந்த அலுவலகம் ஸ்ரீவைகுண்டத்தில் செயல்படுவதற்கு அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று ஸ்ரீவைகுண்டத்தில் மேல ரதவீதி, கீழ ரதவீதி, பேருந்து நிலையம் மற்றும் பஸ் சுற்றியுள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட கடைகளை வியாபாரிகள் அடைத்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    அதேபோல் ஆழ்வார்திரு நகரியில் 200-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தின்போது தாமிரபரணி பாசன வடிநில கோட்ட அலுவலகம் தொடர்ந்து ஸ்ரீவைகுண்டத்திலேயே இயங்க வேண்டும். தவறும்பட்சத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என தெரிவித்தனர்.

    இந்த போராட்டத்தில் வக்கீல் கருப்பசாமி, வியாபாரி சங்கத் தலைவர் காளியப்பன், முன்னாள் டவுன் பஞ்சாயத்து தலைவர் கந்த சிவசுப்பு, தமிழ் தேச தன்னுரிமை கட்சி தலைவர் வியனரசு, தாமிரபரணி பாசன திட்ட குழு முன்னாள் தலைவர் உதயசூரியன், பாசன விவசாய சங்க தலைவர்கள் சீனிப்பாண்டியன், வைகுண்ட பாண்டியன், தியாகசெல்வன், பரமசிவன், துரையப்பா, பார்வர்டு பிளாக் கட்சி மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம், முன்னாள் விவசாய சங்க தலைவர் அலங்காரம், பொருநை நதிநீர் மேலாண்மை சங்க பொதுச் செயலாளர் முருகன் மற்றும் விவசாய சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

    ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×