search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "srivilliputhur andal"

    • மாடத்தின் அடிப்பகுதியில் ஆண்டாளின் சிற்பம் வடிக்கப்பட்டு உள்ளது.
    • மார்கழி நோன்பு இருந்த ஆண்டாள் தனது தோழியரை எழுப்புவது போன்ற பொருளில் 30 பாசுரங்கள் பாடினாள்.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 48-வது திருத்தலமாகும். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் முதலாவதாக திருப்பல்லாண்டு பாடிய பெரியாழ்வாரும், 2-வதாக உள்ள திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி பாடிய ஆண்டாளும் அவதரித்த தலம் இது.

    இந்த கோவில் இரு பெரும் பகுதிகளாக அமைந்துள்ளது. வடகிழக்கில் இருப்பது வடபெருங்கோவிலுடையான் என்ற ஸ்ரீவட பத்ரசாயி கோவில். தென்மேற்கில் இருப்பதுதான் ஆண்டாள் கோவில்.

    சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்திலேயே இக்கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. நாச்சியார் திருமாளிகை எனப்படும் ஆண்டாள் கோவில் கட்டிடக்கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது.

    துளசி மாட சிறப்பு

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், பெரியாழ்வார், வடபத்ரசாயி (சுயம்பு) ஆகிய 3 பேரும் அவதரித்த பெருமை கொண்டது என்பதால், இந்த கோவிலை 'மும்புரி ஊட்டிய தலம்' என்கின்றனர். இக்கோவிலின் முதல் பிரகாரத்தில் லட்சுமி ஹயக்ரீவர் ஓவிய வடிவில் அருள் பாலிக்கிறார். கல்வியில் சிறந்து விளங்க இவரிடம் வேண்டி கொள்கிறார்கள்.

    ஆண்டாள் அவதரித்த துளசி தோட்டத்தில் ஆண்டாளுக்கு ஒரு சன்னதி இருக்கிறது. சன்னதியின் முன்னால் துளசிமாடம் உள்ளது. இதில் இருக்கும் மண்ணை பக்தர்கள் சிறிதளவு எடுத்து கொள்கிறார்கள்.

    இந்த மண்ணை வீட்டில் வைத்தால் தேவையான நேரத்தில் செல்வம் கிடைக்கும் என நம்புகின்றனர். சிலர் இந்த மண்ணை நெற்றியிலும் பூசி கொள்கிறார்கள்.

    மாடத்தின் அடிப்பகுதியில் ஆண்டாளின் சிற்பம் வடிக்கப்பட்டு உள்ளது. மார்கழி நோன்பு இருந்த ஆண்டாள் தனது தோழியரை எழுப்புவது போன்ற பொருளில் 30 பாசுரங்கள் பாடினாள். அவ்வாறு தோழியரை ஆண்டாள் எழுப்பும் சிற்பங்கள் ஆண்டாள் சன்னதி விமானத்தில் உள்ளன. இதற்கு 'திருப்பாவை விமானம்' என்று பெயர்.

    திருமணத்தடை நீங்குகிறது

    ஆண்டாள் பாடிய நாச்சியார் திருமொழி 143 பாடல்கள் கொண்டது. ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கிழக்கு நோக்கி தனிச் சன்னதியில் அருள்பாலிக்கிறாள்.

    கிழக்கு நோக்கி இருக்கும் பெண் தெய்வங்களை வழிபட்டால் வாழ்க்கையில் எல்லாமே நலமாகும் என்பர். அதன்படி இவளிடம் வேண்டிக்கோள்பவை அனைத்தும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    திருமணமாகாத பெண்கள் துளசி மாலை வாங்கி வந்து ஆண்டாளுக்கு சாத்தி வணங்கி, பின் அதனை வாங்கி கழுத்தில் அணிந்து கொண்டு அருகில் இருக்கும் கண்ணாடி கிணற்றை சுற்றி வருகிறார்கள். தொடர்ந்து, கிணற்றை எட்டிப் பார்த்து விட்டு பின் மீண்டும் ஆண்டாளை வழிபடுகிறார்கள்.

    இவ்வாறு வழிபடுகிறவர்களுக்கு கோவில் சார்பில் வளையல், மஞ்சள் கயிறு பிரசாதமாக கொடுக்கின்றனர். இதனால் தடைப்பட்ட திருமணங்கள் நடக்கும் என்பது நம்பிக்கை.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கருவறையை சுற்றியுள்ள முதல் பிரகார சுவர்களில் 108 திவ்யதேச பெருமாளின் உருவங்கள் ஓவியமாக வரையப்பட்டுள்ளன. மேலும் கண்ணாடி மாளிகை, மாதவிபந்தல், வித்தியாசமான ஆஞ்சநேயர்சிலை, மன்மதன், ரதி சிலைகளும் உள்ளன.

    ஆண்டின் 12 மாதங்களும் இங்கு திருவிழாக்கள் நடைபெறுகின்றன. சித்திரை மாதம் 10 நாட்கள் திருவிழா நடக்கிறது. இதில் 10-ம் நாளான சித்ரா பவுர்ணமி அன்று மதுரையில் அழகர் ஆற்றில் இறங்குவதுபோல் ஆண்டாள் - ரங்கமன்னார் குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. வைகாசி மாதம் வசந்த கால உற்சவ திருவிழா நடக்கிறது.

    ஆனி மாதம் ஆண்டாளின் தந்தையான பெரியாழ்வாருக்கு உற்சவ திருவிழாவும், ஆடிப்பூரமும், மார்கழி மாதத்தில் பகல் பத்து, ராபத்து என 20 நாட்கள் திருவிழாவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இவை தவிர, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களிலும் திருவிழா நடக்கிறது.

    அமைவிடம்

    மதுரையில் இருந்து 74 கிலோ மீட்டர் தொலைவில் ஸ்ரீவில்லிபுத்தூர் அமைந்துள்ளது. மதுரையில் இருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பகுதியில் இருந்து வருபவர்கள் ராஜபாளையம், விருதுநகர், சிவகாசி வழியாக ஸ்ரீவில்லிபுத்தூரை சென்றடையலாம்.

    நடைதிறப்பு நேரம்

    காலை 6.30 மணி முதல் மதியம் 1 மணி வரை. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை.

    தம்பதியர் ஒற்றுமை அதிகரிக்க...

    ஆண்டாளின் பக்திக்கு பெருமையளித்த ஸ்ரீரங்கம் ரங்கநாதர் அவளை தன்னுடன் ஏற்றுக் கொண்டார். இதை உணர்த்தும் விதமாக இங்கு நடக்கும் ஆடித்திருவிழாவின் 7-ம் நாளில் ஆண்டாளின் மடியில் சயனித்த கோலத்தில் ரெங்கமன்னார் காட்சி தருவார். இந்த ஊரில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் இந்த நிகழ்ச்சி நடக்கும். இந்த தரிசனம் மிகவும் விசேஷமானது. இந்த அரிய காட்சியை தரிசிக்கும் தம்பதியர் இடையே மேலும் ஒன்றுமை பலப்படும் என்கிறார்கள்.

    • பெருந்துறையின் புதிய பஸ் நிலையம் பகுதியில் இருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
    • பெருந்துறை அக்ரஹார வீதியில் உள்ள ஸ்ரீ மடத்தில் பெருமாளுக்கு ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் மாலை சாத்தப்பட்டது.

    பெருந்துறை:

    பெருந்துறை அக்ரஹார வீதியில் உள்ள ஸ்ரீ மடத்தில் பெருமாளுக்கு ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் மாலை சாத்தப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு இன்று அதிகாலை சாத்தப்பட்ட மாலை பெருந்துறை கொண்டு வரப்பட்டது.

    இந்த மாலையை பெருந்துறையின் புதிய பஸ் நிலையம் பகுதியில் இருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இந்த மாலை அக்ரஹார வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் ஸ்ரீ மடத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

    அங்கு அலங்கரிக்கப்பட்ட பெருமாள் விக்ரகத்திற்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த இந்த மாலையை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் பெருமாள் பக்தி பாடல்கள் பஜனையாக பாடப்பட்டது. வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து இன்று காலை வஸ்திர மரியாதை பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறது.
    ஆண்டுதோறும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்ட நாளில் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து மங்கல பொருட்கள் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. இதேபோல் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் பிறந்த நாளான ஆடிப்பூரம் தினத்தன்று நடைபெறும் தேரோட்டத்தின்போது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து வஸ்திர மரியாதை பொருட்கள் ஆண்டாளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    இதன்படி இந்த ஆண்டு வஸ்திர மரியாதை பொருட்கள் வழங்கப்படுவதையொட்டி, நேற்று மாலை 5 மணியளவில் பட்டு வஸ்திரங்கள், மாலை, பழங்கள் உள்ளிட்ட மங்கல பொருட்களை ஸ்ரீரங்கம் கோவில் ரெங்கவிலாஸ் மண்டபத்தில் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

    பின்னர் கோவில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் பட்டு வஸ்திரங்களை யானை மீது அமர்ந்து எடுத்து வர, ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் மங்கல பொருட்களை கைகளில் ஏந்தியும், தலையில் சுமந்தும் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர்.

    இன்று(ஞாயிற்றுக்கிழமை) ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்தினரால் இந்த மங்கல பொருட்கள் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டு அக்கோவில் நிர்வாகத்தினரிடம் சமர்ப்பிக்கப்படும்.

    இந்த வஸ்திரங்களை ஆண்டாள் அணிந்து நாளை (திங்கட்கிழமை) நடைபெறும் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆடிப்பூர தேரோட்டத்தில், தேரில் எழுந்தருளுவார். 
    ×