என் மலர்
நீங்கள் தேடியது "SSLV D2"
- திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 10 பேர் இணைந்து 50-கிராம் எடையுள்ள பே லோடு-ஐ வெற்றிகரமாக தயார் செய்து இஸ்ரோவிற்கு அனுப்பினர்.
- எஸ்.எஸ்.எல்.வி. டி-2 செயற்கைக்கோளுடன் பொருத்தப்பட்டு வரும் 10-ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஏவப்படவுள்ளது.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம், திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், சென்னை ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் ஆசாதி சாட்-1 செயற்கைகோள் பாகங்களை தயாரித்தனர். பின்னர் எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டது. ஆனால் ராக்கெட் வழிமாறியதால் வெற்றிகரமாக செயற்கைக் கோளை ஏவமுடியவில்லை.
அதன் தொடர்ச்சியாக தற்போது அதே நிறுவனத்துடன் இணைந்து ஆசாதி சாட்-2 தயாரிக்கும் பணியில் இந்தியாவில் உள்ள பல்வேறு மாணவிகள் ஈடுபட்டிருந்தனர். அதில் திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 10 பேர் இணைந்து 50-கிராம் எடையுள்ள பே லோடு-ஐ வெற்றிகரமாக தயார் செய்து இஸ்ரோவிற்கு அனுப்பினர்.
தற்போது அந்த பேலோடு, ஆசாதி சாட்-2-ல் பொருத்தப்பட்டுள்ளது. இவை எஸ்.எஸ்.எல்.வி. டி-2 செயற்கைக்கோளுடன் பொருத்தப்பட்டு வரும் 10-ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஏவப்படவுள்ளது.
இந்த திட்டத்தில் பணியாற்றிய மாணவிகளை பள்ளி தலைமையாசிரியர் கர்ணன் மற்றும் அறிவியல் ஆசிரியை சிந்தியா ஆகியோர் ஒருங்கிணைத்தனர். திருமங்கலம் அரசு பெண்கள் பள்ளியின் மாணவிகளை மதுரை முதன்மைக் கல்வி அலுவலர் கார்த்திகா, மாவட்டக் கல்வி அலுவலர் முரளி, பள்ளி பெற்றோர் ஆசிரியர்கள் கழகத் தலைவர் ஜெயராமன், பள்ளி மேலாண்மைக் குழுத்தலைவர் ஸ்ரீதேவி சண்முகம், பள்ளி உதவித் தலைமையாசிரியை வெங்கடேஸ்வரி மற்றும் ரெகுபதி ஆகியோர் பாராட்டினார்கள். இம்மாணவிகள் வரும் 10-ம் தேதி செயற்கைக்கோள் ஏவும் நிகழ்வை நேரில் பார்க்கவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசியர்கள் செய்து வருகின்றனர்.