என் மலர்
நீங்கள் தேடியது "Stay Room"
+2
- நெல்லை அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
- இங்கு நாள்தோறும் சராசரியாக 2 ஆயிரம் பேர் புற நோயாளிகளாகவும், 2 ஆயிரம் பேர் வரை உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர்.
நெல்லை:
நெல்லை ஐகிரவுண்டில் அமைந்துள்ள மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனைக்கு நாள்தோறும் நெல்லை மட்டுமல்லாமல் தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற அண்டை மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
இங்கு நாள்தோறும் சராசரியாக 2 ஆயிரம் பேர் புற நோயாளிகளாகவும், 2 ஆயிரம் பேர் வரை உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர்.
இந்த ஆஸ்பத்திரியில் நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்கு போதிய வசதிகள் இல்லாததாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது. இதையடுத்து மருத்துவமனை வளாகத்தில் தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் நோயாளிகளின் உறவினர்கள் தங்கும் அறை கட்டப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த அறை திறக்கப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளாக பூட்டியே கிடந்தது.
அதனைத் திறந்து நோயாளிகளின் உறவினர்கள் பயன்படுத்தும் வகையில் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை எழுந்து வருகிறது.
அதற்கு சற்று தொலைவில் உள்ள மற்றொரு அறையில் மருத்துவ உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளது. மருந்து க்கிடங்காக பயன்படுத்தப்பட்டு வந்த அந்த அறையை நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தரும்படி அப்போதைய டீன் ரவிச்சந்திரனிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனாலும் நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால் நோயாளிகள் தங்குவதற்கு இடம் இல்லாமல் மருத்துவ மனை வளாகத்தில் உள்ள மரத்து நிழலில் அவர்கள் தங்கி இருந்தனர்.
இதனால் செல்போன் திருட்டு, உடைமைகள் மற்றும் பணம் திருட்டு போன்றவை அதிகரித்து வந்தது.
இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்ற டீன் ரேவதியிடம் அந்த அறைகளை திறக்க வழிவகை செய்யுமாறு நோயாளிகளின் உறவினர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நோயாளிகள் உறவினர்கள் தங்கும் அறையில் செயல்பட்டு வரும் மருந்து கிடங்குகளை வேறு இடத்துக்கு மாற்ற டீன் உத்தரவிட்டுள்ளார்.
டீன் ரேவதி
இது தொடர்பாக டீன் ரேவதி கூறுகையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உறவினர்கள் நலன் கருதி வளாகத்தில் 2 கட்டிடங்கள் அவர்கள் தங்கு வதற்காக கட்டப்பட்டுள்ளது. தற்போது மற்றொரு கட்டிடம் கட்டி முடிக்கப்படும் தருவாயில் உள்ளது.
இந்த 3 கட்டிடங்களிலும் இனி நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்கு விரைவில் ஏற்பாடு செய்து தரப்படும். புதிதாக கட்டப்பட்டு வரும் அறையில் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக தங்கும் வகையில் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
மருந்துக்கிடங்காக செயல்படும் அறையில் இருந்து மருத்துவ பொருட்கள் வெளி யேற்றப்பட்டு வளாகத்திலேயே மற்றொரு கட்டிடத்தில் வைக்கப்பட உள்ளது. இது தவிர மக்கள் உட்காரும் வகையில் வேறு ஒரு இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால் விரைவில் வளாகத்திலேயே 3 இடங்களில் நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்கு வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என்றார்.