என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 100684"

    12 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை-தேனி ரெயில் இயக்கப்படுவதால் பயணிகள், வியாபாாிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    மதுரை

     மதுரை - தேனி இடையே வருகிற 27-ந் தேதி முதல் பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது 12 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை-தேனி இடையே பயணிகள் ரெயில் இயக்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    இந்த ரெயில் வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிப்ட்டி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கேரளா, பகுதியில் விளையும் ஏலக்காய் உள்ளிட்ட விளைபொருட்களின் வியாபார தேவைக்கென போடி - மதுரை ரெயில் போக்குவரத்து கடந்த 
    1928-ம் ஆண்டு முதல் மீட்டர் கேஜ் பாதையில் ஓடத் தொடங்கியது. 

    குறைந்த கட்டணத்தில் ஏலக்காய், பழங்கள், காய்கறிகள், இதர விவசாயப் பொருள்களை மதுரைக்குக் கொண்டு சென்று, அங்கிருந்து பிற மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லவும் இந்த ரெயில் சேவை பயனுள்ளதாக இருந்தது.

    இந்த ரெயில் பாதை அகலரெயில் பாதை பணிக்காக  2010 டிசம்பரில் மதுரை - போடி இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சுமார் ரூ.450 கோடி மதிப்பிலான மதுரை - போடி அகல ரெயில்பாதை திட்டத்தில் தேனி வரை அனைத்து பணிகளும் முடிந்துள்ளன. ஏற்கெனவே மதுரை - உசிலம்பட்டி 37 கி.மீ., துாரத்தை ஜனவரி 2020-ல் பாதுகாப்பு ஆணையர் மனோகரனும், உசிலம்பட்டி - ஆண்டிபட்டி 21 கி.மீ., பாதையை டிசம்பர் 2020-ல் அபய்குமார் ராயும் ஆய்வு செய்தனர்.

     ஆண்டிபட்டி - தேனி 17 கி.மீ. தூரத்தை மார்ச் 2022-ல் மத்திய ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோஜ் அரோரா ஆய்வு செய்து 3 மாதத்திற்குள் மதுரை- தேனிக்கு ரெயில் சேவை தொடங்கலாம் என அனுமதி அளித்தார். 
     மதுரை - தேனிக்கு முதல் கட்டமாக ரெயில் சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வரும் பிரதமர் மோடி மே 26-ல் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் மதுரை- தேனி ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார். 

    12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் கட்டமாக மதுரை - தேனி இடையே மே 27 முதல் ரெயில் ஓடும் என்ற அறிவிப்பு தேனி, மதுரை மாவட்ட ரெயில் பயணிகள், வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
    மதுரை கோட்ட ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், மதுரை- தேனி இடையே அனைத்துப் பணிகளும் முடிந்து, ரெயில் ஓடுவதற்கு தயார் நிலையில் வைத்திருந்தோம். 

    பிரதமர் சென்னையில் ரெயில் சேவையை 26-ந் தேதி தொடங்கி வைக்கிறார். தேனி - போடி இடையே 15 கிலோ மீட்டருக்கு பணி நடக்கிறது. விரைவில் அதுவும் முடிந்துவிடும்.மேலும், மதுரை - போடிக்கு மின்சார ரெயில் இயக்க அனுமதியும் கிடைத்துள்ளது. மின்மயமாக்கல் பணி விரைவில் தொடங்க இருக்கிறது என்றனர்.

    தேனி, மதுரை, விருதுநகர், நெல்லை, தென்காசி மாவட்ட தோட்ட தொழிலாளர்களின் நலன் கருதி நாகர்கோவிலில் இருந்து நெல்லை, தென்காசி, மதுரை வழியாக தேனிக்கு தினசரி ரெயில் இயக்க  வேண்டும் என தென் மாவட்ட பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
    மதுரை-தேனி ரெயிலில் முதல் நாளில் 634 பயணிகள் பயணம் செய்ததால் ரூ. 25 ஆயிரத்து 751 கட்டணம் வசூல் ஆனது
    மதுரை

    மதுரை- தேனி இடையே முதன்முதலாக முன்பதிவற்ற பயணிகள் ரெயில் நேற்று முதல் இயக்கப்பட்டது.  மதுரையில் இருந்து வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனிக்கு முறையே 19, 31, 33, 273 பயணிகள் பயணி சீட்டு பெற்று பயணம் செய்தனர். இதன் மூலம் மதுரை கோட்டத்துக்கு கிடைத்த கட்டண வசூல் ரூ.14ஆயிரத்து 940 ஆகும்.

    அடுத்தபடியாக வடபழஞ்சியில் இருந்து உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனிக்கு முறையே 7, 10, 27 பயணிகள் பயணம் செய்து உள்ளனர். இதன் மூலம் ரூ.1,590 கிடைத்துள்ளது. 
     
    இேதபோல் உசிலம்பட்டியில் இருந்து தேனிக்கு 109 பயணிகள், ரூ.3,270 கட்டணம் செலுத்தி பயணம் செய்து உள்ளனர். ஆண்டிபட்டியில் இருந்து தேனிக்கு 65 பயணிகள் ரூ. 1,950 கட்டணம் செலுத்தி பயணம் செய்துள்ளனர். 

    எனவே மதுரையில் இருந்து தேனிக்கு சென்ற முன்பதிவற்ற பயணிகள்ரெயிலில் மொத்தம் 574 பயணிகள் பயணம் செய்து உள்ளனர். இதன் மூலம் ரூ.21,750 கிடைத்துள்ளது.

    இதேபோல் தேனியில் இருந்து மதுரைக்கு வந்த ரெயிலில் 377 பேர் பயணம் செய்தனர். ஆண்டிபட்டியில் இருந்து 213 பயணிகள் பயணம் செய்ததன் மூலம் ரூ.7,476, கிடைத்துள்ளது. உசிலம்பட்டியில் இருந்து 44 பயணிகள் மூலம் ரூ.1,320 கிடைத்து உள்ளது. 

    மதுரை- தேனி இடையேயான பயணிகள் ரெயிலில் நேற்று மட்டும் ஓட்டுமொத்தமாக 634 பேர் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் 
    ரூ. 25,751 கட்டணம் வசூல் செய்யப்பட்டு உள்ளது.

    மதுரை - தேனி ரெயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    மதுரை

    மதுரை - தேனி - மதுரை ரெயில்கள் கால அட்டவணையில் நாளை (1-ந் தேதி) முதல் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

    அதன்படி மதுரை - தேனி முன்பதிவு இல்லாத விரைவு சிறப்பு ரெயில் (06701) மதுரையில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 25 நிமிடங்கள் முன்னதாக காலை 8.05 மணிக்கு புறப்பட்டு காலை 9.35 மணிக்கு தேனி சென்று சேரும். மறு மார்க்கத்தில் தேனி - மதுரை முன்பதில்லாத விரைவு சிறப்பு ரெயில் (06702) தேனியில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு வழக்கமான வருகை நேரமான இரவு 7.35 மணிக்கு பதிலாக இரவு 7.50 மணிக்கு மதுரை வந்து சேரும்.
    தேனி அருகே டாஸ்மாக் கடையில் மாமுல்கேட்டு மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.

    தேனி:

    தேனி அருகே தேவாரம் பெருமாள்பட்டியை சேர்ந்தவர் மாரிச்சாமி(வயது44). இவர் திடீர்புரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வேலையில் இருந்த போது லட்சுமிநாயக்கன்பட்டியை சேர்ந்த செல்வேந்திரன்(வயது32) என்பவர் மாரிச்சாமியிடம் மாதந்தோறும் ரூ.15ஆயிரம் மாமுல்தரவேண்டும் என கூறியுள்ளார்.

    இதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே பணம் தராவிட்டால் பிரச்சினை ஏற்படும் என அவரை மிரட்டியுள்ளார். இதுகுறித்து தேவாரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து செல்வேந்திரனை கைது செய்தனர்.

    தேனியில் தாம் பெற்ற வெற்றியை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்குகிறேன் என ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் கூறினார்.
    தேனி:

    பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. நாடு முழுவதும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அபார வெற்றி பெற்றது.

    தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 38 இடங்களில் அபார வெற்றி பெற்றது. மீதமுள்ள ஒரு தொகுதி தேனி ஆகும்.

    இந்த தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார்.

    இதில், அதிமுகவின் ரவீந்திரநாத் 4,99,354 வாக்குகள் பெற்றார். காங்கிரசின் இளங்கோவன் 4,23,035 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றுள்ளார்.

    இதை தொடர்ந்து தேனி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு வெற்றி சான்றிதழ் தரப்பட்டது.  தேனி ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி பல்லவி பல்தேவ் வெற்றி சான்றிதழை வழங்கினார்.

    வெற்றி சான்றிதழை பெற்ற ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் இந்த வெற்றியை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்குகிறேன் என தெரிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 
    தேனி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனைவிட அதிமுக வேட்பாளரான ரவீந்திரநாத் குமார் 76 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
    தேனி:

    பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. நாடு முழுவதும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அபார வெற்றி பெற்றது.

    தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 38 இடங்களில் அபார வெற்றி பெற்றது. மீதமுள்ள ஒரு தொகுதி தேனி ஆகும்.

    இந்த தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். 

    இதில், அதிமுகவின் ரவீந்திரநாத் 4,99,354 வாக்குகள் பெற்றார். காங்கிரசின் இளங்கோவன் 4,23,035 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றுள்ளார்.
    தேனியில் தாய் வீட்டுக்கு சென்ற பெண் மாயமானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    தேனி பழைய பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி கிருஷ்ணபிரியா (வயது 20). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதி கேரளாவில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணபிரியா தேனியில் உள்ள தாய் வீட்டுக்கு வந்துள்ளார். சம்பவத்தன்று வெளியே கடைக்குச் செல்வதாக தனது பெற்றோரிடம் கூறிச் சென்றுள்ளார்.

    ஆனால் இரவு வெகுநேரமாகியும் அவர் ஊர் திரும்பவில்லை. இதனால் மணிகண்டனுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர். ஆனால் கிருஷ்ணபிரியா அங்கும் செல்லவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ண பிரியாவை தேடி வருகின்றனர்.

    தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது.

    கூடலூர்:

    தமிழகத்தில் வழக்கத்தை விட இந்த ஆண்டு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தேனி மாவட்டத்தில் கோடை மழை பெய்யாததால் வறட்சி மேலோங்கி வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது.

    வழக்கமாக ஜூன் மாதத்தில் முதல்போக சாகுபடிக்காக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு குறித்த நேரத்தில் தண்ணீர் திறக்கப்படுமா? என்பது கேள்விக்குறியே? நேற்றும் பகல் பொழுதில் வெயில் சுட்டெரித்தது.

    இரவு நேரத்தில் திடீரென இடி மின்னலுடன் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. தேனி, கூடலூர், பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. பெரியாறு அணையின் நீர்மட்டம் 112.20 அடியாக உள்ளது. 7 கன அடி நீர் வருகிற நிலையில் 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 36.78 அடியாக உள்ளது. 37 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 60 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 36.10 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 93.15 அடி. வரத்து இல்லை. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 2.6, தேக்கடி 15.8, கூடலூர் 14.4, உத்தமபாளையம் 22.6, சண்முகாநதி அணை 6, வீரபாண்டி 22, வைகை அணை 23, மஞ்சளாறு 32 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    தேனியில் உபயோகப்படுத்தாத 50 வாக்குப் பதிவு எந்திரங்களை அதிகாரிகள் கொண்டு வந்து வைத்தது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளதாக தேர்தல் கமிஷனில் திமுக புகார் அளித்துள்ளது. #DMK #LokSabhaElections2019 #TNElections2019

    சென்னை:

    தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை சந்தித்து மனு கொடுத்தார்.

    பின்னர் ஆர்.எஸ்.பாரதி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேனியில் உபயோகப்படுத்தாத 50 வாக்குப் பதிவு எந்திரங்களை அதிகாரிகள் கொண்டு வந்து வைத்தது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. பதிவான வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்ற சதி நடப்பதாக சந்தேகிக்கிறோம்.

    இதுகுறித்து நேற்று அனைத்துக்கட்சியினரும் சேர்ந்து தேனி கலெக்டர் அலுவலகத்தில் விளக்கம் கேட்டனர். கலெக்டர் தந்த விளக்கம் தெளிவாக இல்லை. ஆகவே தி.மு.க. சார்பில் இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்துள்ளோம். அவர் விளக்கம் தருவதாக கூறி இருக்கிறார்.


    தமிழ்நாட்டில் எப்போதுமே அமைதியான முறையில் தேர்தல் நடக்கும். வட மாநிலங்களைப் போல் வாக்குச்சாவடிகளை கைப்பற்றும் சம்பவம் நடைபெறாது. ஆனால் இந்த முறை தமிழ்நாட்டில் நடந்த தேர்தலில் பல வினோதங்கள், பல வேடிக்கைகள் நடைபெறுகிறது.

    கரூரில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட் டிருந்த அறையில் உள்ள கண்காணிப்பு கேமரா சரியாக வேலை செய்யவில்லை. 2 மணி நேரம் வித்தியாசம் காட்டுகிறது.

    மதுரையில் வாக்குப்பதிவு எந்திரங்களை வைத்திருந்த கட்டிடத்திற்குள் பெண் தாசில்தார் சென்று வந்துள்ளார். இந்த வி‌ஷயம் கோர்ட்டு வரை சென்று அதன் பிறகு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இப்போது தேனியிலும், ஈரோட்டிலும் வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு வந்து வைக்கிறார்கள். இது ஏதோ சதி செய்வதற்காக திட்டமிடுவதாகவே கருதுகிறோம். எந்த சதி திட்டமானாலும் அதை திமு.க. முறியடிக்கும்.

    தேனியில் எந்த ஒரு வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவை யாரும் கேட்கவில்லை. தேர்தல் நடந்து முடிந்து 20 நாட்களுக்கு பிறகு இப்போது திடீர் என உபயோகப்படுத்தாத வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு வந்து வைத்துள்ளனர்.


    தர்மபுரி-பூந்தமல்லி, கடலூரில் உள்ள 10 வாக்குச்சாவடிகளுக்கு மறுவாக்குப்பதிவு கேட்டு இருந்தோம். அதற்கு இதுவரை பதில் இல்லை. ஆனால் கேட்காத இடத்துக்கு மறுவாக்குப்பதிவுக்காக அதிகாரிகள் தன்னிச்சையாக வாக்குப்பதிவு எந்திரங்களுடன் வருகிறார்கள்.

    இதில் மிகப்பெரிய மர்மம் உள்ளது. அதிகாரிகளின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்படுகிறது.

    கடந்த வாரம் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாரணாசி சென்று பிரதமர் மோடியின் வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது தனது மகனை வெற்றி பெற செய்ய வைக்க தேவையான உதவிகளை செய்யுங்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளிவந்தன.

    இந்த சூழ்நிலையில் இப்போது தேனிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்துள்ளதால் வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்ற முயற்சி நடக்கிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனால் புகார் செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK #LokSabhaElections2019 #TNElections2019

    தேனி மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 93.97 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    தேனி:

    தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் பிளஸ்-1 வகுப்புகளுக்கு அரசு தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி தேனி மாவட்டத்தில் 7,039 மாணவர்களும், 7414 மாணவிகளும் என மொத்தம் 14453 பேர் பிளஸ்-1 தேர்வு எழுதினர்.

    இதில் 6466 மாணவர்களும், 7116 மாணவிகளும் என மொத்தம் 13582 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 93.97 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு 94.06 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. மேலும் வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

    தேனி மாவட்டத்தில் மொத்தம் 138 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் பிளஸ்-1 தேர்வு எழுதினர். இதில் 12 அரசு பள்ளிகளும், 28 தனியார் பள்ளிகளும் என மொத்தம் 40 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகள் அந்தந்த பள்ளி மாணவர்களின் செல்போன்களுக்கு குறுந்தகவலாக அனுப்பப்பட்டன. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு வராமல் வீட்டில் இருந்தபடியே தங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்டனர்.

    கோயம்புத்துரில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை தேனி மாவட்டத்துக்கு மாற்றியதாக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தேனி தாசில்தார் அலுவலகத்தில் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. #LokSabhaElections2019
    தேனி :

    கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து லாரியில் தேனிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று மாலை வந்திறங்கின.

    இதையறிந்த தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் தேனி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டன.

    வேறு தொகுதியில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை இங்கு வைத்துள்ளதாக புகார் எழுந்ததால், அங்கு இறக்கிய வாக்குப்பதிவு இயந்திரங்களை திறந்து காண்பிக்க வேண்டும் என அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையறிந்து, மாவட்ட கலெக்டர் மற்றும் டிஆர்ஓ ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். திமுக கூட்டணி கட்சியினரின் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் பேச்சுவார்த்தை நடத்தினார். வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தாத 50 இயந்திரங்களை கோவையில் இருந்து தேனிக்கு மாற்றியுள்ளோம் என்று வருவாய் அலுவலர் விளக்கம் அளித்தார்.

    இதுகுறித்து விளக்கம் அளித்த தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு, தேவை கருதியே தேனிக்கும் ஈரோட்டிற்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டது. இது வழக்கமான நடவடிக்கை. மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டால், பயன்படுத்துவதற்காக இயந்திரங்கள் இடமாற்றம் செய்யப்பட்டது என தெரிவித்தார். #LokSabhaElections2019
    தேனி அருகே கிணற்றில் தவறி விழுந்து காவலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே உத்தமபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி விவசாயிகள் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் தென்னை, வாழை, மானாவாரி பயிர்களை பயிரிட்டுள்ளனர்.

    தற்போது வறட்சி அதிகரித்து வருவதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி வன விலங்குகள் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதியில் புகுந்து விடுகின்றன. குறிப்பாக காட்டுப்பன்றி அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க தோட்ட காவலுக்கு சென்று வருகின்றனர். உத்தமபாளையம் அம்மாபட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் குமரன் (வயது 43). இவர் சூரியன், கார்த்திக், ரவி ஆகியோருடன் தனியார் தென்னந்தோப்பில் காவல் பணிக்கு சென்றுள்ளார்.

    தோட்டத்தில் நின்று பேசிக் கொண்டு இருந்த போது காட்டுப்பன்றி ஆவேசமாக சீறிப் பாய்ந்து வந்தது. இதைப்பார்த்ததும் அதிர்ச்சியடைந்த 4 பேரும் உயிரை காப்பாற்றிக் கொள்ள சிதறி ஓடினர். இருந்த போதும் காட்டுப்பன்றி அவர்களை விரட்டியது. இதில் குமரன் அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்தார். தண்ணீர் இல்லாததால் குமரனுக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனே மற்றவர்கள் அவரை உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே குமரன் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×