என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்செந்தூர்"

    • திருச்செந்தூர் கோவிலில் பக்கதர்கள் கூட்டம் அலைமோதியது.
    • வரிசையில் நின்றுக் கொண்டிருந்த ஓம் குமாருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த பக்தர் திடீரென மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்.

    கோவிலில், 100 ரூபாய் கட்டண வரிசையில் நின்ற காரைக்குடியை சேர்ந்த ஓம்குமார் (50) என்ற பக்தர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்.

    ஞாயிற்றுக்கிழமையான இன்று திருச்செந்தூர் கோவிலில் பக்கதர்கள் கூட்டம் அலைமோதியது.

    இதற்கிடையே, வரிசையில் நின்றுக் கொண்டிருந்த ஓம் குமாருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

    மயங்கி விருந்தவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த சம்பவம் கோவில் சுற்று வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பக்தர்கள் 4 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • இன்று கோவில் வளாகத்தில் ஏராளமான திருமணங்கள் நடந்தது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குரு தலமாகவும், சிறந்த பரிகார தலமாகவும், ஆன்மீக சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது.

    இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இன்று விடுமுறை தினம் மற்றும் சுப முகூர்த்த நாள் என்பதால் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்கள் மட்டுமல்லாது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் காலையில் இருந்தே கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று (ஞாயிற்றுக் கிழமை) கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 10 மணிக்கு உச்சி கால அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    சுப முகூர்த்தம் நாள் என்பதால் இன்று கோவில் வளாகத்தில் ஏராளமான திருமணங்கள் நடந்தது.

    இன்று காலை 9.15 மணிக்கு திடீரென சாரல் மழை பெய்தது. பக்தர்கள் சாரல் மழையில் நனைந்தவாறு கடலில் புனித நீராடினர்.

    • தேர் எட்டு ரத வீதிகளில் உலா வந்து நிலையம் சேர்ந்தது.
    • 11-ம் திருவிழாவான நாளை தெப்ப உற்சவம் நடக்கிறது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 12 நாட்கள் நடைபெறும் மாசி பெரும் திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்கள் மற்றும் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 5-ம் திருவிழா அன்று குடவருவாயில் தீபாராதனை நடந்தது. 7-ம் திருவிழா அன்று சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் ஏற்றத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    8-ம்திருவிழா அன்று காலையில் சுவாமி சண்முகர் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதியுலா, மதியம் சுவாமி சண்முகர் விஷ்ணு அம்சமாக பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து கோவில் சேர்தல் நடந்தது.


    விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழாவான இன்று காலையில் தேரோட்டம் நடைபெற்றது. முதலில் விநாயகர் தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு எட்டு ரதவீதிகளில் சுற்றி வந்து நிலையம் சேர்ந்தது. பின்னர் பெரிய தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டது.

    தேரை மாலைமுரசு நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் மாலைமுரசு நிர்வாக இயக்குநர் கதிரேசன் ஆதித்தன், தலைமை நீதித்துறை நடுவர் வசித்குமார்,திருச்செந்தூர் சார்பு நீதிமன்ற நீதிபதி செல்வபாண்டி, திருச்செந்தூர் நீதித்துறை நடுவர் வரதராஜன், கோவில் இணை ஆணையர் ஞானசேகரன், ஏரல் சேர்மன் அருணாச்சல சுவாமி கோவில் தக்கார் கருத்தப்பாண்டி நாடார், தமிழ்நாடு வணிகர் சங்க மாநில தலைவர் காமராசு நாடார், திருச்செந்தூர் நகராட்சி துணை தலைவர் ரமேஷ், தி.மு.க. விவசாய அணி மாநில துணை செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார், அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் திருப்பதி மற்றும் குமரேச ஆதித்தன், ரெங்கநாத ஆதித்தன், டாக்டர் பால சுப்பிரமணிய ஆதித்தன், சிவநேச ஆதித்தன், முருகன் ஆதித்தன், ராஜன் ஆதித்தன், ராஜேந்திர ஆதித்தன், சிவபாலன் ஆதித்தன், சுப்பிரமணிய ஆதித்தன், சரவண ஆதித்தன், ஜெயந்திர ஆதித்தன், ராதாகிருஷ்ணன் ஆதித்தன், தங்கேச ஆதித்தன், ராமானந்த ஆதித்தன், வரதராஜ ஆதித்தன், பகவதி ஆதித்தன், சண்முகானந்த ஆதித்தன், குமாரர் ராமசாமி ஆதித்தன், சேகர் ஆதித்தன், எஸ்.எஸ்.ஆதித்தன், எஸ்.ஆர்.எஸ். சபேச ஆதித்தன், ஹெக்கேவார் ஆதித்தன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    தேர் எட்டு ரத வீதிகளில் உலா வந்து நிலையம் சேர்ந்தது. பின்னர் தெய்வானை அம்பாள் தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு எட்டு ரத வீதிகளில் உலா வந்து நிலையம் சேர்ந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் எழுப்பியது விண்ணை பிளந்தது.


    11-ம்திருவிழாவான நாளை (வியாழக்கிழமை) தெப்ப உற்சவம் நடக்கிறது. நாளை இரவு 10 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் தெப்பத்தில் எழுந்தருளி 11 முறை தெப்பத்தில் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    12-ம்திருவிழாவான நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு சுவாமி மஞ்சள் நீராட்டு கோலத்துடன் எட்டு வீதிகளிலும் உலா வந்து வடக்கு ரத வீதியில் உள்ள 14 ஊர் செங்குந்த முதலியார் திருவிழா மண்டபம் வந்து அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் ஆகி சுவாமி,அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 

    • 30-ந்தேதி சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது.
    • 31-ந்தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 2-ம் நாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. காலையில் மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனையை தொடர்ந்து யாகசாலையில் சுவாமி ஜெயநாதருக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி- தெய்வானையுடன் வெள்ளி சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷங்களை முழங்கி சாமி தரிசனம் செய்தனர்.

    மாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது. இரவில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி, கிரி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    6-ம் நாளான வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணியளவில் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. 7-ம் நாளான 31-ந்தேதி (திங்கட்கிழமை) இரவில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • 30-ந்தேதி சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது.
    • 31-ந்தேதி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.

    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு விழாக்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது கந்தசஷ்டி திருவிழா.

    கோவிலில் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 6.30 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்கியது. காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது. மாலை 6.45 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடந்தது.

    விழாவின் 2-ம் நாளான 26-ந்தேதி முதல் 5-ம் நாளான 29-ந்தேதி வரையிலும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது.

    யாகசாலை பூஜை ஆரம்பமாகியது. யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானைக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி, அம்பாள்களுக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.

    பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க ரதத்தில் கிரி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 6-ம் நாளான வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 6.45 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்குகிறது. மதியம் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடக்கிறது.

    மதியம் 12.45 மணிக்கு யாகசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முக விலாச மண்டபத்தில் எழுந்தருளுகிறார். பின்னர் சுவாமிக்கு தீபாராதனை நடக்கிறது. மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானைக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி, சூரனை வேல் கொண்டு வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது. இதில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

    7-ம் நாளான 31-ந்தேதி (திங்கட்கிழமை) இரவு 11 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.

    அன்று காலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 3.30 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது.காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், 1 மணிக்கு மற்றகால பூஜைகள் நடக்கிறது. மாலை 5 மணிக்கு அம்பாள் தபசு காட்சிக்கு புறப்படுதல், 6.30 மணிக்கு சுவாமி- அம்பாளுக்கு மாலை மாற்றும் வைபவம் நடைபெற்று அன்று இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.

    • கந்தன் தனது பிறப்பின் நோக்கமான சூரனை வென்று அவனை ஆட்கொண்ட இடம் இத்தலம் ஆகும்.
    • கந்தசஷ்டி கடைபிடிக்கப்படும் ஆறு நாட்களும் பக்தர்கள் பல்வேறுவிதமான விரதங்களை மேற்கொள்வார்கள்.

    அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் செந்திலாண்டவன் கோவில் ஒரு அற்புதமான நிலையில் அமைந்து உள்ளது. கடலை எல்லையாகக் கொண்ட இக்கோவிலை மக்களின் பாதுகாப்பு அரண் என்றே கூறலாம்.

    மலைகளில் கோவில் கொள்ளும் விளக்கம் கொண்ட முருகன் இத்தலத்தில் சந்தன மலைமீது எழுந்தருளி உள்ளார். மூலவர் இருக்கும் பகுதி குடைவரை கோவிலாக விளங்குகிறது. இந்த மலைப்பகுதியை மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள பெருமாள் சன்னதியில் காணலாம்.

    திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருக்கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்ற போதிலும் கந்த சஷ்டி விழா அனைத்துக்கும் சிகரமாக போற்றப்படுகிறது.

    கந்தன் தனது பிறப்பின் நோக்கமான சூரனை வென்று அவனை ஆட்கொண்ட இடம் இத்தலம் ஆகும். சூரனுக்கும் முருகனுக்கும் யுத்தம் நடந்ததை மெய்ப்பிக்கும் வகையில் கோவில் அருகில் நீண்ட கடற்கரை பகுதி அமைந்துள்ளது.

    கந்தசஷ்டி கடைபிடிக்கப்படும் ஆறு நாட்களும் பக்தர்கள் பல்வேறுவிதமான விரதங்களை மேற்கொள்வார்கள். சிலர் மவுன விரதம் இருப்பார்கள். சிலர் ஒரு வேளை மட்டும் உணவு உண்பார்கள். சிலர் பழங்கள் மற்றும் பழச்சாறு குடித்து விரதம் மேற்கொள்வார்கள். இந்த ஆறு நாட்களும் கோவிலில் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பாலசுப்பிரமணிய சுவாமி முன்பு சிறப்பு ஹோமங்கள் நடைபெறும். பின்னர் சாமி சண்முக மண்டபத்திற்கு எழுந்தருள்வார்.

    கந்தசஷ்டி கவசம் கந்தகுரு கவசம் கோவில் வளாகத்தில் ஒலிக்கும். கந்த சஷ்டி விழா கண்களுக்கும், காதுகளுக்கும் விருந்தாக அமையும். ஆண்டுதோறும் இந்த விரதத்தை மேற்கொள்ளும் பக்தர்கள் ஏராளமாக உள்ளனர். சஷ்டி விரதம் இருப்பதற்காக வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள்.

    திருச்செந்தூர் முருக பக்தர்கள் விரதம் இருக்கும் பக்தர்களுக்கு பானகம் உள்ளிட்ட பானங்களை வழங்கி மகிழ்வார்கள். சிலர் கந்த சஷ்டி கவசம் உள்ளிட்ட முருகன் பாராயண நூல்களை அச்சிட்டு பக்தர்களுக்கு வழங்குவார்கள். 24 மணி நேரமும் பக்தர்கள் முருகனின் நாமத்தை உரைத்தபடி இருப்பார்கள். செந்தூர் கடல்அலையும் ஓம் ஓம் என்று மந்திரம் இசைத்துக் கொண்டே இருக்கும். கடலில் குளித்து வந்தால் கவலைகள் எல்லாம் கரைந்து மறைந்து விடும்.

    ஒருமுறை திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்தவர்கள் மீண்டும் தரிசனம் செய்ய தவறமாட்டார்கள். அந்த அளவுக்கு முருகன் அவர்களை ஆட் கொண்டு விடுவார். மதுரையில் சிவபெருமான் ஏராளமான திருவிளையாடல்களை நிகழ்த்தி உள்ளார். அதே போல திருச்செந்தூரில் முருகனின் திருவிளையாடல் பல நிகழ்ந்துள்ளன. இன்றும் திருவிளையாடல்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அவரது திருவிளையாடல்கள் சில தொகுக்கப்பட்டு நூல்களாகவும் வெளிவந்துள்ளன.

    தமிழ் இலக்கியத்தில் திருச்செந்தூர்

    தமிழ் இலக்கியங்களில் திருச்செந்தூர் அலைவாய், சீரலைவாய் என்கிற பெயர்களில் போற்றப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்கள்

    தொல்காப்பியம்

    முருகன் தீம்புனல் அலைவாய் - தொல்காப்பியம் (களவு சூத்23)

    புறநானூறு

    வெண்டலைப் புனரி யலைக்குஞ் செந்தில்

    நெடுவேல் நிலைஇய காமர் வியன்துறை (பாடல் 55)

    அகநானூறு

    திருமணி விளக்கினலை வாய்ச்செரு மிகுசேஎய் (பாடல் 266)

    திருமுருகாற்றுப்படை

    உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர் அலைவாய்

    சிலப்பதிகாரம்

    சீர் கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்

    அருணகிரிநாதர் பாடல்

    இக்கோயில் குறித்தும், முருகப்பெருமான் குறித்தும் அருணகிரிநாதரின் பாடல் இது.

    அந்தண்மறை வேள்வி காவற் கார செந்தமிழ் சொல் பாவின் மாலைக் கார அண்டரூப கார சேவற் கார முடிமேலே -

    அஞ்சலிசெய் வோர்கள் நேயக் காரகுன்றுருவ ஏவும் வேலைக் காரஅந்தம்வெகு வான ரூபக் கார எழிலான;

    சிந்துரமின் மேவு போகக் காரவிந்தைகுற மாது வேளைக் காரசெஞ்சொலடி யார்கள் வாரக் கார எதிரான -

    செஞ்சமரை மாயு மாயக் காரதுங்கரண சூர சூறைக் கார செந்திநகர் வாழு மாண்மைக் கார பெருமாளே.

    • ஞாயிற்றுக்கிழமை சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
    • 31-ந்தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 3-ம் நாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.

    காலையில் உச்சிகால அபிஷேகம், தீபாராதனையை தொடர்ந்து யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி- தெய்வானையுடன் வெள்ளி சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    மாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி- தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமி- அம்பாள்களுக்கு மஞ்சள், பால், இளநீர், தேன், தயிர், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி-அம்பாள்களுக்கு அலங்காரமாகி, தீபாராதனை நடைபெற்றது. அதன்பிறகு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரிவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    6-ம் நாளான நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணியளவில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. 7-ம் நாளான வருகிற 31-ந்தேதி (திங்கட்கிழமை) இரவில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • குருப்பெயர்ச்சியன்று திருச்செந்தூர் முருகனை வணங்கினால், தீய பலன்கள் குறையும்.
    • குருபகவான் முருகனுக்கு அசுரர்களை பற்றிய வரலாறை இத்தலத்தில் கூறினார்.

    திருச்செந்தூரில் முருகன் "ஞானகுரு'வாக அருளுகிறார். அசுரர்களை அழிக்கும் முன்பு, குருபகவான் முருகனுக்கு அசுரர்களை பற்றிய வரலாறை இத்தலத்தில் கூறினார். எனவே இத்தலம், "குரு தலமாக' கருதப்படுகிறது.

    பிரகாரத்தில் உள்ள மேதா தட்சிணாமூர்த்தி கூர்மம், அஷ்ட நாகங்கள், அஷ்டயானைகள், மேதாமலை என நான்கு ஆசனங்களின் மீது அமர்ந்திருக்கிறார். இவருக்கு பின்புறம் உள்ள கல்லால மரத்தில் 4 வேதங்களும், கிளிகள் வடிவில் இருக்கிறது.

    அறிவு, ஞானம் தரும் மூர்த்தியாக அருளுவதால் இவரை, "ஞானஸ்கந்த மூர்த்தி' என்று அழைக்கிறார்கள். வழக்கமாக கைகளில் அக்னி, உடுக்கையுடன் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி, இங்கு மான், மழுவுடன் காட்சி தருகிறார். குரு பெயர்ச்சியன்று திருச்செந்தூர் முருகனை வணங்கினால், தீய பலன்கள் குறையும்.

    • விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
    • திங்கட்கிழமை திருக்கல்யாணம் நடக்கிறது.

    முருகபெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 4-ம் நாளான நேற்று அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலையில் உச்சிகால அபிஷேகம், தீபாராதனையை தொடர்ந்து யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது.

    மதியம் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். மாலையில் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி-அம்பாள்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இரவில் சுவாமி-அம்பாள்களுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது.

    மாலை 4 மணியளவில் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சந்தோஷ மண்டபத்தில் எழுந்தருளும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். பின்னர் சுவாமி-அம்பாள் புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயாபிஷேகம் (அதாவது கண்ணாடியில் தெரியும் சுவாமியின் பிம்பத்திற்கு அபிஷேகம்) நடைபெறுகிறது.

    7-ம் நாளான நாளை மறுநாள் (திங்கட்கிழமை) இரவு 11 மணியளவில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.

    விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் உள்ள தற்காலிக கூடாரங்களில் தங்கியிருந்து விரதமிருந்து வருகின்றனர். பெரும்பாலான பக்தர்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

    மேலும், பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மேற்பார்வையில், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. திருவிழா தொடக்கம் முதல் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டகைகளில் ஏராளமான பக்தர்கள் தங்கி விரதம் இருந்து வருகின்றனர். சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

    இந்நிலையில் பக்தர்களுக்கு செய்யப்பட்ட அடிப்படை வசதிகள், ஏற்பாடுகளை நேற்று கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் கனிமொழி எம்.பி. தங்கி விரதம் இருக்கும் ஒவ்வொரு தற்காலிக கொட்டகைகளுக்கு சென்று பக்தர்களிடம் குறைகள் ஏதும் உள்ளதா? என கேட்டு, உங்களுக்கு வேண்டிய வசதிகளை கூறுங்கள் உடனடியாக நிவர்த்தி செய்து கொடுக்கிறோம் எனவும் கூறினார்.

    பின்னர் அன்னதான மண்டபத்திற்கு சென்று பக்தர்களிடம் அன்னதானம் குறித்து கேட்டறிந்தார்கள். கோவில் வளாகத்தில் அமைக்கப்படுள்ள மருத்துவ முகாம், தற்காலிக கழிப்பறைகளை நேரில் பார்த்து ஆய்வு செய்தார். அவர் ஆய்வு செய்த போது ஏராளமான பெண்கள் அவருடன் செல்பி எடுத்தனர். அவருக்கு, விரதம் இருக்கும் கிராமத்து பெண்கள் குலைவையிட்டு தங்களுடைய வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்தனர்.

    • திருச்செந்தூர் திருப்புகழ் மிகமிக சக்தி வாய்ந்தது.
    • திருச்செந்தூர் திருப்புகழைப் பாராயணம் செய்தால் திருமண தடை நீங்கும்.

    திருச்செந்தூர் திருப்புகழ் மிகமிக சக்தி வாய்ந்தது. இதில் விறல் மாரனைந்து எனும் திருப்புகழை தினமும் 6 தடவை பாராயணம் செய்து வந்தால் உடனே தடைகள் விலகி திருமணம் நடைபெறும். திருமுருக கிருபானந்த வாரியார் அறிவுறுத்தலின் பேரில் ஏராளமானவர்கள் தினமும் திருச்செந்தூர் திருப்புகழைப் பாராயணம் செய்து நல்ல வரன் பெற்று கல்யாணம் செய்துள்ளனர்.

    சிறப்புமிகு அந்த திருப்புகழ் இதோ:

    விறல் மாரனைந்து மலர்வாளி சிந்த

    மிகவானி லிருந்து - வெயில் காய

    மிதவாடை வந்து தழல்போல வொன்ற

    வினைமாதர் தந்தம் - வசை கூற

    குறவாணர் குன்றி லுறை பாதை கொண்ட

    கொடி தான துன்ப - மயில்தீர

    குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து

    குறை தீர வந்து குறுகாயோ

    மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து

    வழிபாடு தந்த மதியாளா

    மலைமாவு சிந்த அலைவேலை அஞ்ச

    வடிவேலெ றிந்த அதிதீரா

    அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு

    மடியாரி டைஞ்சல் களைவோனே

    அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து

    அலைவாயு கந்த பெருமாளே!

    • திருச்செந்தூர் கோவிலில் நடக்கும் திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது கந்தசஷ்டி திருவிழாவாகும்.
    • திருச்செந்தூர் முருகன் கோவிலில் இலை விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது.

    அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது கந்தசஷ்டி திருவிழாவாகும்.

    இவ்விழாவில் தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் என உலக நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சஷ்டி விரதம் மேற்கொண்டு சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். இங்கு வழங்கப்படும் பிரசாதங்களில் முக்கியமானது இலை விபூதியாகும்.

    ஒருமுறை ஆதிசங்கரர் காசநோயால் பாதிக்கப்பட்டு திருச்செந்தூர் முருகனிடம் வந்துள்ளார். அப்போது முருகப் பெருமான் ஆதிசங்கரரிடம் இனிய தமிழில்

    பாடல் பாடுமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் நான் பெருமாளை மட்டும் பாடுவேன் என்று கூறியுள்ளார்.

    இதனால் வருத்தமடைந்த முருகப் பெருமான் வருத்தத்தோடு இருப்பது கண்டு அப்போது அங்கு வந்த பெருமாள் முருகன் வருத்தத்துடன் இருப்பதற்கு காரணத்தை கேட்டறிந்தார். விஷயம் புரிந்த பெருமாள் ஆதிசங்கரர் இடம் சென்று என்னை பாடுவதாக நினைத்து முருகப் பெருமான் முன் சென்று கண்ணை மூடிக் கொண்டு என்னை பாடு என்று கூறினாராம். அப்போது முருகப் பெருமான் முன் நின்று கண்ணை மூடிக்கொண்டு ஆதிசங்கரர் பாடினாராம். கண்ணை திறந்து பார்க்கும் போது முருகப் பெருமான் இருக்கும் இடத்தில் பெருமாள் இருந்துள்ளார்.

    பெருமாள் தான் முருகன், முருகன் தான் பெருமாள் என்பதை உணர்ந்த ஆதிசங்கரர், முருகப் பெருமானிடம் மன்னிப்பு கேட்டு முருகனை பாடி காசநோயை குணப்படுத்த வேண்டும் என்று வேண்டினார். உடனே முருகப்பெருமான் இலையில் விபூதியை அவரிடம் கொடுத்தார். திருநீற்றுப்பச்சிலையில் வைத்து கொடுக்கப்பட்ட இலை விபூதியை சாப்பிட்டதும் காசநோய் குணமாகியதாம்.

    தேவர்களை சிறை பிடித்து கொடுமைப்படுத்திய சூரபத்மனிடம் தேவர்களை விடுவித்து முருகப் பெருமானிடம் சரணடையுமாறு வீரபாகு தேவன் கேட்டபோது சூரன் மறுத்தான். முருகப் பெருமானிடம போர் புரிய தயாரானான். போர் தொடங்கியது போரில் முருகப் பெருமான் படை சார்பில் இருந்த வீரர்கள் சிலர் காயமடைந்தனர்.

    அந்த காயத்திற்கு மருந்தாக இலை விபூதி கொடுத்து குணமாக்கியுள்ளனர். பின்னாளில் அதன் மகத்துவத்தை அறிந்து கோவிலை கட்டிய சாதுக்கள் பணியாற்றிய ஊழியருக்கு ஊதியமாக இலை விபூதியை கொடுத்துள்ளனர். பெற்றுக் கொண்ட ஊழியர்கள் விடலை கோவில் பிள்ளையார் அருகே வந்து அதைத் திறந்து பார்த்த போது ஊதியத்திற்கு ஏற்ப பொற்காசுகள் ஆக மாறியிருந்ததாம். வேலை செய்யாதவர்களுக்கு வெறும் விபூதி மட்டுமே இருக்குமாம். அதனுடைய தத்துவத்தை உணர்த்தும் வகையில் இன்றும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் இலை விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது.

    ×