search icon
என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் கந்த சஷ்டி விரதம் இருக்க காரணம்...
    X

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் கந்த சஷ்டி விரதம் இருக்க காரணம்...

    • கந்தன் தனது பிறப்பின் நோக்கமான சூரனை வென்று அவனை ஆட்கொண்ட இடம் இத்தலம் ஆகும்.
    • கந்தசஷ்டி கடைபிடிக்கப்படும் ஆறு நாட்களும் பக்தர்கள் பல்வேறுவிதமான விரதங்களை மேற்கொள்வார்கள்.

    அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் செந்திலாண்டவன் கோவில் ஒரு அற்புதமான நிலையில் அமைந்து உள்ளது. கடலை எல்லையாகக் கொண்ட இக்கோவிலை மக்களின் பாதுகாப்பு அரண் என்றே கூறலாம்.

    மலைகளில் கோவில் கொள்ளும் விளக்கம் கொண்ட முருகன் இத்தலத்தில் சந்தன மலைமீது எழுந்தருளி உள்ளார். மூலவர் இருக்கும் பகுதி குடைவரை கோவிலாக விளங்குகிறது. இந்த மலைப்பகுதியை மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள பெருமாள் சன்னதியில் காணலாம்.

    திருச்செந்தூர் செந்திலாண்டவன் திருக்கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்ற போதிலும் கந்த சஷ்டி விழா அனைத்துக்கும் சிகரமாக போற்றப்படுகிறது.

    கந்தன் தனது பிறப்பின் நோக்கமான சூரனை வென்று அவனை ஆட்கொண்ட இடம் இத்தலம் ஆகும். சூரனுக்கும் முருகனுக்கும் யுத்தம் நடந்ததை மெய்ப்பிக்கும் வகையில் கோவில் அருகில் நீண்ட கடற்கரை பகுதி அமைந்துள்ளது.

    கந்தசஷ்டி கடைபிடிக்கப்படும் ஆறு நாட்களும் பக்தர்கள் பல்வேறுவிதமான விரதங்களை மேற்கொள்வார்கள். சிலர் மவுன விரதம் இருப்பார்கள். சிலர் ஒரு வேளை மட்டும் உணவு உண்பார்கள். சிலர் பழங்கள் மற்றும் பழச்சாறு குடித்து விரதம் மேற்கொள்வார்கள். இந்த ஆறு நாட்களும் கோவிலில் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பாலசுப்பிரமணிய சுவாமி முன்பு சிறப்பு ஹோமங்கள் நடைபெறும். பின்னர் சாமி சண்முக மண்டபத்திற்கு எழுந்தருள்வார்.

    கந்தசஷ்டி கவசம் கந்தகுரு கவசம் கோவில் வளாகத்தில் ஒலிக்கும். கந்த சஷ்டி விழா கண்களுக்கும், காதுகளுக்கும் விருந்தாக அமையும். ஆண்டுதோறும் இந்த விரதத்தை மேற்கொள்ளும் பக்தர்கள் ஏராளமாக உள்ளனர். சஷ்டி விரதம் இருப்பதற்காக வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள்.

    திருச்செந்தூர் முருக பக்தர்கள் விரதம் இருக்கும் பக்தர்களுக்கு பானகம் உள்ளிட்ட பானங்களை வழங்கி மகிழ்வார்கள். சிலர் கந்த சஷ்டி கவசம் உள்ளிட்ட முருகன் பாராயண நூல்களை அச்சிட்டு பக்தர்களுக்கு வழங்குவார்கள். 24 மணி நேரமும் பக்தர்கள் முருகனின் நாமத்தை உரைத்தபடி இருப்பார்கள். செந்தூர் கடல்அலையும் ஓம் ஓம் என்று மந்திரம் இசைத்துக் கொண்டே இருக்கும். கடலில் குளித்து வந்தால் கவலைகள் எல்லாம் கரைந்து மறைந்து விடும்.

    ஒருமுறை திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்தவர்கள் மீண்டும் தரிசனம் செய்ய தவறமாட்டார்கள். அந்த அளவுக்கு முருகன் அவர்களை ஆட் கொண்டு விடுவார். மதுரையில் சிவபெருமான் ஏராளமான திருவிளையாடல்களை நிகழ்த்தி உள்ளார். அதே போல திருச்செந்தூரில் முருகனின் திருவிளையாடல் பல நிகழ்ந்துள்ளன. இன்றும் திருவிளையாடல்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அவரது திருவிளையாடல்கள் சில தொகுக்கப்பட்டு நூல்களாகவும் வெளிவந்துள்ளன.

    தமிழ் இலக்கியத்தில் திருச்செந்தூர்

    தமிழ் இலக்கியங்களில் திருச்செந்தூர் அலைவாய், சீரலைவாய் என்கிற பெயர்களில் போற்றப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்கள்

    தொல்காப்பியம்

    முருகன் தீம்புனல் அலைவாய் - தொல்காப்பியம் (களவு சூத்23)

    புறநானூறு

    வெண்டலைப் புனரி யலைக்குஞ் செந்தில்

    நெடுவேல் நிலைஇய காமர் வியன்துறை (பாடல் 55)

    அகநானூறு

    திருமணி விளக்கினலை வாய்ச்செரு மிகுசேஎய் (பாடல் 266)

    திருமுருகாற்றுப்படை

    உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர் அலைவாய்

    சிலப்பதிகாரம்

    சீர் கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்

    அருணகிரிநாதர் பாடல்

    இக்கோயில் குறித்தும், முருகப்பெருமான் குறித்தும் அருணகிரிநாதரின் பாடல் இது.

    அந்தண்மறை வேள்வி காவற் கார செந்தமிழ் சொல் பாவின் மாலைக் கார அண்டரூப கார சேவற் கார முடிமேலே -

    அஞ்சலிசெய் வோர்கள் நேயக் காரகுன்றுருவ ஏவும் வேலைக் காரஅந்தம்வெகு வான ரூபக் கார எழிலான;

    சிந்துரமின் மேவு போகக் காரவிந்தைகுற மாது வேளைக் காரசெஞ்சொலடி யார்கள் வாரக் கார எதிரான -

    செஞ்சமரை மாயு மாயக் காரதுங்கரண சூர சூறைக் கார செந்திநகர் வாழு மாண்மைக் கார பெருமாளே.

    Next Story
    ×