என் மலர்
நீங்கள் தேடியது "ஈஷா"
- சிறப்பு காட்சியை ஹோம்பேல் பிலிம்ஸ் குழுவினர் ஏற்பாடு செய்தனர்.
- ஈஷா யோகா மையத்தின் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் கண்டு களித்தனர்.
கோவை:
தீபாவளியை முன்னிட்டு கோவை ஈஷா யோகா மையத்தில் 'கந்தாரா' திரைப்படம் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது.
இது தொடர்பாக ஈஷா அறக்கட்டளை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கன்னடத்தில் ஹிட்டான "கந்தாரா" திரைப்படம் வசூல் சாதனை படைத்து வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை ஈஷா யோகா மையத்தில் இப்படத்தின் சிறப்பு காட்சியை ஹோம்பேல் பிலிம்ஸ் குழுவினர் ஏற்பாடு செய்தனர். ஹோம்பேல் பிலிம்ஸ் குழுவினருக்கும், ரிஷப் ஷெட்டி அவர்களுக்கும் நன்றி" என தெரிவித்துள்ளது.
இத்திரைப்படத்தை ஈஷா யோகா மையத்தின் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் கண்டு களித்தனர்.
இதற்கு முன்பு வீர மங்கை ஜான்சி ராணியின் வரலாற்றை பேசும் 'மணிகர்ணிகா' திரைப்படம் சிறப்பு காட்சியாக ஈஷாவில் திரையிடப்பட்டது. அப்போது, அப்படத்தின் கதாநாயகியான கங்கனா ரணாவத், ஈஷா தன்னார்வலர்களுடன் சேர்ந்து படம் பார்த்தது குறிப்பிடத்தக்கது.
- ஈஷா யோகா மையம் தங்கள் கிராமத்தில் அமைந்து இருப்பது பெருமை அளிப்பதாக ஊராட்சி முன்னாள் துணைத்தலைவர் பேச்சு
- வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த காவல் துறை அனுமதி வழங்க கூடாது என போராட்டக்காரர்கள் வலியுறுத்தல்
கோவை:
ஈஷா யோகா மையத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்யும் அமைப்புகளை கண்டித்து ஆலாந்துறை சுற்றுவட்டார கிராம மக்கள் இன்று (நவ.7) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆலாந்துறை பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆலாந்துறை, செம்மேடு, இருட்டுபள்ளம், மத்வராயபுரம், முட்டத்துவயல், முள்ளாங்காடு, தாணிக்கண்டி, மடக்காடு, நல்லூர்வயல்பதி, பட்டியார்கோயில்பதி, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள், விவசாயிகள், ஆட்டோ ஓட்டுனர்கள், பழங்குடி மக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்கள் ஈஷாவால் தங்களுடைய கிராமங்கள் அடையும் பயன்கள் குறித்து பேசியதுடன், பயன்களை தடுக்க அந்நிய சக்திகள் சூழ்ச்சிகள் செய்வதாக குற்றம்சாட்டினர்.
தாணிகண்டி பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த செல்வி. காய்த்ரி பேசுகையில், "வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள தாணிகண்டி, மடக்காடு, முள்ளாங்காடு உள்ளிட்ட ஏராளமான பழங்குடி கிராம மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக ஈஷாவையே சார்ந்து உள்ளோம். ஈஷாவின் உதவியால் மகளிர் சுய உதவி குழுக்களை தொடங்கி ஆதியோகிக்கு செல்லும் வழியில் கடைகள் வைத்து வாழ்க்கை நடத்தி வருகிறோம்.
எங்களுடைய குழந்தைகளை ஈஷா தான் படிக்க வைக்கிறது. அதுமட்டுமின்றி இரவு எத்தனை மணிக்கு அழைத்தாலும் ஆம்புலன்ஸ் அனுப்பி எங்களுக்கு உதவி செய்கிறார்கள். எங்களுடைய பழங்குடி மக்களின் நிலங்களை ஈஷா ஆக்கிரமித்துவிட்டதாக சிலர் பணத்திற்காக பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இது முற்றிலும் பொய். என்னுடைய அம்மா முத்தம்மாளும் இந்த பொய் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருவது வருத்தம் அளிக்கிறது. உண்மை என்னவென்று எங்கள் கிராம மக்கள் அனைவருக்கும் தெரியும். அதனால் நாங்கள் எப்போதும் ஈஷாவிற்கு ஆதரவாகவே இருப்போம்" என்றார்.
போளூவாம்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், "தியானலிங்கம் பிரதிஷ்டை செய்யும் காலத்திற்கு முன்பு இருந்தே நாங்கள் ஈஷாவுடன் நல்ல தொடர்பில் இருந்து வருகிறோம். ஈஷா வந்த பிறகு தான் எங்கள் பகுதிக்கு சாலை வசதிகள், பேருந்து வசதிகள், மருத்துவ வசதிகள் கிடைத்துள்ளது. கொரோனா காலத்தில் ஈஷா தன்னார்வலர்கள் செய்த உதவிகளை நாங்கள் வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டோம். பிரதமர் உட்பட உலகமே போற்றும் ஈஷா யோகா மையம் எங்கள் கிராமத்தில் அமைந்து இருப்பது எங்களுக்கு பெருமை அளிக்கிறது.
இந்நிலையில் சில போலி அமைப்புகள் பணத்திற்காகவும், விளம்பரம் தேடி கொள்வதற்காவும் ஈஷாவிற்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்கின்றனர். தலைமுறை தலைமுறையாக இங்கு வாழும் எங்களுக்கு உண்மை எது? பொய் எது என்று தெரியாதா? சிலர் வெளியூரில் இருந்து பணம் கொடுத்து வாகனங்களில் ஆட்களை அழைத்து வந்து ஈஷாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அவர்கள் எங்கள் கிராமத்தில் தேவையற்ற குழப்பத்தையும், அமைதியை சீர்குலைக்கவும் முயற்சிக்கின்றனர். அவர்களுக்கு எங்களுடைய வன்மையான கண்டனங்களை தெரிவித்து கொள்கிறோம்" என்றார்.
குமார் என்பவர் பேசுகையில், "சத்குருவின் வழிகாட்டுதலில் நாங்கள் தொடங்கிய வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் தமிழக அளவில் முதலிடத்தில் உள்ளது. இதனால், தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார விவசாயிகள் பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பலன்களை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில், பழங்குடி மக்களின் பெயர்களை பயன்படுத்தி இந்தப் பகுதியில் சட்டம், ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். வெளி மாவட்டங்களைச் சேர்ந்த அவர்கள் இங்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்த காவல் துறை அனுமதி வழங்க கூடாது. அதை மீறி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினால் உள்ளூர் மக்கள் ஒன்றிணைந்து அவர்களின் பொய் பிரச்சாரத்தையும் சதி திட்டத்தையும் முறியடிப்போம்" என்றார்.
- தேங்காய், தேங்காய் மட்டை, காய்கறிகள், தேங்காய் எண்ணெய், உர கடை என பல்வேறு வழிகளின் வருமானம் ஈட்டி வருகிறது.
- விரைவில் ரூ.50 கோடி ஆண்டு மொத்த வருவாய் என்ற இலக்கை அடைய திட்டமிட்டு வருகிறார்கள்
கோவை:
ஈஷாவின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படும் கோவை வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் 2021-2022-ம் நிதியாண்டில் ரூ.17.7 கோடி மொத்த வருவாய் ஈட்டி (Annual Turn over) புது சாதனை படைத்துள்ளது. இது கடந்த நிதியாண்டை விட ரூ.3.7 கோடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிறுவனம் சத்குருவின் ஆலோசனையின் படி, கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1063 விவசாய உறுப்பினர்களை கொண்டுள்ள இந்நிறுவனத்தில் 404 பேர் பெண் விவசாயிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து லாபகரமாக இயங்கி வரும் இந்நிறுவனத்தின் ஆண்டு பொது கூட்டம் கோவை ஈஷா யோகா மையத்தில் இன்று (நவம்பர் 30) நடைபெற்றது.
இதில் நூற்றுக்கணக்கான விவசாய உறுப்பினர்கள் பங்கேற்றனர். அவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்ட தகவலின்படி, வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் உறுப்பினர்கள் மொத்தம் 5,859 ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிறுவனம் தேங்காய், தேங்காய் மட்டை, காய்கறிகள், தேங்காய் எண்ணெய், உர கடை என பல்வேறு வழிகளின் வருமானம் ஈட்டி வருகிறது.
கடந்தாண்டு இதில் அதிகப்பட்சமாக, தேங்காய் விற்பனையின் மூலம் ரூ.14.92 கோடியும், உர கடையின் மூலம் ரூ.1.26 கோடி கோடியும் மொத்த வருவாய் ஈட்டியுள்ளது.
2022-ம் ஆண்டில் 5621 டன் தேங்காய், 7066 டன் தேங்காய் மட்டை, 252 டன் காய்கறிகள், 2.7 டன் தேங்காய் எண்ணெய் ஆகியவை இந்நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் தலைவரும், தொண்டாமுத்தூர் விவசாயியுமான குமார் அவர்கள் பொது கூட்டத்தில் நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து பேசுகையில், "ஈஷாவின் ஆதரவோடும், விவசாய உறுப்பினர்களின் பங்களிப்போடும் நாம் கூடிய விரைவில் ரூ.50 கோடி ஆண்டு மொத்த வருவாய் என்ற இலக்கை அடைய திட்டமிட்டு வருகிறோம். நம்முடைய விவசாயிகளின் காய்கறிகளை நேரடியாக விற்பனை செய்யவும், தேங்காய் மற்றும் காய்கறிகளை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதற்கும் முயற்சிகள் எடுத்து வருகிறோம்.
நாம் தொடர்ந்து நல்ல படியாக விவசாயம் செய்ய வேண்டுமானால், மண் வளம் மிகவும் அவசியம். எனவே, சத்குரு ஆரம்பித்துள்ள 'மண் காப்போம்' இயக்கத்தின் பரிந்துரைகளின் படி மாதிரி பண்ணைகளை நம்முடைய கிராமங்களில் உருவாக்க வேண்டும். மண் பரிசோதனை செய்வதை எளிமையாக்கும் வகையில், 'நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகத்தை' உருவாக்கவும் நம்முடைய நிறுவனம் திட்டமிட்டுள்ளது" என்றார்.
இந்நிறுவனத்தின் இயக்குநர்கள் வேலுமணி, நாகரத்தினம், கிட்டுசாமி மற்றும் ஈஷா தன்னார்வலர்கள் வெங்கட் ராசா, அருணகிரி ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
இந்நிறுவனம் தன்னுடைய சிறப்பான செயல்பாட்டால் மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது. குறிப்பாக, ஐதராபாத்தில் உள்ள தேசிய வேளாண் ஆராய்ச்சி அகாடமி (ICAR - NAARM) 'சிறந்த வளர்ந்து
வரும் உழவன் உற்பத்தியாளர் நிறுவனம்' என்ற விருதை கடந்த செப்டம்பர் மாதம் வழங்கி கெளரவித்தது. இதேபோல், 2021 ஆண்டு தமிழக அரசின் 'சிறந்த எப்.பி. ஓ' விருது உள்ளிட்ட பல விருதுகளை இந்நிறுவனம் பெற்றுள்ளது.
- மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.
- தற்போது விவசாய மண்ணில் கரிமச்சத்தின் அளவு 0.5% என்ற அபாயகரமான அளவில் உள்ளது.
உலக மண் தினத்தை முன்னிட்டு மண் காப்போம் இயக்கம் சார்பில் மண் வளப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழகத்தின் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் டிசம்பர் 5-ம் தேதி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.
இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் கிளப்பில் இன்று (டிச.5) நடைபெற்றது. இதில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் கூறியதாவது:
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, ஈரோடு உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் வருகின்ற 5-ம் தேதி காலை 8 மணி முதல் 9 மணி வரை பேருந்து நிலையம், ரயில் நிலையம், கடற்கரை உள்ளிட்ட பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.
'மண்ணுக்காக நடப்போம்' 'மண்ணுக்காக நிற்போம்' 'மண்ணுக்காக சைக்கிள் பேரணி' உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தமிழ்நாடு முழுக்க மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வ தொண்டர்கள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடத்த திட்டமிட்டுள்ளனர். சென்னையில் மடிப்பாக்கம் ஏரிக்கரை, எலியட்ஸ் கடற்கரை, மீனாட்சி கல்லூரி, கபாலீஸ்வரர் கோயில் உள்ளிட்ட இடங்களிலும், மதுரை தேவர் சிலை, வேலூர் கோட்டை, ஓசூர் ரயில் நிலையம், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. அதே தினத்தன்று இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் இத்தகைய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மண் வள பாதுகாப்பு குறித்து சட்டங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஈஷா நிறுவனர் சத்குரு அவர்கள் மண் காப்போம் என்ற சர்வதேச சுற்றுச்சூழல் இயக்கத்தை தொடங்கி உள்ளார். தற்போது விவசாய மண்ணில் கரிமச்சத்தின் அளவு 0.5% என்ற அபாயகரமான அளவில் உள்ளது. இதனை குறைந்தபட்ச அளவான 3 முதல் 6% வரை அதிகரிக்க வேண்டும். இல்லையெனில் உணவுப் பற்றாக்குறை, பருவநிலை மாற்றம், வாழ்வாதார இழப்பு, மக்கள் இடம்பெயர்தல் உள்ளிட்ட பல பிரச்சினைகள் உருவாகும்.
மார்ச் 21-ம் தேதி லண்டனில் இருந்து தனது மோட்டார்சைக்கிள் பயணத்தை தொடங்கிய சத்குரு இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், உள்ளிட்ட பல ஐரோப்ப நாடுகளுக்கு பயணித்துள்ளார். அந்த நாடுகளில் வேளாண் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், விஞ்ஞானிகள், சினிமா பிரபலங்கள், ஊடக துறையினர் என பல்வேறு தரப்பினர் சந்தித்து கலந்துரையாடினார். ஐரோப்பாவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்ற அவர் இந்தியாவிற்கு வந்து தமிழ்நாட்டில் தனது பயணத்தை நிறைவு செய்தார்.
சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் மண் காப்போம் இயக்கம் 391 கோடிக்கும் அதிகமான மக்களின் ஆதரவைப்பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- சிறை கைதிகள் தினமும் யோகா செய்வதன் மூலம் மன அழுத்தப் பாதிப்பில் இருந்து விடுபட முடியும்.
- சுமார் 30 வருடங்களாக இதுபோன்ற சிறை வகுப்புகளை ஈஷா நடத்தி வருகிறது.
கோவை:
சிறை கைதிகளின் உடல் மற்றும் மன நலனை மேம்படுத்தும் நோக்கில் கடந்த 3 மாதங்களில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 5,000 சிறை கைதிகளுக்கு ஈஷா சார்பில் சிறப்பு யோகா வகுப்புகள் நடத்தப்பட்டன.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர், கடலூர் உட்பட தமிழ்நாட்டின் அனைத்து மத்திய, மாவட்ட சிறைகள் மற்றும் கிளை சிறைகளில் (Sub jails) இவ்வகுப்புகள் நடத்தப்பட்டன.
சத்குருவால் பயிற்சி அளிக்கப்பட்ட யோகா ஆசிரியர்கள் சிறைகளுக்கு நேரில் சென்று 'உயிர் நோக்கம்', 'சூரிய சக்தி', 'உப யோகா' ஆகிய யோக பயிற்சிகளை கற்றுக்கொடுத்தனர். இப்பயிற்சிகளை சிறை கைதிகள் தினமும் செய்து வருவதன் மூலம் மன அழுத்தப் பாதிப்பில் இருந்து விடுபட முடியும். மேலும், முதுகுத்தண்டு வலுப்பெறும், மூட்டு வலியில் இருந்து விடுதலை பெறலாம். உடல் ஆரோக்கியம் மேம்படும். இவ்வகுப்புகள் பல சிறை கைதிகளின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக, சிறைகளில் வகுப்பு எடுத்த ஈஷா யோகா ஆசிரியர்கள் கூறுகையில், கடலூர் சிறையில் யோகா வகுப்பு நடத்தும் போது 19, 20 வயது மிக்க இளைஞர்கள் சிலர் விருப்பமின்றி முதல் நாள் வகுப்பில் கலந்து கொண்டதாகவும், ஆனால், 3-வது நாள் வகுப்பு முடித்த பிறகு அதற்கு முற்றிலும் நேர் எதிராக தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதாகவும் தெரிவித்தனர்.
'இது போன்ற யோகா வகுப்பில் முன்பே கலந்து கொண்டு இருந்தால் இப்படி சிறைக்கு வந்திருக்கமாட்டோம். பரவாயில்லை. இப்போதாவது இந்த வாய்ப்பு எங்களுக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி. நாங்கள் வெளியில் சென்ற பிறகு மீண்டும் எவ்வித குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருப்பது இந்த வகுப்பு எங்களுக்கு உதவிகரமாக இருக்கும்' என யோகா வகுப்பில் பங்கேற்ற கைதிகள் கூறியுள்ளனர்.
1992-ம் ஆண்டு முதல் சுமார் 30 வருடங்களாக இதுபோன்ற சிறை வகுப்புகளை ஈஷா நடத்தி வருகிறது. இதுவரை சுமார் 40,000 சிறை கைதிகள் இவ்வகுப்புகளால் பயன்பெற்றுள்ளனர்.
- மத்திய அரசின் விளக்கத்தை ஏற்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
- சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு உறுதியாக செயல்பட்டு வருவதாக ஈஷா தெரிவித்துள்ளது.
சென்னை:
யோகா நிறுவனங்களை கல்வி நிறுவனங்களின் கீழ் வகைப்படுத்தும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் (MoEFCC) அறிவிப்புக்கு உட்பட்டு சுற்றுச்சூழல் அனுமதியில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் ஈஷா அறக்கட்டளை சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியது.
கல்வி நிறுவனம் என்ற வரையறையில் ஈஷா அறக்கட்டளையின் செயல்பாடுகளும் உள்ளடங்கும் என்றும், EIA அறிவிப்பு கல்வி நிறுவனங்களுக்கு ஒருபோதும் பொருந்தாது என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியது.
EIA அறிவிப்பின்படி கல்வி நிறுவனங்களின் கீழ் வகைப்படுத்தப்பட்ட யோகா நிறுவனங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என தெரிவிக்கப்பட்டது. இந்த விளக்கத்தின் பேரில், ஈஷாவுக்கு அனுப்பிய நோட்டீஸை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
ஈஷா அறக்கட்டளை எப்பொழுதும் சுற்றுசூழலை காப்பதிலும், அனைத்து சட்ட விதிமுறைகளுக்கும் உட்பட்டு உறுதியாக செயல்பட்டு வருவதாக ஈஷா தெரிவித்துள்ளது.
- காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து 7 உபாசகர்கள் ஈஷாவிற்கு வருகை தந்தனர்.
- யோகேஷ்வர லிங்கத்தை சுற்றியமர்ந்து சந்தனம், புனித நீர், வில்வம், மலர்கள் போன்ற பல்வேறு மங்கள பொருட்களால் லிங்கத்தை அலங்கரித்து செயல்முறையை துவக்கினர்.
ஆதியோகி முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு சப்தரிஷி ஆரத்தி நேற்று சிறப்பாக நடைபெற்றது.
இந்த சப்தரிஷி ஆரத்தி, சிவ பெருமான் தனது ஏழு சீடர்களான சப்தரிஷிகள், அவரது அருளைப் பெறுவதற்காக அவர்களுக்கு கற்றுக்கொடுத்த சக்திவாய்ந்த செயல்முறை. இது வாரணாசியில் இருக்கும் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலில் பல நூறு வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதற்கு அடுத்தப்படியாக ஆதியோகியில் தான், கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சிக்காக, காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து 7 உபாசகர்கள் ஈஷாவிற்கு வருகை தந்தனர். அவர்கள் யோகேஷ்வர லிங்கத்தை சுற்றியமர்ந்து சந்தனம், புனித நீர், வில்வம், மலர்கள் போன்ற பல்வேறு மங்கள பொருட்களால் லிங்கத்தை அலங்கரித்து செயல்முறையை துவக்கினர்.
படிப்படியாக மந்திர உச்சாடனைகளுடன் அவர்கள் நிகழ்த்திய அந்த செயல்முறை சக்திநிலையில் பிரம்மாண்ட தன்மையை அந்த சூழலில் உருவாக்கியது. மாலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்த செயல்முறை 9 மணி வரை நடைபெற்றது. இதை தொடர்ந்து ஆதியோகி திவ்ய தரிசனமும், சயன ஆரத்தியும் நடைபெற்றது.
- நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று மண் பானைகளில் பொங்கல் வைத்தனர்.
- 23 வகையான பாரம்பரிய நாட்டு மாடுகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன.
கோவை:
தமிழ் கலாச்சாரத்தின் மிக முக்கிய விழாக்களில் ஒன்றாகவும், உழவர் திருநாளாகவும் விளங்கும் பொங்கல் விழா ஈஷாவில் ஆண்டுதோறும் மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்தாண்டு மாட்டு பொங்கல் விழா ஆதியோகி முன்பு இன்று பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை கோலகலமாக நடைபெற்றது.
இதில் மலைவாழ் பழங்குடி மக்கள், கிராமப்புற மக்கள், விவசாயிகள், ஈஷா தன்னார்வலர்கள், வெளிநாட்டினர் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று மண் பானைகளில் பொங்கல் வைத்தனர். பின்னர், ஈஷாவில் வளர்க்கப்படும் நாட்டு மாடுகளுக்கு பொங்கல், கரும்பு, நவதானியங்கள் போன்றவை அர்ப்பணிக்கப்பட்டன.
விழாவின் முக்கிய அம்சமாக, அழிந்து வரும் நம் நாட்டு மாடுகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் விதமாக, நாட்டு மாடுகள் கண்காட்சி நடைபெற்றது. இதில் காங்கேயம், காங்கிரிஜ், கிர், ஓங்கோல், தார்பார்க்கர், தொண்டை மாடு, வெச்சூர், உம்பளாச்சேரி உள்ளிட்ட 23 வகையான பாரம்பரிய நாட்டு மாடுகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. மேலும், அந்த மாட்டு இனங்களின் பூர்வீகம், சிறப்பு பற்றிய குறிப்புகளும் வைக்கப்பட்டிருந்தன.
உலகில் மிக குட்டையான நாட்டு மாட்டு இனத்தில் இருந்து, மிக உயரமான நாட்டு மாட்டு இனமும் பார்வைக்கு வைக்கப்பட்டது. பாரம்பரிய நாட்டு மாட்டு இனங்களை பாதுகாக்கும் நோக்கத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மஹாராட்ஷ்ட்ரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளை ஈஷா பல ஆண்டுகளாக பராமரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
நாட்டு மாடுகள் கண்காட்சி நாளையும் (ஜனவரி 17) நடைபெறும். அனுமதி இலவசம்.
- சிவாங்கா சாதனாவின் அடிப்படையாக இருப்பது சிவ நமஸ்காரம் என சொல்லப்படும் சாதனா.
- ஆதியோகியின் தரிசனம் கிடைக்கும் விதமாக ஆதியோகி ரதம் தமிழகமெங்கும் வலம் வந்த வண்ணம் உள்ளது.
நம் மரபில் உடல் மற்றும் உள்ளத்தின் சமநிலை எப்போதுமே முக்கியமாக கருதப்பட்டுள்ளது. இன்று உடற்பயிற்சி மற்றும் உடல் நலன் ஆகியவை நவீன கால வாழ்கை முறையாக மாறியிருக்கிறது. ஆனால் கடந்த தலைமுறையில் உடற்பயிற்சி என்பது நம் வாழ்வியலோடு இணைந்திருந்தது. ஆரோக்கிய தளத்தில் மட்டுமின்றி ஆன்மீகத்திலும் உடற்பயிற்சி என்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
ஆன்மீகத்தின் நான்கு மார்கங்களில் ஓர் அங்கமாக உடல் சார்ந்த பயிற்சிகள், சாதனாக்கள் இருக்கின்றன. விநாயகரை வணங்கும் போது கூட தோப்பு கரணமிட்டு வணங்கும் பண்பை குழந்தைகளுக்கு கூட சொல்லிக் கொடுக்கிறோம். மேலும் தெய்வீகத்துடன் நெருக்கமாக இருக்க பாத யாத்திரை, கோவிலை பிரதக்ஷணம் செய்தல் உள்ளிட்ட பல உடல் சார்ந்த சடங்குகளை நாம் பின்பற்றுவது உண்டு.
"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்" என்றார் திருமூலர். அந்த ஆலயத்தின் மேன்மையை இது போன்ற உடல் சார்ந்த சாதனாக்கள் மூலம் நாம் கூர்மைப்படுத்த முடியும். அவ்வாறு உடல் நலனை மேம்படுத்தும் போது உள்ளிருக்கும் தெய்வீகத்தை உணர முடியும்.
சூர்ய நமஸ்காரம், ஹட யோகா உள்ளிட்ட ஏராளமான உடல் சார்ந்த சாதனாக்களை ஆன்மீக சாதகர்கள் அன்றாடம் பயிற்சி செய்கின்றனர். அந்த வகையில் சிவனின் அங்கமாக மாறும் ஒரு வாய்ப்பாக சிவாங்கா சாதனா கருதப்படுகிறது. சிவாங்கா சாதனாவின் அடிப்படையாக இருப்பது சிவ நமஸ்காரம் என சொல்லப்படும் சாதனா. இது சிவனை வணங்குவதற்கான ஒரு முறை. இது ஏழு சக்தி வாய்ந்த நிலைகளை கொண்டது. தெய்வீக அருளை முழுமையாக உள்வாங்க இந்த சாதனா உதவுகிறது. உடல் இயக்கம் மற்றும் ஆற்றலின் தீவிரத்திலும் சமநிலையை உருவாக்குகிறது.
குறிப்பிட்ட ஏழு நிலைகளையும் ஒருவர் செய்கிறபோது அது ஒரு சுற்று சிவ நமஸ்காரம் ஆகிறது. இவ்வாறாக, சிவாங்க சாதனா மேற்கொள்ளும் 42 நாட்களும், தினசரி 21 முறை சூரியோதயத்திற்கு முன்பு அல்லது சூரியோதயத்திற்கு பின்பு முழுமையான அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும். சிவாங்கா சாதனா என்பதே இந்த சக்தி வாய்ந்த பயிற்சியின் தீட்சையை பெறுவதற்கான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. ஒருவருக்குள் இருக்கும் பக்தியை தீவிரப்படுத்தவும், படைப்பின் மூலத்துடன் தொடர்பில் இருக்கவும் இந்த சிவாங்கா சாதனா மேற்கொள்ளப்படுகிறது. 42 ஆம் நாளின் இறுதியில் வெள்ளியங்கிரி மலையேற்றத்துடன் இந்த சாதனா நிறைவடைந்தாலும், தெய்வீகத்தின் அருளை நாம் எப்போதும் உணர முடியும்.
அதுமட்டுமின்றி தெய்வீக அம்சத்தை நம்மை நோக்கி அழைத்து வரும் புனித ஆதியோகி ரத யாத்திரையிலும் சிவாங்கா சாதகர்கள் ஈடுபட்டுள்ளனர். ஈஷா யோக மையத்தில் அமைந்துள்ள ஆதியோகியை நேரில் தரிசிக்காதவர்களும, அவரின் தரிசனம் கிடைக்கும் விதமாக ஆதியோகி ரதம் தமிழகமெங்கும் வலம் வந்த வண்ணம் உள்ளது. பல்லாயிரம் கிலோமீட்டர் வலம் வந்து மகாசிவராத்திரி விழாவிற்கு முன் தினம் கோவை ஈஷா யோக மையத்தை இந்த ரதங்கள் வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரதத்திற்கும் நமக்குமான பந்தம் மிக பழமை வாய்ந்தது.
- ஆன்மீகத்தை அழகியலோடு அணுகிய கலாச்சாரம் நம்முடையது.
- பக்தர்கள் தங்கள் ஊர்களில் ஆதியோகியை தரிசிக்கும் வாய்ப்பாக ஆதியோகி ரதங்கள் வலம் வருகின்றன.
வண்ணமயமான பிரம்மாண்ட சிற்பம் அசைந்து வருவதை கண்டால் ஒருவருக்குள் எத்தனை பரவசம் பிறக்கும்? அந்த வியத்தகு தருணத்தை தரக்கூடியவை தேர்கள். நாம் வணங்கும் தெய்வத்தை சுமந்து கொண்டு, தெருக்களில் உருண்டோடி, பல வண்ண நிறத்தில் அலங்காரம் சூடி, கம்பீர கொடிகள் ஏந்தி தேர் வரும் அழகை பாடாத கவிஞர்கள் இல்லை. ஆன்மீகத்தை அழகியலோடு அணுகிய கலாச்சாரம் நம்முடையது.
தேர் திருவிழா என்பது நம் மரபில் காலம் கடந்து கடைப்பிடிக்கப்படும் வழக்கம். ரிக் மற்றும் அதர்வண வேதத்தில் தேர் குறித்த குறிப்புகள் உண்டு. "பத்ம", "ஸ்கந்த", "பவிஸ்ய" புராணங்களில் தேர் திருவிழா பற்றிய செய்திகளை பார்க்க முடிகிறது. ராமன் வனம் சென்றதும் தேரில்தான், பாரதத்தில் பாண்டவர்கள் போரை வென்றதும் ரதத்தில்தான். ரதத்திற்கும் நமக்குமான பந்தம் மிக பழமை வாய்ந்தது.
முல்லை கொடி படர்வதற்கு தேர் கொடுத்த பாரியை நாம் படித்திருக்கிறோம். மேலும் கோவில் அமைப்புகள் குறித்து திருநாவுக்கரசர் தன் பதிகத்தில் பாடுகிறபோது, சிதம்பரம் அருகில் உள்ள மேலக்கடம்பூர் கோவிலின் கருவறையை பார்த்து "கரக்கோயில்" என்கிறார். இதன் பொருள் தேர் போன்ற அமைப்புடைய கோவில் என்பதாகும். இலக்கியங்களில் தேர் குறித்து இது போல பல செய்திகள் உள்ளன. இதன் தார்பரியம் ஒன்று தான், கோவிலில் இருக்கும் கடவுளை பக்தர்கள் தேடி செல்வார்கள். ரதம் என்பது தன் பக்தர்களை நோக்கி கடவுள் வருகிறார்.
எந்த காரணத்தினாலோ தன்னை வந்து காண முடியாத பக்தர்களை, கடவுளே நேரில் சென்று பார்க்கிறார். மேலும் "ஊர் கூடி தேர் இழுப்போம்" என்பது பழமொழி. அந்த வகையில் தெய்வீகம் கடந்து இதில் சமூக நல்லிணக்கமும் இருப்பதை நாம் உணர முடியும். அனைத்து மக்களுக்கும் ஒரே தரிசனம் வழங்கி, அனைத்து மக்களாலும் வடம் பிடித்து இழுக்கப்பட்டு நகரும் கோவிலாக வலம் வருபவை ரதங்கள்.
திருவாரூர், ஶ்ரீவில்லிப்புத்தூர், கள்ளழகர், ஶ்ரீரங்கம், என தமிழகம் கண்ட பாரம்பரிய தேர் திருவிழாக்கள் ஏராளம். அந்த வரிசையில், சமீப ஆண்டுகளில் தமிழகத்தில் அனைவர் மனதிலும் இடம் பிடித்திருப்பது ஆதியோகி ரதம்.
ஈஷாவில் நிகழும் மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் ஆதியோகியில் இருந்து ரதங்கள் புறப்பட்டு ஒவ்வொரு மாவட்டங்களில் வலம் வருவது வழக்கம். கோவையில் பிரம்மாண்டமாக அருள் பாலிக்கும் ஆதியோகியை காண முடியாத பக்தர்கள் தங்கள் ஊர்களில் ஆதியோகியை தரிசிக்கும் வாய்ப்பாக இந்த ஆதியோகி ரதங்கள் வலம் வருகின்றன.
ஆயிரக்கணக்கான பக்தர்கள், தன்னார்வலர்களின் கோலாகலமாக வரவேற்பு கிடையே இந்த ஆண்டும் ஆதியோகி ரதங்கள் தமிழகமெங்கும் பவனி வருகின்றன. இந்த ஆண்டும் டிசம்பர் 17 அன்று ஈஷாவிலுள்ள ஆதியோகியில் இருந்து புறப்பட்ட 4 ரதங்கள், 50 நாட்களில் தமிழகத்தின் 25000 கி.மீ கடந்து, வரும் பிப்ரவரி 17 அன்று கோவை ஈஷா யோக மையத்தை அடையவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கனிவான பாரதம் உருவாக்குவதற்கு ஒவ்வொரு குடிமகனும் தொடர்ந்து பங்களிக்க வேண்டும் என சத்குரு தெரிவித்துள்ளார்.
- ஈஷா சம்ஸ்கிரிதி மற்றும் ஈஷா ஹோம் ஸ்கூல் பள்ளி மாணவர்கள் தேசப் பக்தி பாடல்களை பாடினர்.
ஈஷாவில் இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் சத்குரு, தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விழாவில் அவர் பேசியதாவது:
பாரத தேசத்தில் வாழும் நாம் ஜாதி, மதம், மொழி, இனம், உணவு பழக்கம், கலாச்சாரம் என பல விதங்களில் வேறுப்பட்டு உள்ளோம். நம்மிடம் எவ்வளவு வேறுபாடுகள் இருந்தாலும் நாம் அனைவரும் பல நூறு ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருகிறோம். சுதந்திரத்திற்கு முன்பு நம் தேசத்தை 600-க்கும் மேற்பட்ட குறு நில அரசர்கள் ஆட்சி செய்து வந்தனர். இருப்பினும், வெளியில் இருந்து வந்தவர்கள் அனைவரும் நம்மை இந்துஸ்தான் அல்லது பாரதம் என்று ஒற்றை பெயர் வைத்தே அழைத்தனர்.
நம்மிடம் இருக்கும் இந்த பன்மைத்துவத்தையும், வேறுபாடுகளையும் பயன்படுத்தி நமக்குள் பிரிவினையை உருவாக்கும் செயல்கள் கடந்த 600 முதல் 700 ஆண்டுகளில் மிகவும் தீவிரமாக நடந்துள்ளன. நம் தேசத்தின் மீது படையெடுத்தவர்களும், ஆக்கிரமித்தவர்களும் இதை பல வழிகளில் மிகவும் திட்டமிட்டு செய்துள்ளனர். குறிப்பாக, நம் தேசத்தின் பொருளாதார முதுகெலும்பை தகர்ப்பதற்கும் அவர்கள் செயல் செய்துள்ளார்கள்.
300 ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகளவில் பொருளாதாரத்தில் வளமான தேசமாக நம் பாரத தேசம் இருந்தது. அந்த நிலையை மீண்டும் அடையும் முயற்சியில் நாம் தற்போது ஈடுப்பட்டு உள்ளோம். பொருளாதார பலம் இல்லாமல் கலாச்சாரம், ஆன்மீக விழுமியங்கள் என நாட்டில் உள்ள எதையும் நம்மால் பாதுகாக்க முடியாது. மேலும், நம்மிடம் இருக்கும் பல விதமான வேறுபாடுகளை கடந்து எது நம்மை ஒற்றுமையாக வைத்துள்ளது என்பதை நீங்கள் கண்டறிந்து அதைப் மேலும் பலப்படுத்த வேண்டும்.
இவ்வாறு சத்குரு கூறினார்.
மேலும், குடியரசு தினத்தை முன்னிட்டு சத்குரு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "#குடியரசுதினம் - மிகப்பெரிய ஜனநாயகமாக ஆனது மட்டுமல்லாமல், துடிப்பான, வேற்றுமைகளுடன் ஒற்றுமையான தேசியத்தின் முத்திரையாக மாறியுள்ள நம் அன்பான பாரதத்தின் அருமையான பயணத்தின் நினைவூட்டல். வலிமையான, அனைவரையும் இணைத்துக்கொள்ளக்கூடிய, கனிவான #பாரதம் உருவாக்குவதற்கு ஒவ்வொரு குடிமகனும் தொடர்ந்து பங்களிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
ஈஷாவில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஈஷா சம்ஸ்கிரிதி மற்றும் ஈஷா ஹோம் ஸ்கூல் பள்ளி மாணவர்கள் தேசப் பக்தி பாடல்களை பாடி விழாவை சிறப்பித்தனர்.
இது தவிர, ஈஷாவின் பிரதான நுழைவு வாயிலான மலைவாசலில் இக்கரை போளூவாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் சதானந்தம் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் பழங்குடி மக்கள் உட்பட நூற்றுக்கணக்கான கிராம மக்கள் பங்கேற்றனர்.
- கருப்பு கவுனி அரிசியை கடந்த 4 வருடமாக முழுவதும் இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகிறோம்.
- இதுவரை 15 ஆயிரம் விவசாயிகளுக்கு நாங்கள் இயற்கை விவசாய பயிற்சிகள் அளித்துள்ளோம்.
ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் விளையும் கேரட் மற்றும் பீட்ரூட்டை சமவெளியில் வெற்றிகரமாக சாகுபடி செய்து ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சாதனை படைத்துள்ளது.
இது தொடர்பாக அவ்வியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா அவர்கள் கூறுகையில், "எங்களுடைய மண் காப்போம் இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இயற்கை விவசாய பயிற்சிகளை மாதந்தோறும் நடத்தி வருகிறோம். அதுமட்டுமின்றி கோவை, ஈரோடு, திருவண்ணாமலை, தஞ்சாவூர் ஆகிய 4 இடங்களில் மாதிரி பண்ணைகளை உருவாக்கி பராமரித்து வருகிறோம். மொத்தம் 60 ஏக்கர் பரப்பில் பல்வேறு விதமான பயிர்களை பரிசோதனை முயற்சியாக வெவ்வேறு இயற்கை நுட்பங்களை பயன்படுத்தி பயிர் செய்து வருகிறோம்.
அந்த வகையில், கோவையில் செம்மேடு கிராமத்தில் உள்ள எங்களுடைய மாதிரி பண்ணையில் மலைப்பிரதேசங்களில் மட்டுமே விளையும் கேரட் மற்றும் பீட்ரூட்டை தலா 30 சென்ட் என்ற பரப்பளவில் பிரதான பயிராக பயிரிட்டோம். 120 நாட்களுக்கு பிறகு தற்போது நாங்கள் எதிர்பார்த்ததை விட நல்ல பருமனாகவும் நீளமாகவும் கேரட் விளைந்துள்ளது.
பொதுவாக காய்கறி கடைக்கு சென்று 1 கிலோ கேரட் வாங்கினால் 12 முதல் 13 கேரட் பிடிக்கும். ஆனால், நாங்கள் எந்தவித ரசாயனங்களையும் பயன்படுத்தாமல், இயற்கை முறையில் ஜீவாமிர்தம் மட்டுமே பயன்படுத்தி விளைவித்ததால் 6 அல்லது 7 கேரட்களை எடை போட்டாலே ஒரு கிலோ வந்துவிடும். அதை வைத்து பார்க்கும்போது விளைச்சலும் நல்ல முறையில் வந்துள்ளது. பூச்சி மேலாண்மைக்காகவும், நல்ல விளைச்சலுக்காகவும் வேப்பங்கொட்டை கரைசல் பயன்படுத்தினோம்.
கேரட் மட்டுமின்றி, பீட்ரூட்டின் வளர்ச்சியும் சிறப்பாக வந்துள்ளது. இதைப்போலவே முள்ளங்கி, கொத்தமல்லி ஆகியவற்றையும் பயிர் செய்து வருகிறோம். இந்த முறை மழை அதிகமாக பெய்தபோது ஏற்பட்ட பூஞ்சை தாக்குதலுக்கு புளித்த மோர்க்கரைசல் தெளிக்கப்பட்டு நன்றாக வளர்வதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட்டதால், விளைச்சலில் எந்தக்குறையும் ஏற்படவில்லை. நாளை நடக்கவுள்ள அறுவடையில் 1.5 டன் அளவிற்கு விளைச்சல் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இதேபோன்று, பாரம்பரிய நெல் ரகமான கருப்பு கவுனி அரிசியும் நாங்கள் கடந்த 4 வருடமாக முழுவதும் இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகிறோம். கடந்த ஆண்டு ஒரு ஏக்கருக்கு இரண்டே கால் டன் விளைச்சல் கிடைத்துள்ளது. எங்கள் தோட்டத்திற்கு அருகில் ரசாயன விவசாயம் செய்யும் விவசாயிகள் எடுக்கும் விளைச்சலை விட இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி, நாங்கள் பரிசோதனை செய்து வெற்றி பெற்ற இயற்கை விவசாய தொழில்நுட்பங்கள் அனைத்தையும் விவசாயிகளுக்கு நேரடி களப் பயிற்சியாக சொல்லித் தருகிறோம். இதுவரை 15 ஆயிரம் விவசாயிகளுக்கு நாங்கள் இயற்கை விவசாய பயிற்சிகள் அளித்துள்ளோம். அதில் நிறைய பேர் வெற்றிகரமாகவும் லாபகரமாகவும் விவசாயம் செய்து முன்னோடி விவசாயிகளாக மாறி உள்ளனர். பின்னர், அவர்களுடைய தோட்டத்திலேயே புது விவசாயிகளுக்கு இயற்கை விவசாய பயிற்சிகளை தமிழ்நாடு முழுவதும் கற்றுக்கொடுத்து வருகிறோம்." என்றார்.