search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அண்ணாமலை"

    • அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ரமணி கத்தியால் குத்திக் கொலை.
    • வழக்கறிஞர் நீதிமன்ற வளாகத்தில் வெட்டிக் கொலை.

    தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ரமணி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மற்றும் வழக்கறிஞர் நீதிமன்ற வளாகத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவங்களுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சையில் இன்று வகுப்பறையில் ஆசிரியை படுகொலை செய்யப்பட்டார். ஓசூரில் பட்டப்பகலில் வழக்கறிஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இவை திமுக ஆட்சியில் தமிழகத்தில் நிலவும் பேரழிவு சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமையை பிரதிபலிக்கிறது.

    தமிழகத்தை சட்டமற்ற காடாக மாற்றியதற்கு மு.க.ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும். பிரச்சினைகளைத் திசைதிருப்புவதை விட இந்த அரசு சிறிதளவு முயற்சி செய்தால், இதுபோன்ற சட்டமீறல்களை நாம் காண முடியாது.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • வருகிற 28-ந்தேதி லண்டனில் இருந்து தமிழகம் திரும்ப உள்ளார்.
    • கோவை கொடிசியாவில் வாய்ஸ் ஆப் கோவை என்ற நிகழ்ச்சி நடக்க உள்ளது.

    கோவை:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, 3 மாத காலம் சர்வதேச அரசியல் மேற்படிப்பதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ந்தேதி லண்டன் சென்றார்.

    லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அவர் அரசியல் மேற்படிப்பு படித்தார். படிப்புக்கு மத்தியில் லண்டனில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

    அரசியல் மேற்படிப்புக்காக அண்ணாமலை லண்டன் சென்றதை தொடர்ந்து தமிழக பா.ஜ.கவில் எச்.ராஜா தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு, அவர்கள் கட்சி பணிகளை மேற்கொண்டு வந்தனர். பல்வேறு முக்கிய முடிவுகளையும் இந்த ஒருங்கிணைப்புக் குழுவினரே எடுத்து வருகின்றனர்.

    இந்தநிலையில் அரசியல் மேற்படிப்புக்காக லண்டன் சென்ற அண்ணாமலை வருகிற 28-ந்தேதி லண்டனில் இருந்து தமிழகம் திரும்ப உள்ளார்.

    தமிழகம் வந்த சில நாட்களிலேயே அண்ணாமலை கோவைக்கு வருகை தர உள்ளார்.

    அடுத்த மாதம் 1-ந்தேதி கோவை கொடிசியாவில் வாய்ஸ் ஆப் கோவை என்ற நிகழ்ச்சி நடக்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்க உள்ளார்.

    இதற்காக 1-ந் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலமாக அண்ணாமலை கோவைக்கு வருகிறார். பின்னர் கார் மூலம் கொடிசியாவுக்கு செல்லும் அவர் அங்கு நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

    அதனை தொடர்ந்து அவர் கோவை மாவட்ட கட்சி நிர்வாகிகளையும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    அண்ணாமலை கோவை வருகையால் கோவை மாவட்ட பா.ஜ.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    லண்டன் சென்று விட்டு 3 மாதம் கழித்து முதல்முறையாக அண்ணாமலை கோவைக்கு வர உள்ளதால் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க கோவை மாவட்ட பா.ஜ.க. வினர் திட்டமிட்டுள்ளனர்.

    கோவை விமான நிலையத்தில் கோவை மாநகர் மாவட்ட பா.ஜ.க தலைவர் ரமேஷ்குமார் தலைமையில் பல்லாயிரக்கணக்கான பா.ஜ.க தொண்டர்கள் திரண்டு வந்து, மேள, தாளங்கள், தாரை, தப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர்.

    முன்னதாக வருகிற 30-ந் தேதி, கொடிசியாவில் நடைபெறும் இதே நிகழ்ச்சியில் மத்திய மந்திரி எல்.முருகனும் பங்கேற்றக உள்ளது குறிப்பிடத்தக்கது. அவருக்கும் கட்சியினர் வரவேற்பு அளிக்க தயாராகி வருகிறார்கள்.

    அடுத்தடுத்த நாட்களில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய மந்திரி எல்.முருகன் வருகையால் கோவை மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகளிடையே உற்சாகம் காணப்படுகிறது.

    • மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய விக்னேஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
    • மருத்துவர் தாக்கதப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    தாயாருக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என விக்னேஷ் என்பவர் கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜியின் கழுத்து, காதின் பின்புறம், நெற்றி, முதுகு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கத்தியால் குத்தியுள்ளார்.

    மருத்துவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது மயக்க நிலையில் உள்ளார். மருத்துவர் இதய நோயாளி என்பதால் 8 மணி நேரத்திற்கு பிறகே அவரின் நிலை குறித்து தெரிவிக்கப்படும் என தெரிய வந்துள்ளது.

    தாக்குதல் நடத்திய விக்னேஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், மருத்துவர் தாக்கதப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இதைதொடர்ந்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னை கிண்டி அரசு மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே வைத்து, புற்றுநோய் மருத்துவர் பாலாஜி அவர்கள், கத்தியால் குத்தப்பட்டுத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பாலாஜி, விரைந்து நலம்பெற, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

    ஏற்கனவே பல முறை, மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் என தாக்கப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்தும், திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    சட்டம் ஒழுங்கைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு முறையும் இது போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளின் போது, அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கூறுவதோடு மட்டுமே நிறுத்திக் கொண்டு, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால், தொடர்ச்சியாக பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குரியதாகியிருக்கிறது.

    கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், நெல்லை அரசு மருத்துவமனையில், பயிற்சி மருத்துவர் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு மார்ச் மாதம், வேலூர் அரசு மருத்துவமனையில், மருத்துவப் பயிற்சி மாணவர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார். கடந்த வாரம், திருச்சி இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில், மருத்துவர் மீது, திமுக உறுப்பினர் உள்ளிட்ட 10 பேர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    தொடர்ந்து மருத்துவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுவது, மருத்துவர்கள் இடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. இது போன்ற குற்ற நிகழ்வுகளைத் தடுக்காமல், ஒவ்வொரு முறையும், நடவடிக்கை எடுப்போம் என்று பெயரளவில் மட்டுமே முதலமைச்சர் கூறுவது, பொதுமக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை திமுக அரசு உணர வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • டெல்லி கணேஷ் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு உயிரிழந்தார்.
    • பிரபல எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் (65) மதுரையில் உள்ள தன் இல்லத்தில் குளியலறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்தார்.

    பிரபல நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். 80 வயதான நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு உயிரிழந்தார்.

    டெல்லி கணேஷின் மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலர் நேரிலும், சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    பிரபல எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் (65) மதுரையில் உள்ள தன் இல்லத்தில் குளியலறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரையுலகமும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், லண்டனில் இருக்கும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மறைந்த டெல்லி கணேஷ் மற்றும் இந்திரா சவுந்தரராஜன் ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தமது இயல்பான நடிப்புத் திறனால், ஏற்றுக் கொண்ட அனைத்துக் கதாபாத்திரங்களிலும், மிக அருமையான நடிப்பை வெளிப்படுத்தி, உலகெங்குமுள்ள தமிழ் மக்களின் அன்பைப் பெற்ற திரு. டெல்லி கணேஷ் அவர்கள், உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

    திரு. டெல்லி கணேஷ் அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய வேண்டிக் கொள்கிறேன்.

    ஓம் சாந்தி!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    தொடர்ந்து, இரந்திரா சவுந்தரராஜன் மறைவுக்கு வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், " புகழ்பெற்ற எழுத்தாளர் திரு. இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களின் இறப்புச் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. மக்களின் பக்தியையும், நம்பிக்கைகளையும் அடிப்படையாகக் கொண்டு, தனது படைப்புகளை உண்மைக்கு மிக நெருக்கமாக உருவாக்கி, லட்சக்கணக்கான வாசகர்களைப் பெற்றிருந்த பெருமைக்குரியவர். மிகச் சிறந்த பக்திமானாகத் திகழ்ந்தவர்.

    திரு. இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடிகளைச் சேர, வேண்டிக் கொள்கிறேன்.

    ஓம் சாந்தி!" என்று குறிப்பிட்டிருந்தார்.

    • லண்டனில் அரசியல் படிப்பை முடித்துவிட்டு நவம்பர் 28-ம் தேதி தமிழகம் திரும்ப உள்ளார்.
    • அண்ணாமலை வந்த பிறகு பெருங்கோட்டம் வாரியாக பொதுக்கூட்டங்களும் நடைபெற உள்ளன.

    லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சர்வதேச அரசியல் படிப்புக்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த 40 பேரை தேர்வு செய்துள்ளது. இதில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 12 பேரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் ஒருவர். அங்கு தங்கி படிப்பவர்களுக்கான செலவை பல்கலைக்கழகமே ஏற்றுக்கொண்டது.

    இதற்காக அண்ணாமலை கடந்த ஆகஸ்ட் மாதம் (28-ந்தேதி) இரவு சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்றார். 3 மாதங்கள் லண்டனில் தங்கி படிக்கும் அண்ணாமலை வருகிற நவம்பர் மாத இறுதியில் படிப்பை முடித்து சென்னை திரும்புவார் என கூறப்பட்டது.

    அதன்படி, லண்டனில் அரசியல் படிப்பை முடித்துவிட்டு நவம்பர் 28-ம் தேதி தமிழகம் திரும்ப உள்ளார்.

    இந்நிலையில் லண்டனில் இருந்து திரும்பியதும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல அண்ணாமலை திட்டமிட்டுள்ளார்.

    தமிழகம் திரும்பியதும் கோவையில் 2 நாட்கள் தனியார் நிகழ்ச்சியில் அண்ணாமலை பங்கேற்கிறார்.

    ஜனவரி முதல் ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் அண்ணாமலை சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார். 2026 தேர்தலையொட்டி ஒவ்வொரு தொகுதியிலும் மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்க அவர் திட்டமிட்டுள்ளார்.

    கிராமப்புறங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, மக்களை சந்தித்து அண்ணாமலை மனுக்களை பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அண்ணாமலை வந்த பிறகு பெருங்கோட்டம் வாரியாக பொதுக்கூட்டங்களும் நடைபெற உள்ளன.

    டிசம்பர் மாத இறுதிக்குள் பாஜகவில் நிர்வாகிகள் மாற்றம் நிகழலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இளைஞர்களுக்கு பொறுப்பு வழங்குவது, இளைஞர்களை அதிகளவில் கட்சியில் சேர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    • அண்ணன் அண்ணாமலைக்கு நன்றி என்று கூறிய சிவகார்த்திகேயன்.
    • முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை யுகங்களுக்கு உத்வேகம் தரும் கதை.

    இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த, 'அமரன்' திரைப்படம் நேற்று வெளியானது. மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தில், முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும், முகுந்தின் மனைவி இந்து ரெபேக்கா கதாபாத்திரத்தில், சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.

    சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்தை பார்த்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தனது எக்ஸ்தள பக்கத்தில் மேஜர். முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை யுகங்களுக்கு உத்வேகம் தரும் கதை. 2014 இல் அவர் நம் தேசத்துக்காக செய்த இறுதித் தியாகம், எங்களுக்குள் ஏதோ ஒன்றை இழந்துவிட்டோம் என்ற உணர்வை நம் அனைவரையும் ஏற்படுத்தியது.

    நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி. இந்த அசாதாரண திரைப்படத்திற்கு நன்றி. இந்திய ஆயுதப்படை வாழ்க! நீங்கள் தான் சிறந்தவர்கள் என்று பதிவிட்டிருந்தார்.

    இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன், அண்ணன் அண்ணாமலைக்கு நன்றி என்று கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நம் சிவகாசியின் ஒட்டுமொத்த பொருளாதாரம்.
    • தீபாவளிப் பண்டிகை, அனைவரின் வாழ்விலும் ஒளி ஏற்றும் தீபாவளியாக அமையட்டும்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது:-

    "பட்டாசு வெடிப்பது நம்ம கலாச்சாரம். நம் மக்களின் வாழ்வாதாரம். நம் சிவகாசியின் ஒட்டுமொத்த பொருளாதாரம்.

    நம் மகிழ்ச்சிக்காகப் பட்டாசு தயாரிக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்காக, நாம் அனைவரும், நம்மால் முடிந்த அளவுக்குப் பட்டாசு வாங்கி வெடிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

    மத்தாப்புக்களின் வெளிச்சம் போல, இந்த தீபாவளிப் பண்டிகை, அனைவரின் வாழ்விலும் ஒளி ஏற்றும் தீபாவளியாக அமையட்டும். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!"

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    • நந்தன் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
    • ஓடிடியில் வெளியான பிறகு நந்தன் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    'கத்துக்குட்டி', 'உடன் பிறப்பே' போன்ற படங்களை இயக்கிய இரா.சரவணன் இயக்கத்தில் நந்தன் என்ற படத்தில் நடிகர் சசிகுமார் நடித்துள்ளார்.

    உண்மை கதையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் இதுவரை நாம் பார்த்திராத கதாபாத்திரத்தில் சசிகுமார் நடித்துள்ளார். இப்படத்தில் ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்

    இப்படம் கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனையடுத்து இத்திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    ஓடிடியில் வெளியான பிறகு நந்தன் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திருமாவளவன், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இத்திரைப்படத்தை பாராட்டி பேசியுள்ளனர்.

    இந்நிலையில் நந்தன் படத்தை பாராட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், OTT தளத்தில் 'நந்தன்' திரைப்படத்தைப் பார்த்தேன். பட்டியலின மக்களை முன்னேற்றுகிறோம் என்ற பெயரில் தங்கள் சுயலாபத்திற்காகப் பட்டியலின மக்களைச் சுரண்டி ஆட்சி செய்யும் சர்வாதிகார அரசியல் வாதிகளைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறது இத்திரைப்படம்.

    தனது தேர்ந்த நடிப்பின் மூலம் பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்கள் படும் இன்னல்களை நம் கண்முன் கொண்டு வந்த நடிகர் சகோதரர் சசிகுமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட ஊராட்சிகளில் நடக்கும் அவல அரசியலை உள்ளபடியே காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் இரா.சரவணன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பல ஆழமான கருத்துக்கள் நிறைந்த 'நந்தன்' திரைப்படம் காலத்திற்கும் மக்கள் மனதில் இடம் பெற்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், காப்பியங்கள், கட்டுரைகள், சிறுகதைகள் என அவரது எழுத்துக்கள் புகழ்பெற்றவை.
    • ஊடக இதழாசிரியர், தமிழக அரசவைக் கவிஞர், சாகித்ய அகாடமி விருது என, தமது திறமையால் அவர் அடைந்த உயரங்கள் பல.

    சென்னை:

    பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    எல்லாச் சூழலுக்கும் பொருந்தும்படியாக, ஆறுதலாக, உத்வேகமாக இருக்கும் தமது வைர வரிகளால், காலங்களைக் கடந்து வாழும் கவியரசர் கண்ணதாசன் நினைவு தினம் இன்று.

    கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம், இயேசு காவியம் முதலான நூல்கள், அவரது ஆழ்ந்த இறைபக்தியை விளக்கும். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், காப்பியங்கள், கட்டுரைகள், சிறுகதைகள் என அவரது எழுத்துக்கள் புகழ்பெற்றவை. ஊடக இதழாசிரியர், தமிழக அரசவைக் கவிஞர், சாகித்ய அகாடமி விருது என, தமது திறமையால் அவர் அடைந்த உயரங்கள் பல.

    இறவாப் புகழ் பெற்ற கவியரசர் கண்ணதாசனுக்கு நினைவஞ்சலிகள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், முடிந்தவரையிலும், அடுத்த சில நாட்களுக்கு, பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்வது நன்று.
    • பொதுமக்கள், அவசியமற்ற பணிகளுக்காக வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், சென்னை மட்டுமின்றி, தமிழகம் முழுவதுமே பல மாவட்டங்களிலும் மழைப்பொழிவு காணப்படுகிறது. மேலும், காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

    குறிப்பாக, கடந்த ஆண்டுகளில், வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், முடிந்தவரையிலும், அடுத்த சில நாட்களுக்கு, பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்வது நன்று. தமிழக அரசு, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு, பாதுகாப்பான தங்குமிடம், உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

    மேலும், சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 90% அளவு நிறைவு பெற்றிருப்பதாக, அமைச்சர்களும், சென்னை மாநகராட்சி மேயர் அவர்களும் கடந்த மூன்று ஆண்டுகளாகக் கூறி வருவதால், கடந்த ஆண்டுகளை நினைவில் கொண்டு, தண்ணீர் தேங்கிக் கிடக்கும் சாலைகளில் செல்லும்போது, பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் செல்லுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

    கனமழை இன்னும் சில நாட்களுக்குத் தொடர வாய்ப்பிருப்பதால், பொதுமக்கள், அவசியமற்ற பணிகளுக்காக வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். மேலும், மின்சாரம் தொடர்பான பொருள்களைக் கையாளும்போதும், நீர்நிலைகளிலும், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நீர் நிலைகளில் இறங்க முற்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

    அனைவரும் பாதுகாப்பாக இருப்போம். பருவமழையைப் பாதிப்பின்றி எதிர்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தீமையின் மீது நன்மையின் வெற்றியைப் பிரதிபலிக்கும் விஜயதசமி நன்னான் இன்று.
    • குழந்தைகள் கல்வியையும், பெரியவர்கள் புதிய தொழில்களையும் துவங்கும் புண்ணிய தினம் விஜயதசமி.

    சென்னை:

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தீமையின் மீது நன்மையின் வெற்றியைப் பிரதிபலிக்கும் விஜயதசமி நன்னாளான இன்று, தமிழக மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    குழந்தைகள் கல்வியையும், பெரியவர்கள் புதிய தொழில்களையும் துவங்கும் புண்ணிய தினமான விஜயதசமி நன்னாளில், அனைவரின் கனவுகள் மற்றும் இலக்குகள் நிறைவேற, அம்பிகைத் தாயின் அருள் கிடைக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.

    • வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 5 பேர் உயிரிழந்தனர்.
    • 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியை காண மெரினா கடற்கரையில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் குவிந்தனர். இதனால் மெரினா கடற்கரையே திக்குமுக்காடியது.

    கூட்ட நெரிசல் காரணமாக ஏற்பட்ட வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

    இந்திய விமானப்படை சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான வான் சாகசக நிகழ்ச்சியின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தும், 200-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதும் அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.

    பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளையும், போதுமான போக்குவரத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளாமல் தி.மு.க. அரசு, பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து எந்த அக்கறையும் இல்லாமல் இருந்திருப்பதே இதற்கு ஒரே காரணம்.

    முதலமைச்சர் ஸ்டாலின், தனது சுய விளம்பரங்களுக்காக மேற்கொள்ளும் ஏற்பாடுகளைக்கூட, பல லட்சம் பொதுமக்கள் கூடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யவில்லை என்பது அவரது நிர்வாகத்தின் முழுமையான தோல்வியைக் காட்டுகிறது. 5 உயிர்களை இழந்திருப்பது, ஒரு விபத்து என்று கடந்து செல்ல முடியாது. இதற்கு அடிப்படை ஏற்பாடுகளைக் கூடச் செய்யாமல் புறக்கணித்த தி.மு.க. அரசே முழு பொறுப்பு.

    தன் குடும்பத்துக்காக மட்டுமே ஆட்சி நடத்தி, பொதுமக்கள் உயிரைக் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல், 5 பேர் உயிரிழப்புக்கும், பல நூறு குடும்பங்களின் பரிதவிப்புக்கும் காரணமான முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களையும், தி.மு.க. அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். பொதுமக்களுக்கு முதலமைச்சர் நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

    ×