search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரோட்டில்"

    • சுங்கசாவடிக்கு பணம் செலுத்த தவிர்த்து பெருந்துறை-காங்கேயம் ரோட்டில் செல்லும் கனரக லாரிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
    • சென்னிமலை வழியாக வரும் லாரிகள் அடிக்கடி விபத்துக்களையும், உயிர் இழப்புகளையும் ஏற்படுத்தி வருகின்றன.

    சென்னிமலை:

    சென்னிமலை- பெருந்துறை ரோட்டில் உள்ள ஈங்கூரில் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு ெரயில்வே மேம்பாலம் திறந்து வைக்கப்பட்டது. அந்த பாலம் கட்டப்படுவதற்கு முன்பாக அந்த வழியே வாகனங்களில் செல்லும் அனைத்து மக்களும் ெரயில் செல்லும் வரை காத்திருந்த பின்பே செல்வார்கள்.

    ஈங்கூரில் ெரயில்வே மேம்பாலம் கட்டப்படுவதற்கு முன்பு பல்வேறு பொதுநல அமைப்பினரும், பொதுமக்களும் ெரயில்வே மேம்பாலத்திற்காக போராடினார்கள்.

    அதன்பிறகு ஈங்கூரில் ெரயில்வே மேம்பாலம் கட்ட அரசு அனுமதியளித்தது. 2010-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு அதன்பிறகு இந்த மேம்பாலம் வழியாக எந்த வித தடங்களும் இன்றி வாகனங்கள் சென்று வருகின்றன.

    இந்த மேம்பாலம் கட்டப்பட்ட பிறகு தேசிய நெடுஞ்சாலை வழியாக பொள்ளாச்சி, கேரளா செல்லும் பெரும்பாலான லாரிகள் பெருந்துறையில் இருந்து சென்னிமலை வழியாக செல்ல ஆரம்பித்து விட்டன.

    தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றால் விஜயமங்கலம், கருமத்தம்பட்டி உள்பட 3 இடங்களில் உள்ள சுங்க சாவடிகளில் பணம் செலுத்த வேண்டும் என்பதற்காக தினமும் ஆயிரக்கணக்கான லாரிகள் ஈங்கூர், சென்னிமலை, காங்கேயம் வழியாக பொள்ளாச்சி மற்றும் கேரளாவுக்கு செல்கின்றன.

    அதேபோல் அங்கிருந்து வரும் லாரிகளும் இதன் வழியாக செல்கின்றன. இதனால் சென்னிமலை -பெருந்துறை ரோடு, சென்னிமலை-காங்கேயம் செல்லும் ரோடு, மற்றும் குறுகிய ரோடாக உள்ள சென்னிமலை டவுன் பகுதி ஆகியவை மிகுந்த போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகி விட்டது.

    இந்த வழியாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் அனைவரும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு செல்கின்றனர். சென்னிமலை வழியாக வரும் லாரிகள் அடிக்கடி விபத்துக்களையும், உயிர் இழப்புகளையும் ஏற்படுத்தி வருகின்றன.

    நான்கு வழிச் சாலைகளில் செல்லும் கண்டெய்னர்கள் எல்லாம் சுங்க கட்டணம் கட்டுவதை தவிர்க்க இந்த வழியில் செல்கின்றன. இதனால் இந்த ரோடு தாங்காமல் அடிக்கடி பெயர்ந்து போய்விடுகிறது. மேலும் ஒரே நேரம் 2, 3 லாரிகள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    இதனால் குறுகலான சாலையை கொண்ட சென்னிமலை பகுதியில் அடிக்கடி சென்னிமலை கிழக்கு ராஜா வீதி மற்றும் சென்னிமலைபாளையம் பிரிவு, மலை கணுவாய், பசுவபட்டி வெப்பிலி ரோடு பிரிவு ஆகிய இடங்களில் மாதம் தோறும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

    காங்கேயத்திலிருந்து சென்னிமலை வழியாக பெருந்துறைக்கோ அல்லது பெருந்துறையில் இருந்து காங்கேயத்திற்கோ இரு சக்கர வாகனங்களிலோ அல்லது கார்களிலோ குறிப்பாக காலை, மாலை நேரங்களில் செல்பவர்களுக்கு இந்த லாரிகளின் தொந்தரவு நன்கு தெரியும்.

    சரக்கு லாரிகள் மற்றும் கண்டெய்னர் லாரிகளால் ஏற்படும் விபத்துக்களை தடுக்கவே நான்கு வழி சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த வழியாக செல்லாமல் சுங்கச் சாவடிகளுக்கு பயந்து குறுக்கு வழியில் லாரிகள் செல்வதால் பொதுமக்களுக்கு பெரிய இடையூறு ஏற்படுவதுடன், உயிர் இழப்பும் ஏற்பட்டு வருகிறது.

    ஈங்கூர் மேம்பாலம் கட்டப்படாமல் இருந்திருந்தால் ெரயில் வரும் போது மட்டும் ஒரு பத்து நிமிடங்கள் தான் நாம் நின்று விட்டு சென்றிருப்போம். ஆனால் தற்போது இந்த லாரிகளால் ஒரே வழியாக சென்று விடும் நிலையில் உள்ளோம் என சென்னிமலை பகுதி மக்கள் புலம்பி வருகின்றனர்.

    சென்னிமலை டவுன் பகுதிக்குள் இந்த கனரக லாரிகள் நுழைய தடை விதித்தால் கூட போதும் என்கின்றனர். இதை தவிர்க்க சென்னிமலை நகரை சுற்றி ரிங்ரோடு பைபாஸ் அமைக்க வேண்டும் என சென்னிமலை ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியும் அரசுக்கு அனுப்பி உள்ளனர்.

    ×