search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிக்கட்டி"

    • பசுந்தேயிலை கொள்முதலில் கோட்டா முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இத்தொழிற்சாலையில் அங்கத்தினர்களாக உள்ளனர்

    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள பிக்கட்டியில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை இயங்கி வருகிறது. பிக்கட்டி, முள்ளிகூர், பாரதியார்நகர், கெரப்பாடு, குந்தாகோத்தகிரி, சிவசக்திநகர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இத்தொழிற்சாலையில் அங்கத்தினர்களாக உள்ளனர்.

    இவர்களிடம் இருந்து தினசரி கொள்முதல் செய்யப்படும் பசுந்தேயிலையை கொண்டு தொழிற்சாலையில் தேயிலைதூள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் பிக்கட்டி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் தற்போது தேயிலை மகசூல் அதிகரித்துள்ளதால் கூட்டுறவு தொழிற்சாலைக்கு பசுந்தேயிலை வரத்து கூடியுள்ளது. இதையடுத்து கடந்த சில தினங்களாக விவசாயிகளிடம் இருந்து பசுந்தேயிலை கொள்முதல் செய்வதில் கோட்டா முறை அமல்படுத்தப்பட்டது.

    இந்த நடைமுறையால் குறிப்பிட்ட அளவில் மட்டுமே தொழிற்சாலைக்கு பசுந்தேயிலை விநியோகிக்க முடியும். தேயிலை மகசூல் அதிகரித்துள்ள நிலையில் தங்களிடம் இருந்து குறைந்த அளவு பசுந்தேயிலை கொள்முதல் செய்யப்படுவதால் விவசாய உறுப்பினர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் பசுந்தேயிலை கொள்முதல் செய்வதில் மேலும் குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மேலும் அதிருப்தி அடைந்த விவசாயிகள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று பிக்கட்டி கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை வளாகத்தில் திரண்டு முற்றுகையிட்டனர்.

    தொடர்ந்து பசுந்தேயிலை கொள்முதல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து மஞ்சூர் சப்-இன்ஸ்பெக்டர் ராமசந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் தொழிற்சாலை நிர்வாக இயக்குனர் விவசாயிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசம் அடைந்த விவசாயிகள் தொழிற்சாலை நுழைவு கேட் அருகே சென்று தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தினார்கள். விவசாய உறுப்பினர்களை அவமதிக்கும் வகையில் பேசிய நிர்வாக இயக்குனரை இடம் மாற்றம் செய்ய வேண்டும். பசுந்தேயிலை கொள்முதலை முறைபடுத்த வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

    இந்நிலையில் நிர்வாக இயக்குனரை இடமாற்றம் செய்ய வேண்டும். பசுந்தேயிலை கொள்முதலை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நிர்வாகத்தரப்பில் சுமுக பேச்சுவார்தை நடத்தாவிட்டால் இன்று முதல் தொழிற்சாலைக்கு பசுந்தேயிலை விநி யோகிப்ப தில்லை என விவசாயிகள் தீர்மானம் நிறைவேற்றினார்கள். 

    ×