search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "In 5 Shiva Temples"

    சேலம், நாமக்கல்லில் ஒரே நாளில் 5 சிவாலயங்களில் சிறப்பு தரிசனம் செய்த பக்தர்கள்.
    ஆட்டையாம்பட்டி:

    ஏற்காடு மலையில் பிறக்கும் புண்ணிய நதி திருமணிமுத்தாறு. இது சேர்வராயன் மலைத்தொடர் மஞ்சவாடி கணவாய் அருகே உற்பத்தியாகி சேலம் மாநகர், நாமக்கல் மாவட்டத்தின் ஊடாக செல்லும் ஓர் ஆறாகும். இந்த ஆறு சேலம் நகரம் வழியாக உத்தமசோழபுரம், ஆட்டையாம்பட்டி, வீரபாண்டி வழியாக 75 மைல்கள் ஓடி பரமத்தி வேலூர் அருகே காவிரியில் கலக்கிறது. 
     
    இந்த நதிக்கு மணிமுத்தா நதி, வீர மணிமுத்தாறு என்ற பல்வேறு பெயர்கள் உண்டு. ஒருகாலத்தில் இந்த ஆற்றில் முத்துச் சிப்பிகள் இருந்தன; முத்து எடுக்கப்பட்டது என்பது மக்களின் நம்பிக்கை. 

    பிரசித்திப் பெற்ற செவ் வாய்ப்பேட்டை மாரியம்மன் மூக்கில் அணிந்திருக்கும் மூக்குத்தியின் முத்து திருமணிமுத்தாற்றில் இருந்து எடுக்கப்பட்டது என்பார்கள். அதன் நதிக்கரை எங்கும் ஏராளமான நந்தவனங்களும் அன்னதான சத்திரங்களும் இருந்தன. இன்றும் அணைமேடு அருகில் ஒரு நந்தவனம் இருக்கிறது. சேலம் ஸ்தல புராணத்தில்  ‘சேலம் மணிமுத்தா நதியின் ஒரு திவலை நீர் உண்டால் உடல் பாதகங்கள் அகலும் பரம ஞானம் உண்டாகும்’ என்ற பாடல் இதன் பெருமையை உணர்த்துகிறது.

    திருமணிமுத்தாறு ஆற்றங்கரையில் சுகவனேஸ்வரர் (சேலம்), கரபுரநாதர் (உத்தமசோழபுரம்), வீரட்டீஸ்வரர் (பில்லூர்), பீமேஸ்வரர் (மாவுரெட்டி), திருவேணீஸ்வரர் (நஞ்சை இடையாறு) ஆகிய 5 திருத்தலங்களும் பஞ்ச பாண்டவர்களால் வணங்கப்பட்டவை. இந்த 5 கோயில்களையும் ஒரே நாளில் வழிபட்டால் அனைத்து பாவங்களும் நீங்கி முக்தி பெறுவார்கள் என்பது ஐதீகம். பஞ்ச காலத்தில் பீமேஸ்வரரை வழிபட்டால் நல்ல மழை பொழியும் என்பதும் நம்பிக்கை.  

     மன்னராட்சி காலத்தில் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் திருமணிமுத்தாற்றின் கரையோரம் இருக்கும் 5 சிவன் கோவில்களையும் மன்னர்கள் ஒரே நாளில் தரிசித்த வரலாறும் உண்டு.  அந்த வழக்கத்தில் சேலம் மாவட்ட மக்கள் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இந்த 5 சிவாலயங்களையும் ஒரே நேரத்தில் தரிசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

    அதன்படி அமாவாசையை முன்னிட்டு நேற்று சேலம் பக்தர்கள் ஒரே நாளில் திருமணிமுத்தாறு கரையோரப் பகுதியில் உள்ள 5 சிவாலயங்களில் சாமி தரிசனம் செய்தனர். முதல் கோயிலாக சேலம் சுகவனேஸ்வரர் ஆலயம், இரண்டாவதாக உத்தமசோழபுரம் கரபுரநாதர் சுவாமி கோயில், மூன்றாவதாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பில்லூர் வீரட்டேஸ்வரர் ஆலயம், நான்காவதாக மாவுரெட்டி பீமேஸ்வரர் ஆலயம், ஐந்தாவதாக நன்செய் இடையார் திருவேலீ ஈஸ்வரர் ஆலயம் ஆகிய 5 சிவாலயங்களில் ஒரே நாளில் 60 -க்கும் மேற்பட்ட பக்தர்கள் அபிஷேக ஆராதனை பூஜையில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
    ×