என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Textile Industry"

    • வறுமையான சூழல் எங்களது குழந்தைகளுக்கும் வர வேண்டாம் என்று எண்ணம் தோன்றுகிறது.
    • வருவாய் பெற முடியாமல் பொருளாதார நெருக்கடிக்கும் ஆளாகி யுள்ளோம்

    உடுமலை :

    உடுமலை சுற்றுப்புற பகுதியில் நெசவுத்தொழில் ஏற்ற இறக்கம் இருந்தாலும் நெசவை குல தொழிலாக பாரம்பரியமாக நீண்ட காலமாக செய்து வருகின்றனர். மலையாண்டிபட்டினம் ஊராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் நெசவு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தொழில்நுட்பத்தின் வளர்ச்சி இன்றைய ஆடை வடிவமைப்பில் இருந்தாலும் கலையும் அழகும் கைவண்ணமும் பளிச்சென கைத்தறி நெசவில் தான் வெளிப்படுகின்றது .

    ஆண்கள் மட்டுமின்றி குடும்பத்தைச் சேர்ந்த அனைத்து பெண்களும் கைவினை கலையாக நெசவுத் தொழில் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இது குறித்து நெசவாளர் ஓருவர் கூறுகையில்: - நெசவு தொழில் 100 சதவீதம் கவனத்தோடு முழுமையாக உடல் உழைப்பை அளித்தால் மட்டுமே சேலை வடிவம் நிறைவு பெறும். ஒரு சேலைக்கு இரண்டு நாட்கள் என்றாலும் தொடர்ந்து அதே பணியாக அமரும்போது எங்களுக்கு பல்வேறு உடல் வழிகள் ஏற்படுவது உண்டு.

    ஆனால் அவ்வாறு சிரமப்பட்டு சேலையை முடித்தும் அதற்கான வருவாய் வெகு நாட்கள் கழித்து கிடைப்பதில் எங்களுக்கு பயன் இருப்பது இல்லை .குலத்தொழிலை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என நாங்கள் விரும்பினாலும் வறுமையான சூழல் எங்களது குழந்தைகளுக்கும் வர வேண்டாம் என்று எண்ணம் தோன்றுகிறது.

    பாரம்பரியத்தை கைவிடாமல் கைத்தறி நெசவை கரம் பிடித்து வரும் நெசவாளர்கள் நிலையான வருமான பெறுவதற்கு அரசு உதவ வேண்டும். தற்சமயம் ஒரு சேலைக்கான கூலி ஆயிரத்திலிருந்து 800 ரூபாயாகவும் சில சமயம் 500 ரூபாயாகவும் குறைந்துவிட்டது. நெய்த சேலைகளும் தொடர்ந்து தேங்கிக் கொண்டு வருவதால் அதற்கான வருவாய் பெற முடியாமல் பொருளாதார நெருக்கடிக்கும் ஆளாகியுள்ளோம் என்று தெரிவித்தனர்.

    • புதிதாக, 12 கோடி ரூபாய் மதிப்பில் இரண்டு நூற்பாலைகள் அமைக்கப்படும்.
    • ஜவுளி தொழில் முனைவோர் அமைப்புகள் பங்கேற்கும், 2 நாள் பயிலரங்கம் நடத்தப்படும்.

    திருப்பூர் :

    கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக்கோரிக்கை விவாதத்தின்போது அமைச்சர் காந்தி 22 வகை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். துணி நூல் துறைக்கு, ஐந்து அறிவிப்புகளும் கைத்தறித்துறைக்கு 17 அறிவிப்புகளும் வெளியாகியுள்ளது. அனைத்து ஜவுளி பிரிவுகளையும் ஒருங்கிணைத்து மாபெரும் ஜவுளி நகரம், பொது - தனியார் பங்களிப்புடன் சென்னையில் அமைக்கப்படும். தலா 6கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு கூட்டுறவு நூற்பாலையில், சோலார் மின் உற்பத்தி மையம் அமைக்கப்படும். புதிதாக, 12 கோடி ரூபாய் மதிப்பில் இரண்டு நூற்பாலைகள் அமைக்கப்படும்.

    சர்வதேச தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கு 60 லட்சம் ரூபாய் மதிப்பில் சென்னையில் நடத்தப்படும். இந்தியாவில் உள்ள 12 தொழில்நுட்ப ஜவுளி ஆராய்ச்சி சிறப்பு மையங்களில் கண்டறியப்பட்டுள்ள தொழில்நுட்பங்களை பகிர வசதி செய்யப்படும். அதற்காக தமிழக தொழில்நுட்ப ஜவுளி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி தொடர்பான கலந்தாய்வு நடத்தப்படும்.

    கோவையில் 27 லட்சம் ரூபாய் செலவில், ஜவுளி தொழில் முனைவோர் அமைப்புகள் பங்கேற்கும், இரண்டு நாள் பயிலரங்கம் நடத்தப்படும். தமிழகத்தில், ஜவுளித்தொழில் துவங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு தொழில்நுட்பம் மற்றும் முதலீடு தொடர்பான வழிகாட்டுதல் வழங்கப்படும். அதற்காக, கைத்தறி துணிநூல் துறையின் கீழ், பிரத்யேக ஜவுளி தொழில் ஊக்குவிப்பு பிரிவு துவக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை திருப்பூர் தொழில் அமைப்பினர் வரவேற்றுள்ளனர்.

    இது குறித்து இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் கூறியதாவது:- புதிய தொழில்நுட்பங்களை பகிர்ந்துகொள்ளும் வகையில் ஆராய்ச்சி மையங்களுடன் கலந்தாய்வு ஏற்பாடு செய்துள்ளது பயனுள்ளதாக இருக்கும். தொழில்முனைவோருக்கு வழிகாட்டும் தொழில் ஊக்குவிப்பு பிரிவு துவங்குவதையும் வரவேற்கிறோம். பாரம்பரிய கைத்தறி ரகங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதால் விற்பனை அதிகரிக்கும். பலவகை அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வரும் போது தமிழகத்தின் ஜவுளி மற்றும் கைத்தறி தொழில் மேம்படும் என்றார்.

    திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில், பின்னலாடை தொழில் உட்பட, பல்வேறு பிரிவுகளுடன் ஒருங்கிணைந்த ஜவுளி தொழில் நகரம் அமையும் போது, புதிய வேலை வாய்ப்புகளும், தொழில்களும் உருவாகும். சர்வதேச தொழில்நுட்ப கருத்தரங்கு ஒவ்வொரு தொழில் பிரிவுக்கும் பயனுள்ளதாக இருக்கும். அரசு மானிய உதவியுடன் தொழில்முனைவோர்களை உருவாக்குவதற்கு வழிகாட்ட ஜவுளித்துறை ஆணையரகத்தில் ஜவுளி மேம்பாட்டு பிரிவு துவங்குவதை வரவேற்கிறோம். கோவையில் 12 ஆராய்ச்சி மையங்கள் சார்பில் இரண்டு நாள் தொழில்நுட்ப கருத்தரங்கு நடத்துவது சிறப்பான ஏற்பாடாக இருக்கும் என்றார்.

    • மத்திய பட்ஜெட்டில் டப் திட்டம் தொடர்பான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமாக அமைந்தது.
    • டப் திட்டத்தை பொறுத்தவரை குறைந்தபட்ச முதலீடு செய்தாலும் அதற்கான மானியம் கிடைக்கும்.

    திருப்பூர்:

    நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஜவுளித்தொழிலின் பங்களிப்பு முக்கியமானது. அதன்படி ஜவுளி ஏற்றுமதியை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் சலுகை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திருப்பூர் பின்னலாடை தொழிலை பொறுத்தவரை, பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டம் (டப்) அமல்படுத்தப்பட்டது.

    சாய ஆலைகள்,நிட்டிங், காம்பாக்டிங், ரைசிங், பிரின்டிங், கம்ப்யூட்டர் எம்ப்ராய்டரிங் என அனைத்து வகை ஜாப் ஒர்க் பிரிவுகளும், டப் திட்டத்தில் பயனடைந்தன. அதாவது உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கத்துடன் புதிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட எந்திரங்கள் நிறுவ 15 சதவீதம் வரை மானியம் வழங்கப்பட்டது.

    இத்திட்டம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு திருத்தப்பட்ட டப் திட்டமாக 2022 மார்ச் 31-ந் தேதி வரை செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் உயர்த்திய மானியத்துடன் மீண்டும் செயல்படுத்தப்படுமென அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. அதை நம்பி வழக்கம் போல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.

    மத்திய பட்ஜெட்டில் டப் திட்டம் தொடர்பான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமாக அமைந்தது. இருப்பினும் திருத்தப்பட்ட டப் திட்டத்தை 2022 ஏப்ரல் 1 முதல் செயல்படுத்த வேண்டுமென தொழில்துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கடந்த மாதம் திருப்பூர் வந்திருந்த மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்ஷனாவிடமும் இதுகுறித்து கோரிக்கை வைக்கப்பட்டது.

    உற்பத்தி சார் ஊக்குவிப்பு (பி.எல்.ஐ., 2.0) திட்டம், பின்னலாடை தொழிலுக்கு கை கொடுக்கும் என தொழில்துறையினர் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். இருப்பினும் குறைந்தபட்ச முதலீடு உச்சவரம்பு உட்பட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.இத்திட்டம் இறுதியாகாமல் இழுபறி நீடிப்பதால் டப் திட்டம் குறித்த எதிர்பார்ப்பு மென்மேலும் அதிகரித்துள்ளது.

    டப் திட்டத்தை பொறுத்தவரை குறைந்தபட்ச முதலீடு செய்தாலும் அதற்கான மானியம் கிடைக்கும். உற்பத்தியை உயர்த்தி காண்பிக்க வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகள் இல்லை. டப் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்ற நம்பிக்கையில் 2022 மார்ச் மாதத்திற்கு பிறகு புதிய தொழில்நுட்ப எந்திரங்களை நிறுவிய ஆயிரக்கணக்கான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மானிய அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றன.

    புதிய முதலீடு, இயக்க செலவு என 35 சதவீதம் அளவுக்கு உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால் திருத்தப்பட்ட டப் திட்ட மானியம் கிடைத்தால் மட்டுமே ஜவுளித்தொழில்கள் புத்துயிர் பெறும். கடந்த ஆண்டில் மட்டும் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்த நிறுவனங்கள் மானியத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றன.

    பி.எல்.ஐ., -2.0 திட்டத்தில் பயன்பெற முடியாதவர் டப் திட்டத்தை பயன்படுத்தும் வகையில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என தொழில்துறையினர் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

    திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியன் கூறுகையில், திருத்தப்பட்ட டப் திட்டத்தை 2022 ஏப்ரல் 1 முதல் செயல்படுத்த வேண்டுமென, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களில் புதிய தொழில்நுட்பத்தை செயல்படுத்த டப் திட்டம் மிகவும் அவசியம் என மத்திய அமைச்சர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.

    • சென்னையில் அமைச்சா்களுடன் நடந்த பேச்சுவாா்த்தையின்போது கோரிக்கைகளை தொழில் துறையினா் முன் வைத்தனா்.
    • தமிழக அரசிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேறும் என்ற எதிா்பாா்ப்புடன் இருந்தோம்.

    திருப்பூர்:

    மின் கட்டணம் குறைப்பு, டிமாண்ட் கட்டணம் குறைப்பு, நிலை கட்டணத்தை பழைய கட்டணப்படி மாற்றுதல், எல்.டி.சி.டி., உச்ச நேர கட்டணங்களில் இருந்து விலக்கு அளித்தல், சூரிய ஒளி மின் உற்பத்திக்கான நெட்வொா்க் கட்டணங்களை ரத்து செய்தல், பஞ்சு,நூல் விலையை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஜவுளி தொழில் துறையினா் சாா்பில் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

    இதற்காக அத்தொழில் துறையினா் வேலைநிறுத்த போராட்டத்திலும் ஈடு பட்டனா். தமிழக அரசு சாா்பில் பேச்சுவாா்த்தை நடத்த தொழில் துறையினா் வரவழைக்கப்பட்டனா். சென்னையில் அமைச்சா்களுடன் நடந்த பேச்சுவாா்த்தையின்போது கோரிக்கைகளை தொழில் துறையினா் முன் வைத்தனா்.

    பேச்சுவாா்த்தை நடந்து 2 வார காலங்கள் ஆன நிலையில் தமிழக அரசிடமிருந்து எந்தவித ஆறுதலான பதில்களும் இதுவரை கிடைக்க வில்லை. இது தொழில் துறையினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசைத்தறி தேசிய மேம்பாடு மற்றும் ஏற்றுமதி கவுன்சில் துணைத் தலைவா் கரைப்புதூா் சக்திவேல் கூறியதாவது:-

    மின் கட்டண உயா்வு காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியால் பெரும் பாலான தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்தும், சில நிறுவனங்கள் இயங்காமலும் உள்ளன. இதே நிலை நீடித்தால் ஜவுளித் தொழில் ஒட்டுமொத்தமாக முடங்கும் அபாயம் உள்ளது. தமிழக அரசிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேறும் என்ற எதிா்பாா்ப்புடன் இருந்தோம். ஆனால் இதுவரை, அரசிடமிருந்து நம்பிக்கையான பதில் எதுவும் வராதது வருத்தம் அளிக்கிறது. ஜவுளித் தொழில் துறையினரை அரசு மீண்டும் அழைத்து பேச்சுவாா்த்தை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றாா்.

    ஜவுளித்துறைக்கான ஆலோசனை குழு அமைப்பது வரவேற்கத்தக்கது.

    திருப்பூர்:

    தமிழக துணி நூல் துறை அமைச்சர் காந்தி, மானிய கோரிக்கையில் அறிவித்தபடி ஜவுளி தொழில்நுட்ப ஆலோசனை குழு அமைக்கப்படுகிறது. ஜவுளி தொழில் அமைப்பு பிரதிநிதிகள் 16 பேர் குழுவில் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இதில் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன், இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல், ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம், சாய ஆலை உரிமையாளர் சங்க தலைவர் காந்திராஜன் என, பின்னலாடை நகரான திருப்பூரை சேர்ந்த நான்கு பேர் ஆலோசனைக்குழுவில் இடம்பெறுகின்றனர். விரைவில் இந்த குழு அமைக்கப்பட்டு செயல்பாட்டை துவக்க உள்ளது.

    இது சென்னையை தலைமையிடமாக கொண்டு அரசுக்கு ஆலோசனை வழங்கும் நிரந்தர குழுவாக இயங்கும். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அல்லது தேவைக்கு ஏற்ப குழு கூடும். நூற்பாலை, ஆயத்த ஆடை, பின்னலாடை, தொழில்நுட்ப ஜவுளி என ஜவுளித்துறையின் பல்வேறு பிரிவுகள் குறித்து தொடர்ந்து ஆராய்ந்து, பிரச்னைக்குரிய தீர்வுகள், தொழில்நுட்ப ஆலோசனைகளை அரசுக்கு பரிந்துரைக்கும்.

    இது குறித்து பியோ தலைவர் சக்திவேல் கூறுகையில், ஜவுளித்துறை வளர்ச்சிக்கு தொழில்நுட்ப மேம்பாடு முக்கியமானதாக உள்ளது. தற்போது கூட, சுத்திகரிப்பு மைய கழிவு உப்புகளை அகற்றுவதற்கான தொழில்நுட்பம் தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.

    ஆலோசனை குழு மூலம் ஜவுளித்துறையின் தொழில்நுட்ப தேவைகளை, விரைவாகவும், நேரடியாகவும் அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல முடியும். குழுவின் ஆலோசனைகள், பரிந்துரைகளுக்கு அரசு செயல் வடிவம் கொடுக்கும். இதன்மூலம் நூற்பாலை முதல் ஆயத்த ஆடை தயாரிப்பு வரையிலான தமிழக ஜவுளித்தொழில் சிறப்பான வளர்ச்சி பெறும்.

    சைமா தலைவர் ஈஸ்வரன் கூறுகையில், அமைச்சர் அறிவித்தபடி, துரிதமாக, ஜவுளித்துறைக்கான ஆலோசனை குழு அமைப்பது வரவேற்கத்தக்கது. ஜவுளி தொழிலின் கஷ்ட, நஷ்டங்களை அன்றாடம் எதிர்கொண்டிருக்கும், ஜவுளி தொழிலில் ஈடுபட்டுள்ளோர், உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த குழுவுக்கு தமிழக அரசு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பரிந்துரைகளை விரைந்து நிறைவேற்றி வைப்பதிலேயே, குழுவின் வெற்றி அடங்கியிருக்கிறது என்றார்.

    ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறுகையில், தமிழக அரசு முதல் முறையாக, தொழில்நுட்ப ஆலோசனைக்குழுவை அமைப்பது பாராட்டத்தக்கது. இந்த குழு மூலம், திருப்பூர் மீதான அரசின் கவனத்தை ஈர்க்கமுடியும். தொழில்நுட்பம் மட்டுமின்றி, உள்கட்டமைப்பு மேம்பாடு, தொழிலாளர் குடியிருப்பு, ஆய்வுக்கூடம் என எல்லா தேவைகளையும் படிப்படியாக நிறைவேற்ற முடியும்.

    துறை சார்ந்த அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மத்தியில், ஜவுளித்துறை குறித்த புரிதல் மேலோங்கும். பட்ஜெட்டில், ஜவுளித்துறை வளர்ச்சிக்கான தொலைநோக்கு திட்டங்களை அறிவிப்பதற்கான வாய்ப்பு உருவாகும். ஜவுளி தொழில் வளர்ச்சிக்கு இது முதல் படி. இதே போல் மத்திய அரசும், ஜவுளித்துறைக்கான குழுவை அமைக்க வேண்டும்.

    ×